SUR SAGARAM – J K SIVAN

ஸூர் ஸாகரம் – நங்கநல்லூர் J K SIVAN

வல்லபாச்சார்யர் வருகை

ஸூர் தாஸ் பற்றி நினைக்கும்போதெல்லாம் அவரது அளவற்ற கண்ணன் காதல் தான் நினைவுக்கு வருகிறது. இதயத்தில், எண்ணத்தில், கண்ணனோடு சேர்ந்து வாழ்ந்தவர் ஸூர்தாஸ். தியாகராஜ ஸ்வாமிகள் எப்படி ராமன் மேல் பாடினாரோ அதுபோல் தான் ஸூர்தாஸ் ஆயிரக்கணக்கான பாடல்களை கண்ணன் மேல் பாடியவர். தியாகராஜர் பாடியது தெலுங்கில் , ஸூர்தாஸ் பாடியது ஹிந்தியில் ஒரு பிரிவான வ்ரஜ் பாஷையில். கண்ணில்லாத ஏழைச்
சிறுவனாக வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட ஸூர்தாஸ் கண்ணன் பராமரிப்பில் வாழ்ந்தார் என்று தான் சொல்ல வேண்டும் . கிருஷ்ணன் தீன ரக்ஷகன் இல்லையா? ஸூர் தாஸ் வல்லபாச்சார்யரை சந்தித்து அவர் சிஷ்யராகிறார். வல்லபாச்சார்யர் அறிமுகப்படுத்தியது புஷ்டிமார்க்கம். ஸூர் தாஸ் க்ரிஷ்ணனை அகக்கண்ணால் கண்டதோடு இல்லாமல் அவனோடு பேசுபவர்.

ஒருநாள் க்ரிஷ்ணன் ஸூர்தாஸுக்கு கட்டளையிட்டான்.
”ஸூர் தாஸ், இங்கிருந்து கிளம்பி நீ பிருந்தாவன் வா. நான் அங்கே உனக்காக காத்திருக்கிறேன்.”
‘ஆஹா அப்படியே ” —
ஸூர் தாஸ் கிளம்ப சிஷ்யர்கள் வருந்தினார்கள்.
”குருவே, ஏன் எங்களை விட்டு போகிறீர்கள். நாங்கள் என்ன தப்பு செய்தோம், எப்படி அவமரியாதை பண்ணினோம்?”
”அதெல்லாம் ஒன்றுமில்லை. எனக்கு பிருந்தாவனம் செல்ல வேண்டும். நடக்க ஆரம்பிக்கிறேன்”

வழி யெல்லாம் கண்ணனைப் பாடிக்கொண்டே ஆங்காங்கே சிலர் உதவியுடன் வழி தெரிந்துகொண்டே கால் போனபோக்கில் செல்கிறார்.

”இங்கேயே எங்களோடு இருங்கள்” என்று போகும் வழியெல்லாம் பல ஊர்களில் பக்தர்களின் அழைப்பு.

”நான் ஒரு பர தேசி. ஒரு இடத்திலும் நிற்காதவன்” என்று ஒரே பதில்.
ஸூர்தாஸின் கால்கள் பிருந்தாவனத்தை நோக்கியே நகர்கின்றன. வழியே ஒரு காட்டில் ஒரு பெரிய கிணறு. யாரும் இல்லாத இடம். கண்ணில்லாத ஸூர்தாஸை அந்த கிணறு விழுங்கியது. உடலில் காயம். எப்படி மேலே ஏறி வருவது? பசியோடு ஏழு நாள் கிணற்றில் விழுந்து கிடக்கிறார்.அதிக ஆழமில்லாத கிணறு என்பதால் மூழ்கவில்லை. ‘கிருஷ்ணா கிருஷ்ணா’ என்ற ஒரே நாம ஜபம்..
”தாத்தா உன் கையை நீட்டு. மேலே இழுக்கிறேன்”
எங்கிருந்தோ அந்தப்பக்கம் வந்த ஒரு மாடு மேய்க்கும் பையன் குரல் காது அருகில் கேட்கிறது. கிணற்றில் இறங்கி உதவுகிறான். அப்புறம் என்ன? மேலே ஏற்றிவிட்ட பையன் ஏன் காணாமல் போய் விட்டான்? . கோபால கிருஷ்ணன் ஒரே இடத்தில் இருப்பவனா? . எங்கெல்லாமோ யாருக்கெல்லாமோ உதவ ஓடுபவ னாச்சே! ஸூர்தாசுக்கு யாரோ ஒரு பையன் உதவினான் என்று தான் தெரியும். யார் என்றோ, அவன் வந்ததோ போனதோ தெரிய கண் இல்லையே.

”ஸூர்தாஸ், விஷயம் தெரியுமா உங்களுக்கு? இன்று பிரபல கிருஷ்ண பக்தர் சுவாமி வல்லபாச்சாரியார் இந்த ஊர் வருகிறார்.” என்று ஒரு பக்தர் அவரிடம் சொல்கிறார்.

”ஹாஹா. எவ்வளவு பெரிய மஹான். கிருஷ்ண பக்தர்….நான் அவரை சென்று நமஸ்காரம் பண்ண முடியுமா?”

ஸூர்தாஸ் எப்படியோ தட்டு தடுமாறி தன்னை சந்திக்க வரும் முன்பே வல்லபாச்சாரியார், ஸூர்தாஸை தேடி வந்துவிட்டார். வல்லபாச்சார்யர் திருவடிகளை பிடித்துக்கொண்டு கதறுகிறார் ஸூர்தாஸ்.

”ஸூர்தாஸ், நான் வந்ததே உங்கள் திவ்ய கிருஷ்ண கானத்தை கேட்கத்தான்”. முதலில் சூர்தாஸ் ஒரு அற்புதமான பாடலை அப்போதே கண்ணன் மேல் இயற்றி பாடுகிறார்:

तेरो मुख नीको कि,, मेरो राधा प्यारी।
दर्पण हाथ लिये नंद नंदन…. साँची कहो वृषभानु दुलारी॥
हम का कहैं तुमही क्यों न देखो…. मैं गोरी तुम स्याम बिहारी॥
हमरों बदन ज्यों चंदा की उजारी……. तुम्हरे बदन जैसे रैन अंध्यारी।
तिहारे सीस पर मुकुट बिराजै ……हमरे सीस पर तुम गिरधारी॥
चन्द्र सखी भज बालकृष्ण छबि ….दोउ ओर प्रीत बढ़ी अति भारी……जय श्री राधे

Mero mukh niko, ki tero radha pyari?
Darpan hath liye nand nandana, saachi kaho vrishbhanu – dulari
Hum se kaho, tum hi kyon na dekho, hum gauri tum shyam bihari,
Mero mukh jaiso chanda ujiyaro, tumro mukh jaise rain andhiyari,
thiharre sis par mukut viraaje, hamare sis par thum girthaari.
chandhra sakhi baala krushna chavi dhod our prathi badi adhi bhari … jaya sri raadhe.

மேலே சொன்ன பாட்டை ஸூர்தாஸ் பாடியது இந்தியில் இல்லை.அதை மருவிய ஒரு பழைய பாஷையான வ்ராஜ் பாஷாவில். எண்ணற்ற பாட்லகள் ஹிந்தியில் தற்போது பாடப்பட்டு வருகிறது. கிருஷ்ண பக்தர்களுக்கு கொண்டாட்டம் தான். இங்கிலீஷிலும் கிடைக்கிறது. கொஞ்சம் அல்ல ரொம்பவே. தேடினால் படித்து இன்புற ஆனந்தம். .

இந்த பாட்டில் ஸூர்தாஸ் என்ன காட்சி காண்கிறார்?
கண்ணன் கையில் ஒரு கண்ணாடி. அவன் பக்கத்தில் ராதையும் உட்கார்ந்திருக்கிறாள் .
ராதா, இதைப்பாரேன் நம்ம ரெண்டு பேர் முகமும் இதில் தெரியறது. யார் முகம் அழகு நீயே சொல்லு?
டேய் , கிருஷ்ணா அந்த ரெண்டு முகத்தையும் பார்த்தால் ஒன்னு முழு பால் நிலா. இன்னொன்று…….கருப்பு அமாவாசை இருட்டு. ?”
”யேய் ராதா நீ பால் நிலா, நான் அமாவாசையா? போடி….”\
”கிருஷ்ணா ஒண்ணு இல்லேன்னா இன்னொண்ணு இல்லேடா. முழு நிலாவை இருட்டிலே பார்த்தா தான் அழகு.
சந்திரன் இல்லேன்னா முழு இரவும், வானமும் சோபிக்காது.”
கிருஷ்ணா, உன் கருப்பு நிற கண், மையிட்டா மாதிரி இருக்கு. உன் முகம் என் கண்ணிலே பிரதிபலிச்சா தான் என் முகம் அழகு தெரியும். நீ ஒருத்தன் தான் இடது கை சுண்டு விரலாலே கோவர்தன மலையையே தூக்கியவன். என்னால் முடியுமா சொல்? யார் அழகு நீயா நானா? நீ மலையை தூக்கினவன். நான் உன்னையே தூக்கி என் மனசிலே ஹ்ருதயத்தில் வச்சிண்டிருக்கேன்.
”போதும் போதும் ராதா கிருஷ்னா உங்க ரெண்டு பேருமே எனக்கு தெய்வங்கள். என் இருதயத்திலே உங்களை வைத்து பூஜை பண்ணுகிறவன். எனக்கு நீங்க ரெண்டு பேர் இல்லை. ரெண்டுமே ஒண்ணு தான்” என்று முடிக்கிறார் ஸூர் தாஸ் . ஸூர் தாஸ் வெகு நன்றாக பாடுபவர். உணர்ச்சி பக்தி பாவத்துடன் இதை பாடும்போது வல்லபாச்சார்யர் பிரமித்து போய்விட்டார்.

”ஸூர் தாஸ் இன்னும் பாடுங்கோ ” என்கிறார். தொடர்ந்து வெகுநேரம் ஸூர் சமுத்திர சுனாமி அங்கே கான வெள்ளமாக பெருகுகிறது.
வல்லபாச்சார்யர் சில நாள் தங்கிய போது கிருஷ்ணனை பற்றிய சகல சரித்திரங்களையும் விஷயங்களையும்
அவர் மூலம் ஸூர்தாஸ் காதால் கேட்டு மனதில் இருத்தி வைத்துக் கொள்கிறார். அவ்வளவும் பாடல்களாகி நமக்கு கிடைத்துள்ளதே.

வல்லபாச்சாரியார் ஸூசூர்தாஸை பிருந்தாவனம் அழைத்துச் செல்கிறார். பிருந்தாவனத்தில் கோவர்தன கிரிதாரி ஆலயத்தில் ஸூர்தாஸ் ஆஸ்தான வித்துவான் ஆகிறார்.

தான்சேன் மூலம் சூர் தாஸ் கீர்த்தனங்களை கேட்ட அக்பர் ” ஸூர்தாஸ் நீங்கள் எனது சாம்ராஜ்ய அரண்மனை வந்து பாடுங்கள்” என்று செய்தி அனுப்புகிறார்.

”சக்ரவர்த்தி, என்மேல் இவ்வளவு அன்பா?. எனக்கு கிருஷ்ணனின் சமஸ்தானம் ஒன்றில் தான் பாட்டே வரும் ” என்று பதில் அனுப்புகிறார் ஸூர்தாஸ்.

அக்பர் நேரில் வந்து ஸூர்தாஸை ஆலயத்தில் சந்தித்து அவர் கிருஷ்ண கானாம்ருதத்தை கேட்டு மகிழ்கிறார்.

ஸூர்தாஸ் இயற்றிய கிருஷ்ண கான சமுத்திர அலை இன்னும் பல இல்லங்களில் ஒலித்துக் கொண்டிருக் கிறதே. தமிழ்நாட்டிலும் பரவ வேண்டாமா? நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து பரப்புவோமா? நான் எழுதுகிறேன். நீங்கள் பாடுங்கள், புத்தகமாக்குவோம், எல்லோரும் படிக்கட்டும். நமது கைகள் ஒன்று சேர்ந்தால் எதுவேண்டுமானாலும் நிறைவேற்றும் சக்தி கொண்டதல்லவா?

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *