COME NEAR ME BHEEMAA…. J K SIVAN

‘வாடா  கண்ணே  பீமா,   வா”  –   நங்கநல்லூர்  J K  SIVAN

 அவன் உலகில் எதுவும் பார்க்காத  ஒரு ஜீவன்.  சூரியன்  எப்படி இருக்கும் என்று கேள்விப்பட்டவன்.   அவனது உலகம் இருண்ட கண்டம். ஆனால்  அவன் ஒரு மஹா சாம்ராஜ்ய சக்ரவர்த்தி.  பீஷ்மர்  துரோணர்  கர்ணன் அருகில் இருக்கும்போது எவர் அவனை நெருங்க  முடியும், வெல்ல  துணிச்சல் வரும். அவன் பெயர்  திருதராஷ்டிரன்.  எல்லோர் குரலும் பேச்சும் கேட்கும், யார்  எப்படி இருப்பார்கள் என்று தெரியாது, எந்த  விஷயமும் அவன் அறிந்து கொள்வதைப்  பொறுத்து தான் புரிந்தது.  அவனுக்கு 100 பிள்ளைகள்,  அவன்  ஆசை,  பாசம், உலகம்  எல்லாம் அவனது  மூத்த பிள்ளை துரியோதனன் மேல் தான். கண்மூடித்தனமான பாசம் என்பது திருதராஷ்டிரனைப்  பொறுத்தவரை  சரியானது,   உண்மையானது. துரியோதனன் முகம் கூட அவனுக்கு தெரியாது.  தன்னிடம் வளரும் தனது  சகோதரன் பாண்டுவின் பிள்ளைகள் ஐந்து பேரை தன் மகன் வெறுக்கிறான் என்று மட்டும்  தெரியும். பாண்டுவின் ஐந்து  புத்ரர்களும்  மஹா வீரர்கள்,பலசாலிகள் என்றும் திருதராஷ்டிரனுக்கு தெரியும்.   விரோதம்  மூண்டு மலை போல் வளர்ந்து விட்டது மகாபாரத போர் நிச்சயம்   நடக்கப்  போகிறது என்றும்  அவனுக்குத்  தெரியும். தனது 100  பிள்ளைகளும்  தன் சகோதரன்  பாண்டுவின் 5 பிள்ளைகளும் எதிரிகளாக இந்த குடும்ப போர்  நடக்கப்  போகிறது என்றும் தெரியும். இந்த போரின் காரணமும் தெரியும். அதை தடுக்க கிருஷ்ணன்  முயற்சி எடுத்ததும் தெரியும். எல்லா அரசர்களும் ரெண்டு கட்சிகளாக பிரிந்து சிலர் கௌரவர்கள் பக்கம் சிலர் பாண்டவர்கள் பக்கம் சேர்ந்து படை வகுத்ததும் தெரியும். தனது மக்கள்  வெற்றி பெற்று  பாண்டவர்களை  வெல்ல வேண்டும் என்று எடுக்கப்பட்ட  எல்லா முஸ்தீபுகளும்  முயற்சிகளும்  அக்கு வேறு  ஆணிவேராக திருதராஷ்டிரனுக்குத் தெரியும் .ஆனால்  இதெல்லாம் தடுக்க  தான் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதும்  தெரியும். ஆனால் பாசம்  நேசம்  பிள்ளைகள் மேல்  அவனது ”உண்மையான கண்மூடித்தனமான”  ஆசை  அவனை  பாரபக்ஷமாக  நடந்து கொள்ள  தூண்டியது. சுயநலம் அவனை ஆக்கிரமித்து விட்டது.   ஒற்றுமையாக இருக்கவேண்டும்,  சண்டை வேண்டாம் என்று அடித்து சொல்லத்  தெரியாது. அதிகாரத்தை தனது  அங்கீகாரத்தை நிலை நாட்டத்  தெரியாது.  ஏனென்றால்  வெறித்தனமான
புத்ர பாசம்,  துரியோதனன் மேல்  அத்தனை ஆசையும் நேசமும்  அவன் மனதில் நிறைந்திருந்தது. கண்ணை மறைத்தது இயற்கையிலேயே அமைந்தது.  கருத்தை மறைத்தது என்று  சொல்வது தான் சரி.

 த்ரிதராஷ்டிரன்  நிச்சயம் பாண்டவர்கள் தோற்று  தன் மகன் துரியோதனன் ஏகபோக  சக்ரவர்த்தி ஆவான் என்று  நம்பினான்.  போரில்  பாண்டவர்கள்  இறந்து போவதை நினைத்து  அவன்  துளியும்  கவலைப்படவில்லை. கிருஷ்ணன் என்று ஒருவன் இருக்கிறானே என்ற எண்ணம்  அவன்  மனதில் எழவில்லை. திருதராஷ்டிரனுக்கு கண்ணாக இருந்தவன் சஞ்சயன்.அவன் நேர்மையானவன். நியாயவான்.  சஞ்சயன் பீஷ்மர்,துரோணர்  கிருபர்  எவர்  எடுத்துச் சொல்லியும்  திருதராஷ்டிரன்  செவியில்  துரியோதனனுக்கு எதிராக  எதுவுமே  ஏறாது. 

மஹா பாரத யுத்தம் நடப்பதை அன்றாடம்  சஞ்சயன் மூலம்  ஒன்று விடாமல் அறிந்தான்.   18 நாளும்  யுத்த  நிகழ்ச்சிகள்  பூரா  இடைவிடாமல்  சஞ்சயன்  சொல்லி  கேட்டான்  திருதராஷ்டிரன். பதினெட்டு நாளும்  தினம் தினம் தனது மக்கள் அழிவதைத் தான் அறிந்தான். கடைசியில் துரியோதனனும்  மாண்டான். பீமனால் கொல்லப்பட்டான் என்ற  சேதியை அவனால் ஜீரணிக்க முடியவில்லை. செய்வதறியாமல்  திகைத்தான். உள்ளூர மனம் வெடித்து சிதறியது. உள்ளூர ரத்தக்கண்ணீர்  வடித்தான். ஒருவரா இருவரா.  அவனுடைய நூறு பிள்ளைகளும் இந்த பீமன் ஒருவனாலேயே  கொல்லப்பட்டவர்கள் என்றபோது பீமன்மேல் அவனுக்கு எவ்வளவு  ஆத்திரம்  இருக்கும்? ஒன்றும் செய்ய வழியில்லாமல்  அவன் துடித்துக் கொண்டிருந்தான். இதோ  இப்போது  போர் முடிந்து விட்டது. வெற்றி வீரர்களாக பாண்டவர்கள் ஹஸ்தினாபுரம் திரும்பி விட்டார்கள். இனி அவர்களே அரசர்கள்.  அவனை  சித்தப்பா  என்று மதித்து அவனை  வணங்கி தொழுகிறார்கள். அவர்களுக்கு  துரோகம்  செய்தவன் துரியோதனன், அவன் மாமன் சகுனி, துணை போன கர்ணன், ஒத்து ஊதிய துரியனனின் 99  சகோதரர்கள்  என்பதால் அவர்களைத்தான் எதிரியாக  கருதினார்கள். நேர்மை நியாயம், தர்மத்துக்காக  போராடினார்கள். அவர்கள் வெற்றிக்கு முக்கிய காரணன்  கிருஷ்ணன் என்று அவனை தெய்வமாக  வணங்கினார்கள்.
ஆகவே  பாண்டவர்கள்  திருதராஷ்டிரனை  சிறை செய்யவோ கொடுமைப்படுத்தவோ  கனவிலும் எண்ணக்கூட இல்லை. தங்களது தந்தைக்கு சமானமாக ஆசையோடு அரண்மனை நுழைந்து திருதராஷ்டிரனுக்கும் காந்தாரிக்கும்  தங்கள்மரியாதையை தெரிவித்து அவர்கள் ஆசியுடன் ஆட்சி பாரத்தை எற்றுக் கொள்ள  தீர்மானித்தனர்.
 சஞ்சயன் மூலம் இந்த சேதி  திருதராஷ்டிரனுக்கு போனது வெளிப்படையாக, தனது மனதில் இருந்த எரிமலையை வெளிக்காட்டாமல்  பாண்டவர்களின்  வெற்றியை உதட்டளவில்  வாழ்த்தினான். மகிழ்ச்சியை  தெரிவித்தான். அவர்களை கௌரவிக்க தனது  அரண்மனைக்கு  வரவழைத்தான்.  கிருஷ்ணனும் கூடவே  சென்றான்.
கிருஷ்ணன் பாண்டவர்களோடு திருதராஷ்டிரனைப்  பார்க்கப் போகுமுன் “யுதிஷ்டிரா  எனக்கு ஒரு முக்கியமான  காரியம்  இருக்கிறது.  நீங்கள்  ஐவரும் சற்று பொறுங்கள்.   நான் வந்த பிறகு நாம் அனைவரும்  சேர்ந்து  திருதராஷ்டிரனைப் போய்ப்  போகலாம்” என்றதால் பாண்டவர்கள் கிருஷ்ணன் திரும்பிவரும் வரை  காத்திருந்தனர். இதற்குள் திருதராஷ்டிரன் ஆள் மேல் ஆள்   விட்டு அவர்களை வரச்சொன்னான். அவர்களோ கிருஷ்ணனுக் காக காத்திருந்தனர். சற்று நேரம் கழித்து கிருஷ்ணன் திரும்பி வந்த பிறகு அனைவரும்  திருதராஷ்டிரனைக்  காணச்  சென்றார்கள்.
காந்தாரி அவர்களுக்கு ஆசி வழங்கினாள்.  பாண்டவர்கள்  கிருஷ்ணனோடு  வயதான தம்பதிகளை விழுந்து வணங்கினார்கள்.
“எங்கே  யுதிஷ்டிரனை  வரச்சொல் என்னிடம்” என்று  அருகே  வந்த  யுதிஷ்டிரனை கட்டித்  தழுவி  ஆசி கூறி  “இனி  நீ  இந்த  ராஜ்யத்தை சிறந்த  அரசனாக பரிபாலனம் செய்து  இந்த வம்சத்துக்கே  நல்ல பெயர் வாங்கி கொடுப்பாய் என்று  எனக்கு ரொம்ப  நன்றாக தெரியும்”என்றான் திருதராஷ்ட்ரன்.
நகுல சகாதேவர்களை ஆசிர்வதித்தான்.  திரௌபதியை  ஆசிர்வதித்தான். அப்போது வந்த  அர்ஜுனனை ஆரத்தழுவி   “அர்ஜுனா,  நீ சிறு பிள்ளையாக இருந்த போதே  உன் வீரம்,  வில் வித்தை பராக்கிரமம்  எல்லாம் துரோணர்  சொல்லி  காதார  கேட்டிருக்கிறேன். உன்னைப்  பார்க்க முடியவில்லையே  தவிர  உன்  பெருமை, அருமை அனைத்தும்  அறிவேன்.  இந்த  போரில் உன் சாகசங்கள் அனைத்தும்  விடாமல்  சஞ்சயன் சொல்லி  கேட்டேன்.  வில் வித்தைக்கென்றே பிறந்தவன்  நீ”  என்று  அர்ஜுனனை  ஆரத்தழுவி போற்றினான்.

கிருஷ்ணன் வணங்கியபோது “ கிருஷ்ணா  நீ  என்னை  வணங்காதே.  நான்  உன்காலில் விழுந்து வணங்க வேண்டியவன்  உன்  பேச்சைக் கேட்டிருந்தால்  என் மக்கள்  பிழைத்திருப்பார்கள். ஆனால்  பாண்டவர்களின் வீரம்  வெளிப்பட்டிருக்காதே.  நீ  சொன்ன  கீதை  கிடைத்திருக்குமா??”. பெருமூச்சு  விட்டான் திருதராஷ்டிரன். பெருமூச்சு விட்டவன்  அடுத்தபடியாக…“எங்கே என் அபிமான   பீமன்?  அவனைக் காணோமே  கூப்பிடுங்கள் அவனை!”
“பீமன்  இதோ வந்து விடுவான்” என்று கிருஷ்ணன்  சொல்லி அருகே வந்த பீமனுக்கு சைகை காட்டி தூர விலகுமாறு சொன்னான். ஒன்றும் புரியாது பாண்டவர்கள்  திருதிரு வென்று  விழிக்க கிருஷ்ணன் தான் கொண்டு வந்த ஒரு இரும்பு  விக்ரஹத்தை  திருதராஷ்டிரன் அருகே  கொண்டு சென்றான்.
“மஹாராஜா,  இதோ வஜ்ரதேகம் படைத்த  பீமன்  உங்கள்  அருகே  நிற்கிறான்”.திருதராஷ்டிரன்  “ஹ ஹ ஹ” என்று  சிரித்தான்.  அவன்  சிரிப்பில் ஒரு  வெறி  இருந்தது.  அவன் கைகள் நீண்டன. ஆத்திரத்தில் திருதராஷ்டிரன்  கரங்கள் இறுகின .  இரும்பினால் செய்யப்பட்ட பீமன் உருவச்சிலையை  கைகளால் தடவினான்.  கெட்டியாக பிடித்து  ஆர்வமாக  வாரி அணைத்துகொண்டான்.
“ இரும்பு தேகம் தான் உனக்கு.. வா, பீமா, வா, உனக்காகவே நான்  காத்திருந்தேன். எவ்வளவு பெரிய  பலசாலி நீ!  என் மக்கள் அனைவரையும் கொன்றதில் பெரும் பங்கு உனக்கு தானே!. என்  மகன்  துரியோதனை இந்த உடல்  பலத்தால் தானே கொன்றாய்!. உன்னை  ஆரத்தழுவுகிறேன் வா”என்று  இறுக  எலும்புகள்  படபடவென பொடியாக  நொறுங்க   கட்டிக் கொண்டான்  திருதராஷ்டிரன்.
தன் மக்களைக் கொன்ற  பீமனைப்  பழிவாங்கும்  எண்ணம்  திருதராஷ்டிரன்  மனம் பூரா ஓடியதை  தெரிந்த  கிருஷ்ணன்  சமயோசிதமாக  இரும்பு பதுமை  ஒன்றை  சமயத்தில்  கொண்டுவந்து திருதராஷ்டிரன்  அருகில்  விட்டதால்  திருதராஷ் டிரனின்  உள்ளே இருந்த  வெறி, கோபம், பழிவாங்கும் உணர்ச்சி  அனைத்துக்கும் அந்த  இரும்பு பதுமை  பலியாகி கண நேரத்தில்  பொடிப் பொடியாகியது.
” இப்போது  தான்  எனக்கு  நிம்மதி”என்று வெறியோடு  சிரித்தான்  திருதராஷ்டிரன்.
”என் மகனைக் கொன்ற  பீமனை நான் கொன்று பழி தீர்த்துவிட்டேன். துரியோதனா, இனி  உன் ஆத்மா அமைதி  பெறும்”  என்று மனதுள்  சொல்லிக்கொண்டு மகிழ்ந்தான்.
“பீமன்  வந்திருக்கிறேன்  உங்களை  விழுந்து  வணங்குகிறேன்”  என்று  பீமன்  குரல்  கேட்டதும்  அடுத்த கணமே  வெட்கித்  தலை  குனிந்தான் திருதராஷ்டிரன்.
“இதற்கு  முன்  நான்  அணைத்தது  பீமன் இல்லையா?” என்று  ஏமாற்றத்துடன்  கேட்டான்  திரித்தராஷ்டிரன்.
“இல்லை, திருதராஷ்டிரா, உன்  எண்ணம் நான்  அறிந்தவன். நீ  அழித்தது  ஒரு  இரும்பு சிலையை  மட்டுமே!” இதோ உன்னை வணங்கி நிற்கும் பீமனுக்கு உன் ஆசியை வழங்கு” என்றான்  கிருஷ்ணன்.
“கண்ணா, கிருஷ்ணா,  என்னை மன்னித்துவிடு. உணர்ச்சி வசப்பட்டு விட்டேன். இனி  உள்ள நாட்களையாவது இது வரை நான்  செய்த  தவறுக்கு  பிராயச்சித்தம்  தேட  உபயோகிக்கிறேன்”  என்று  கண்ணில்லாமலேயே  கண்ணீர் வடித்தான்  திருதராஷ்டிரன்.

 

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *