KALIYUG J K SIVAN

சுகர் சொன்ன கலிகாலம் : நங்கநல்லூர் J K SIVAN
கலிகாலம்  இப்போது  தான் புதிதாக   நடக்கிற மோசமான  காலம்  என்று  நினைக்கவே வேண்டாம்.  நான்கு யுகங்களில் கடைசியாக  நாலாவது  கலியுகம்.  இந்த நாலு யுகங்களும் தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாக  வந்து கொண்டே இருக்கும்.  அதற்கு பல கோடி வருஷங்கள் ஆகும். ஒவ்வொரு யுகமும் நமது கணக்கில்  பல  லக்ஷ வருஷங்கள்  கொண்டது.  இந்த பிரபஞ்சம்  தோன்றியதிலிருந்து இது நடந்து வருகிறது.  சொன்னால்  அசந்து போவீர்கள்.   இது வரை  1.8 கோடி கலியுகங்கள்   ப்ரம்மாவின்  50 வருஷ  ஆட்சியில் வந்து முடிந்து விட்டது.  அதாவது அந்த 50 ப்ரம்மாவின் வருஷத்தில்  453 கலியுகங்கள் நடந்து விட்டது.  இப்போது ப்ரம்மாவின்  51வது வருஷம் நடக்கிறது.  அதில் நடப்பது முதல் பாதத்தில்  இப்போது நாம்  அனுபவிக்கும் கலியுகம் 454வது…  இது நீடிக்கும் காலம்  432000  வருஷங்கள்!  போதுமா?.  நாம் 80 தாண்டுவதே  அதிர்ஷ்டம்.  அதற்குள் ஆஹா  ஊஹூ  கலி காலம் ரொம்ப மோசம் என்கிறோமே, இனி வரப்  போவது எப்படி இருக்கும்?  இதற்கு முன்   453 கலிகாலங்கள் எப்படி  இருந்தது?  யாருக்கு தெரியும்?  இதை விட மோசமாக இருந்திருக் குமோ? யார் கண்டார், யார்  எழுதி வைத்தார்?.
இப்போது நடக்கும் கலிகாலத்தில் என்ன  நடக்கும் என்பதை சுகப்பிரம்ம ரிஷி  பரீக்ஷித் மகாராஜாவுக்கு சொன்னதால் நமக்கும் தெரிந்தது.  நாம்  அன்றாடம் கண்ணால் கண்டு  அனுபவிக்கும் அதிர்ச்சிகள்  ”கலி காலம் எப்படி இருக்கு பார்த்தாயா?” என்று உலுக்குகிறது.  சுகர்  கலிகாலத்தை பற்றி சொல்வது ஸ்ரீமத் பாகவதத்தில் 12வது காண்டத்தில் 2வது அத்தியாயத்தில்  இருக்கிறது. அதன் சாராம்சங்களைப்  படித்தேன். அதைச் சொல்கிறேன். நான் ஜவந்திப்பூ மாலையை கழுத்தில் போட்டுக்கொண்டு சப்பளாங்கால் போட்டு உட்கார்ந்து உரக்க கதை சொல்லும் பௌராணிகன் இல்லை. உங்களில் ஒருவன்.
சுக  ப்ரம்ம  ரிஷியால் எப்படி  இவ்வளவு துல்லியமாக  5000 வருஷங்களுக்கு  முன்பே  நமது இப்போதைய  கலிகாலத்தில் என்னென்ன வெல்லாம் நடக்கப்போகிறது என்று அறிய முடிந்தது என்று கேட்டால் சுலபமான பதில் ”ஞான திருஷ்டி” என்று சொல்லிவிடலாம். நமக்கு பகலிலேயே எதிரே வரும் தண்ணீர் லாரி , கண்ணாடி போட்டுக்கொண்டும்  தெரியவில்லையே.
இதைச் சொன்ன சுக ப்ரம்ம ரிஷியை விட எதிர்கால கவலையில் கேள்விகேட்டு அவரை துளைத்து இதைச் சொல்ல வைத்த பரீக்ஷித் மகாராஜாவுக்கு தான் நாம் ரொம்ப ரொம்ப  நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். அவன் இத்தனை கேள்விகளை ஏழு நாளில் கேட்டு ஏழு ஜன்மத்துக்கு நமக்கு போதுமான விஷயங்களை சுகப்ரம்மத்திடமிருந்து பெற்றுத் தந்திருக்கிறானே.
நீங்கள் வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் எழுதி இன்னும் பெரிதாக எழுதுங்கள் என்று சில நண்பர்கள் அறிவுரை சொல்கிறார்கள். ”ஐயா, சுருக்கி எழுதும் இதைப் படிக்கவே ஆளில்லை.  மத்யமர்  என்ற  குழுவில்   பலரில் நான்  இன்றும் ஒருவன்.    மத்யமர் குழுவில்  ஆரம்பத்தில்  பதிவுகளை போடுவதில் எத்தனையோ கண்டிஷன்கள். அவை எனக்கு ஒத்து வராது. நான் நினைத்தபோது அதை உடனே எழுதுபவன். ஒரு நாளைக்கு பத்து கட்டுரைகள் பல தலைப்புகளில் எழுத தாகம் உள்ளவன். ஒரு நாளைக்கு ஒன்று என்று மீதி நேரம் நகம் கடித்துக் கொண்டு சும்மா உட்காரும் டைப் இல்லை.   அப்படி அந்த குழுவில் பதிவிட்டாலும் யார்  படிக்க போகிறார்கள்?  ஆன்மீக கட்டுரைகளை படிக்க ஆளில்லை. அதில் என் எழுத்துகளைப்  படிப்பவர்கள் ஒரு சிலர் ஏற்கனவே எனக்கு நண்பர்கள். அவர்கள் அங்கே படித்தால் என்ன. இங்கே படித்தால் என்ன என்று அந்த குழுவுக்கு எழுதுவதை நிறுத்தி விட்டு  என் முகநூல் பக்கத்தில் பதிவிடுகிறேன். எதற்கு சொல்கிறேன் என்றால், அந்த குழுவிலும் சரி, மற்ற  குழுக்களிலும் சரி,  ஆன்மீக கட்டுரைகள் படிப்பதை விட அவரைக்காய் பொரிச்ச குழம்பு பண்ணுவது பற்றி தெரிந்து கொள்ள நாட்டம் தான்  அதிகம்  உள்ளது. 

அவனவன் ஆபிஸ் போகும்போது, பஸ்ஸில் தொங்கிக் கொண்டு காதில் ஒயரை ear phone wire செருகிக் கொண்டு நிற்கும்போது, பக்கத்தில் இருப்பவனை இடித்துக்கொண்டு ரயிலில் பயணிக்கும்போது படிப்பதற்கு ஒரு எண்ணம் வந்து பத்து நிமிஷம் செலவழித்தால்  அவன் நிச்சயம்  பூர்வ ஜென்ம புண்ணியம் பண்ணவனாக இருக்க வேண்டும். அந்த நேரத்தில் அவனைப் பிடிக்க சின்னதாக  சுருக்கி எழுதினால் தான் உண்டு. இல்லையேல் அலமாரியில் பரிமேலழகர், நாலடியார், திரிகடுகம், திவ்ய பிரபந்தம், பெரிய புராணம்,ராமாயண  பாரதம், பாகவதம் புத்தகங்கள்  பக்கத்தில் என் புத்தகமும் அமர்ந்து கொள்ளும் என அறிவேன். அதற்கெல்லாம் சொந்தக்காரன்  அந்த புத்தகங்களை வாங்கியவன் இல்லை. பழைய பேப்பர் காரன்.
வாட்சாப் வந்தாலும் வந்தது, மூணு மணி நேரம் கதை சொல்கிறவர்கள் கூட மூணு நிமிஷத்தில் மொபைலில் சுருக்கிச் சொல்ல  முன் வந்து விட்டார்கள்.  யூ  ட்யூப்,  டிவி செய்திகள் , கட்சிக் கொடி பூசல்,   லஞ்ச  பேரம், ஊழல், நில ஆக்கிரமிப்பு கோர்ட் கேஸ்கள்  பற்றி கூட சுக  பிரம்ம ரிஷி அப்போதே தெரிந்து வைத்திருக் கிறார்விவரமாக படிக்க இங்கே யாரும் இல்லை.  நூறு வருஷங்களுக்கு முன்பே  ராமலிங்க வள்ளலார்  ”கடை விரித்தேன்  கொள்வார் இல்லை” என்று அனுபவ பூர்வமாக சொல்லி விட்டார்.   அவசரமாக பார்க்க, நுனிப்புல் மேய, பொம்மைகல் மூலம் பதில் சொல்ல மட்டுமே தேவையாகிறது.  மீம்ஸ் memes என்பது வடிவேல் சுவாமிகளால் உயிர்பெற்று ஊரெல்லாம் கொரோனா போல் பரவி இருக்கிறதே. யார் சுகப்ரம்மத்தின் ஸ்லோகங்களை படிப்பார்கள்?
சுகர் பரிக்ஷித்துக்கு எந்த தேசத்தில் எந்த  ராஜாவுக்கு அப்புறம் எவனைக் கொன்று எவன் வருவான் என்று சரித்திர பக்கங்களை அது எழுதப்படுவதற்கு முன்பே சொல்கிறார்.
சத்யம்  என்றால்  நிறைய பேருக்கு தெரியாமல் போய்விட்டது.  சத்யம்   தெரியுமா? என்று கேட்டால், தெரியுமே, இப்போ ‘அங்கே என்ன படம் ஓடுகிறது?” என்று  கேட்பது தான் ஞானம்.
மூக்குக்கு மேல் கோபம் எல்லாவற்றிலும், எதற்கும், எவருக்கும்  வருகிறதே.  பொறுமை, கருணை சகிப்பு தன்மை, எங்கிருந்து வரும்?
கலிகாலத்தில் பணம் ஒன்றே தான் பிரதானமாக செயல்படும். காசே தான் கடவுளடா. உண்மை, நேர்மை, சத்யம் எல்லாமே பணத்திற்கும், அது தரும் பதவிக்கும் அதிகாரத்திற்கும் அடிமையாகிவிடும். (நாம் தான் நிறைய பார்க்கிறோமே, படிக்கிறோமே). பணம் இருந்தால் படிக்காதவன் கூட டாக்டர். ஊசி போடுபவர் அல்ல, நீளமான தொள புளா கோட்டு மாதிரி கருப்பாக ஒன்று போட்டுக்கொண்டு தலையில் சதுரமான தொப்பி போட்டுக்கொண்டு கையில் சுருட்டி இருக்கும்  நூல் சுற்றிய காகிதத்தைப் பலபேர் முன்னிலையில் கைதட்டலுடன் ஒன்றுமே தெரியாமல், செய்யாமல் பல்கலைக்கழகத்தில் பெற்றுக்கொள்பவன். தடி எடுத்தவன் தண்டல்காரன்.
சுகப்ரம்மம் இப்போது நம்மோடு வாழ்பவரைப் போலவே, நமது அனுபவங்களை தானும் அனுபவித்தவர் போலவே ஐந்தாயிரம் வருஷங்களுக்கு முன்பு எப்படி உணர்ந்திருக்கிறார்?  என்பது தான் ஆச்சர்யம். மஹான்களால் எதிர்காலத்தில் நடக்கப்போவதை முன்கூட்டியே சொல்லமுடியும்.
”பரிக்ஷித்,  இனி எதிர்காலம் கலியுகத்தில் தடுமாறும். படிப்பு, நேர்மை, நாணயம் இதற்கெல்லாம் மதிப்பில்லை என்று சொன்னேனே, அதோடு பக்தியையும் சேர்த்துக்கொள். காசு மட்டும் இருந்துவிட்டால் இதெல்லாம் இருப்பதாக உலகம் உன் தலையில் கற்பூரம் ஏற்றி அடித்து சத்தியம் செய்யும்.
பணத்தை இன்னொருவனிடமிருந்து அபகரிக்க பெண்ணையும் பிள்ளையும் பலி ஆடுகளாக காட்டி இரக்கமில்லாத பெற்றோர்களே சுயநல விரும்பிகளாக மாறிவிடுவார்கள்.
நமது கலாச்சாரங்கள், புராணங்கள், வேதங்களை விற்பனை பொருளாக மாற்றி சிலர் யோகிகளாக, ஞானிகளாக சாதிகளாக ( டம்பாச்சாரிகளாக என்று வார்த்தையை உபயோகிக்கிறார்) ஏமாற்றுவித்தையில் சிறந்தவர்கள் பிழைப்பார்கள்.
ஏமாற்றுவித்தையில் சிறந்தவர்கள் பிழைப்பார்கள். கடவுளையே திருடி விற்பார்கள். பொற்சிலைகளை சுரண்டி பித்தளைச் சிலைகள் பொன் பாலிஷ் போட்டுக் கொண்டு விடும். பழங்கால  ராஜாக்கள் பிரதிஷ்டை பண்ணிய ஐம்பொன் சிலைகள்  கோவிலை விட்டு பறந்து வெளிநாடுகளில் கண்ணாடிப்பெட்டியில் வைத்து விற்கப்படும்.சாமியைப் பார்ப்பதற்கே  அதிக காசுகொடுத்தால் தான்  சீக்கிரம்  ஸ்பெஷல் வரிசையில் பணம் கொடுத்து தூரக்கே இருந்து ஒரு நிமிஷத்துக்கு கம்மியாக  பார்க்க  விட்டு பிடித்து  போ , ‘ ஜருகண்டி ‘என்று தள்ளுவார்கள்.
சுகப்பிரம்ம ரிஷி ஸ்லோகங்கள் சொல்லும்போது நடுநடுவே  கலிகாலம் பற்றிய  அதிர்ச்சிகரமான  ஸ்வாரஸ்யமான விஷயங்கள் வரும். காத்திருங்கள். 

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *