THIRUPPAAVAI 29 J K SIVAN

அழகிய ஆழ்வாரே , ஆண்டாளே!  – நங்கநல்லூர்  J K  SIVAN
திருப்பாவை

மார்கழி 29ம் நாள்

29.  உனக்கே நாம் ஆட்செய்வோம்

திருவரங்கம் ஸ்ரீ ரங்கநாத பெருமாள் பக்தர்களுக்கு ஆதிசேஷ  படுக்கையில் சாய்ந்த வடிவில் ரங்கநாதராக அருள்புரிகிறார். ஸ்ரீரங்கம் பூலோக வைகுண்டம். செல்வச் செழிப்பு மிக்க பாரம்பரிய மற்றும் வரலாற்று சிறப்புமிக்க க்ஷேத்ரம். 108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும் முதல்  வாஸஸ்தலம்  ஸ்ரீரங்கம்.காவிரி கொள்ளிடம் ஆறுகளுக்கு இடையே உள்ள ஆலயம்.  சிற்பக்கலை அதிசயங்கள் கொண்டது. 156 ஏக்கர் நிலப்பரப்பு.  ஏழு  ப்ரஹாரங்கள். 21 கோபுரங்கள்.  மார்கழி மாதத்தில் மட்டும்  லக்ஷோப லக்ஷம்  பக்தர்கள் வந்து ரங்கநாதனை சேவிக்கிறார்கள். இங்கே  தொப்புளிலிருந்து ப்ரம்மா கிடையாது.

மார்கழி மாதம்  29 நாட்கள் தான்.  முப்பது பாசுரம்  ஆண்டாள்  பாடியிருக்கிறாள். ஸ்ரீ ரங்கத்தில்  ரங்க நாச்சியார்  ஓடி இறைவனை அடைந்த  ரெங்கமண்டபத்தில் நின்று கல்யாண ரங்கனை தரிசித்தேன்.

ஆயர்பாடியில் ஆண்டாளை பார்க்கிறோம். என்னவோ பேசுகிறாளே , காதில் விழுகிறதா?
”இதென்னடி, எப்போதும் நானே பாடுகிறேனே, நீங்களும் என்னோடு சேர்ந்து சொல்லுங்கள்”  ஆண்டாள் கூறிட , கூட இருந்த அத்தனை இடைச் சிறுமிகளும் அவளைத் தொடர்ந்து பாடினார்கள். அந்த அமைதிச் சூழலில் மென்மையான குளிர் உடலை வருட, இந்த இனிய கானம், நம்பிக்கை கலந்த உண்மையான பக்தி, இதயத்தை மயிலிறகாக வருடியது.

”எப்படி ஆண்டாள் உன்னால் மட்டும் இவ்வளவு அழகாக பாட்டை இயற்ற முடிகிறது அதை  அழகாக  இனிமையாக  பாடவும்  முடிகிறது?” என்று அவர்கள் வியந்து கேட்டபோது ஆண்டாள் சிரித்தாள்.

” நீங்கள் இப்போது என்னோடு சேர்ந்து பாடினதிலேயே விடை இருக்கிறதே கவனிக்க வில்லையா?” என்று கேட்டாள் .

”என்ன பாடினோம், அதில் என்ன விடை மறைந்திருக்கிறது? ‘ என்று அவர்கள் சிந்தித்துக் கொண்டிருக்கும் போது நாமும் ஆண்டாள் என்ன பாடினாள் அதில் அவள் சொன்ன அந்த விஷயம் என்ன என்று  கொஞ்சம் சிந்திப்போம். அறிந்து கொள்வோம்.

”சிற்றம் சிறு காலே வந்து உன்னை சேவித்து உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்று ஏவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்”

‘இந்த பிறவி மட்டுமல்ல, இனி வரும் ஏழேழு பிறவிக்கும் நான் உன்னைச் சேர்ந்தவன், உன்னைச் சரணடைந்தவன் என்பதால் உன்னிடமிருந்து தனியே பிரிக்கப்படாதவன், உன்னால் ஆட் கொள்ளப் பட்டவன் என்று ஒரு பக்தன் தன்னை கிருஷ்ண னிடம் அர்ப்பணித்துக் கொண்ட போது இது மட்டுமல்ல இன்னும் எத்தனையோ அழகான பாடல்கள் அவன் உள்ளத்தி லிருந்து பிறக்குமே’ என்று ஆண்டாள் சுட்டிக்காட்டியது புரிகிறதா?

”ஏண்டீ ஆண்டாள், நாமெல்லாம் இப்போது ரொம்ப சாத்வீகமாகவே சாப்பிடுகிறோம் இல்லையா?. இந்த விரதம் இருந்த திலிருந்து கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக நாம் எல்லோரும் பழையபடி இல்லையே. கிருஷ்ணனைச் சந்தித்ததும் ரொம்பவே மாறிவிட்டோம் இல்லையா?” என்று ஒருசிறுமி ஆண்டாளை கேட்டாள்.

”இப்படி இருப்பதில் உங்களுக்கு சந்தோஷம் தானே’  என திருப்பிக் கேட்டாள்  ஆண்டாள்.

”இதிலென்னடி சந்தேகம் உனக்கு. இப்போதெல்லாம் மனசு ரொம்ப லேசாகி விட்டது போல் இருக்கிறது. எங்கோ ஆகாயத் தில் மேகங்களுக்கு எல்லாம் மேலாக ஆனந்தமாக உயரே எங்கேயோ  காற்றிலே பறக்கிற மாதிரி இருக்கிறதடி” என்று ஒரு இளம்பெண் தனது உணர்வைக் கூறினாள்.

ஆகவே, சாத்வீக உணவு உண்பதன் மூலம் எப்போதுமே ‘செய்யாதன செய்யோம்’, தீய எண்ணங்கள் உள்ளே இடம் பெறாது, மனம் அவை நீங்கி லேசாகும்.   அங்கு இறைவன் பஞ்சு மெத்தையின் மீது அமர்வது போல் இடம் பெற்று அமர்வான் என்பதை ஆண்டாள் மூலம் கோதை நாச்சியார் இந்த திருப்பாவையின் 30 பாசுரங்களில் எளிதாக விளக்குகிறாள்..

வில்லிப்புத்தூரில் என்ன நடக்கிறது என்று பார்ப்போமா?

”சுவாமி,  இத்தனை நாளா நீங்க சொல்ற திருப்பாவை பார்க்கறதுக்கு சின்னதா இருந்தாலும் உள்ளே ரொம்ப பெரிய விஷயங்களை அடக்கிண்டிருக்கு” என்றார் வில்லிப்புத்தூர் வட பத்ர சாயி  கோவில் பட்டாச்சார்யார்.

”கோதை நாச்சியார்  திருப்பாவையில்  யோகங்களைப் பற்றி யெல்லாம், நான் கவனிச்ச வரைக்கும் பரம ரகசியமாக வச்சு பாடியிருக்கா. நம் உடலில் பல முக்ய ஆதாரச் சக்கரங்கள் இருப்பது தெரியுமல்லவா ? அதில் அதி முக்யமானது தான் முதல்லே மூலாதாரம் என்கிற குண்டலினி புறப்படும் இடம். . ரொம்ப சக்தி அதற்கு. பார்க்க சுருண்டு படுத்திண்டிருக்கிற பாம்பு மாதிரி இருக்கும் . இதை ஒரு உலுக்கு உலுக்கி எழுப்பணும். அதுக்கு முறையாக தெரிஞ்சவா கிட்ட போய் யோகம் கத்துக்கணும். உச்சாணிக்  கிளைக்கு அதாவது நமது சிரசிலே இருக்கிற சக்ரம். அது பேர் ஸஹஸ்ராரம்– (ஆயிரம் மொட்டு தாமரை என்று கண்ணதாசன் பாடுவாரே அது ) கிட்டே இந்த குண்டலினியைக்  கொண்டு போய் சேக்கணும்.

இதைத்தான் ஒரு பாசுரத்திலே ( 6வது நாள் ) திருப்பாவையைப் பார்த்தோமே அதில் கோடி காட்டியிருக்கிறாள் கோதை.

”கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்” என்று சூசகமாக சொல்றாள். புரிகிறதா. சகடம் என்றால் சக்கரம், அரவு என்றால் நான் சொன்ன குண்டலினி என்கிற சுருண்ட பாம்பு   என்று அர்த்தம் கொள்ளவேண்டும்.

”சுவாமி, வாஸ்தவமான பேச்சு.. ரொம்ப யோசிச்சா, இந்த திருப்பாவையோட உள்ளர்த்தங்களை எல்லாம் தெரிஞ்சிக்க ஒரு ஆயுசு போதாதோ என்றே தோணறது.”

”வாஸ்தவம் தான். எல்லாமே அவா அவா புரிஞ்சிக்கிறதைப் பொறுத்து அமையறது தான்” என்று தலையாட்டினார் விஷ்ணு சித்தர்.
பரமாத்மாவோட ஜீவாத்மா கலக்கிறது தான் மனித பிறப்போடைய லக்ஷ்யம். (கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய் என்று 27ம் நாள் சொன்னது )
”இது நம்மாலே முடியுமா” என்று ஒதுங்கக்கூடாது. இது  ”ஏன்” நம்மாலே முடியாது?” என்று முயற்சி செய்தால் பலன் கிடைக்கும்.
நம்பிக்கை மனதில் இருந்தால் மட்டும்  போதாது.   இதயத்தில் ஆர்வம் எழவேண்டும். நெஞ்சில் உறுதி தானாகவே வந்து விட்டதென்றால் எந்த காரியமும் கைகூடும்.

 

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *