HOW RAMAYANA BEGAN J K SIVAN

ராமாயணம் பிறந்தது . நங்கநல்லூர் J K SIVAN

ஸம்ஸ்க்ரிதத்தில், மற்றும் பிற இந்திய மொழிகளில் அற்புதமான ராமாயண வரலாறு, கவிதை, நாடகம் எல்லாம் இருந்தாலும் ஸம்ஸ்க்ரிதத்தில் மஹாபாரதம் ராமாயணம் இரண்டுமே சாகாவரம் பெற்றவை. பல நூற்றாண்டுகளை பார்த்தாலும் அவை இன்றும் புதிதாக இருப்பவை.

ராமாயணத்தை எடுத்துக் கொண்டால் 7000 வருஷங்களுக்கு முன் வாழ்ந்த த்ரேதா யுக மக்கள் வாழ்க்கை, ராஜாங்கம், தர்மம், மக்கள் ஒழுங்கு, பக்தி, நேர்மை, ஒற்றுமை, அன்பு, நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் எல்லாம் அது படம் பிடித்து காட்டுகிறது.
ஹிந்து கலாச்சாரத்தின் முதல் கவிதை காவியம் வால்மீகி வடித்த 24000 ஸ்லோகங்கள். உலகில் ஈடு இணையற்ற அற்புத இதிகாசம்.

ராமாயணம் தோன்றியதே ஒரு சுவாரஸ்யமான சம்பவம். ஒரு பொறுப்பில்லாத பலம் மிக்க வழிப்பறி கொள்ளையன் காட்டுப்பாதையில் வருவார் போவோரை நிறுத்தி, அடித்து, கொன்று, அவர்கள் கைப்பொருள்களை, நகைகளை, வைத்து தனது பெற்றோரை, குடும்பத்தை காப்பாற்றியவன். ஒருநாள் நாரதரை சந்திக்கிறான். அவரையும் வழிப்பறி செய்கிறான். அவரிடம் ஒன்றுமில்லை. அவர் அப்போது அவனிடம் அன்போடு உபதேசிக்கிறார்:

”யாருடைய பொருளையும் உடைமையையும் களவாடாதே. மிகப்பெரிய பாபத்தை சம்பாதிக்கிறாய்” .
”என் குடும்பத்தை நான் காப்பாற்ற வேண்டாமா?பணத்துக்கு என்ன செய்வேன்?”
”நீ இப்படி சம்பாதிக்கும் பணத்தில் பங்கு கொள்ளும் உன் குடும்பத்தார் நீ சம்பாதிக்கும் இந்த பெரிய பாபத்திலும் பங்கு கொள்கிறார்களா? அப்படி அவர்கள் செய்தால் மொத்த பாபத்தில் உன் பங்கு நிறைய குறையுமே அப்பா?”
”ஆமாம் அதிலென்ன சந்தேகம்”
”நல்லது அப்பா. நீ சொல்வது எனக்கு சந்தேகமாக இருக்கிறது. ஒரு வேலை செய். நான் போகாமல் இருக்க என்னை ஒரு மரத்தோடு சேர்த்து கட்டிப் போட்டுவிட்டு, நீ நேராக உன் வீட்டுக்குப் போ. அவர்கள் அத்தனை பேரிடமும், ”நான் சம்பா திக்கும் பணத்தில் பங்கேற்று சுகமாக வாழ்கிறீர்களே, நான் இதன் மூலம் பெறுகிற பாபத்திலும் உங்களுக்கு பங்கு உண்டா, ஏற்றுக்கொள்வீர்களா?” என்று கேட்டு விட்டு வா. ”

கொள்ளையன் வீட்டுக்கு வேகமாக போனான், அவன் அப்பாவை கேட்டான்.
” அப்பா நான் உங்களை எப்படி ஸம்ரக்ஷிக்கிறேன் என்று உங்களுக்கு தெரியுமா?”
”எனக்கு தெரியாது மகனே. நீ ஏதோ உழைத்து பாடுபட்டு சம்பாதிக்கிறாய். அந்த வருமானத்தில் எங்களை எல்லாம் உணவளித்து காப்பாற்றுகிறாய் என்று மட்டும் தான் தெரியும்”
”அப்பா நான் ஒரு வழிப்பறி கொள்ளைக்காரன்,கொலைகாரன். சிலரை கொள்ளையடிப்பேன்,சிலரை கொன்று அவர்கள் ஆபரணம், பணம் நகை எல்லாம் எடுத்துக் கொள்பவன். அந்த வருமானத்தில் தான் உங்களை எல்லாம் காப்பாற்றுகிறேன்”
“மஹா பாபி, நீ இப்படியா பிழைக்கிறாய். சண்டாளா, என் முன் நில்லாதே ஒழிந்து போ”
அம்மாவிடம் சென்று இதே கேள்வி கேட்டான்.
”ஐயோ என் மகனே, நீ அவ்வளவு கொடியவனா? உன்னைப் பார்ப்பதே பெரும் பாவம்” என்றாள் தாய்.
”அம்மா என் பாபத்தில் நீ பங்கேற்பாயா?”
” நீ என்ன கேள்வி கேட்டாயடா, முட்டாளே, உன் பாபத்தில் நான் எதற்கு பங்கேற்கவேண்டும்?”

மனைவியிடம் அதே கேள்வி கேட்டபோது அவள் என்ன சொன்னாள் :
” சீ நீ எல்லாம் ஒரு புருஷனா? பகல் கொள்ளைக்காரனா நீ. வழிப்பறி திருடன். எனக்கு அவமானமாக இருக்கிறது. உன் பாபத்தில் எனக்கு பங்கா? நிச்சயம் கிடையாது. எங்களை பராமரிப்பது புருஷன் குடும்பத்தலைவனாகிய உன் கடமை. உன் பாபத்தில் எங்களுக்கு எந்தப்பங்கும் கிடையாது. அதை நீ ஒருவனே சுமக்கவேண்டும்.\\

கொள்ளையனுக்கு,கொலைகாரனுக்கு, கண் திறந்தது. இது தான் உலகமா? இது தான் சுயநல வாழ்க்கையா? சொந்தம் பந்தம் எல்லாம் வெறும் ‘சும்மா’ வா? என் பாபத்தில் சுகம் தேடுபவர்கள் என் பாபத்தில் பங்கேற்க மாட்டார்களாம்!
விசனத்தோடு தளர்ந்த நடையோடு அந்த வழிப்பறி கொள்ளைக்காரன் காட்டில் மரத்தில் கட்டிப்போட்டிருந்த நாரதரிடம் வந்தான். ஓடிவந்து அவர் கட்டுகளை அவிழ்த்தான். காலடியில் கண்ணீரோடு விழுந்தான்.
”என்னைக் காப்பாற்றுங்கள் சாமி” என்று கதறினான்.
”அப்பனே, இந்த திருட்டு கொள்ளை வேலைகளை எல்லாம் இன்றோடு நிறுத்து. உன்னைச் சேர்ந்தவர்கள் எவரும் இத்தனை நாளாக உன் மேல் உண்மை அன்பு செலுத்தவில்லை என்று புரிகிறதா? இந்த மாயையை எல்லாம் உதறித்தள்ளு. உன்னிடம் இத்தனை நாள் பசை இருந்ததால் ஒட்டிக்கொண்டவர்கள் நீ இப்போது வெறும் கையனாகி விட்டாய் என்று தெரிந்தால் உன்னையே உதறி விடுவார்கள். உன்னை என்றும் நீ எப்படி இருந்தாலும் ரக்ஷிப்பவன் ஒருவன் இருக்கிறான். அவன் கால்களை கெட்டியாகப் பிடித்துக் கொள். உன்னைக் கரை சேர்ப்பான். உன்னோடு பேரம் பேசாமல் உன்மேல் அன்பை, கருணையைப் பொழிபவன், அவனை தியானம் பண்ணு ”

”எனக்கு த்யானம் ஜபம் எதுவும் பண்ணத் தெரியாதே”

மனதை ஒருமைப்படுத்தி விடாமல் ”மரா, மரா”என்று சொல்லிக்கொண்டே இரு. அது தான் ஜபம்.வருஷங்கள் ஓடின, அசையாமல் அமர்ந்து ஜபம் செய்து கொண்டிருந்த அந்த கொள்ளையன் மேல் பாம்பு புற்று படர்ந்தது கூட அவனுக்கு தெரியாது. அன்ன ஆகாரமின்றி ஜபித்தான்.

”மகரிஷி எழுந்திருங்கள் ”என்று ஒருநாள் ஒரு குரல் கேட்டது.
”நான் மகரிஷி இல்லை, ஒரு கொள்ளைக்காரன்”
”இல்லை நீங்கள் புண்யம் செய்த ஒரு மகரிஷி தான். எழுந்திருங்கள். உங்கள் பெயரே இனி புற்றுகளில் தோன்றியவர் என்ற அர்த்தம் கொண்ட ”வால்மீகி மகரிஷி”

வால்மீகிக்கு அபார ஞானம் சித்தியாகியது. சமஸ்க்ரிதத்தில் ஸ்லோகங்கள் வெள்ளமாக இயற்ற முடிந்தது.
ஒருநாள் கங்கைக்கு குளிக்கச் சென்றார். எதிரே ஒரு மரத்தில் சந்தோஷமாக இரு க்ரௌஞ்ச பக்ஷிகள் ஒன்றோடொன்று ஒட்டி உறவாடி மகிழ்ந்து கொண்டிருந்தன. இதைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த வால்மீகியின் கண்ணெதிரேயே எங்கிருந்தோ ஒரு கூரான அம்பு பறந்து வந்து ஆண் க்ரௌஞ்ச பறவையை ஸ்தலத்திலேயே கொன்று விட்டது. செத்து உயிரற்ற பிணமாக கீழே விழுந்த ஆண்பறவையின் உடலை பெண்பறவை சுற்றி சுற்றி வந்தது. அதன் துயரத்தை துன்பத்தை கண்ட வால்மீகி அந்த வேடனைப் பார்த்து

मा निषाद ! प्रतिष्ठां त्वम् गमः शाश्वतिः समाः यत् क्रौञ्चनां मिथुनादेकंsवधि काममोहितं ||
Maa Nishada Pratistham Tvamagamahsāsvati Samaa Yat Kraunchamithunaadekam Avadhi Kaamamohitam

‘ ஹே குற்றம் செய்தவனே, நீசா, இரக்கமற்றவனே, இரு அன்பான பறவைகளில் ஒன்றை கொன்றுவிட்டாயே. உனக்கு இனி என்றும் வாழ்க்கை முழுக்க அவதி தான் ” என்று சபித்தார் வால்மீகி. அடுத்த கணமே, ”அட நானா இப்படி எல்லாம் பேசுகிறவன், சாபம் கொடுப்பவன்” என்று வால்மீகிக்கே ஆச்சர்யம். நான் எப்படி இருந்தவன் இப்படி பேசுகிறேனா ‘
ஒரு அசரீரி அப்போது வால்மீகிக்கு கேட்டது

”’இந்த சம்பவத்தைப் பாரத்த வால்மீகி உன் வாயிலிருந்து இப்போது ஒரு சோக கவிதை வெளி வரப்போகிறது. ஸ்ரீ ராமரின் வாழ்க்கையை ஸ்லோகங்களாக எழுதப் போகிறாய். உலக நன்மைக்கு அது அவசியமாகும் ”

வால்மீகி கடகவென்று ராமாயண ஸ்லோகங்களை இயற்ற ஆரம்பித்தார். உலகத்தில் முதல் அற்புத இதிஹாச காவியம் கிடைத்தது பாரத தேச மக்களுக்கு. அதன் மூலம் ராமனின் மஹாத்மியம் வெளிப்பட்டது. ராமாயண சிரஞ்சீவிக் காவியத்தால் வால் மீகியும் நினைக்கப்படுகிறார். வணங்கப்படுகிறார். இன்று அயோத்தியில் கோயில் கொண்டுள்ள ஸ்ரீ ராம் லல்லாவின் வாழ்க்கை காவியமே நாம் பாராயணம் செய்யும் ராமாயணம். நமது மூச்சு.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *