PESUM DEIVAM – J K SIVAN

பேசும் தெருவம் – நங்கநல்லூர் J K SIVAN

‘ நிறுத்து. தோண்டாதே ” –

ஒரு வாசக நண்பர் சோமாஸ்கந்தன். பல வருஷங்களாக என் கிருஷ்ணன் மஹா பெரியவா கட்டுரைகளை படித்து ரசிப்பவர். அப்பப்போ பேசுவார். திடீரென்று ஒருநாள் வாசல் கதவு தட்டப்பட்டு யாரோ கூரியர் போல் இருக்கிறது என்று கதவைத் திறந்தால் ஒரு பெரிய பையோடு சோமாஸ்கந்தன். நெற்றியில் விபூதி பட்டை கழுத்தில் கௌரிசரடு எனும் ருத்ராக்ஷம். வெள்ளை ஜிப்பா முக்கால் கை . பஞ்சகச்சம். மேலே அங்கவஸ்திரத்தை தலையில் வெயிலுக்கு மூடிக்கொண்டு வந்தவர். கண்களில் எப்போதும் கனமான கண்ணாடி. முன்வரிசை ரெண்டு பற்கள் அவரை விட்டு பல வருஷங்களாக விலகிவிட்டன. பொய்ப்பல்லின் சிநேகிதம் வேண்டாம் என்று ஒதுக்கி விட்டார்.

”வாங்கோ என்ன இப்படி திடீர்னு எப்போ பண்ருட்டியிலிருந்து வந்தீர்கள்?”
மெட்றாஸ்ட்லே மச்சினன் பொண்ணுக்கு கல்யாணம் நிச்சயம் ஆயிருக்கு. அதை அட்டென்ட் பண்ண வந்தேன். உங்களையும் பார்க்கலாம்னு தோணித்து. இந்தாங்கோ” பை என் பக்கம் நகர்நதது.
அதில் என்ன இருக்கிறது என்று சொல்லவேண்டிய அவசியம் இல்லாமல் பழுத்த பலாப்பழ வாசனை மூக்கை துளைத்தது.

”ஓஹோ உங்க ஊர் விசேஷ வஸ்துவோ?””ரொம்பசந்தோஷம்.
” சிவன் ஸார் , நீங்க கூட ஒருதடவை பண்ருட்டி பக்கம் மஹா பெரியவா வந்த விஷயம் ஒண்ணு படிச்சுட்டு எழுதியிருந்தேளே.
”ஆஹா மறக்கமுடியுமா அந்த வடவாம்பலம் அதிசயத்தை சோமாஸ்கந்தன் ” என்றேன்.
அவர் ஞாபகப்படுத்திய வடவாம்பலம் அதிசயத்தை ஏற்கனவே எழுதி இருக்கிறேன். மீண்டும் உங்களுக்கு என் அன்பான சமர்ப்பணம்:
++
உங்களில் எத்தனை பேர் பண்ருட்டி போயிருக்கிறீர்கள். பண்ருட்டி என்றதும் நமக்கு என்ன ஞாபகம் வரும்
பலருக்கு பலாப்பழமும் சிலருக்கு அந்த ஊர் பெயர் கொண்ட ஒரு அரசியல் வாதி. இதெல்லாம் மீறி ஒரு அதிசயம் அந்த பக்கம் நடந்திருக்கிறதே அது தெரியவேண்டாமா?

காஞ்சி காமகோடி பீடாதிபதிகள் வரிசையில் 58வது ஆச்சார்யார் ஸ்ரீ ஆத்மபோதேந்திர சரஸ்வதிகள் (1586 – 1638) கிட்டத்தட்ட நானூறு வருஷங்களுக்கு முன் வாழ்ந்தவர். இந்த சுவாமிகள் விருத்தாசலம் பகுதியை சேர்ந்தவர். அவரது இயற்பெயர் (தாய் தந்தையர் இட்டது) விஸ்வேஸ்வரன். அவர் நிறைய ஸ்தலங்களுக்கெல்லாம் சென்று க்ஷேத்ராடனம் செய்து காசியில் வெகுகாலம் தங்கி இருந்திருக்கிறார். ஸ்ரீ ருத்ரத்துக்கு பாஷ்யம் எழுதியவர்களில் அவரும் முக்யமான ஒருவர். இவர் தான் அவதூதர் சுவாமி சதாசிவ ப்ரம்மேந்திரரை குரு ரத்ன மாலிகாவை எழுதுங்கள் என்று பணித்தவர். போதேந்திராள் என்ற பெயரில் அவர் காலத்திலேயே மற்றொருவரும் இருந்தார். அவரை ஆச்சார்யாள் பகவன் நாமத்தை பரப்புங்கள் என்று அதில் ஈடு படுத்தியதால் அந்த போதேந்திரருக்கு பகவன் நாமா போதேந்திரர் என்ற பெயர் வழங்கப்பட்டது. அவர் தான் பின்னால் கோவிந்தபுரத்தில் தங்கி நாம சித்தாந்தத்தையும் பகவன் நாமாவையும் பரப்பியவர். இன்றும் வரம் ராமநாம ஜபம் சமாதியில் கேட்கிறது என நம்பிக்கை.

ஆத்ம போதேந்திர ஆச்சார்யாள் தக்ஷிண பினாகினி என்ற தென் பெண்ணை ஆற்றங்கரையில் ஈஸ்வர வருஷம், (1638 ம் வருஷம்) துலா மாசத்தில் கிருஷ்ண அஷ்டமி அன்று முக்தி அடைந்தார். அவரது அதிஷ்டானம் இப்போது பண்ருட்டி செல்லும் வழியில் வடவாம்பலம் என்கிற அமைதியான இடத்தில் உள்ளது. இதில் என்ன அதிசயம்? அங்கே தான் இருக்கிறது ஸூக்ஷ்மம்.

இந்த அதிஷ்டானம் மகாபெரியவாளின் வழி காட்டலால் தான் கண்டுபிடிக்கப்பட்டு 17.1.1927 அன்று புனருத்தாரணம் செய்யப்பட்டது. எப்படி என்று பார்த்தால் தானே அதிசயமும் அற்புதமும் புலப்படும்?

1926 வாக்கில் மகா பெரியவா விழுப்புரத்தை கடந்து பாத யாத்திரை போய் கொண்டிருந்த ஒரு சமயம். வடவம்பலம் என்கிற கிராமம் வழியாக போய்க்கொண்டிருந்த பெரியவாளுக்கு ஏதோ உள்ளுணர்வு ” யாரோ என்னைக் கூப்பிடுகிறார்களே. யார் ?”
இந்த எண்ணம் உந்த விடு விடுவென்று வடவம்பலம் கிராமத்துக்குள் நுழைந்தார். கூட வந்த அனைவரும் பின் தொடர்ந்தனர். அங்கு காணப்பட்ட சில வயதானவர்களிடம் ”இங்கே யாராவது சன்யாசிகள் இருந்தார்களா?” எனக்கேட்டார்.

யாருக்குமே தெரியவில்லை. எப்படியோ ஓர் வயதான கிழவருக்கு கொஞ்சம் விஷயம் தெரிந்திருந்தது. கூட்டத்திலே இருந்து முன்னே பெரியவா அருகிலே வந்த அந்த கிழவர்

”சாமி, சில நூறு வருஷங்களுக்கு முன்னாடி யாரோ இங்கே ஒரு சன்யாசி இருந்தாருங்களாம். அவரு இங்கே தான் எங்கேயோ சமாதியாயிட்டார்னு சொல்லி கேட்டிருக்கேனுங்க. ஆனால் அது எங்கேன்னுட்டு தெரியாதுங்க. இந்த ஊர்லே தான் எங்கிட்டோன்னு பேசிக்குவாங்க நான் சின்னப்பிள்ளையா இருக்க சொல்ல” .

பரமாசார்யாளுக்கு இது போதுமே! ஞான திருஷ்டிலே தெரிஞ்சு போச்சு. இங்கே தான் எங்கேயோ 58வது பெரியவா ஆத்ம போதேந்திரருடைய சமாதி இருக்கணும். இந்த கிராமம் முழுக்க அலசினாதான் அது எங்கேன்னுட்டு கண்டு பிடிக்க முடியும். அங்கே எங்கே பார்த்தாலும் வயல் வெளி, வாழைத்தோப்புதான் கண்ணுக்கெட்டிய தூரம் நிறைந்துஇருந்தது. பெரியவா ஒரு இடம் விடாமல் எல்லா இடமும் சுத்தி பார்த்தாள் . ஒரு வாழைத் தோப்பு பக்கம் போன போது அவருக்கு திடீரென்று ஒரு வித்யாசமான படபடப்பு ஏற்பட்டது. முக்கியமாக ஒரு இடத்தில் நின்றபோது அது அதிகமாயிற்று. ஏதோ ஒரு தெய்வ சந்நிதிலே இருக்கிறமாதிரி மஹா பெரியவாளுக்கு பட்டது. பக்கத்திலே இருக்கிறவர்களை ” இங்கே கொஞ்சம் தோண்டுங்கோ” என்று ஒரு இடத்தைக் காட்டினார்.

கூட இருந்தவர்கள் சிலபேரில் குமாரமங்கலம் சாம்பமூர்த்தி சாஸ்திரி என்று ஒருவர் தான் அந்த தோண்டும் வேலைக்கு மேஸ்திரி. அவர்களுக்கு எப்படி தோண்ட வேண்டும் என்று சொல்லி மேற்பார்வை பார்த்துக்கொண்டிருந்தார். கொஞ்சம் ஆழம் தோண்டியாயிற்று. சாம்பமூர்த்தி திடீரென்று ” நிறுத்து நிறுத்து தோண்டாதே ” என்று பெரிதாக கத்தினார் வாழைத்தோப்பு பூரா அவர் குரல் எதிரொலித்தது. மனிதர் அப்படியே கீழே மயக்கமாய் வயலில் கீழே சாய்ந்து விட்டார். தோண்டிக்கொண்டிருந்தவன் பயத்தில் நடுங்கி விட்டான். ஓடிப்போய் எங்கிருந்தோ கொஞ்சம் ஜலம் கொண்டுவந்து அவர் முகத்தில் தெளித்து கொஞ்சநேரத்தில் சாம்பமூர்த்தி சாஸ்திரி கண் விழித்தார். சிறிது ஜலம் பருகினார். எழுந்து உட்கார்ந்த சாம்ப மூர்த்தி மூச்சு பேச்சு இன்றி மலங்க மலங்க விழித்தார். எல்லோரையும் பார்த்தார். ஒரு நீண்ட பெருமூச்சு விட்டு ஆச்வாசப்படுத்திக்கொண்டார். மஹா பெரியவா இதெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தவர் பேசினார்:

”சாம்ப மூர்த்தி என்னாச்சு?”

“பெரியவா, யாரோ ஒரு பெரிய சந்நியாசி எதிர்க்க நின்னார். அவரை முழுசா என்னாலே பாக்க முடியலே. ஆகாசத்துக்கும் பூமிக்குமா நிக்கறார். கழுத்து நிறைய ருத்ராக்ஷம். கையிலே கமண்டலு. காவி வஸ்த்ரத்தோட, நெத்தியிலே பட்டையா விபூதி. சுத்தி ஆயிரக்கணக்கா பிராம்மணா வேதம் சொல்றா. அந்த பெரிய சந்நியாசி என்னைப்பாத்து ”தோண்டாதே தோண்டாதே ”ன்னு தடுக்கறா. அப்படியே மலைச்சு நிக்கறேன். வார்த்தை வரல்லே. கண்ல தாரை தாரையா ஜலம். க்ஷண காலத்திலேயே எல்லாமே மறைஞ்சுடுத்து’ அப்பறம் யாரோ ”சதாசிவம் சதாசிவம்” என்கிறா. அப்பறம்.. அப்பறம் …. எனக்கு என்னாச்சுன்னே தெரியலே புரியலே.”

இதைக்கேட்ட மகா பெரியவா அவர்கள் தோண்டின இடத்தைக் காட்டி ” இப்போ நிச்சயமாயிடுத்து இது தான் கோவிந்தபுரம் போதேந்தி ராளுடைய குரு ஸ்ரீ ஆத்ம போதேந்திராளுடைய முக்தி ஸ்தலம். இங்கே தான் பெரியவா அதிஷ்டானம் அமையணும்”

பெரியவா அந்த ஊர் பெரியமனிதர்களை எல்லாம் அழைத்து ஆத்ம போதேந்திறாளைப் பற்றி எடுத்துச் சொல்லி, அந்த வாழைத்தோப்பின் ஒரு பகுதியில் ஒரு அதிஷ்டானம் அங்கே அமைந்தால் ஊருக்கே நல்லது.பெரியவா ஆசீர்வாதம் கிடைக்கும் எல்லோரும் க்ஷேமமா இருப்பேர்கள். இந்த வாழைத்தோப்பின் சொந்தக்காரர் இங்கே மட்டும் ஒரு சிறிய அதிஷ்டானம் அமைக்க இடம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நிலம் கைமாறியது.சிறியதாக அங்கே அழகாக ஒரு அதிஷ்டானம் உருவாக ஏற்பாடாகியது.

அந்த வருஷம் (1927) ஜனவரி 17 அன்று ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை பண்ண மகாபெரியவா ஒரு பிருந்தாவனத்தை அங்கே ஸ்தாபிதம் பண்ணினார். ஆத்மா போதேந்திரா அதிஷ்டானம் இப்போது அங்கே இருக்கிறது. ஒவ்வொரு வருஷமும் வடவம்பலத்தில் ஆராதனை நடக்கிறது. முடிந்தவர்கள் அங்கே சென்று பார்க்கலாம். நான் ரெண்டு மூணு தடவை அங்கே நிறைய பேரை அழைத்து சென்று காட்டி தரிசனம் பண்ணியிருக்கேன்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *