PESUM DEIVAM – J K SIVAN

பேசும் தெய்வம்  –   நங்கநல்லூர்  J K  SIVAN 

மாங்காடும்  மஹா பெரியவாளும் .

இன்று  காலண்டர்  அனுஷம் என்று நக்ஷத்திரம் காட்டும்போது  மனம் மஹா பெரியவாளை நினைக்கிறது. அனுஷம் என்றால் அந்த அவதார புருஷர் தான்.  ரெண்டாவது முக்கியமான விஷயம்  இன்று ஆடி வெள்ளிக்கிழமை, எங்கும் அம்பாளை போற்றி புகழ்ந்து, பஜித்து, நமஸ்கரிக்கும் நாள். ஒவ்வொரு வீட்டிலும்  விசேஷ பூஜைகள், அர்ச்சனைகள்,  மாவிளக்கு, கொழுக்கட்டை  நைவேத்தியங்கள்.  நம் பண்பாடு எவ்வளவோ  எதிர்ப்புகள் இருந்தாலும் இன்னும் சமாளித்து  பிழைத்து வருகிறது. எல்லாம் அம்பாள் கடாக்ஷம். எது எப்படி நடக்கவேண்டுமோ அப்படி நடக்காமல் விடமாட்டாள். அம்மாவாச்சே.
மஹா பெரியவா அம்பாள் ரெண்டு பேர் சம்பந்தப்பட்ட ஒரு விஷயம் சொல்வது தான் இன்னைக்கு  பொருத்தம் இல்லையா?. 

மஹா பெரியவாளை பத்தி நிறைய படிக்கிறோம் கேட்கிறோம். ரெண்டாம் பேருக்கு தெரியாம எத்தனை பெரிய காரியங்களை அவர் சாதிச்சிருக்கார் என்று யோசித்துபார்த்தால் பிரமிச்சு போய்டுவோம். நாமெல்லாம் மாங்காடு காமாக்ஷி கோயில் போய் தரிசனம் பண்ணியிருக்கோம். ஆனா அந்த கோயில் எப்படி உருவாச்சு என்று தெரிஞ்சிக்க இது ஒரு சந்தர்ப்பம். அடுத்த தடவை மாங்காடு போனால் அங்கிருக்கிற பாடசாலையையும் பார்த்து ஏதாவது உதவி செய்தால் அதுவே பெரியவாளுக்கு நம்முடைய நன்றி கடன் ஆகுமல்லவா?

விழுப்புரத்தில் மஹா பெரியவா இருந்தபோது அவரோடு இருந்தவர்  லக்ஷ்மிநாராயணன்.   ஆறு வயசிலேருந்தே  மஹா பெரியவாளுடன்  நெருக்கமான பழக்கம்.  வளர்ந்து மஹா பெரியவாளுக்கு சேவை புரிந்து வந்தவர். அவர்  சொன்ன ஒரு விஷயம்: 

சிவபெருமானும், தேவியும் கைலாயத்தில் ஒரு நாள் விளையாடும் பொழுதில், தேவியானவர் விளையாட்டாக சிவபெருமானின் கண்ணை மூடி விளையாட, உலகம் முழுதும் இருண்டுவிட்டது!   அடாடா  இப்படி செய்த்துவிட்டோமே  அன்று அம்பாள்  தன் தவறுக்கு  வருந்தி  சிவனின் மன்னிப்பை கோறிவிட்டு  பூலோகம் சென்று கடும் தவம் செய்ய கிளம்பிவிட்டாள்.  அவள் செலெக்ட் பண்ண இடம்  மாங்காடு.    அங்கே   இடது கால் பஞ்சாக்னியில் வைத்து, வலது காலை மடக்கி, இடது கையில் ஜபமாலையுடன் தலை மேல் தூக்கி, கடும் தவம் புரிந்தாள் . தவம் முடிந்து  அம்பாள் கைலாஸம் செல்லும் பொழுது,  மாங்காட்டில் அக்னியை அணைக்காமல் செல்ல, அந்த இடமே அக்னியின் சூட்டில் தவிக்க தொடங்கியது.. பின் அங்கு ஆதி சங்கரர் அங்கு வந்த பொழுது, அக்னியை அணைத்து, அங்கு ஒரு ஸ்ரீ சக்கரம் நிறுவினார்..

சுக்ரன் கோவில் கொண்டு பக்தர்களுக்கு, தன்னை நம்பியவர்களுக்கு  வாரி வழங்கும் இடம் ஒன்று  தொண்டைமண்டலம் எனும் சென்னை பகுதியை சேர்ந்த  நவகிரஹ ஆலயங்களில் ஒன்றான  சுக்ரன் (வெள்ளி)  அருள்பாலிக்கும் ஆலயம். அது மாங்காடு கிராமத்தில் இருக்கிறது.   மாங்காடு   காமாக்ஷி அம்மன்  பிரசித்தமானவள் .. அதற்கு கூப்பிடு தூரத்தில் இருப்பது தான் வெள்ளீஸ்வரர் ஆலயம். ரெண்டு ஏக்கர் பரப்பில் அமைந்த கோவில். மாங்காட்டில் உள்ள மூன்றாவது பிரதான ஆலயம் ஸ்ரீ வைகுண்ட பெருமாள் கோவில்.
மாங்காடு,  போரூரிலிருந்து பூவிருந்தவல்லி போகும் வழியில் குமணன் சாவடியில் கிழக்கே திரும்ப வேண்டும். அங்கிருந்து      3-4 கி.மீ. தூரம் தான். வண்டிகளில் சுலபத்தில் சென்றுவிடலாம்.  கஞ்சனூரில் சுக்ரன் கோவில் எப்படி ப்ரசித்தமோ அப்படி தொண்டை மண்டலத்தில் சென்னையில் மாங்காடு வெள்ளீசர் (சுக்ரனுக்கு வெள்ளி என்று பெயர் தெரியுமல் லவா?). சிவனுக்கு இங்கே இன்னொரு பெயர் பார்கவேஸ்வரர். கிழக்கு பார்த்த பெரிய லிங்கம்.மாங்காடு பஸ் நிலையத்திலிருந்து 1 1/2 கி.மீ. குன்றத்தூரிலிருந்து வந்தாலும் 3 – 4 கி.மீ. தான்.   

அம்பாள் ஒருநாள் சிவ தரிசனத்துக்கு இங்கு வந்தபோது சுக்ரன்(வெள்ளி) சிவனை வழிபடுவதை கண்டு இடையூறாக இருக்க கூடாது என்று திரும்பி விடுகிறாள். ஆலய வாயிலில் இரு பக்கங்களிலும் சுப்பிரமணியர் விநாயகர். விநாயகர் கையில் இங்கே இருப்பது மாம்பழம். அதனாலும் இந்த ஊர் பெயர் மாங்காடு. நிறைய மாந்தோப்புகள் இருந்த இடம்.

”சுக்ரா, பூலோகத்தில் தமிழ் பேசும் நல்லுலகத்தில்
மாங்காடு என்னும் தலத்தில் பார்வதிதேவி காமாட்சியாக வடிவெடுத்து பஞ்சாக்னி வளர்த்து தவம் செய்கிறாள். அவளது தவத்தை பூர்த்தி செய்ய பரமேஸ்வரன் பூவுலகம் வருவார். நீ மாங்காடு சென்று தவமிருந்தால் அத்தருணத்தில் உன் விழிக்கு பார்வை கிடைக்கும்” என்று கூறினார். அவ்வாறே தவம் செய் து சிவனருளால் பார்வை பெறுகிறார். வெள்ளிக்கு பார்வை அருளிய ஈஸ்வரன் அதனால் வெள்ளீஸ்வரன் ஆனார். பக்தர்கள் தேங்காய் கொட்டாங்கச்சியில் தீபம் ஏற்றுகிறார்கள்.  இடது கண்ணில்  ஊனம்  அல்லது வியாதி நீங்க  இந்த  திருப்பதிகம் 16 முறை சொல்லவேண்டும். கண் சரியாகிவிடும் என்று கல்வெட்டு சொல்கிறது: தேவாரத்தில்  திருக்கச்சி
யேகம்பம்  என்று போட்டிருக்கிறது 

”உற்றவர்க்கு உதவும் பெருமானை, ஊர்வது ஒன்று உடையான், உம்பர் கோனை,பற்றினார்க்கு என்றும் பற்றவன் தன்னை, பாவிப்பார் மனம் பாவிக் கொண்டானை,அற்றம் இல் புகழாள் உமை நங்கை ஆதரித்து வழிபடப் பெற்றகற்றை வார் சடைக் கம்பன் எம்மானை, காணக் கண் அடியேன் பெற்ற ஆறே! ”

இந்த ஆலயத்தில் இரு விநாயகர்கள், ஒருவர் ஒரு கையில் மாங்கனி, இன்னொருகையில் நெல் கதிர்கள். கோஷ்டத்தில் உள்ள மற்றொரு விநாயகர் கையில் குடை, இன்னொருகையில் விசிறி. வீரபத்திரருக்கு தனி சந்நிதி. வடமேற்கில் காணும் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர் சிலை ஒரே கல்லினால் ஆனது. வெள்ளீச
னுக்கு எதிரே அழகாக ஒரு நந்தி. அவர் அழகை வர்ணிக்க வார்த்தைகள் தேடிக் கொண்டிருக்கி
றேன்.

. மீண்டும்  பெரியவா தொண்டர்  லக்ஷ்மிநாராயணன் சொல்வதை கேட்போம்: 

அது 1952-ஆம் வருஷம்.ஒவ்வொரு வியாழக்கிழமையும், பெரியவாளைப் பார்க்கக் காஞ்சிபுரம் வருவோம். அப்படி ஒரு வியாழக்கிழமையன்னிக்கு வந்தப்போ,
”நேத்திக்கு எனக்கு ஒரு சொப்பனம். ‘பஞ்சாக்னி ஜுவாலையால எனக்கு ஒடம்பெல்லாம் எரியறது. இங்கே புனருத்தாரணம் பண்ணணும்’னு அம்பாள் சொப்பனத்துல பேசினா. எங்கேயோ அம்பாள் கோயில் ஒண்ணு பாழடைஞ்சு கெடக்கு. கண்டுபிடிச்சு சொல்றி
யா?” ன்னு எங்கிட்ட கேட்டார்.

”ஒரு வாரம் டயம் கொடுங்கோ”ன்னேன். அடுத்த வாரம் அவரைப் பார்த்தப்போ, முதல் நாள் ராத்திரி மறுபடியும் அம்பாள் சொப்பனத்துல வந்ததா சொன்னார்.

அன்னிக்கு ஒரு யானை வந்து தும்பிக்கையால அவரைக் கைப்பிடிச்சு அழைச்சுண்டு போச்சு. பெரியவா அந்த யானையோடு கிளம்பிட்டா. அவருக்கு மட்டும் அது யானையா தெரியலே. அம்பாளாத்தான் தெரிஞ்சிருக்கு. ரொம்ப நேரம், ரொம்ப தூரம் யானை பெரியவாளை அழைச்சுண்டு போச்சு. பெரியவாளும் அது பின்னாடியே நடந்து போயிண்டே இருந்தா. பல மணி நேரத்துக்கப்புறம் ஒரு மண் ரோட்டுல யானை திரும்பித்து. அங்கே கொஞ்ச தூரம் போனதும், யானை மறைஞ்சுடுத்து. அப்படின்னா, அந்தப் பாழடைஞ்ச அம்பாள் கோவில் இங்கேதான் எங்கேயோ இருக்கணும்னு பெரியவாளுக்குத் தெரிஞ்சுடுத்து. ராத்திரி பெரியவா அங்கேயே தங்கறதா தீர்மானம் பண்ணிட்டா. அங்கே ஒரு மாட்டுக் கொட்டகை மாத்திரம்தான் இருந்துது. பெரியவா அதனுள்ளே போய்ப் படுத்துண்டுட்டா.

அந்த ஏரியாவுக்கு அப்போ மணலி ராமகிருஷ்ண முதலியார்தான் நாட்டாமை. பெரியவா வந்திருக்கிற விஷயம் தெரிஞ்சு முதலியார் வந்து பார்த்தார். ”என்ன செய்யணுமோ, நான் செய்யறேன். பெரியவா கவலைப்படாதீங்கோ”ன்னார்.

”24 மணி நேரத்துல சம்ப்ரோக்ஷணம் பண்ணணும்”னு சொன்னா பெரியவா. மளமளன்னு காரியங்கள் ஆரம்பிச்சுது.

ஆளுக்கு ஆயிரம் ரூபா  போல போட்டா. புதரும், பாம்புப் புத்துகளுமா இருந்த அந்த இடத்தைச் சுத்தம் பண்ணினப்போ ஒரு  சின்ன கோபுரம் தெரிஞ்சுது.  பெரியவாளை கேட்டோம்
”ஆதிசங்கரர் கர்ப்ப வாசம் இருந்த இடம் இதுதான் ”னா பெரியவா.

கர்ப்ப வாசம்னா பத்து மாசம் ஓரிடத்திலே தங்கியிருக்கறது. ”அர்த்த மேரு இங்க பிரதிஷ்டை பண்ணியிருக்கு. அம்பாள் இங்கே உக்ரமா இருக்கா; அவளுடைய உக்ரத்தைத் தணிக்கணும்”னு சொன்னா.
இதையெல்லாம் செஞ்சு முடிச்சுட்டுப் பெரியவா மறுபடியும் காஞ்சிபுரம் போயிட்டா.

இடத்தை எல்லாம் சரி பண்ணி, கும்பாபி ஷேகம் நடத்தினோம். அப்போதைக்கு ஏகாம்பர குருக்கள்னு ஒருத்தரை பூஜை பண்ண நியமனம் பண்ணினோம். மாங்காடு கோயில் பத்தி அப்பல்லாம் யாருக்கும் தெரியாது.

பக்கத்துலயே பெரியவா தனக்கொரு இடம் வேணும்னு கேட்டிருந்தா. ”ஆகட்டும். முடிச்சுத் தரேன்”னேன். ஆனா, ஏதேதோ வேலையில் அது அப்படியே தள்ளிப் போயிடுத்து. 1965-லே மறுபடியும் ஒரு தரம், ”மாங்காட்டுல இடம் வாங்கித் தரணும்னு கேட்டேனே, மறந்துட்டியா?”ன்னு ஞாபகப்படுத்தினா பெரியவா. கூடவே, ”ஒருத் தர்கிட்டேயும் கடன் கிடன் வாங்கப்படாது. உன் கைக்காசைப் போட்டு வாங்கித் தரணும்”னு நிபந்தனை போட்டா. அதனால, அது முடியாமலே இருந்தது. பெரியவா அப்பப்போ ஞாபகப்படுத்திண்டே இருப்பா. ஒருவழியா 1976-ல இந்த இடத்தை வாங்கினேன். மூணரை கிரவுண்டு நிலம். அஞ்சு லட்சம் இருந்தாத்தான் கட்ட முடியும். என்னோட வீட்டை வித்து, மனைவியின் நகைகளை வித்து எப்படியோ புரட்டிப் போட்டு வாங்கிட்டேன்.

”இங்கே ஒரு அம்பாள் கோவில் கட்டணும். முதல்ல ஆதிசங்கரர் பாதுகையை வைக்கணும். அப்புறம் மேல கட்டலாம். 16 அடி அஸ்திவாரம் தோண்டி, உள்ளே 108 கோடி பஞ்சாட்சரம் எழுதிப் போடணும். அஞ்சு ஜட்ஜ் வந்துதான் ஃபவுண்டேஷன் போடணும்”னார். சுத்துப் பட்டு இருக்கிற பள்ளிக்கூடத்துப் பிள்ளைகள்
கிட்டே 108 கோடி பஞ்சாட்சரம் எழுதி வாங்கினோம்.

ஜட்ஜ் பாலசுப்பிரமணிய அய்யர்கிட்ட ஃபவுண்டேஷனுக்குப் பெரியவாளே சொல்லிட்டா. அவர் ஆக்ஞை பண்ணினா, உடனே எடுத்துச் செய்யறதுக்குப் பெரிய மனுஷாள்ளாம் காத்திருந்தா.

1982-ஆம் வருஷம்… குரோம்பேட்டைல ஒரு சின்ன இடம் வாங்கி வீடு கட்டிண்டு போயிட்டேன். அப்போ நான் சிம்ஸன்லே அக்கவுன்ட்ஸ் செக்ஷன்லே வேலை பார்த் துண்டு இருந்தேன். வேலை முடிஞ்சதும், நேரே இங்கே வந்து கட்டட வேலைகளைக் கவனிச்சுட்டு, ராத்திரி குரோம்பேட்டை போயிடுவேன்.

வேலை இழுத்துண்டே போய், 1992-லதான் முடிஞ்சுது. இந்தக் கோவிலுக்குப் பெரியவா கையாலதான் கும்பாபிஷேகம் பண்ணணும்னு எனக்கு ஆசை. ”நான்தானே எல்லாம் பண்ணி வெச்சேன். இதுக்கும் ஏன் என்னையே கூப்பிடறே? ஜெயேந்திரரைக் கூப்பிட் டுக்கோ. கும்பாபிஷேகம் பண்ற காலம், குரு வாரமும் பஞ்சமியும் சேர்ந்து இருக்கணும்”னா. பெரியவாளோட நட்சத்திரம் அனுஷம்கிறதால, அனுஷமும் சேர்ந்திருந்தா நன்னாருக்கும்னு முடிவாச்சு.”

 1994 ஜனவரி 8-ஆம் தேதி… 12 மணிக்கு எனக்குத் திடீர்னு கடுமையான ஜுரம்! என் குடும்பத்தார் என்னை ஆஸ்பத்திரியில அட்மிட் பண்ணிட்டாங்க. ”உங்களுக்குக் கடுமையான ஹார்ட் அட்டாக் வந்திருக்கு”ன்னார் டாக்டர். மூணு நாள் ஐசியு-ல இருந்தேன். நாலாம் நாள், டாக்டர்களே ஆச்சரியப் படும்படியா நான் குணமாகிட்டேன். ”உங்களை டிஸ்சார்ஜ் பண்ணிடறோம். இருந்தாலும், 45 நாளைக்கு எங்கேயும் டிராவல் பண்ணவேண்டாம்”ன்னார் டாக்டர். பிற்பாடுதான் எனக்குத் தெரிய வந்துது… எனக்கு ஹார்ட் அட்டாக் வந்த அன்னிக்குதான் பெரியவா முக்தி அடைஞ்சுட்டாங்கிற விஷயம்.

அப்புறம், பால  பெரியவா ஜயேந்திரர்தான் வந்து இங்கே கும்பாபிஷேகம் பண்ணி வெச்சார்.”இந்த இடத்திலே யஜுர் வேத பாடசாலை ஆரம்பிச்சு நடத்து”ன்னு சொல்லியிருந்தா பெரியவா. அதன் படி ஆரம்பிச்சு நடத்தினேன். முதல்லே ஆறு பேர் வெளியூர்ல இருந்து வந்தா. அப்புறம் பத்தாச்சு; பன்னிரண்டாச்சு. அப்புறம் வேதம் கத்துக்க வரவாளோட எண்ணிக்கை படிப்படியா குறைஞ்சுடுத்து.ஒண்ணரை வருஷமா யாரும் வரதில்லே. எனக்கு இது பெரிய குறை. பெரியவா ஆசைப்படி கட்டின கோயில் இது. வேத பாடசாலையும் அவர் உத்தரவின் பேரில் ஆரம்பிச்சதுதான். இது தொடர்ந்து நன்னா நடக்கணும் கிறதுதான் என் ஆசை!”-

 

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1398

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *