ALANGUDI PERIYAVA – J K SIVAN

ஆலங்குடி பெரியவா  –    நங்கநல்லூர்  J K  SIVAN

ஆலங்குடி பற்றி என்ன தெரியும் என்றால்  அது  குரு ஸ்தலம். நிறைய பேர்  பரிஹாரத்துக்கு செல்வார்கள் என்றும்  அந்த ஊர் பெயர் கொண்ட ஒரு  கடம் வித்வான் ராமச்சந்திரன் என்றும் மட்டும் தெரியும். அங்கே இன்னொரு விசேஷம் பற்றி தெரிந்துகொண்டதால் அதை இப்போது சொல்கிறேன்.
நாராயணய்யர் என்ற ஒரு கிருஷ்ண பக்தர் வாழ்ந்து வந்தார். கோபாலக்ரிஷ்ணன் அருளால் ஒரு புத்ரன் பிறந்தான். அவனுக்கு ராமகிருஷ்ணன் என்று பெயரிட்டார். எல்லா பிராமண சிறுவர்கள் போல அவனுக்கும் உபநயனம், வேதாப்யாசம் நடந்தது. கல்யாணம் பண்ணவும் ஏற்பாடு நடந்தது. ராமகிருஷ்ணன் ஒரு பிறவி சந்நியாசி என்பதால் சம்சார பந்தத்தில் அவனுக்கு விருப்பமில்லை. எப்படி அப்பா அம்மா பந்தத்திலிருந்து தப்புவது என்று யோசிக்கும்போது    பாலக்ரிஷ்ணானந்த ஸரஸ்வதி  ஸ்வாமிகள் கனவில் நரசிம்ம மந்திரம் உபதேசித்தார்.   நரசிம்ம பக்தனாகவும் ராமகிருஷ்ணன் மாறினான். ஸ்ரீமத்  பாகவதத்தில் தீவிரமாக மனம் செலுத்தினான் . அவன் விருப்பத்தை மீறி பெற்றோர் அவனுக்கு கல்யாணம் பண்ணி வைத்தார்கள். அந்த காலத்தில் சிறுவர் சிறுமிகளுக்கு கல்யாணம் செய்யும் பால்ய விவாகம் நடைமுறையில் இருந்தது.   எப்படி சம்சார பந்தத்திலிருந்து தப்புவது என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கும்போதே ஒருநாள் காலை சிறுமியான அவன் மனைவி  அவள் பெற்றோர் வீட்டிலேயே இறந்து விட்டாள்  என்ற சேதி வந்து அவளுக்கு கணவனாக செய்யவேண்டிய  ஈமக்கடன்கள் செய்து முடித்தான்.  பெற்றோர்  அவனுக்கு மறு விவாகம் பண்ண முயற்சி செய்ததால்  ஒருநாள் வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டான்.  வயது 28 ஆகியது. உன்மத்தனாக  ஜடாதாரியாக  மெளனமாக என்றும் ஆடையின்றி  திகம்பரராக  அவதூதராக அலைந்து கொண்டிருந்தார். சதா  நரசிம்மன் பிரஹலாதன் நினைவு மட்டுமே. பாகவத  பாராயணம்  சப்தாஹம் நடக்காத ஊரில் தங்கமாட்டார்.
 பல ஊர்களுக்கு சென்ற  இந்த ஆலங்குடி சந்நியாசி ராமகிருஷ்ணன்  ஒருநாள் திருவிசநல்லூர் சென்றார். அங்கே  பாகவதத்தில் சந்தேகம் கேட்ட ஒரு பண்டிதருக்கு  விளக்கம் சொன்னார்.  காமாக்ஷி புரம்  என்ற ஊரில்  தங்கி  பாகவத உபன்யாசம் செய்யும்போது  ஆடையற்ற திகம்பரராக இல்லாமல்  பனங்குடி ஸ்வாமிகள் என்ற குருவிடம் ஆஸ்ரம தீக்ஷை பெற்று  ஸ்வயம்பிரகாசதானந்த ஸரஸ்வதி  என்ற  தீக்ஷா நாமம்  பெற்றார். சன்யாஸாஸ்ரமம் அடைந்தபின்  தண்டம் கமண்டலத்துடன் காஷாயம் உடுத்து, ஊர்த்வ புறம் அணிந்து  பக்தர்களுக்கு  பாகவத பிரவசனம் செய்தவர்.  அவரை அப்புறம் உலகம்  ஆலங்குடி ஸ்வாமிகள், ஆலங்குடி பெரியவா என்றபெயரில் அறிந்தது.  வெறும் கௌபீன வஸ்திரத்தோடு  ஊர்  ஊராக சென்று பாகவத பிரவசனம் செய்தார். ஆகார நியமம் கொண்டவர் என்பதால் மாதக்கணக்கில்  சத்துமா,  தானே திருகிய தேங்காய் துருவல், க்ஷீரம் இதிலேயே  ஜீவித்தார். குழந்தைகளோடு விளையாடுவார்.  குளம் இல்லாத  ஊர்களில் குளம் வெட்டுவார். பலர்  உதவுவார்கள்.  காசைக்  கையால் தொடாத ஒரு ஆச்சர்யமான சாமியார் என்று சொல்லலாம்.
ஆனந்த தாண்டவபுரம் பட்டாபிராமய்யர் என்று ஸ்வாமிகளுக்கு ஒரு சிஷ்யர். யாரோ அவருக்கு பில்லி சூன்யம் வைத்துவிட்டார்கள்.  தானே  உபதேசிக்காமல்  கோதண்டராமய்யர் எனும் சிஷ்யரை விட்டு பட்டாபிராமய்யருக்கு நரசிம்மமந்திரம் உபதேசிக்க செய்தார். அப்புறம்  என்ன  பட்டாபிராமய்யர் எந்தத்  தொந்தரவும் இன்றி சுகமாக இருந்தார்.  எத்தனையோ  ஊர்களில்  ஸ்வாமிகள் பாகவத சப்தாஹம் நடத்தினார். பல  இடங்களில் கஜேந்திர மோக்ஷம்  ப்ரஹ்லாத சரித்திரம் விடாமல் சொல்வார்.
ஒருநாள் கொள்ளிடத்தின்  சிற்றாறு ராஜா வாய்க்காலில் ஸ்னானம் செய்து  கொண்டிருக்கும்போது ஸ்வாமிகள் காலை ஒரு  முதலை கவ்விக்கொண்டது. இருகைகளையும்  கூப்பி ஹரே ஹரே என்று பிரார்த்தித்தார். அடுத்த கணமே  முதலை அவர் காலை விட்டுவிட்டு ஓடிவிட்டது. காலில் பெரிய காயம். இதை ஒரு பண்டிதன் பார்த்துக்கொண்டிருந்தான். அவன்  பகவானை விட்டு  மற்ற  உபதேவதைகளை, மற்ற ஜீவன்களுக்கு முக்யத்துவம் கொடுத்து வணங்கக்கூடாது என்ற கொள்கை கொண்டவன். ஆகவே கஜேந்திர மோக்ஷத்தை பாராயணம் பண்ண மாட்டான். மேலே சொன்ன முதலை சம்பவத்தை கவனித்தவன் அன்றுமுதல் மாறிவிட்டான்.  முதலை கடித்த காயம் பெரும் புண்ணாக மாறி அதற்கு தைலம் சூடாக காய்ச்சி மேலே  ஊற்றச்சொன்னார். பக்தர்கள் பயந்தார்கள். தானே கொதிக்கும் அந்த எண்ணை  தைலத்தில் தனது கால் மேல் ஊற்றிக்கொண்டார். உடல் வேறு ஆத்மா வேறு.  நான் உடல் அல்ல. என்னை உடல் உபாதை எதுவும் பாதிக்காது என்று என்று போதித்து நிரூபித்தார்.
கூத்தனுர்  அரசலாற்றங்கரையில் ஒரு தோப்பில்  சப்தாஹம். . பிற்பகல்‌ மூன்று மணி இருக்கும்.  திடீரென்று அங்கே  ஒரு பெரிய சர்ப்பம் வந்துவிட்டது.  பாம்பு  என்ற சொல் கேட்டதுமே  பலர்  பிரவசனம் வேண்டா மென்று ஓடிவிட சிலர்  பாம்பை அடிக்க  பயத்தோடு   முயன்றனர். நாகம்   ஸ்வாமிகள் உட்கார்ந்துகொண்டிருந்த  பலகைக்கு அடியில் பதுங்கி விட்டது.
”சுவாமி  எழுந்திருங்கோ  சீக்கிரம் சீக்ரம்.  பாம்பு ஆபத்து. ”என்று உளறிக்கொட்டி  கத்தினார்கள்‌. ‘எல்லாமே  பகவான்  ஸ்வரூபம்.  பேசாமல்  உட்கார்ந்துகொண்டு  உபன்யாசம் கேளுங்கோ ” என்று சொன்னார்  ஸ்வாமிகள். தன்னுடைய  யோக சக்தியால் பிரவசனம் மூலம் அவர்கள் உட்கார்ந்து கேட்கும்படியாக  பண்ணிவிட்டார்.   பிரவசனம் முடிந்தது ஸர்ப்பமும்  சரசரவென்று அங்கிருந்து ஓடிவிட்டது.
பிற்காலத்தில் ஸ்வாமிகளுக்கு கண்பார்வை மங்கியது. ஆபரேஷன் பண்ண ஒரு கண் டாக்டர் வந்து.மயக்க மருந்து, வலி மரத்துப்போக எதுவும் செய்யவேண்டாம்.உடல் வலி என்னை பாதிக்காது என்று ஸ்வாமிகள் மறுத்துவிட இரு விழிகளும் ஆபரேஷன்   அன்ஸதேஷியா இல்லாமலேயே   பண்ணப்பட்டது.  ஸ்வாமிகள் அசையவே இல்லை. கட்டு பிரித்தாகிவிட்டது. பார்வை தெரிந்தது.
தனது முடிவு எப்போது என்று ஸ்வாமிகளுக்கு தெரிந்துவிட்டது.  அது நரசிம்ம ஜெயந்தி அன்று நிறைவேற பிரார்த்தித்தார். அன்று கோலாகலமாக  ஜெயந்தி நடந்தது.  ப்ரஹ்லாத சரித்திர  உபன்யாசமும் ஜோராக நடந்தது . பிரவசனம் முடிந்தது. ஸ்வாமிகளின் பிராணனும் விடைபெற்றது.
ஒருநாள் மஹா பெரியவா  எங்கோ ஒரு இருட்டு அறையில் காலை நீட்டிக்கொண்டு படுத்துக் கொண்டிருந்தார். வெளிச்சம் வந்தபிறகு பார்த்தபோது  அந்த அறையில் ஒரு சன்யாசி படம். அது ஸ்வாமிகள் படம்.   மஹா பெரியவா மற்றவர்களை கூப்பிட்டு  இவர்  ஒரு பெரிய சந்நியாசி ”ஆலங்குடி ஸ்வாமிகள்” என்று பக்தியோடு மற்றவர்களிடம்  சொன்னார். 

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *