SRIMAD BHAGAVATHAM – J K SIVAN

ஸ்ரீமத் பாகவதம் – 10வது காண்டம் – நங்கநல்லூர் J K SIVAN

கட்டுண்ட மாயன்

கண்ணன் பிறந்தான், வளர்ந்தான், ஒவ்வொருநாளும் அவன் சக்தி, பிரபாவம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படுத்தினான். எளிய இடைக்குல மக்களுக்கு அவன் தெய்வம் என்று அறிய முடியவில்லை. கம்சன் அனுப்பிய மூன்று ராக்ஷஸ ஜீவன்களை இதற்குள் அவன் கொன்றுவிட்டான். அன்னை யசோதைக்கு ஒரு விஷமக்கார குழந்தையாகவே காட்சியளித்தான். அவனுடைய வசீகரம் அவன் செய்த தவறுகளை மறக்க செய்தது. வாயைத்திறந்து விண்ணையும் மண்ணையும் காட்டிய அந்த விஸ்வரூபன் அதை அவள் மறக்கச் செய்தும் விட்டான்.

நம் வீட்டில் இப்படி வெண்ணெய் , நெய் , பால், தயிர் பானைகளை உடைத்து சாப்பிட்டாலும் பரவாயில்லை, ஊர் முழுதும் அல்லவோ இதே கம்பளைண்ட் வந்துகொண்டிருக்கிறது. இதற்கு ஒரு முடிவு கட்டவேண்டாமா? யசோதைக்கு கோபம் வந்தாலும் சமீபத்தில் அவளிடம் சில கோபியர்கள் சொன்ன முறையீடு நினைவுக்கு வந்தது. அப்புறம் அவள் யாரையோ சந்தித்தபோது ஒரு விஷயம் பளீர் என்று மனதில் பட்டதே…. ஆம் அது இது தான்:

பக்கத்து வீட்டுக்காரி கோபி கோகிலா தான் பேசிக்கொண்டிருந்தாள் .
”யசோதை, இந்த கிருஷ்ணன் இருக்கிறானே, மாயா ஜாலக்காரனடி அவன். விஷமம் என்றால் கொஞ்ச நஞ்சமல்ல. சரியான முள்ளு அந்த பையன்.“இவனை எப்படி டீ, கட்டி மேய்க்கறே?”
கோகிலா கேட்டபோது தான் அந்த கேள்வியிலேயே ஒரு விடை இருப்பதை யசோதை உணர்ந்தாள். சேர்ந்தாற்போல் இது இரண்டாவது வாரம். ஒவ்வொரு நாளும் யார் வீட்டிலாவது வெண்ணை சட்டி உடைந்திருக்கும் ஆனால் வெண்ணை மட்டும் காணாமல் போயிருக்கும். காரணம் யார் என்பதோ வெட்ட வெளிச்சம். ஆகவே அதட்டி பார்த்தாள். உருட்டி விழித்தாள், கையை ஓங்கினாள். கிருஷ்ணனை அடிக்க மனசு வரவில்லை. சிரித்தே அல்லவா மயக்கி விடுகிறான்.

சரி, கோகிலாவின் கேள்வியில் என்ன பதிலிருந்தது.?
“எப்படி கட்டி மேய்க்கறே” .
”ஆஹா, இது முன்னாலேயே தோன்றாமல் போய்விட்டதே!!.
யசோதை கண்ணனை தேடினாள் .

நந்த கோபன் வீட்டு கொல்லைப்புறத்தில் தோட்டத்தில் ஒரு பெரிய வாசனை பொடிகள் இடிக்கும் பெரிய கனமான மர உரல் இருக்கிறதே, அதை கவிழ்த்துப் போட்டிருத்தது. அதை நாற்காலி போல் பாவித்து கிருஷ்ணன் அதன் மேல் உட்கார்ந்திருக்கிறான். அவன் கையிலும் வாயிலும் வெண்ணெய் , அவனைச் சுற்றி நிறைய குரங்குகள், அவன் நண்பர்கள், அவனிடம் வெண்ணெய் வாங்கி வாங்கி தின்று கொண்டிருக்கின்றன. திருடிய வெண்ணையை ரகசியமாக வேகமாக அவனும் குரங்குகளும் தீர்த்துக் கொண்டிருப்பதை யசோதை பார்த்து விட்டாள். சத்தம் போடாமல் கையில் கொம்புடன் அவனை நோக்கி கோபத்தோடு வந்தாள். குரங்குகள் எதற்காக மிரளுகிறது என்று திரும்பிப்பார்க்க கிருஷ்ணன் அம்மாவை கையில் கொம்போடு பார்த்ததும் தன்னை விளாசப் போகிறாள் என்று புரிந்து கொண்டு அந்த உறல் மீதிருந்து குதித்து ஓடினான். பல யுகங்களாக கடுந்தவம் இருந்தும் மஹா யோகிகளால் பரமாத்மாவை மனதில் பிடிக்க முடியவில்லை. ஆனால் இதோ இங்கே… அம்மா துரத்தினாள் . தலை கலைந்து , மூச்சு வாங்கியது. ஒருவழியாக கண்ணனை பிடித்து விட்டாள். அழ ஆரம்பித்தான். கண் மை கண்ணீரில் கரைந்து ஏற்கனவே கருமையான அவன் முகத்தில், கன்னத்தில் எல்லாம் இன்னும் கரிக்கோடுகள்.

கண்ணன் மேல் அளவு கடந்த பாசம் யசோதைக்கு. எவ்வளவு சக்திகொண்ட பரமாத்மா அவன் என்று அவளுக்கு தெரியாதே . அவள் அவன் மேல் கொண்ட பாசத்தில் அவன் யாரென அறிந்து கொள்ளவே முயலவில்லை.
பாவம் குழந்தை நான் அடிப்பேன் என்று பயப்படுகிறது, அழுகிறது. இந்த குழந்தையை நான் அடிப்பேனா? அடிக்க தான் மனசு வருமா? எவ்வளவு விஷமம் பண்ணினாலும் என் கண்ணின் மணி, இந்த சுட்டிப்பயல் எனக்கு ராஜா தான்.” கொம்பை வீசி எறிந்தாள். ஆனால் கோகிலா சொன்னது போல் அவனுக்கு கொஞ்சம் பயம் அவசியம் வேண்டும். ”கட்டி” தான் மேய்க்கணும் இவனை. எதால் இவனை கட்டுவது…? அவள் கண்கள் துழாவின. கன்றுக்குட்டியை கட்டும் ஒரு தாம்புக்கயிறு கண்ணில் பட்டதும் அதை எடுத்து மர உரலில் ஒரு முனையை இறுக்கமாக சுற்றி கட்டி முடிச்சு போட்டாள் . இன்னொரு முனையை கண்ணன் வயிற்றில் சுற்றி அந்த மர உரலோடுசேர்த்து கட்டவேண்டும்… கயிறு கண்ணனுக்கும் உரலுக்கும் நெருங்கிய உறவாகி விட்டது. அவன் வயிற்றில் ஒரு முனை மற்றொன்று அந்த உரலின் வயிற்றில். கண்களில் கண்ணீர் குளமாக தேம்பி எப்போது நீர் சொட்டாக விழுமோ என்று தளும்பி நின்றதை பார்த்தால் அந்த உரல் கல்லாக இருந்தால் கல்லும் உருகிவிடும்.!!

எவ்வளவு தான் கயிறு நீளமாக இருந்தும், ரெண்டு விரற்கடை அந்த கயிற்றின் நீளம் குறைவாக இருக்கிறதே… எப்படி அவனை கட்டுவது.. இன்னொரு கயிறை கொண்டுவந்தாள் அதை முதல் கயிற்றோடு சேர்த்து முடிந்து இப்போது அவன் வயிற்றில் கயிற்றை சுற்றினாள் . அட இதென்னடா அதிசயம், இந்த கயிறை சேர்த்தாலும் இன்னும் ரெண்டு விரற்கடை நீளம் குறைவாக அல்லவோ இருக்கிறது, எப்படி அவன் வயிற்றை இறுக்கமாக கட்ட முடியும்? மூன்று நான்கு எத்தனை கயிற்றை முடி போட்டு சேர்த்தாலும் அவன் வயிற்றை சுற்றி கட்ட முடியவில்லையே… அவள் முயற்சி தோல்வியிலேயே முடிந்ததை மற்ற கோபியர்கள் பார்த்து சிரித்தார்கள். யசோதைக்கே சிரிப்பு வந்தது. அவர்களோடு சேர்ந்து அவளும் சிரித்தாளே தவிர கட்டும் முயற்சியை விடவில்லை. யசோதை இறுக்கி கட்ட முயற்சித்ததில் உடல் வியர்த்தது.

”பாவம் அம்மா, இவளை இனிமேல் சோதிக்கக் கூடாது. நாம் தோற்றுவிட வேண்டும்” என்று கண்ணன் தீர்மானித்துவிட்டான்.. ஒருவழியாக கயிற்றால் உரலோடு சேர்த்து அவனை கட்டிவிட்டாள் யசோதை.

”இது உனக்கு சரியான தண்டனை. இனிமேல் ஒவ்வொரு தடவையும் நீ செய்யும் விஷமத்துக்கும் இது போலவே கட்டிபோடப் போகிறேன்” உலகில் எவருக்கும் கிடைக்காத கருணையை அபரிமிதமாக யசோதைக்கு அளித்து தன்னைக் கட்டுப்பட வைத்துக் கொண்டான் அந்த பக்தர்களின் அன்பில் கட்டுண்ட மாயன் கண்ணன்.
” மத்யானம் வரை இங்கேயே கிட, பிறகு தான் உனக்கு விடுதலை” என்றாள் யசோதை.. ‘

”அம்மா அம்மா வேண்டாம் அம்மா, என்னை கட்டாதே அம்மா, இனிமேல் விஷமம் பண்ணமாட்டேன்” என்று கதறி அழுத கண்ணனை பார்த்ததும் யசோதையின் நெஞ்சு உருகியது, இருந்தாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல், பொங்கிவரும் கண்ணீரை துடைத்துக் கொண்டு உள்ளே மீதி வேலையை பார்க்க சென்றுவிட்டாள்.

அவள் சென்ற சில மணித்துகள்கள் வரை காத்திருந்த நேரத்திலே கண்ணன் சுற்றுமுற்றும் பார்த்தான். யாரும் இல்லை, அவனும் அவனோடு கட்டுப்பட்ட மர உரலும் தான். கண்ணன் மனதில் அவன் அடுத்து நிறைவேற்றவேண்டிய ஒரு கடமை பளிச்சென்று புரிபட்டது. எதிரே தோட்டத்தில் அவன் கண்கள் எதையோ தேடின. சற்று தூரத்தில் இரு நெடிய மருத மரங்கள் இணைந்து நெருக்கமாக வளர்ந்து சற்று இடைவெளியுடன் தென்பட்டது. பல நூறு வருஷங்கள், யுகங்களாக கூட இருக்கலாம், தனக்காக காத்திருந்த அந்த மரங்களை நோக்கி சிரித்துக் கொண்டே கிருஷ்ணன் உரலை உடலோடு இழுத்துக்கொண்டு அங்கே மெதுவாக சென்றான்.

மரங்களா இவை…? அவற்றில் கண்ணன் இரு விண்ணுலக அதிபன் குபேரனின் பிள்ளைகள் நள கூவரன், மணிக்ரீவன் இருவரையும் பார்த்தான். அவர்களுக்கு அவனை தெரியவில்லை. நாரத முனிவரிடம் சாபம் பெற்று பல காலமாக நந்தகோபன் வீட்டு கொல்லைப்புறத்தில் இரு மருதமரமாக நிற்கிறார்கள்….. இன்று தான் அவர்களுக்கு கிருஷ்ணனால் விமோச்சனம் என்று நாரதர் அவர்களுக்கு சாப விமோசனம் பற்றி சொல்லி இருக்கிறாரே.

குழந்தை கண்ணன் கஷ்டப்பட்டு பெரிய கனமான மரஉரலோடு அந்த இரு நெடிய மருத மரங்களின் இடையே புகுந்தான். இடைவெளி அவன் சிறிய உடலுக்கு மட்டும் தான் இடம் கொடுத்தது. மரங்களின் மறுபக்கம் போய் வேகமாக கண்ணன் மர உரலையும் தன் பக்கம் இழுத்தான்… ஹுஹும். மரங்கள் இடம் கொடுக்கவில்லை. கண்ணன் பலமாக இழுத்தான். மூவுலகிலும் அவன் பலத்துக்கு இணை உண்டா…. மர உரல் தான் நுழைய முடியாமல் அந்த ரெண்டு பெரிய மரங்களையும் கீழே சாய்த்தது. வேரோடு அவை கீழே விழுந்தன.

நாரதரால் ஒரு காலத்தில் சபிக்கப்பட்டு மரமான குபேரன் பிள்ளைகள் சாபம் நீங்கி மீண்டும் வானவர்கள் உருவம் பெற்று கிருஷ்ணனை நமஸ்கரித்துவிட்டு கிருஷ்ணன் ஆசியோடு விண்ணுலகு எய்தினார்கள். இதெல்லாம் எவருக்குமே தெரியாது.

தடால் என்று பெரிய மரங்கள் கீழே வேரோடு சாயும் சப்தம் கேட்டு யசோதை வீட்டுக்குள்ளிருந்து ஹா வென்று கத்திக் கொண்டு கொல்லைப்புறம் ஓடிவந்தாள். அவள் கண்களை அவளால் நம்ப முடியவில்லை. நல்ல வேளை அந்த ரெண்டு மரங்கள் ஜோடியாக கீழே விழும் நேரம் கண்ணன் மர உரலோடு அந்தப்பக்கம் நகர்ந்து சென்றாலும், அவன் மேல் மரங்கள் விழாமல் உயிர் பிழைத்தான் ” பகவானே, எப்படியோ என் குழந்தை இந்த பேராபத்திலிருந்து தப்பித்தான், உனக்கு நன்றி” என்று எதிரிலிருக்கும் பகவான் சிரிப்பதை பார்த்தும் புரிந்து கொள்ளாமல் எங்கோ வானத்தில் இருக்கும் பகவானையசோதை வேண்டியதை ரசித்தான்.. மஹா ரஸிகன் கிருஷ்ணன்.

தான் செய்தது தவறு, குழந்தையை கட்டிப்போட்டதால் அதால் பாவம் மரங்கள் கீழே விழும்போது வேகமாக வீட்டுக்குள் ஓடி வரமுடியவில்லை. எவ்வளவு பெரிய தப்பு நான் பண்ணியது.. என்று தன்னையே கடிந்து கொண்டாள் யசோதை…

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *