ORU ARPUDHA GNANI J K SIVAN

ஒரு அற்புத ஞானி –     நங்கநல்லூர்  J.K.SIVAN

ஸ்வாமிகளின் பொன் மொழிகள்

சேஷாத்ரி ஸ்வாமிகள் ஒரு  முற்றும் துறந்த ப்ரம்ம ஞானி.  எங்கே எப்போது   எப்படி இருப்பார்  என்று தெரியாது.அவருக்கு  குருவும் கிடையாது,சிஷ்யனும் கிடையாது.  பக்தர்கள் அவரைச் சூழ்ந்து கொள்ள  அனுமதிக்க மாட்டார்.அப்படியும்  விடாப்பிடியாக  ஒரு  சிலர்  அவரை  நிழல் போல் தொடர்ந்து இருந்தார்கள்.   ஸ்வாமிகள்  திடீரென்று  எங்காவது யார் வீட்டிலாவது போய்  இருப்பதை,  கொடுப்பதை சாப்பிடுவார்.  பாதி சாப்பிடும்போதே  எழுந்து ஓடிவிடுவார்.  தட்டில் இருப்பதை எல்லாம் நாலா  பக்கம் வீசிவிட்டு சாப்பிடாமல் போவார்.
அவர் அருகிலேயே எப்போதும் சிஷ்யனாக சேவை செய்யும் மாணிக்கசாமிக்கு ஒருநாள் சேஷாத்ரி ஸ்வாமிகள் அபூர்வமான ஒரு உபதேசம் செய்தார்:

”இதோ   பார் மாணிக்கம், நீ ஈயைப் போல் சுத்தமாக,எறும்பைப் போல பலத்தோடு, நாயைப்போல் அறிவோடு, ரதியைப்போல் அன்போடு இருக்க கத்துக்கோ. அப்போ குரு தெரிவார்” என்றார்.
ஈ  மலர்களின் மதுவையும் , மலத்தையும்  ஒன்றாகவே கருதி  உண்டு ஆனந்திக்கிறது. எனவே மனதளவில் அது சுத்தமானது.

பலமுள்ளவன் தான் சோர்வடைய மாட்டான். இரவும் பகலும் உழைக்கும் எறும்பு பலமிக்கது.
காதையும், வாலையும் எவனோ குறும்புக்கார  ஆசாமி வெட்டிவிட்டான் என்றாலும் காது இருந்த இடத்தை உயர்த்தியும், வால் இருந்த இடத்தை ஆட்டியும் நாய் அறிவை உபயோகித்து ஒருவேளை உணவை அளித்தவனை நன்றியோடு நெருங்குகிறது.

எந்த மனைவி கணவனின் நலத்தை  கருத்தில் கொண்டு எப்போதும் அவனுக்கு பணிவிடை செய்து, அவன் அடிபணிந்து கிடக்கிறாளோ அவளே அழகிய குணம் படைத்த ரதி.    இங்கே  ரதி  உழலழகி அல்ல. மன  அழகி. 

எனவே ஐம்புலன் வசமாகாமல் சுறுசுறுப்பாக தனது நித்ய கடமைகளை செய்பவன் கஷ்டத்தை கஷ்டமாகவே உணர மாட்டான். லோக க்ஷேமத்திற்காக தன் உழைப்பை ஈடுபடுத்திக் கொள்வான்.

நமது கர்மங்கள் பயனை அளிப்பவை. ஆனால் ஈஸ்வரார்ப்பணமாக செய்த கர்மங்கள் வறுத்த விதையை நட்டது போல. எந்த கர்ம  பலனும் அளிக்காது. பயன் சம்பந்தம்  இல்லாதது.” என்கிறார் ஸ்வாமிகள். 

இன்னொரு சம்பவம் சொல்லி முடிக்கிறேன்.
ஒருநாள் ஸ்வாமிகள் எச்சம்மா ( லக்ஷ்மி அம்மா!) வீட்டுக்குப்  போனார். அவள் பூஜை பண்ணும் நேரம் அது.
”நீ என்ன பூஜை பண்றே?”
”உங்க படத்தையும், ரமணர் படத்தையும் வைத்து தான் பூஜை பண்றேன் இதோ பாருங்கோ ” என்றாள் .
”எவ்வளோ நாள் இந்த  மாதிரி எல்லாம் பூஜை பண்றது. தியானத்தில் இருக்க வேண்டாமா?” என்கிறார் சுவாமி.
”எப்படின்னு சொல்லிக் கொடுங்கோ? பண்றேன் ”
”இப்படித்தான்”
சேஷாத்ரி ஸ்வாமி தரையில் பத்மாஸனம் போட்டு அமர்ந்தார்.அவ்வளவு தான். அடுத்த கணமே  அவர் சிலையாகி விட்டார். காலை பத்துமணிக்கு இது நடந்து மாலை நாலு மணி ஆய்விட்ட போதும், கிட்டத்தட்ட  ஆறு மணிநேரம் அன்னம் ஆகாரம் இல்லை.  அவர் அசையவே இல்லை. சமாதி நிலை.    சாயந்திரம்  நாலரை மணி அளவில் இதுவரை எதிரே அமர்ந்து எத்தனையோ பேர் தன்னையே பார்த்துக்  கொண்டிருந்தது எதுவுமே தெரியாது அவருக்கு. மெதுவாக கண் திறந்தார்.”எச்சம்மா, பார்த்தியா. இப்படி தான் தியானம் பண்ணணும் நீ”
ஒருவர் அப்போது ”ஈஸ்வரனை எப்படி தியானம் பண்ணுவது?” என்று கேட்க, ”பலாப்பழத்திலே இருக்கிற  பலாச்சுளை போல, பலாக்கொட்டையை போல பண்ணணும்”

பக்தருக்கு அர்த்தமே   புரியாமல் வாயைப் பிளந்தார். ஸ்வாமியே விளக்கினார்.

”பலாக்கொட்டையை ஈஸ்வரன் என்று வைத்துக்கொள். எப்படி தன்னுடைய பீஜ சக்தியால் அநேக மரங்கள், கோடிக் கணக்கான பழங்களை அந்த  விதை  உற்பத்தி பண்ணுகிறது. அதுமாதிரி தான் ஈஸ்வரன் தன்னுடைய மாயா சக்தியால் அளவற்ற ஜீவன்களை உண்டு பண்ணுகிறான்.

சின்னதும் பெரிசுமாக, தித்திப்பு வேறே வேறே மாதிரி வெவ்வேறு நிறமாக, வெள்ளை, மஞ்சள், வெளிறிய கலர் என்று பலாப்பழ சுளை மாதிரி, எவ்வளவோ உயிர்களை படைக்கிறான். பலாக்கொட்டை மேலே உறை இருக்கிற மாதிரி, நம்மை   இந்த ஜீவனை , ஈஸ்வரன்  அன்னமயம் முதலான பஞ்ச கோசங்களை வைத்து மூடி இருக்கிறான். பலாக் கொட்டை  மேலே இருக்கிற உறையை எடுத்துட்டு சுட்டு சாப்பிடறோம் இல்லியா, அது போல பஞ்சகோசங்களை நீக்கணும். அப்போதான் பகவான் தெரிவான்.
இன்னொண்ணும் சொல்றேன் கேளு. நாம ஒருத்தர் தான். ஒரு ஸ்வரூபம் தான். ஆனால் கண்ணாடியில் பார்க்கும்போது, நாமும் தெரியறோம். நம்ம ஸ்வரூபமும் கண்ணாடியில் ஒண்ணு தெரியறது.   ஒண்ணு ரெண்டாயிடுத்து. அதுமாதிரி ஆத்மா ஒண்ணு தான். அதை நிர்மலமான புத்தியில் பிரதிபலிக்க பண்ணினால் தான் தியானத்தில் அனுபவிக்கிறோம். தியானம் பண்றவன், தியானம், யாரை தியானம் பண்றோமே அது,   ஆகிய  மூணும் ஒண்ணாயிடணும் . அதை தான் த்ரிபுடி என்கிறோம். ” ஒன்றறக்” கலந்து என்று தமிழ் பாட்டிலே வருமே அது.  புரியறதா?”

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *