HAS THE THIEF BEEN CAUGHT ? J K SIVAN

கள்வன் பிடிபட்டனா?   நங்கநல்லூர் J K SIVAN
நம் எல்லோர்  வீட்டிலும் குழந்தைகள் இருக்கிறது. குழந்தைகள்   என்றால் விஷமம் செய்வதற்கென்றே  பிறந்தவர்கள் என்று எல்லோருக்கும் தெரியும்.  சில பெற்றோர்கள் கண்டிக்கிறார்கள். சில பெற்றோர்கள் என்னதான் போட்டு உடைத்தாலும் பரவாயில்லை, குழந்தை என்றால் அப்படித்தான் செய்யும் என்று சந்தோஷப்பட்டுக்கொண்டே  இன்னும் புதிதாக உடைப்பதற்கு  வாங்கித் தருபவர்கள். சிலர்  அடிப்பவர்கள், பயமுறுத்துபவர்கள். சில குழந்தைகள் பயப்படும், சில அழும், சில அடிவாங்கும். சில எப்படியாவது சிரித்து மயக்கி தப்பிவிடும்.  கண்ணன் எனும் கிருஷ்ணன் இந்த கடைசி ரகம்.  அவனுக்கென்றே ஒரு கூட்டம், சகாக்கள் பிருந்தாவனம் பூரா இருந்தார்கள்.
வெல்லம் இனிப்பு இவை இருப்பது, எறும்புக்கு எப்படி தெரிகிறது. பேப்பரில் படித்தோ, டிவி யில் பார்த்தோ, வாட்சப்பில் படித்தோ வா அறிகிறது?. அதுபோல் தான் கிருஷ்ணன் வெளியே வந்திருக்கிறான் என்று ஒரு நண்பனுடன் அவன் பேசிக்கொண்டிருந்ததை மற்றவர்களும் அறிந்து கொண்டு விட்டார்கள். எல்லோரும் யமுனை நதிக்கரைக்கு ஓடினார்கள். அங்கே வழக்கமாக விளையாடும்  ஒரு பெரிய மகிழ மரத்தடியில் தான் சந்திப்பது வழக்கம். யார் யார் என்னென்ன தின்பண்டங்களை கொண்டுவந்தாலும் அங்கு தான் பங்கு போட்டுக் கொள்வது.  அவர்களது  அடுத்த கட்ட  திருட்டு  நிகழ்வுகளை திட்டம் போட்டு நிறைவேற்றுவது. இதற்கெல்லாம் தலைவன் கிருஷ்ணன். 

”கிருஷ்ணா எனக்கு பயமாக போய்விட்டதடா?” என்றான் ஒருவன்.
‘எதற்கு ?”
”உன் வீட்டில் எல்லோர் அம்மாக்களும் சேர்ந்து வந்து ஏதோ  கோள்  சொல்லி  விட்டார்களாமே. நம்மைப் பற்றியா?”
”இல்லையே. உங்களைப்  பற்றி ஒன்றும் சொல்லவில்லையே. என்னைப் பற்றி தான் எல்லோருமே  முறையிட்டார்கள். நான் அதை பொய் என்று சொல்லிவிட்டேன்”.
” எனக்கு பயமாய் இருக்கிறதடா கிருஷ்ணா, நாம் இனிமேல் எந்த வீட்டுக்கும் போய் வெண்ணெய் தேடவேண்டாம்,  திருட வேண்டாம்””சரி  அப்படியென்றால் நான்  இனிமேல் வீட்டை விட்டு வெளியே வரப் போவதில்லை .”
”ஐயோ,  கிருஷ்ணா,  உன்னோடு விளையாடாமல்   எங்களால் இருக்க முடியாதுடா  கிருஷ்ணா. கட்டாயம் நீ எங்களோடு சேர்ந்து தினமும் ஏதாவது சொல்லிக்  கொடுத்து  நாங்கள்  அதை செய்ய வேண்டும். அதில் இருக்கும் சுகமே தனி” என்றான் ஒரு பையன்.
”சரி இப்போது  எல்லோரும் யமுனையில் குதியுங்கள் நீரில் சற்று விளையாடுவோம்.” என்றான்  கிருஷ்ணன்.
”தொப் தொப்” என்று அந்த சிறுவர்கள் நீரில் குதித்தார்கள். மூழ்கி தண்ணீரின் அடியில் ஒருவரை ஒருவர் பிடித்து விளையாடினார்கள். நீச்சல் போட்டி வைத்து அடுத்த கரை வரை நீந்தினார்கள். மரங்கள் மீது ஏறி அங்கிருந்து குட்டிக்கரணம் போட்டு நீரில் குதித்தார்கள். பொழுது போயிற்று. நதியின் அடியில் இருந்து மண் எடுத்து மேலே சீக்கிரம் யார்  வருகிறார்கள் என்ற விளையாட்டு.
ரொம்ப நேரம் விளையாடிவிட்டு  கிருஷ்ணன்  கரை ஏறினான். அவர்களும்  அவனைப் பின் தொடர்ந்தார்கள்.

இத்தனை நேரம் கண்ணன் கவனித்துக் கொண்டிருந்த அந்த தனி வீட்டில் இருந்து ஒரு கோபி வெளியே வந்தாள் . தனது குடிசையின் வாசலை மறைத்துக் கொண்டிருந்த தட்டிக் கதவை சாற்றினாள் . இடுப்பில் குடத்துடன் யமுனை நோக்கி நடந்தாள் . சூரியன் மேலே நடு வானம் வந்துவிட்டான். சுள்ளென்று உஷ்ண காற்று வீசியது. கிருஷ்ணனும் மற்ற நண்பர்களும் மெதுவாக மரங்களின் பின் நகர்ந்து அந்த குடிசையை அடைந்தார்கள்.
ஏற்கனவே போட்டிருந்த திட்டம் தான்.
வெகுநேரம் நீரில் ஆடிய பையன்களுக்கு கபகப என்று பசித்தது. எப்போதுமே குளித்தவுடன் பசி தெரியும். கண் வயிறு இரண்டுமே ஆகாரம் தேடும்.
கண்ணன் தன்னையும் சேர்த்து தலை எண்ணினான். ஏழு பையன்கள் . ரெண்டு பேர் அந்த குடிசையின் வாசலில் இருந்த மரத்தின் மேல் ஏறி அங்கிருந்து ஆற்றைக்  கண்காணித்தார்கள்.
ஒருவன் அந்த கோபியின் வீட்டு வாசலில் தட்டி கதவை திறந்து மற்றவர்களை உள்ளே அனுப்பி கதவை முக்கால் வாசி மீண்டும் மூடி அதன் வழியாக மரத்தில் இருப்பவர்கள் சைகைக்கு காத்திருந்தான். நாலு பேர் கிருஷ்ணன் உட்பட உள்ளே  கிடு கிடுவென்று  நுழைந்தார்கள். அந்த பெரிய குடிசை வீட்டில் வாசலை அடுத்து ஒரு பெரிய அறை . அதை அடுத்து ஒரு சிறு அறை . அதை ஒட்டி எதிர்புறம் இன்னொரு சின்ன  இருட்டு அறை அதன் கூரையில் ஒரு மாமர உத்தரம் குறுக்கே ஒரு சுவரில் இருந்து இன்னொரு சுவரின் மேல் படிந்து இருந்தது. பத்தடி உயரம். அதில் நான்கு உறி கள் தொங்கின. ஒன்றின் மேல் ஒன்றாக மூன்று சட்டிகள் ஒவ்வொரு உறியிலும். இந்த விஷயம் நேற்றே தெரிந்து விட்டது. இன்று அதை கொள்ளை அடிப்பது தான் அவர்களது  திட்டம்.  கண்ணன் இது வரை காத்திருந்தது அந்த கோபி  வீட்டை விட்டு எப்போ வெளியே போவாள் என்று கண்காணிப்பதற்கு தான். 

கிருஷ்ணன் கண்கள் துழாவின. எப்படி அந்த உயரத்தை அடைவது. எங்கும் ஏணியோ பலகையோ எதுவும் காணப்படவில்லை. படு பாதகி அந்த  கோபி. எப்படி உயரத்தில் நமக்கு தேவையான வஸ்துவை நாம்  எடுத்து விடக்கூடாது என்று நமது  கைக்  கெட்டாமல் மேலே  தொங்க  வைத்திருக்கிறாளே.  கிருஷ்ணன் ஒரு கணம் யோசித்தான். நேரம் நழுவிக்கொண்டிருக்கிறதே.  கோபி  வருவதற்குள் காரியம் முடிந்தாகவேண்டுமே.

”கிருஷ்ணா,,,நம்மை என்ன வென்று நினைத்துக்கொண்டிருக்கிறாள் அவள் . நம்மால் முடியாதது என்ன? ” என்றான் ஒருவன்.

”சரி இப்படி செய்வோம்”. இருப்பவர்களில் பெரிய பையனை குனிந்து நிற்க செய்தான். முதல் அறையில் ஒரு சுவர் மீது நீளமான ஒரு கொம்பு சாற்றி வைத்திருந்ததை கண்டு பிடித்து விட்டான் . அதை பிடித்துக்கொண்டு முதல் பையன் குனிந்தான்.அந்த பையன் மேல் இன்னொருவன் ஏறி அவனும் கொம்பை பிடித்துக்கொண்டு முதலில் குனிந்து நின்றவன் மேல் ஏறி குனிந்து கொண்டான். மூன்றாமவன் சற்று சிறியவன் அவன் குதிரை மேல் ஏறுவது போல் தாவி கீழே இருந்த இருவரின் முதுகிலும் ஆடாமல் ஆசையால்  ஏறி  ஸ்திரமாக குனிந்து கொண்டான். இரு கைகளாலும் கொம்பை கெட்டியாக அவனும்  பிடித்துக் கொண்டான். அடுத்தது கிருஷ்ணன். அவன் ஆதாரமான கொம்பை பிடித்துக்கொண்டு மூன்று பேரின் மேலும் மெதுவாக ஏறி அந்த உயர கொம்பை இடது கையால் பிடித்துக்  கொண்டு வலது கையை உயர்த்தினான். சட்டிகளை தொட முடிந்தது. சற்று எம்பி அந்த உறியில் இருந்த சட்டிகளை எடுத்து கீழே அனுப்பினான். அவை தரையில் இறங்கின. மெதுவாக நகர்ந்த அந்த சிறுவர்கள் அடுத்து இரண்டு உறிகளையும் அணுகி சட்டிகளை தரை இறக்கினர். நான்காவது உறியை நெருங்கும் சமயம் மரத்தில் இருந்த இருவர் சைகை கொடுத்து விட்டனர்
 வாசலில் காவல் காத்துக் கொண்டிருந்தவன் ”டேய் கிருஷ்ணா அந்த கோபி வீட்டுக்கு  திரும்பி  வந்து கொண்டிருக்கிறாள்.” என்று எச்சரித்தான்.
 கண்ணன் மேலே இருந்து குதித்தான். மற்ற மூவரும் எழுந்தார்கள். ஒன்பது சட்டியிலும் பால், தயிர், வெண்ணெய் இருந்தது. பாலை எல்லாம் மடக் மடக்கென்று கண் இமைக்கும் நேரத்தில் குடித்து விட்டு சட்டிகளை தரையில் வீசினார்கள். தயிரையும் வெண்ணையும் பெரிதாக இருந்த நான்கு சட்டிகளில் நிரப்பிக்கொண்டு ஆளுக்கு ஒன்றை தூக்கிக்கொண்டு சிட்டாக ஓடினார்கள். வீட்டை திறந்து போட்டு விட்டு கொம்பை ஒரு அறையில் வீசி விட்டு அவர்கள் யமுனைக் கரையில் வழக்கமான மரத்தடியில் சந்தித்தார்கள்.

கிருஷ்ணனின் மயில் இறகு அவன் கீழே குதித்தபோது தலையிலிருந்து விழுந்ததை அவன் கவனிக்க வில்லை.
யமுனை நதியிலிருந்து அந்த கோபி நீர்க்  குடத்தோடு வீடு திரும்பியவள் ”ஏன் வீடு  திறந்து கிடக்கிறது? கதவை நான் சரியாக மூட வில்லையோ? கவனக்குறைவு ரொம்ப இருக்கிறது எனக்கு ” என்று தன்னைத் தானே சாடிக்  கொண்டு உள்ளே சென்றவள் கண்ணில் உடைந்த சில சட்டிகள் தென்பட்டன. எப்படி இந்த உறி சட்டிகள் உடைந்தன?. உறி அறுந்து விட்டதோ என்று பார்த்தாள். உறி  மேலே  தொங்கிக்கொண்டிருந்ததே. ஏன் சட்டிகளில் இருந்த பால் தயிர் வெண்ணெய் கீழே சிதறாமல்,கொட்டாமல் சட்டிகள் மட்டும் உடைந்திருக் கிறது. அதில் இருந்ததெல்லாம் என்ன ஆயிற்று?   சே  பூனைகள்  தொந்தரவு ரொம்ப இருக்கிறது இந்த பக்கத்தில். .. ஒரு உறியில் மூன்று சட்டிகள் அப்படியே வைத்தபடியே இருக்கிறதே.

என்ன அதிசயம் இங்கே நடந்தது?. அவள் கண்கள் துழாவும்  போது   தரையில்  கிடந்த மயில் இறகு காற்றில்  அசைந்தது. மயில் இறகு இங்கே எப்படி வந்தது? ஒரு கணம் யோசித்தவளுக்கு கிருஷ்ணன் வீட்டிற்கு சென்று அன்று காலை  யசோதையிடம் முறையிட்டது கவனத்துக்கு வந்தது. அந்த கிருஷ்ணன் பயல் அல்லவோ இது போன்ற பெரிய மயில் இறகைத்  தலையில் செருகிக் கொண்டு காட்சி அளிப்பவன். அவன் தான் வந்தி ருக்கிறான். உடனே சென்று யசோதையை அழைத்து வந்து இங்கு நடந்ததை காட்டவேண்டும்….. என்று யசோதை வீட்டை நோக்கி கோபமாகவும்  வேகமாகவும்  நடந்தாள். கையில் மயில் இறகை மறக்காமல்  எடுத்துக்கொண்டு போனாள்.

யமுனைக்கரையில் எல்லோரும் வெற்றியைக் கொண்டாடினார்கள். கூத்தாடினார்கள். கை நிறைய, வாய் நிறைய தயிர், வெண்ணெய் . ஏழு ஆயர்பாடி சிறுவர்களுக்கும் விருந்து….

கண்ணன் மெதுவாக வீடு திரும்பினான். ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது…அவன் அம்மா யசோதையும் கோபமாகவும் அவன் வருவதற்கு காத்திருந்தாள். 

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *