WOMEN ARE GREAT – J K SIVAN

பெண்ணே  கலங்காதே.    –    நங்கநல்லூர்   J K SIVAN

உலகத்தில் எல்லோருக்கும் தெரிந்த ஒரு உண்மை எது?  ஆண்களை விட  பெண்கள் ரொம்ப  பொறுப்புணர்ச்சி வாய்ந்தவர்கள். அவர்களுக்குத் தான்  ஆண்களைவிட  அதிக  அழுத்தம், சுமை. முக்கால்வாசி பெண்கள் கவலைக்காளாவது  சீக்கிரமே  உடல் நலம்  பாதிக்கப்படுவது இதனால் தான்.   அம்மாவாக, அக்காவாக, அண்ணியாக, பாட்டியாக, அத்தையாக,  மூத்த பெண்ணாக,  மாமியாராக  அதிகமாக குடும்பங்களில் உழைப்பவர்கள் பாடு படுபவர்கள்   பெண்கள் தான்.  அவர்கள் தியாகமும் உழைப்பும் பொறுமையும் தான் அவர்களது அழகு. சமூகத்தில்  ஆண்களைவிட  பெண்களுக்கு தான் மரியாதை அதனால் தான் அதிகம்.  ஒரு பெண்ணில்லாத  வீடு சோபை இழக்கும்.
பெண்களே  மாமியார் மருமகள்  சர்ச்சைகளிலிருந்து விடுபட முதலில்  வாக்குவாதம் வேண்டாம். உங்கள் கருத்துகளை நீங்கள் மதிப்பது போல் அவர்கள் கருத்துகளை வெளிப்படுத்துவதில் எதிர்ப்பு வேண்டாம். சொல்வதை சொல்லிவிட்டுப்  போகட்டும்.  ஏற்றுக்கொள்வதும்  ஏற்காததும் உங்கள்  சுதந்திரம்.  பதில் பேசாமல் உங்கள் வேலையைப்   பாருங்கள்.  ஒருவருக்கு இன்னொருவரை பிடிக்கவேண்டும் என்ற கட்டாயம் எதுவும் உலகில்  இல்லை.   நீங்கள் யாரையும்  வெறுக்காதீர்கள்.
உத்யோகம் செய்யும் பெண்களே,  உங்களை உங்கள் உயர் அதிகாரிகள், மதிக்கவில்லை, உங்கள் வேலையை பொறுப்பை  ஆதரிக்க, பாராட்ட வில்லை, தப்பு மட்டும் கண்டுபிடிக்கிறார்கள் என்றால் முடிந்தால்,  தைரியமாக எடுத்துச் சொல்லுங்கள்.  ஏற்காவிட்டால்  திருப்தியோடு வேலை செய்வதில் பயனில்லை. வேலையை விட்டுவிடுங்கள்.   சிறந்த பணியாளர்களுக்கு எத்தனையோ வேலைகள் எங்கோ என்றும்  காத்திருக்கிறது.
மேலும் மேலும் நன்றாக  புதியவற்றை,தெரியாதவற்றை கற்றுக்கொள்ளுங்கள், உங்கள் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். பொருளாதார சுதந்திரம் உங்களுக்கு தேவை. மற்றவரை நம்பி வாழ்வதை தவிர்க்க வேண்டும்.
வேலையில் ஈடுபட்டிருக்கும் பெண்களுக்கு வீட்டிலும் வேலை நிறைய இருக்கிறது.  அயராமல் முடிந்தவரை உங்களால் இயன்றவரை  உழையுங்கள்.  பிறருக்கு உழைப்பது ஒரு தியாகம், சுகம் என்று எண்ணுங்கள். ஒவ்வொரு நாளும் விருந்து சமைக்கவேண்டாமே. சுவையான ஒரு அயிட்டம் கூட  வயிற்றை நிரப்பும்.
மற்றவர்களோடு போட்டி வேண்டாம். யாருடனும் உங்களை ஒப்பிடாதீர்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு தனி வழி இருக்கிறது.  நீங்கள் மற்றவர்களுக்கு ஒரு உதாரணமாக இருக்கவேண்டிய  நிர்பந்தம் இல்லை.
பெண்கள் ஒவ்வொருவருமே ஒரு விதத்தில் அழகானவர்கள் தான். இதில் யார் அழகு என்ற போட்டிக்கே இடமில்லை. இறைவனின் சிருஷ்டியில் பெண்  ஆணைவிட  மேம்பட்டவள் என்ற நினைப்பு இருந்தா லே போதும்.
ஒருநாள்  வீட்டில் மனைவியோ அம்மாவோ இல்லை என்றால் வீடும் பாடு  அதன் அவலம்  எனக்கு பல வருஷங்களா தெரிந்த ஒரு அனுபவம்.  காலையில் குடித்த காப்பி டம்பளர்  ஈ விழுந்து ராத்திரி வரை  டிவியின் மேலே கிடக்கும்.  ஈர டவல்  பீரொ மேல் தூங்கும்.  கொல்லைப்பக்கம் கதவை சாத்தாமல்  வாசலைப் பூட்டிக்கொண்டு  ஆபிஸ்  போயிருக்கிறேன்.   சிலநாள் வீட்டைப் பூட்டிவிட்டு சாவியை பூட்டிலேயே தொங்கவிட்டு வெளியே போனதும் உண்டு.  FAN   லைட்கள் ஆளில்லாதபோதும் சுற்றிக் கொண்டோ,   எரிந்து கொண்டோ இருக்குமே. இன்னும் நிறைய விஷயங்கள் சொல்லவேண்டாம் என்று விட்டுவிடுகிறேன்.