பூஜ்ய ஸ்ரீ ராம் சுரத் குமார்  –    நங்கநல்லூர்   J  K SIVAN

 இன்று ஒரு எளிய  ஆத்ம ஞானி சமாதி யான  நாள்.

நமது பாரத தேசம் புண்ய பூமி.  இங்கு தான் காஷ்மீர் முதல் கன்னியாகுமாரி வரை கிழக்கே வங்காளத்திலிருந்து மேற்கே குஜராத் வரை எண்ணற்ற யோகிகள், மஹான்கள், ரிஷிகள், முனிவர்கள், தவசிகள்,  விடாமல் ஆரம்பத்திலிருந்து இன்று வரையிலும் கூட  ஆங்காங்கே அவதரித்து  மக்களை நல்வழிப்படுத்துகிறார்கள். இதற்கு தான் எத்தனை  இடையூறுகள், இடைஞ்சல்கள்!  அது அத்தனையும் தூசு போல் தட்டிவிட்டு ஹிந்து  சனாதன தர்மம் வளர்ந்து கொண்டு தான் வருகிறது. எதாலும் அதை அழிக்க முடியாது.  ஒரு நல்ல கோட்பாடு, சித்தாந்தம் வளர்ச்சி பெற  அவ்வப்போது  சிற்சில எதிர்ப்புகளும் அவசியம்.  கசப்பு இருந்தால் தான் இனிப்பின் அருமை புரியும்.

1918 டிசம்பர் 1ம் தேதி அவதரித்து,  2001, பெப்ரவரி மாதம் 20ம் நாள் சமாதி அடையம் வரை, ஒரு அற்புத  ஞானி திருவண்ணாமலையில் வாழ்ந்து அருள் பாலித்தார்.  அவரை உலகம்   விசிறி சாமியார்  என்று போற்றியது. க்கிறார்கள். இந்த  மஹான் 82-83 வருஷங்கள் வாழ்ந்தவர்.   பிறந்தது வடக்கே காசி அருகே  நார்தாரா  லால்கஞ்ஜ் எனும் ஊரில்.மறைந்தது திருவண்ணாமலையில்.

கையில் விசிறி,  வெண்தாடி, பச்சை தலைப்பாகை, கண்களில் ஆனந்தமான  கருணை.  உள்ளத்தில் உள்ள  உறுதியை  பற்றற்ற நிலையைப்  பாங்காக காட்டும் நீண்ட  நாசி.  அதன் அடியில் ஒரு ராஜா  மீசை. அதிகம் பேசாத உதடுகள். கழுத்தில் மணி  மலர்  மாலைகள், ருத்ராக்ஷம்.  நீண்ட  சுருக்கமான  அங்கி, அதன் மேல் யோக வேஷ்டி.. வெறும் கால், காலணி  இல்லாமல் இருக்கும்  படம் ஒன்று பார்த்தேன்.  அற்புதமான மஹான்.  அன்பின்   இருப்பிடம்.  ஆதரவு தரும்  அடைக்கலம் அளிக்கும்   தெய்வம். இந்திய  கண்டம் முழுதும்  1952 லிருந்து  1959 வரை  நடந்தே   விஜயம் செய்தவர்.  திருவண்ணாமலை ஒன்றே  சிறந்த உன்னத யோகிகள் தவம் செய்யும் க்ஷேத்ரம் என அறிந்து அங்கேயே  வாழ்ந்தவர்.  உடை,உணவு, இருக்க இடம்  எதுவும் தேடாமல்  மரத்தடி, குளக்கரை, கோவில் கடைகள் வாசல் ரயில்வே பிளேட்பார்ம் என்று  வாழ்ந்தவர்.  கிடைத்ததை  உண்டு  அருணாசலேஸ்வரர் ஆலய கிரிவலம் செய்தவர். தன்னை பிச்சைக்காரன் என்று எப்போதும் அறிமுகப்படுத்திக் கொள்பவர்.

அவருடைய ஒரே  நண்பன்  ”சாய் பாபா” என்று அவர் பெயர் வைத்த  ஒரு நாய்.  1977ல்  யாரோ  ஒரு  பக்தர் ஒரு வீட்டை   அருணாசலேஸ்வரர்  கோவில் அருகே,  சன்னதி தெருவில் ஏற்பாடு பண்ணி கொடுத்தார். அங்கே வந்து  பக்தர்கள் விசிறி சாமியாரை  தரிசித் தனர்.
” பகவானை எந்த ரூபத்திலும்  நாமத்திலும் வணங்கு அது தான் முக்கியம். மழை பெய்யும்போது நாம் வேலை செய்யாமலா இருக்கிறோம். குடை பிடித்துக்  கொண்டு வேலை செயகிறோம், அதுபோல் வாழ்க்கையில் சோதனைகள், கஷ்டங்கள் விடாமல் இருந்து கொண்டு தான் இருக்கும். பகவான் நாமா ஒன்று தான் நமக்கு குடை.  இந்த பிச்சைக்காரன் அதை தான் உங்களுக்கு விடாமல் சொல்பவன்”  என்று  புரியவைத்தவர்.  ”அப்பா, இங்கு வந்துள்ள  அனைவரையும் காப்பாற்று. க்ஷேமமாக  வை” என்ற வேண்டுபவர்.அருணாசலேஸ்வரர் தான் நமக்கு அப்பா. அவனை வேண்டு. கைவிட மாட்டான்  கனகசபேசன்”  என்று  உபதேசித்தவர்.
விசிறி சாமியார் என்ற பக்தர்கள் அழைத்த பெயர் நிலைத்து,  ராம் சுரத் குமார் என்ற இயற்  பெயர்  மங்கிவிட்டது. சமாதி அடையும் வரை   திருவண்ணாமலையில் ஆசிரமம் அமைத்து மக்களுக்கு பக்தி நெறியும், ஞான யோகத்தையும் ஊட்டியவர். அரவிந்தர், ரமண மகரிஷி,  காஞ்சி மஹா பெரியவா ஆகியவர்களை குருவாக கொண்டவர்.

சின்ன வயசிலேயே யோகிகளையும், துறவிகளையும் சந்திப்பதில் மிகுந்த ஆவல் கொண்டவர். காசியில் ஓடும் கங்கை ஆற்றங்கரையில் உலாவுவதும், அங்கு குடிசையில் வாழும் யோகிகள், துறவிகள் மற்றும் சந்நியாசிகளிடம் நட்புடன் பழகுவதுமாக காலம் கழித்தவர்.   வளர்ந்த பின்பு இல்லற வாழ்வில் ஈடுபட்டிருந்தாலும் ஆன்மிகப் பசியுடன் குருவைத் தேடியலைந்து, ஸ்ரீஅரவிந்தர் ஆசிரமத்திற்கும், ரமண மகரிஷியின் ஆசிரமத்திற்கும் அடிக்கடி சென்று அம்மகான்களை தரிசித்து ஞான யோகத்தையும் தவத்தையும் கற்றார். பின்னர் கேரளாவில் உள்ள சுவாமி இராமதாசரின் ஆசிரமத்திற்கு சென்று பக்தி யோகத்தை கற்றார்.

ஸ்ரீஅரவிந்தரிடமிருந்து ஞானத்தையும், ரமண மகரிஷியிடமிருந்து தவத்தையும், சுவாமி இராம தாசரிடமிருந்து பக்தி நெறியையும் கேட்டுத் தெளிந்தார். குரு இராமதாசரிடமிருந்து “ஓம் ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய் ஜெய்ராம்” எனும் மந்திர தீட்சை பெற்றார். யோகி ராம்சுரத்குமார் இறக்கும் வரை இந்த மந்திர ஜபம் ஒன்றே தான்.  

எப்போதும் கவலையே இல்லாத சிரித்த முகம்.  யார் இதைக் கொடுத்தாலும்  தன்னிடம் உள்ள   கொட்டாங்கச்சி கப்பரையில்  பெற்றுக் கொள்வார்.  ஆங்கிலம், தமிழ் எல்லா மொழிகளும் பேசுவார்.

மஹா பெரியவா விசிறி சாமியார் பற்றி  சொன்னது:
”பச்சை தலப்பா,  தாடி, கையில் விசிறி, — ரமண பக்தரான இந்த யோகி ஒரு உயர்ந்த மஹான், ரமணரின் கருத்துகள், சித்தாந்தத்தை ஆத்ம ஞானத்தை தொடர்ந்து மக்களிடையே ரமணருக்குப் பிறகு பரப்ப தோன்றியவர்”

 விசிறி சாமியார்   மஹா பெரியவா பற்றி பேசும் போதெல்லாம்  சொன்னது:
 ‘இந்த உலகமே அந்த மஹா பெரியவருக்கு கடமை பட்டிருக்கு’. நமது வேதங்கள், பண்பாடு, சாஸ்திரங்கள் பக்தி உணர்வு இதெல்லாம் பாதுகாத்து தறுவதற்காகவே பிறந்தவர் ‘

யோகி  ராம்சுரத் குமார் எனும் விசிறி சாமியாரின்  திருவண்ணாமலை ஆஸ்ரமத்தில் அவர் அனுமதித்த முதல் படம் மஹா பெரியவா  காஞ்சி  பரமாச்சார்யருடையது. அவர் படத்தின் முன்பு ஏற்றப்பட்ட விளக்கும் என்றும் எரிந்துகொண்டே இருக்கவேண்டும் என்பார். இன்றும் அவ்வாறே அந்த தீபம் ஒளி தந்து கொண்டிருக்கிறது.  

ஒரு ஸ்வாரஸ்ய சம்பவம் சொல்கிறேன்:
காஞ்சி மடத்தில் இருந்த ஸ்ரீ சந்த்ரமௌளி என்பவர் ஒரு தடவை மஹா பெரியவாளிடம் ‘ எனக்கு திருவண்ணாமலை சென்று யோகியை தரிசனம் செய்து வர பெரியவா அனுமதி தர வேண்டுகிறேன் ” என்கிறார்
”இப்போ வேண்டாம் ”
மறுநாள் யோகிக்கு ஜென்ம தினம். அன்று காலை ஏகாம்பரேஸ்வரருக்கு விசேஷ பூஜை அபிஷேகம் ஹோமம் எல்லாம் ஏற்பாடு பெரியவா பண்ணி இருந்தார்.சந்திரமௌளி யை கூப்பிட்டார்:  

 ” நீ  இப்போ கிளம்பு, திருவண்ணாமலைக்கு போய் யோகி  ராம்சுரத்குமார்  கிட்ட ஏகாம்பரேஸ்வரர் விசேஷ பூஜை, அபிஷேக பிரசாதம்  என்று சொல்லி இதைக் கொடு”   என்று  அபிஷேக பிரசாதம் கொடுத்தனுப்பினார்.
இந்த சம்பவத்தை ஞாபகம் வைத்துக்கொண்டு  விசிறி சாமியார் ” இந்த பிச்சைக்காரன் மேல் பரமாச்சார்யாவுக்கு எவ்வளவு காருண்யம், தயை” என்பார்.

ஒரு தடவை  மஹா பெரியவா,   ”சந்திரமௌளி , ஐநூறு ரூபாயை மடத்தில் ஆபிஸ் லே கேட்டு வாங்கிண்டு திருவண் ணாமலைக்குப்  போ. யோகியை அங்கிருந்து ஒரு டாக்சியில் அழைச்சுண்டு கோவிந்தபுரம் ஸ்ரீ போதேந்திரா அதிஷ்டானம் போ. அங்கே யோகியை சில மணி நேரம் நான் தியானம் பண்ண சொன்னேன்னு சொல்லு . அப்புறம் அவரை திருவண்ணாமலையில் கொண்டு விட்டுட்டு வா ”.

சந்திரமௌளி திருவண்ணாமலை சென்றபோது யோகியின்  ஆஸ்ரமத்தில் யாரோ ஒரு டிஸ்ட்ரிக்ட் ஜட்ஜ் அவர் மகளோடு அங்கே யோகியை தரிசிக்க வந்திருந்தார். யோகி எப்போதும் ”எனக்கு தெரிந்தது ஒண்ணே ஒண்ணு தான். ” ராம் ராம்” அது தான் எல்லாமே. விடாமல் நாள் முழுதும் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். என் குரு எனக்கு அதை தான் உபதேசித் தார். ” என்பார். சில பேருக்கு வேண்டுமானால் இதில் இதில் நம்பிக்கை இருக்கலாம். ஆனால் பலர் இதை அனுபவித்தி ருக்கிறார்கள். கோவிந்தபுரத்தில் போதேந்திர ஸரஸ்வதி அதிஷ்டானத்தில் ராம நாமம் இரவு பகலாக3 எப்போதும் ஒலித் துக்கொண்டே இருக்கும்.

”அப்பா அப்பா என்று குருவை, கடவுளை தியானிப்பவர் யோகி. கண்ணை மூடி தியானித்தார். தான் கோவிந்தபுரம் போவதா வேண்டாமா என்று உத்தரவு தியானம் மூலம் அப்பாவிடம் கேட்டார்.

”என் அப்பா சிவபெருமான் ஒரு பிக்ஷாடனர். கபாலம் ஏந்துபவர், எப்போதும் இருப்பவர். நான் காஞ்சிபுரம் போய் பரமாச்சார்யாவை பார்ப்பதா அல்லது கோவிந்தபுரம் போவதா?. ரெண்டும் ஒன்று தான் எனக்கு ” என்றவர் நேராக காஞ்சி புரத்துக்கு சந்திர மௌளியோடு கிளம்பிவிட்டார்.    அவர்கள் காஞ்சிபுரம் வந்தடைந்த நேரம், பெரியவா நித்ய பூஜா அனுஷ்டானங்கள் முடிந்து தனது அறைக்கு ஓய்வுக்கு சென்றுவிட்டார். அறைக்கதவு சார்த்தியாகி விட்டது.

”பெரியவா கிட்டே நான் வந்திருக்கேன்னு சொல்லுங்கோ” என்று சந்த்ரமௌளியிடம் யோகி சொல்கிறார். சந்த்ர மௌளிக்கோ கலக்கம்.

பெரியவா ”என்னடா நா சொன்னது ஓண்ணு நீ செஞ்சது ஒண்ணு” என்று கோபிப்பாரோ? என்ன செய்வது?  யோகி
 கொடுத்த தைரியத்தில், மெதுவாக பெரியவா அறைக் கதவை மெல்லிதாக தட்டினார் . அந்த   திரிகால ஞானிக்கு நடந்தது எல்லாம் தெரியாமலா இருக்கும்?. அவரே வந்து யோகிக்கு தரிசனம் தருவார்” என்று தோன்றியது சந்திரமௌளிக்கு . நடுக்கம் குறைந்தது. உண்மையில் காஞ்சிபுரம் கோவிந்தபுரம் ரெண்டுமே ஒன்று தான். கோவிந்தபுர அதிஷ்டானத்தில் இருக்கும் போதேந்திர ஸரஸ்வதியின்  வழித்  தோன்றல் தானே காஞ்சிமஹா பெரியவா .

”விசிறி சாமியார் வந்திருக்கிறார்”  என்று அறிவித்த பொது மஹா பெரியவா வெளியே வந்தார்.

‘ நான் மஹா பெரியவாளை சந்தித்தேன்.  இந்த பிச்சைக்காரன் சாஷ்டாங்கமாக மகா பெரியவா காலில் விழுந்தேன். அவர் இவன் மேல் பெரும் கருணை கொண்டு ஆசிர்வதித்தார். நீ சூர்ய வம்சமா? என்று கேட்டார் . இந்த பிச்சைக்காரனுக்கு பதில் சொல்ல தெரியவில்லை”

ரெண்டு யோகீஸ்வரர்களும் நேருக்கு நேராக சில நிமிஷங்கள் பார்த்துக்கொண்டே இருந் தார்கள். நயன பாஷை அங்கே நடந்து கொண்டிருக்கும்போது வாய் பேச்சுக்கு ஏது இடம்? நேரம் நழுவிக்கொண்டே இருந்தது. யோகி திரும்புகிற நேரம் வந்துவிட்டது. காமாக்ஷி பிரசாதம் கை நிறைய தன்னுடைய ப்ரசாதத்தோடு சேர்த்து அளித்தார் யோகிக்கு. யோகிக்கு பரமானந்தம். மிகுந்த சந்தோஷத் தோடு பிரசாதத்தை திருவண்ணாமலைக்கு எடுத்து சென்றார்.

‘அண்ணாமலையார் கோவிலில் பக்தர்களுக்கு இந்த பிச்சைக்காரன் அந்த தெய்வத் தின் ப்ரசாதத்தை அளித்து பாக்யம் பெற வைத்தான். இந்த பிச்சைக்காரன் மேல் தான் அந்த பரமாச்சார்யாருக்கு எவ்வளவு பாசம், கருணை அன்பு ”

இத்துடன்  மஹாபெரியவாளை   விசிறி சாமியாராகும் முன் சந்தித்த அபூர்வ போட்டோ ஒன்று கிடைத்தது. இணைத்திருக்கிறேன்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *