PESUM DEIVAM – J K SIVAN

பேசும் தெய்வம்   –  நங்கநல்லூர்  J K  SIVAN
 மஹா பெரியவா  போற்றிய   மன்னார்குடி பெரியவா   

கற்றோர்க்கு சென்ற இடம் எல்லாம் சிறப்பு இல்லையா?.   கிருஷ்ண  சாஸ்திரிகள்  கீர்த்தி எங்கும் பரவி  அவர்  உபன்யாஸங்களால்  அவருக்கு நிறைய பொன்னும் பொருளும் சம்பாவனையாக வந்தது. ஒவ்வொரு பிரசங்கத்தின் போதும் ”ப்ரம்மா விஷ்ணு மஹேசனை நான் கண்டதில்லை. என் குரு முத்தண்ணாவை ப்ரத்யக்ஷமாகவும், ஸ்ரீ ராமனை கனவிலும் காண்கிறேன்” என்பார்  சாஸ்திரிகள்.

மஹா  பெரியவா என்றால் எல்லோருக்கும் தெரியும். காஞ்சி பெரியவா , பெரியவா, பெரிய பெரியவா, பரமாச்சார்யா, உம்மாச்சி தாத்தா, தாத்தா உம்மாச்சி…. எவ்வளவோ பேர் அவருக்கு. இந்த மஹா பெரியவாளே  இன்னொருத்தரை  ”பெரியவா” என்று தான் சொல்வார்.

ஒருவரை ”பெரியவாள்’ என சொல்வதானால் அவர் வித்வத்திலும், அன்பிலும், பண்பிலும் தெய்வீகத்திலும், ஆன்மீகத்திலும் தவத்திலும் தியானத்திலும் சிறந்தவராக இருக்கவேண்டும். இதெல்லாமும், இன்னமும் இன்னமும் கூட அதிகமாகவும் இருப்பதால் தான் நாம் காஞ்சி முனிவரை ” மஹா பெரியவா ” என்கிறோம். அவரே இன்னொருவரை ”மன்னார்குடி பெரியவா” என்று சொல்லும்போது.. எவ்வளவு மரியாதைக்குறியவர் ராஜு சாஸ்திரிகள் ……!!! சேர்த்து ‘மன்னார்குடி பெரியவாள்’ என்றே அறியப்பட்டவர் மன்னார்குடி ஸ்ரீ ராஜு சாஸ்திரிகள்.

மன்னார்குடி மஹா மஹோபாத்யாய தியாகராஜ மஹி ராஜு சாஸ்திரிகள் ( 28.5.1815- 4.3.1903) என்பவர்  தான் மன்னார்குடி பெரியவா. பாரத்வாஜ வம்சத்தை சேர்ந்த  ஒரு வேத வியாசர். அடையபலம் ஸ்ரீ அப்பய்ய தீக்ஷிதர் குடும்பம். திருவாரூர் கூத்தம்பாடி கிராமத்தில் பிறந்தவர். அம்மா  மரகதவல்லி ஜானகி அம்மாள் அப்பா   மார்க்க ஸஹாய அப்பா தீக்ஷிதர். மன்னார்குடியில் முதல் அக்ரஹாரத்தில் குருகுலம் அமைத்து ஆயிரக்கணக்கான வித்யார்த்திகளுக்கு வேத சாஸ்திரம், அனுஷ்டானம் கிரந்தம் எல்லாம் கற்பித்தார். வெளி மாநிலங்களிருந்தெல்லாம் மாணவர்கள் வந்து கற்றார்கள். அனைவருக்கும் அன்னதானம், வஸ்திரதானம் அளிக்க அநேகர் உதவினார்கள். பாடம் கற்பிப்பதில்  மன்னார்குடி பெரியவா  ரொம்ப ஸ்ட்ரிக்ட் . கண்டிப்பு. கோபிப்பார். அதே சமயம் புரியவில்லை என்றால் திரும்ப திரும்பச்  சொல்லித் தருவார்.

தினமும் வடக்கே நடந்து கைலாசநாதர் கோவில் அருகே தான் காவேரி ஸ்நானம். சிஷ்யர்கள் தெற்கே மீனாட்சி அம்மன் ஆலய படித்துறையில் ஸ்னானம் செய்வார்கள். ஒரு சிஷ்யன் பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரிகள் ஒரு தடவை தர்க்கத்தில் விடை சொன்னதை அவமரியாதை, கர்வம் என்று எடுத்துக்கொண்டு தண்டிக்க குருகுலத்தை விட்டு அனுப்பினார். கிருஷ்ண சாஸ்திரி வெளியே சென்று ராமாயண ப்ரவசனங்கள் நடத்தினார்.

இதர சிஷ்யர்கள் மூலம் க்ரிஷ்ணசாஸ்திரியின் பிரசங்கங்கள் நன்றாக இருப்பதாக கேள்விப்பட்டு தனது சிஷ்யனின் பிரசங்கத்தை நேரில் சென்று கேட்ட  ராஜு சாஸ்திரிகள்
ராஜு  சாஸ்திரிகள்  பிரசங்கம் கேட்ட அன்று  கிருஷ்ண சாஸ்திரிகள்  ராமனின் கல்யாண குணங்களை பற்றி கடல் மடை திறந்தாற்போல் பேசிக்கொண்டிருந்தார். அன்று ”ராமனின் பொறுமை” பற்றி பிரசங்கம்.
பிரசங்கத்தை கேட்டதும்  ”என் கண்ணை திறந்துட்டுது கிருஷ்ணன் பேச்சு ” என்று அதிசயித்தார் மன்னார்குடி பெரியவா. பிரசங்கம் முடிந்து க்ரிஷ்ணசாஸ்திரிகள் தனது குரு  வந்திருந்ததை அறிந்து அவரை நமஸ்கரித்து பவ்யமாக கைகட்டி நின்றார்.

”அப்பா கிருஷ்ணா, இன்னிக்கு என் கண்ணை திறந்துட்டே. அடடா ஸ்ரீ ராமனின் கல்யாணகுணங்களை பத்தி நீ பேசினது அற்புதம். அதுவும் பொறுமையைப் பத்தி . அபாரம். நீ ஒரு மஹாநுபாவன். எத்தனையோ ஜனங்களுக்கு நீ உன்னதமான சந்தோஷத்தை தரப்போறே. நாளையிலேர்ந்து மறுபடியும் வா. உனக்கு நிறைய இன்னும் சொல்லித்தரணும்”

இந்த நிகழ்ச்சி மன்னார்குடி பெரியவாளை மாற்றி அவரிடம் இருந்த கோபம் மாயமாக மறைந்து விட்டது.
இரக்க குணம், அமைதி, பொறுமை உள்ளவராக்கி விட்டது..

1864ல் அப்பாவுக்கு சோமயாகம் பண்ணினார். அப்பா சொல்படி அப்பாவின் சகோதரர் அப்பய்ய தீக்ஷிதர் பிள்ளை நீலகண்ட சாஸ்திரியை தத்து எடுத்துக்கொண்டார். இருவருமாக குருகுலம் நிர்வாகம் செய்தார்கள். . பல சந்யாசிகள் கூட வந்து மாணவர்களாக சேர்ந்து வேத சாஸ்திரம் கற்றார்கள். அந்த குருகுலம் பிற்காலத்தில் சங்கரமடமாகியது. இதற்குதவியவர் வேறு யாருமில்லை. நமது பரமாச்சாரியார் தான். அந்த குருகுலத்தில் உருவான மஹான்கள் சிலர் பெயர்களை சொல்கிறேன்:

பைங்காநாடு கணபதி சாஸ்திரி, நடுக்காவேரி ஸ்ரீனிவாச சாஸ்திரி, பழமானேரி சுந்தர சாஸ்திரி, கோஷ்டிபுரம் ஹரிஹர சாஸ்திரி, திருப்பதி வேங்கடசுப்ரமண்ய சாஸ்திரி. மல்லாரி ராமகிருஷ்ண சாஸ்திரி,
பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரி, காசி ப்ரஹ்மானந்த ஸ்வாமிகள், பாலக்ரிஷ்ணானந்த ஸ்வாமிகள்
ராமக்ரிஷ்ணானந்த ஸ்வாமிகள், மஹாதேவ ஸ்வாமிகள், தக்ஷிணாமூர்த்தி ஸ்வாமிகள், மகாராஷ்டிரா ஸ்வாமிகள், சச்சிதானந்த ஸ்வாமிகள் , தென்னாங்குளம்  நீலகண்ட சாஸ்திரி, யஞஸ்வாமி சாஸ்திரி, சுத்தமல்லி ஸ்ரீ சுப்பிரமணிய சாஸ்திரிகள் யதீந்திராள்.
இவர்களில் யாரையாவது விவரமாக உங்களுக்கு தெரிந்தால் அவர்களை பற்றி விஷயங்கள் எனக்கு அனுப்பினால் எல்லோருக்குமாக எழுதுகிறேன். எல்லோரும் இந்த மகான்களை அறியவேண்டாமா?

மன்னார்குடி பெரியவா தனது தாத்தாவிடம் சாமவேதம் கற்றார். அப்பாவிடம் காவ்யம், நாடகம் எல்லாம் கற்றார். பதினைந்து வயதில் ஸம்ஸ்க்ரிதத்தில் எழுத படிக்க, பேச, கவிகள் இயற்ற திறமை பெற்றார். ஸ்ரீ நாராயண சரஸ்வதியிடம் மேற்படிப்பு. ஸ்வயம்பிரகாச யதி களிடம் வேதாந்தம். மேல காவேரி சின்னண்ணா தீக்ஷிதரிடம் மஹா பாஷ்யம் கும்பகோணம் ஸ்ரீ ரகுநாத சாஸ்திரிகளிடம் மீமாம்சம் பாடம் பெற்றார்.

1887ல் பிரிட்டிஷ் ராணி விக்டோரியாவின் தங்கவிழா. மஹாமஹோபாத்யாய பட்டம் கொடுக்க ராஜு சாஸ்திரிகள் பேர் தேர்வு ஆனது. டில்லிக்கு கூப்பிட்டார்கள். தனது நித்ய கர்மாநுஷ்டானம், பூஜைகள் தடை படக்கூடாது என்று ”டெல்லி எல்லாம் நான் போகமாட்டேன் எனக்கு பட்டம் வேண்டாம்” என்று சொல்லிவிட்டார். இந்திய கவர்னர் ஜெனெரல் தஞ்சாவூர் கலெக்டரை அழைத்து அவர் நேரில் வீட்டுக்கே வந்து பட்டத்தை அளித்ததால் பெற்றுக்கொண்டார்.
மஹா பெரியவா கூட்டிய அத்வைத மாநாடுகள், சபைகளில் பிரதம பண்டிதராக பங்கேற்றவர் மன்னார்குடி பெரியவா.
ராஜு சாஸ்திரிகள் 30 புத்தகங்கள் எழுதி இருக்கிறார். பல ஆசிரியர்களுக்கு தனது அனுபவங்களை கொடுத்திருக்கிறார். வேத சாஸ்த்ர , ஹிந்து நீதி நெறி விஷயங்களில் வழி காட்டியாக இருந்திருக்கிறார்.
அவர் எழுதிய நூல்களின் பெயர்கள்: சத் வித்யா விலாசம், வேதாந்த வாத சங்கிரஹம் , உபாதிவிசாரம், ப்ரம்ம வித்யா தரங்கிணி வியாக்யானம் நியாயேது சேகரம், ஆடவைத்த சித்தி, சாம ருத்ர சம்ஹிதா பாஷ்யம், சிவா தத்வ விவேக தீபிகா, சிவ மஹிமா விவேக தீபிகா, ஸ்துதி சிவ மஹிமா ஸ்துதி வ்யாக்யானம், புருஷார்த்த ப்ரபோத ஸங்க்ரஹம், துர்ஜனோக்தி நிராசம், காவேரி நவரத்னமாலிகா, தியாகராஜஸ்த்வம் , தம்பரபரணீஸ்த்வம், காவேரிஸ்த்வம், தீக்ஷித நவ ரத்னமாலிகா, தீக்ஷிதவம்சாபரணம் .
அவருடைய சிஷ்யர்கள் பைங்காநாடு கணபதி சாஸ்திரி, பருத்தியூர் க்ரிஷ்ணசாஸ்திரிகள் ஆகியோர் தங்கள் குருவை பற்றி சிலாகித்து எழுதியிருக்கிறார்கள்.
காலம் சென்றது. விருத்தியாப்பியம் மன்னார்குடி பெரியவாளையும் விடவில்லை. 1903ல் 88 வயது. உடம்பு ரொம்ப  க்ஷீணமாகிவிட்டது. சுயமாக எழுந்திருக்க நடக்க முடியாத நிலை. அவர் மருமகள் அவரை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்டாள் .   எனக்கு பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரி ப்ரவசனங்களை கேட்கவேண்டும் போல் இருக்கிறதே” என்பார்.   செய்தி கிருஷ்ண சாஸ்திரியை எட்டியது. எவ்வளவு குரு பக்தி ஸ்ரத்தையான சிஷ்யன் பாருங்கள், கிருஷ்ண சாஸ்திரிகள் உடனே புயலாக மன்னார்குடி ஓடினார். சில  மாதங்கள் அங்கேயே தங்கி குருவுக்கு முன்னால் அமர்ந்து பிரத்தியேகமாக அவருக்கும் அவர் குடும்பத்தாருக்கும்நண்பர்கள், சிஷ்யர்களுக்கு மட்டுமாக அவருக்கு பிடித்த ராமாயண ப்ரவசனங்கள் புரிந்தார். மன்னார்குடி பெரியவாளுக்கு பரம சந்தோஷம். ஆசிர்வதித்தார்.

மன்னார்குடி பெரியவா, மார்ச் 4, 1903அன்று 88 வயதில் விதேக முக்தி அடைந்தார். நாடு நகரம் முழுதும் அவரது மறைவுக்கு வருந்தியது.
என்னுடைய  அதிர்ஷ்டத்தால் நான்  ஸ்ரீ  லலிதா ஸஹஸ்ர நாமம் பற்றி  எழுதி  பதிவுகள்  இடும்போது  அபூர்வ மனிதர் தார். ஸ்ரீ சுந்தரராமமூர்த்தி, பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரிகளின் கொள்ளு பேரன்,  நண்பரானார்.  நன்மங்கலம் எனும் ஊரில் அவரது ஒரு மகன் வசிக்கும் வீட்டுக்கு வரும்போது மூன்று முறை நேரில் சென்று பார்த்தேன். என் புத்தங்களை விரும்பி பெற்றுக்கொண்டார். சிறந்த சமஸ்க்ரித விற்பன்னர், தங்க மெடல், கோப்பைகள் பெற்றவர். பருத்தியூர் வம்சமாயிற்றே.
ஸ்ரீ வித்யா உபாசகர், 45-50 வருஷங்களாக தினமும் லலிதா ஸஹஸ்ரநாம பூஜை, நவாவரண பூஜை செய்தவர்.  பெரியவாளை, மன்னார்குடி பெரியவாளை எல்லாம் சித்ரம் எழுதியவர்,  நித்ய பூஜை பாராயணத்துக்கு குறைந்தது கிட்டத் தட்ட ஆறு ஏழு மணி நேரம்  செய்தவர். பம்பாயில் கம்பெனியில் உத்யோகம் பார்த்தவர். பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரிகள் எழுதிய – விஸ்வாமித்ர ரிஷி ”ராமன் யார் தெரியுமா தசரதா, நீ நினைக்கிறது போல் சாதாரணன் அல்ல, அவன் யார் என்று உனக்கு தெரியாது. நான் அறிவேன்  காம் வேத்மி ” என்று நூறு உதாரணம் காட்டும் சின்ன புஸ்தகம். அதை இனிமேல் உங்களுக்கு எழுதுகிறேன்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *