ORU ARPUDHA GNANI — J K SIVAN

ஒரு அற்புத ஞானி — நங்கநல்லூர் J K SIVAN
சேஷாத்ரி ஸ்வாமிகள்

”பறவை பறந்தது”

இன்று ஆவணி அவிட்டம். யஜுர் உபாகர்மம். காமோ கார்ஷித் ஜபம் பண்ணும்போது என்னையும் அறியாமல் சேஷாத்திரி ஸ்வாமிகள் உருவம் கண் முன் நின்றது. அவரைப் போல ஒரு தெய்வ திவ்ய ஸ்வரூப ஞானியைக் காண்பது அரிது.
சில வருஷங்களுக்கு முன் ஒரு நாள் நண்பர் ஊரப்பாக்கம் ஸ்ரீ மோகன் தம்பதியர் என்னை நேரில் கண்டு அவர்கள் வீட்டில் சுனாமியின் போது வீடே பாதி முழுகிய நேரம் சேதமடைந்த ஒரு பழைய புத்தகம் ஒன்றை கொண்டு வந்து கொடுத்தார். அது ஸ்ரீ குழுமணி நாராயண ஸ்வாமி சாஸ்திரிகள் நூறு வருஷங்களுக்கு முன்பு சேஷாத்ரி ஸ்வாமிகள் வாழ்வில் நடந்த சில சம்பவங்களை குறிப்பெடுத்து எழுதிய பக்தி நூல். ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிஸ்வாமிகள் சரித்திரம். எதற்கு இதை ஊரப்பாக்கத்திலிருந்து நங்கநல்லூர் வந்து நேரில் தரவேண்டும்? என்னை எப்படி தெரியும்?. அவர்களை எனக்கு முன்பின் தெரியாதே? எல்லாம் முக நூலில் நான் இடும் ஆன்மீக பதிவுகளால் கிடைத்த நட்போ? அது முழு ரஹஸ்யம் இல்லை. இது பகவத் ஸங்கல்பம் . சேஷாத்ரி ஸ்வாமிகள் கட்டளை. அதை நான் நிறைவேற்றவேண்டும். அது எனக்கு கிடைத்த பாக்யம்.

”நான் இதை உங்க கிட்டே கொண்டு வந்து கொடுத்தது நீங்க இதை மறுபடியும் இதை எழுதவேண்டும் என்பதற்காக. ஏதோ தண்ணீரில் ஊறிவிட்டாலும் பக்கம் பக்கமாக திருப்ப முடிகிற அளவு ”ஒக்கப்” WORKUP பண்ணி கொண்டு வந்திருக்கோம். ரெண்டு தலைமுறையா பூஜைலே இருக்கிற புஸ்தகம்.”

நான் சேஷாத்ரி ஸ்வாமிகளை ஒரு சின்ன அட்டையில் எங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து, என் சின்ன வயதில் என் அப்பா வழிபட்டதை பார்த்திருக்கிறேன் என்பதைத் தவிர அவரைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ள முயலவில்லை. அதைப் போக்க அவரே என்னிடம் நேரில் வந்ததாக இந்த சந்தர்ப்பத்தை எடுத்துக் கொண்டேன். கஷ்டப்பட்டு மோகன் தம்பதியர் கொடுத்த புத்தகத்தின் பக்கங்கள் சொன்னதை புரிந்து கொண்டு என் வழியில் தமிழில் எழுதி ” ஒரு அற்புத ஞானி” புத்தகமாக்கினேன். அது புத்தகமாகும் செலவில் ஒரு பங்கை ஏற்றுக்கொண்டவர்கள் மோகன் தம்பதியினர். உலகில் பட இடங்களில் உள்ள பக்தர்கள் சிலரை சேஷாத்ரி ஸ்வாமிகள் இப்புத்தகமாக சென்றடைந்து அருளாசி வழங்கி வருகிறார் என்பது ஈஸ்வர சங்கல்பம் மட்டும் அல்ல, ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகளின் சித்தமும் ஆகும். எனக்கு இதில் ஒரு பொறுப்பை வழங்கியதும் அவர் என் மேல் கொண்ட கருணை, மோகன் தம்பதியர் மூலமாக என்று தான் கூறவேண்டும்.
‘ ஒரு அற்புத ஞானி” புத்தகத்திலிருந்து ஒரு சில எழுத்துக்கள் :

” நான் சொல்லிக்கொண்டு வருவது இருநூறு வருஷங்களுக்கு முன்பான செயதிகள். அப்போதைய வாழ்க்கை முறைகள், பழக்க வழக்கங்கள் இப்போது முற்றிலும் மாறு பட்டவை . எனவே அக்கால நிலவரத்தை மனதில் கொண்டு வாசகர்கள் இந்த கட்டுரைகளை அணுகினால் அப்போது அக்காலத்தவர்களோடு நாமும் இருப்பதை போன்ற சுகானுபவம் பெறலாம். எல்லாம் மனசு பண்ணும் காரியம். .
”நீ என்னடா ஜபம் பண்ணிண்டு இருக்கே எப்போவும்?” என ஒருநாள் வங்கீபுரம் ஸ்ரீனிவாச அய்யங்கார் கேட்டார் சேஷாத்ரியை.
”அம்பஸ்ய பாரே” என்கிற நாராயண உபநிஷத்திலிருந்து, ‘காமோகார்ஷித் மன்யுர கார்ஷீத், காம க்ருதி நாஹம் கரோமி ” என்னும் சில வேத மந்த்ரங்கள் மாமா”
(ஆசை அறவே அகல வேண்டும். கோபம் கிட்ட வரக்கூடாது என்று உறுதி பெற சொல்லும் மந்திரங்கள் இவை. இதை தான் ஆவணி அவிட்ட உபா கர்மத்தில் சொல்கிறோம்.)
”எவ்வளவோ சொல்லுவே?”
”ஆயிட்டுது . லக்ஷத்துக்கு மேலே ஆவர்த்தி. இன்னும் ஒரு லக்ஷம் சொல்லணும்” –
”எதுக்கு?
”கர்மம் ஒழியாம எப்படி மோக்ஷம் அடையறது? உங்களுக்கு மோக்ஷம் வேண்டாமா? நீங்களும் பண்ணுங்கோ. ”
பேசிக்கொண்டே அந்த பையன் சேஷாத்ரி நகர்ந்து விட்டான். அவருக்கு கிடைத்த பட்டம் ”பாவம் சின்ன வயசிலேயே ஞானப் பைத்தியம்”

கோவில்களில் மணிக்கணக்காக உட்கார்ந்து ஜபம் செய்வதால் வீட்டில் தொந்தரவு, உபத்திரவம். வீட்டிலும் செய்ய வழியில்லை. என்ன செய்யலாம்? நிம்மதியாக எப்படி மனதை ஜெபத்தில் செலுத்த உபாயம்? ராத்திரி எல்லோரும் தூங்கும் போது மட்டும் செய்யலாமா? ஆஹா, இந்த இடம் மறந்து போச்சே. வேகவதி ஆற்றங்கரையில் சதுர்த்தர்கள் ஸ்மசானம் ஒருவரும் இல்லாத இடமாயிற்றே. அங்கே? . எனவே சாயந்திரம் சந்தியாவந்தனம் செய்து விட்டு அங்கேயே ஓரமாக மயானத்தில் இரவெல்லாம் ஜெபம். மறுநாள் காலை வீட்டுக்கு திரும்புவார் சேஷாத்ரி.

பத்துநாள் வரை ஒருவரும் இதை கவனிக்கவில்லை. அப்புறம் தான் கிளம்பிற்று எதிர்ப்பு வீட்டில். சுனாமியாக வெடித்தது. சேஷாத்ரியின் சித்தப்பா ஜோசியர் ராமசாமி , அத்தான் வெங்கட்ரமண சாஸ்திரி, எல்லோரும் பிலுபிலு என்று பிடித்துக் கொண்டார்கள்.

”’என்னடா காரியம் இது?, அசுத்தமான, அசுப, இடத்துலே எல்லாம் போய் ராவோடு ராவா ஜெபம் பண்ற வழக்கம்? முன் போல கோவிலிலேயோ, இல்லை வீட்டிலேயோ பண்ணாமல் இது என்ன வக்ர புத்தி உனக்கு ?

” வக்ரம் ஒண்ணும் இல்ல. அது ருத்ர பூமி. மீதி இடத்திலே ஆயிரம் ஜபம் பண்றது , அங்கே ஒரு ஜெபம் பண்றதுக்கு சமம் னு உங்களுக்கு தெரியாதா?” – சேஷாத்ரியின் பதில். .

அதற்குப்பிறகு சேஷாத்ரி இரவில் வெளியே போகவிடாமல் இரவு வீட்டின் கதவைப் பூட்டினார்கள். சேஷாத்திரி மூன்று நாலு நாள் வீட்டுக்குள்ளேயே கதவைத் தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு அறையிலேயே அன்ன ஆகாரம் இன்றி ஜெபத்தில் இருந்தார்.

”ஐயய்யோ, இவன் உயிருக்கே ஆபத்து வந்துடுமோ?” என்று பயம் வந்துவிட்டது மற்றவர்களுக்கு. கெஞ்சிக் கூத்தாடி ”கதவை திறடா சேஷாத்ரி” என்று கதறினார்கள். வீட்டில் அடக்குமுறை அதிகரித்தது. இருந்தாலும் சேஷாத்ரியின் மயான ஜபம் நடந்துகொண்டிருந்தது. இப்போதெல்லாம் சேஷாத்ரி முகத்தில் ஒரு புது தேஜஸ். கண்களில் ஒரு ஒளி பிரகாசித்தது.
ஒருநாள். அன்று சனிக்கிழமை என்பதால் வீட்டில் எல்லோரும் அப்யங்க ஸ்நானம் (நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது) பண்ணுவது வழக்கம். ‘சனி நீராடு’ பழக்கம் இன்னும் பல வீடுகளில் தொடர்கிறது. பழைய சம்பிரதாயங்கள் முற்றிலும் சாகவில்லை.
காலை பத்து மணிக்கு தான் சேஷாத்ரி வீடு திரும்பினார் . ”எனக்கு எண்ணெய் குளியல் வேண்டாம்” என்கிறான் .

சேஷாத்ரி தான் சித்தப்பாவுக்கு எண்ணெய் தேய்த்து விடுவது வழக்கம். வஸ்திரங்களை துவைத்து கொடுப்பார்.
எல்லோருடனும் சிரித்து பேசுவார். ””சித்தி, சித்தப்பா எங்கே. எண்ணெய் தேய்த்துவிடறேன்”.
”சேஷா, சித்தப்பாவுக்கு இன்னிக்கு எண்ணெய் ஸ்நானம் வேண்டாமாம்” என்றாள் சித்தி கல்யாணி.
”ஏனாம்?”
”உன்னைப்பத்தி தான் கவலை”
‘என்னைப் பத்தி என்ன கவலை. நான் ஒரு வழி. மத்தவா அவா அவா வழி.”
சித்தப்பாவுக்கு காத்திருந்து சேஷாத்ரி ஒருவழியாக சித்தப்பாவுக்கு எண்ணெய் தேய்த்து விட்டார். அப்போதெல்லாம் மிளகாய் வற்றலை, பெருங்காய கட்டியை நல்லெண்ணையில் பொறித்து காய்ச்சி தலையில் தேய்ப்பார்கள். போட்டு பொட்டென்று சூடு பறக்க எண்ணெயை பொருக்கிற சூட்டில் தலையில் வைத்து ரெண்டு கையாலும் படபடவென்று தட்டுவார்கள்.முக்காவாசி வீடுகளில் சுண்டக்கா வற்றல் குழம்பு, மிளகு ஜீரக ரசம். பருப்பு துவையல், சுட்ட அப்பளம் தான் மெனு அன்று.
சித்தப்பாவுக்கு பாதி எண்ணெய் தேய்த்துக்கொண்டிருந்த சேஷாத்ரி நிறுத்தி விட்டு வாசலுக்கு ஓடிச் சென்று பார்த்தார். ரெண்டு நிமிஷத்தில் திரும்பி வந்தார்.
”என்னடா அங்கே போய் பார்த்தே?”
”ஆகாசத்தில் பாட்டு சத்தம் கேட்டுது. தேவதைகள் பாடிண்டு போறா. போய் பார்த்தேன்”
சித்தப்பாவுக்கு இது பைத்தியம் என்று கேலி. ஆஹா என்று வாய்விட்டு சிரித்தார். ”ஓஹோ தேவதைகள் மட்டும் தானா. ஏன் கந்தர்வர்கள் கூடவே போய் பாடலியா?”
”ஓ, இருந்தாளே. ரெக்கை இருக்கே. அவாளும் போறா”
”என்ன ராகம் பாடினான்னு உனக்கு தெரிஞ்சுதா?”
”ஓ.தெரிஞ்சுதே, பிலஹரி”
”ஏண்டா இப்படி பைத்தியமா இருக்கே. அவா உன் கண்ணுக்கு மட்டும் தான் தெரிவாளா. எனக்கு தெரியலியே ”
”கர்மிகள் கண்ணுக்குத்தெரியமாட்டா சித்தப்பா. அவா நிலையிலேயே நாமும் இருந்தா தான் தெரிவா”
” சரி சரி உனக்கு பைத்தியம் முத்திவிட்டது”.

சித்தப்பாவுக்கு ”தன்னாலே தான் காகினியோடு சேஷாத்திரியின் கல்யாணம் நின்னு போச்சு. இன்னொரு இடத்திலே சீக்கிரம் ஒரு பொண்ணை பார்த்தா ஒருவேளை சேஷாத்திரி சரியாயிடுவானோ? என்று தோன்றியது.
விஷயம் சேஷாத்ரி காதுக்கு எட்டியது. ஓரு நாள் தனியே சித்தப்பாவை பிடித்து விட்டார்.
”சித்தப்பா எனக்கு கல்யாணம் எதுவுமே வேண்டாம். என்னை இப்படியே நிம்மதியா விட்டுடுங்கோ. கல்யாணம் பேச்சு எடுத்தால் அப்புறம் இந்த ஊரிலேயே இருக்கமாட்டேன்”
”ஐயோ, அப்படியெல்லாம் பண்ணாதேப்பா. எங்களுக்கு உன்னை விட்டா யாரு இருக்கா. இனிமே உன் ஜோலிக்கே வரலே. நீ உன் மனம்போல் இரு” என்று கல்யாணி சித்தியும் அழுதாள். மயான நள்ளிரவு ஜெபங்கள் தொடர்ந்தது. மாதங்கள் ஓடியது. ஒருநாள் தாமல் ஊரிலிருந்து பரசுராம சாஸ்திரி வீட்டுக்கு வந்தார்.
”கேள்விப்பட்டேன். சேஷாத்ரியை திருத்தணும்னு தான் வந்தேன். எங்கே அவன்?”
”எங்கேயோ சுத்தறான்.”
சேஷாத்ரி வீடு வந்ததும் . ”இதோ பார்டா இனிமே நீ ஸ்மசானத்துக்கு போகப்படாது. அது தப்பு”

சேஷாத்ரி சாஸ்திரங்களை மேற்கோள் காட்டி அது எவ்வளவு உயர்ந்தது என்று விளக்கியும் பயனில்லை. மூணு மணி நேர விவாதம். கடைசியில் சேஷாத்ரி பொறுமையாக சாஸ்திரிகளுக்கு பதில் சொன்னார்:

”இதோ பாருங்கோ, நான் நைஷ்டிக பிரம்மச்சாரி. உபாசகன். எனக்கு கால தேச நியமம் எல்லாம் கிடையாது ” என்று சொன்னபோது தான் பிரம்மாஸ்திரம் போட்டார் சாஸ்திரி.
”சுடுகாட்டுக்கு போய்விட்டு, வாழற குடும்பம் இருக்கிற வீட்டுக்குள்ளே நுழையக்கூடாது. அது தெரியுமாடா உனக்கு? ”
”சரி” என்கிறார் சேஷாத்ரி.
”ஆஹா ! கூண்டிலிருந்து பறவை விரைந்தோடுதே ..
இனி சேஷாத்திரி மரத்தடியில், கோவில்களில் பொது குளக்கரையில் சந்தோஷத்தோடு சுதந்திரமாக காணப்பட்டார். வீட்டுக்கு வருவது நின்று போனது. கடைசி மூச்சு வரை சேஷாத்திரி ஸ்வாமிகளுக்கு தனக்கென்று ஒரு இடம் வைத்துக் கொள்ளவில்லை. ஆனால் எல்லா பக்தர்கள் மனத்திலும் இடம் பிடித்துவிட்டார்.. கண்கண்ட கலியுக ஞானி அல்லவா? மஹா பெரியவாள் போற்றிய மஹா ப்ரம்ம ஞானி இல்லையா?

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *