LORD SIVA AS RUDHRA – J K SIVAN

ருத்ரன் எனும் சிவன் – நங்கநல்லூர் J K SIVAN

வேதத்தில் தான் நான் ருத்ரனை முதலில் அறிந்து கொண்டேன். அதில் சிவனைப் பற்றி அதிகம் இல்லை. வேதகாலத்தில் சிவனே ருத்ரன் என்று தான் சம்ஹார மூர்த்தியாக வ்ருஷபனாக அறியப் பட்டான். வேத காலத்தில் ஆட்களின் சக்தி தேவைப்பட்டது. வ்ருஷபன் ஜனப்பெருக்கத்தை அளிப்பவன் என்றும் வாழ அத்தியாவசியமான மழையை கொடுப்பவன் என்றும் அர்த்தம் கொண்டது.
ருத்ரன் என்ற பெயருக்கு அநேக அர்த்தங்கள். ”அழுது கொண்டு ஓடுவது”, எதிரிகளை அப்படி ஓடவிடுபவன். துக்க விநாசகன் என்று ஒரு பொருள். லிங்காஷ்டகத்தில்
வருமே ‘ துக்க விநாசக லிங்கம்.’ என்று பாடுவீர்களே . ஞாபகம் இருக்கிறதா?

‘ருத்’ என்றால் சத்யம் என்று ஒரு அர்த்தம். முடிவான ஞானத்தை பெற்றவன்.கல்லால மரத் தடியில் தக்ஷிணா மூர்த்தியாக மௌனமாகவே அதை போதித்தவன். ஆத்ம ஞான ப்ரம்மன் சிவன். சிவனைச் சுற்றி இருப்பவர்கள் பூதகணங்கள், சிவ கணங்கள் அநேகம். பூத, வேதாள, உச்சுஷ்ம, பிரேத பூத, பைசாச, கூஷ்மாண்ட ,டாகினி, கணங்கள். தேவர்களை கொடியவர்களிடமிருந்து காக்கும் சேனை. நாம் நல்ல சிவ பக்தர்களாக வாழ்ந்தால் நம்மை கடைசியில் கைலாசத்துக்கு அழைத்துச் செல்பவை. எமதூதர்களை அப்போது விரட்டி அடிக்கும். அப்பாடா, எமலோகம் போகாமல் தப்பிக்க இப்படி ஒரு வழி இருக்கிறதா? எங்கே விபூதி, ருத்ராக்ஷம்,? ஓம் நமசிவாய…

சிவலிங்கமே உயிர்களின் அபிவிருத்தியை குறிக்கும் ஆண் பெண் இணைப்பு குறி. யோனி லிங்க தத்வம். இதே பின்னர் அர்த்த நாரீஸ்வரராக பாதி ஆண் பாதி பெண் என இணைந்த உருவாக தோன்றி வழிபட ஆரம்பித்தார்கள். பின்னர் சக்தியையும் சிவனையும் தனித்தனியே தெய்வமாக வழிபட்டனர் எனினும் சிவலிங்கம் இன்றும் என்றும் அனைத்தும் ஒன்றே என்று அத்வைத பரம்பொருளாக தெய்வமாக வழிபடுகிறோம்.

வேதங்கள் ”அக்னிஷ்டோமாத்மகம் ஜகத் ” (अग्निषोमात्मकं जगत्)” என்கிறது. வேத கால முதல் தெய்வம் அக்னி. அக்னி ஆண், சந்திரன் பெண் தத்துவம். அசைவற்ற சிவன் சக்தியுடன் இணைந்ததும் பிரபஞ்சம் இயக்கம் பெறுகிறது. ”சதுர்வர்க சிந்தாமணி’ எனும் நூலில் வலது பாக சிவன் இடதுபாக சக்தியுடன் இணைந்து உலகம் இயங்குவதை தான் ”சக்த்யா ஸஹித: ஸம்பு: ” (शक्त्यासहित: शंभु: ।)’ என்று சொல்வது சிவன் எனும் ஸம்பு சக்தி எனும் சகியுடன் இணைவதை குறிப்பிடுகிறது.

சிவன் அஷ்டபைரவ உக்ர அம்சம். ப்ரம்மாவின் ஐந்தாவது சிரத்தை கால பைரவர் களைந்த பின்னர் காசி சென்று அங்கே காக்கும் தெய்வமாகிறார். கால பைரவாஷ்டகம் சமீயத்தில் தான் முழுதுமாக எழுதி பைரவர்களை பற்றி விபரங்கள் அளித்தேன்.

காசி செல்பவர்கள் முதலில் கால பைரவரை தொழுது வணங்குகிறோம். பிறகு தான் காசி விஸ்வநாதர். .காசி கயிறு என்று ஒரு கருப்பு கயிற்றை கையில் மணிக்கட்டில் பாது காப்புக்காக ரக்ஷையாக கட்டிக் கொள்வது வழக்கம். என் பள்ளிக்கூட காலங்களில் வலது மணிக்கட்டில் காசி கயிறு இருந்தது ஞாபகம் வருகிறது. அப்புறமும் கூட யாராவது காசி போய்விட்டு வந்தவர்கள் காசி கயிறு கொடுக்கும்போது வலது மணிக்கட்டில் சுற்றி கட்டிக்கொள்வேன். இப்போதும் எனக்கு யார் வேண்டுமானாலும் கொடுத்தாலும் அணிவேன். நீங்களும் கட்டிக்கொள்ளுங்கள். காரண்டீயான ரக்ஷை.

வேதாளம் அவர் வாகனம் என்று ஒரு ஐதீகம். முதலில் சிவனை லிங்க ரூபமாக வழிபட்டது வீரபத்திரன் என்பார்கள்.

பைரவர் என்பதற்கு ஒரு அர்த்தம்: ”பூஹு : Bhuhu (भू:) என்றால் பல துகள்களில் ஒரு பாகம். ”ரவஹ :” என்றால் குட்டி குட்டி துகள்கள். அதாவது பைரவர் என்றால் இந்த பூமி பல சிறு துகள்களை உட் கொண் டது. அவற்றின் சேர்க்கை. ஆகவே பைரவர் அவற்றுக்கு அதிபதி.

64 பைரவர்கள் இருக்கிறார்கள். லிஸ்ட் முன்பே கொடுத்திருக்கிறேன்.அதில் எட்டு பைரவர்கள் அஷ்ட பைரவர்கள். கால பைரவர் விசேஷமானவர். தாந்த்ரீக நூல்கள் இந்த 64 பைரவர்களின் மனைவி மார்கள் 64 யோகினிகள் என்கிறது. சிவசக்தி கோட்பாடு இங்கே விளங்குகிறது. இந்த பைரவர்கள் தான் சக்தி பீடங்களை காப்பவர்கள். தெய்வீக சக்தி வேண்டி செய்யும் எந்த சடங்கும் பைரவரை பூஜிக்கா விட்டால் பலன் தராது.

மஹாராஷ்டிராவில் பைரவரை, பைரோபா, விரோபா என்று பாம்பு புற்றுக் கோவில்களிலோ, இடு காடுக ளிலோ கிராம தேவதையாக வழிபடுகிறார்கள். ராத்ரிகளில் பைரவர் குதிரைமேல் அமர்ந்து கிராமங் களில் ரோந்து சுற்றி காப்பாற்று கிறார் என்று நம்பிக்கை. இங்கே ஐயனார் போல. முதலில் பைரவனை ஸ்லோகம் சொல்லி போற்றிவிட்டு அப்புறம் தான் விஷ்ணு, சிவன், லக்ஷ் மி என்று மற்ற தெய்வங்களை ஸ்தோத்ரம் செய்ய வேண்டும்.

மேலே சொன்ன வேதாளம் என்பது இங்கே விக்ர மாதித்தன் கதையில் வருவது அல்ல. vaital (वैताल) வைதாள் என்கிற வார்த்தையிலிருந்து வருவது. தாண்டவமாடுவதற்கு ஏற்ற தாள இசை. அஹத், அநாஹத் சப்தங்கள் தான் வைதாள். சிவனின் பூதகணங்கள் ஆடுபவை. பாடுபவை. அக்யவேதாள், ஜ்வல வேதாள், பிரளயவேதாள் (ஊழித்தாண்டவம், ஊழிக்கூத்து) எனும் சிவனின் தாண்டவ தாளங்கள்.
இந்த பூதகணங்களின் குணம், தன்மை, உணவு பற்றி சொன்னால் பயப்படுவீர்கள் என்பதால் மேற்கொண்டு எதுவும் சொல்லப்போவதில்லை .

பூனா மற்றும் சில மஹாராஷ்ட்ரா இடங்களில் உருண்டையாக கல் சிவப்பு செந்தூரம் பூசி வைத்திருக்கும். அதெல்லாம் பைரவ வைதாள் உருவகங்கள், உருவங்கள்.

ஞான ரூபனான சிவனுக்கு இரண்டே நிலை. ஒன்று மோன தவநிலை. இன்னொன்று ஆனந்த தாண்டவம்.

प्रयोगमुद्धतं स्मृत्वा स्वप्रयुक्तं ततो हर: । तण्डुना स्वगणाग्रण्या भरताय व्यदीदृशत् ।।
लास्यमस्याग्रत: प्रीत्या पार्वत्या समदीदृशत् । बुद्ध्वाथ ताण्डवं तण्डोर्मर्त्येभ्यो मुनयोऽवदन् ।।

ப்ரயோக முத்தத் ஸ்ம்ருத்வா ஸ்வப்ரயுக்தம் ததோ ஹர : தண்டூனா ஸ்வகணா க்ரண்யா பரதாய வியதித்ஷத் :
லாஸ்யமஸ்யாக்ரத: ப்ரீத்யா பார்வத்யா சமதித்ஷத் புத்தத்வாத் தாண்டவம் தண்டோர் மத்யேப்யோ முனயோ அவதன்”’

மேலே கண்ட ஸ்லோகம் என்ன சொல்கிறது
த்தில சிவன் தனது உத்தத் ஊர்த்வ நடனத்தை தண்டூ எனும் தனது சிஷ்ய பூதம் மூலம் பரத முனிவருக்கு காட்சி தந்ததால் அது ‘தாண்டவம்’ ஆயிற்று. உமையும் லஸ்ய நடனம் (இரு கைகளும் அசையாது, சுதந்திரமாக இருக்கும்) பரத முனிவருக்கு ஆடிக்காட்டுகிறாள். ரிஷி பரதர் மூலம் உலகமே இந்த தாண்டவத்தை அறிந்து மகிழ்ந்தது. பரத ரிஷி மூலம் அந்த தாண்டவம் உலகமுழுதும் பரவி ‘பரத ‘நாட்யம் ஆனது.

நாதம், தாளம், பாவம், முத்திரை, என பல அற்புத பிரிவுகள் கொண்ட பரத நடனம். சிவனின் நடனம், தாண்டவம், எழுவகைப்படும். ஆனந்த தாண்டவம், சந்தியா தாண்டவம் (பிரதோஷ கால நடனம்),காளிகா தாண்டவம், திரிபுர தாண்டவம், கௌரிதாண்டவம், சம்ஹார தாண்டவம். உமா தாண்டவம்.

உமாதாண்டவம், கௌரிதாண்டவம், இரண்டும் பயங்கரமானவை. சிவன் பைரவனாகி விடுவார். வீரபத்ரனாகி விடுவார். உமை, கௌரி அவர்களுடன் சேர்ந்துகொள்வார்கள். அநேகமாக இது இடுகாட்டில், நடைபெறும். இதில் எரியும் உடல்கள் சாம்பல் பூசிக்கொள்ளும். பூத கணங்கள் கூடவே ஆடும். இன்றும் உஜ்ஜையினில் மஹா காளேஸ்வரர் ஆலயத்தில், நள்ளிரவு நடுநிசியில் புதிதாக எறிந்த உடலின் சாம்பலால் அபிஷேகம் நடைபெறுகிறது. பஸ்மாபிஷேகம் என்று பெயர். மஹாகாளேஸ்வரர் பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களில் ஒருவர். எண்ணற்ற சிவபக்தர்கள் தரிசனம் செய்யும் சிவாலயம்.
போதும் போதும்….

சிதம்பரத்தில் நடராஜர் ஆடுவது ஆனந்த நடனம். சாத்வீகமானது.சிவனுக்கு பிரதான சீடன் நந்திகேஸ்வரன். வாகனமும் கூட. நந்தி மத்தளம் கொட்ட என்று கோபாலக்ரிஷ்ண பாரதியார் பாடுவார். நந்தியின் தாளம் ஈடிணையற்றது. சிவனின் நடனத்திற்கேற்ப வாசிப்பவர். மிருதங்க வித்துவான் பாலக்காட்டு மணி அய்யர் நந்திகேஸ்வரன் பட்டம் பெற்றவர்.

ஷ்ரிங்க தர்ஷன் என்பது நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையே சிவலிங்க தர்சனம் செய்வது. முக்கியமாக பிரதோஷத்தன்று ரொம்ப புண்யமானது.

வாழ்க்கையில் புண்யம் தேடி பரிசுத்தமானவன் சிவலோகம் செல்வதை தான் சிவலோகப் பிராப்தி அடைந்தார் என்று எழுதுகிறோம். சிவனின் இருப்பிடம் தான் கைலாசம். ‘கே லாஸ்’ என்றால் பனி வாழைப்பழ தார் போல மடிப்பு மடிப்பாக இருப்பது. வாழைக்கு ‘கேலா’ என்று வடமொழியில் பெயர். பனிமலையில் சிவன் இல்லாதபோது அவர் இருப்பது ருத்ர பூமி. சுடுகாடு, இடுகாடு, எனும் ஸ்மஸானம். தேடத் தேட நிறைய நிறைய விஷயங்கள் ஸ்வாரஸ்யமாக அகப்படுகிறதே.

நமது ஹிந்து சனாதன தர்மத்தில் எதை தொட்டாலும் அற்புதமான அதிசயமான விஷயங்கள் தாத்பர்யங்கள் நிறைய இருக்கிறது.ஏன் யாரும் இதையெல்லாம் எடுத்து நமக்குச் சொல்வதில்லை….

புதையல் இருக்கிறது என்று தெரிந்தும் பிச்சைக்கா ரனாகவே வாழ்கிறோமா?

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *