NARADHA PURANAM – J K SIVAN

நாரத புராணம் தெரியுமா? –   நங்கநல்லூர்  J K  SIVAN
ஏதாவது நீளமாக எழுதினால்,  அதாவது  நாலைந்து பாராக்கள் கொண்டதாக இருந்தால் கூட   ”என்னடா  இவன் பெரிய புராணமாக எழுதறான்,  ரத்தினச் சுருக்கம் என்பதே  இவன் கேள்விப்படாத ஒன்றா?   முழ நீளமாக இருக்கே” எனும்  கால கட்டத்தில் இருக்கிறோம்.  புராணங்கள்   நீளமாக தான் இருக்கின்றன. கொஞ்சம்  சுவையான பகுதிகளை மட்டும் கொடுத்தால் தான் படிக்க இயலும்.  நாரத புராணம் அப்படிப்பட்டது.
வியாசம் எழுதுவது என்றால் நீண்ட கட்டுரை (புராணமாக)  எழுதுவது.  நிறைய கட்டுரைகளை புத்தகங்களில் நாம் கண்ணால் மேய்ந்து விட்டு மூடிவிடுகிறோம்.  எவருக்குமே படிக்க பொறுமையோ ஆர்வமோ இல்லை.  இப்படி எதை எழுதினாலும் நீளமாக எழுதும் ஒரே மனிதர், தந்திக்கு (சுருக்கமான வார்த்தைகள்)  எதிரி  வேத வியாசர்.  ‘சுருக்கமே’ இல்லாத ‘பெரிய’  ரிஷி  வேதவியாசர்.  எதையுமே ”வியாசமாக” எழுதுவதாலேயே அந்த பெயராக இருக்கும்.

வியாசர் எழுதிய பதினெட்டு புராணங்களில் ஒன்று நாரத புராணம். உள்ளே ஸ்லோகங்கள் கொஞ்சம் தான்.   25000! மட்டுமே. போதுமா . வேத வியாசரின் 18 புராணங்களையும் முழுமையாக  படித்து அனுபவிக்க இந்த  ஒரு ஜென்மம் போதாது.
ஒரு சமயம் நாரதர் சனத்குமாரர் சம்பாஷணை  நாரத புராணம்.  அதைச்  சுதர் மற்ற முனிவர்களுக்குக் கூறினார்.   ஆயிரமாயிரம் வருஷங்களுக்கு முன்பு எல்லாமே  எழுத்தில்லாமல்  வாய் வழியே சொல்லி காதால் கேட்டு   கல்வி கற்று மனதில் நிலைத்து  நின்றது. கர்ணபரம்பரை என்று  வாழையடி வாழையாக மந்திரங்களை ஒருவரிடமிருந்து  ஒருவர்  கற்றுக் கொண்ட  காலம்.  

நைமிசாரண்யம் ரிஷிகள் கூடுகிற  வனம் .  இருபத்தாறாயிரம்  முற்றும் துறந்த  ரிஷிகள்   அங்கே கூடி ஒரு சமயம்  குருவான  சௌனக மஹரிஷியை  அணுகி வணங்கி   எங்களுக்கு  உபதேசம் செய்யுங்கள் என கேட்டனர். ”ரிஷிகளே, என்னைவிட   உங்கள் சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்துகொள்ள  தகுதியானவர்  வேதவியாஸரின்  சிஷ்யர்  சுத மகரிஷி. அருகே  சித்த பீடத்தில் தியானம் செயகிறார். வாருங்கள் நாம் எல்லோருமே அங்கே போவோம்.” மஹரிஷி  சுதர்  அவர்களை இன்முகத்துடன் வரவேற்று ”நான் உங்களுக்கு சொல்லக்கூடியது, சொல்லவேண்டியது  ஒரு அருமையான புராணம்.   மஹரிஷி சனத் குமாரர் நாரதருக்கு போதித்தது. அதை தான்  நாரத புராணம் என்பார்கள்”
”ஆஹா  அப்படியே சுவாமி. எங்களுக்கு அதை உபதேசியுங்கள் ”என்று எல்லா ரிஷிகளும் கேட்க  நாரத புராணம் நமக்கு கிடைத்தது. அதன் சாராம்சம்:
ப்ரம்மாவின்  சங்கல்ப  புத்திரர்கள்  சனத் குமாரரும் நாரதரும். இருவரும்  ஒருநாள் கங்கை நதியில் ஸ்னானம் செய்யும்போது சந்தித்தனர்.   ஸ்னானம் செய்து நித்யகர்மாக்களை முடித்து  அமர்ந்தபோது  ” அண்ணா, ஸநத்குமார மஹரிஷியே , எனக்கு  மஹா விஷ்ணுவை ஒருவர்  அடைய முடியுமா? பிரபஞ்ச ரஹஸ்யங்கள் என்ன, மோக்ஷம் அடைவதற்கான  வழி என்ன” என்று உபதேசியுங்கள் ” என்கிறார் நாரதர்.
”விஷ்ணு எங்கும் இருப்பவர். எந்த உருவத்திலும் காண்பவர். அவரே  ப்ரம்மா, விஷ்ணு,சிவன் மூவருமே. அவரே  லக்ஷ்மி, உமா  சக்தி சண்டி என சக்தி தெய்வங்கள் உருவான காரணம்’   ஸர்வம்  விஷ்ணுமயம் ஜகத்’.   விஷ்ணு பிரபஞ்ச காரணன். பஞ்ச பூதங்களை  தோற்றுவித்து அதிலிருந்து  ப்ரம்மாவினால்  எண்ணற்ற ஜீவர்களைப்  படைத்து,   அவர்களுக்கு  பஞ்சேந்திரியங்கள் அளித்து, அதன் மூலம்  கர்மேந்திரியங்கள்  ஞானேந்திரியங்கள் புத்தி அஹங்காரம் எல்லாம் அளித்தவர். ஈரேழு பதினான்கு லோகங்களையும் படைத்தவர் விஷ்ணு.
”நாரத முனிவரே,  பக்தி  நம்பிக்கை  ரொம்ப  அவசியம்.   ஆன்மாவை  உணராதவன் இருளில்  அஞ்ஞானத்தில் உழல்பவன். உயிரற்ற ஜடம்  போல. சேய்க்கு  தாய்  எப்படியோ அப்படி  மனிதனுக்கு விஷ்ணுவின் மேல்  பக்தி  அவசியமானது என்று உணர்கிறேன் என்றார்  சனத்குமாரர். ஒவ்வொரு பிறவியிலும் கூடிக்கொண்டே  வரும்  கர்மாவின் பலனை  சத் சங்கம் மூலம் தான் கொஞ்சம் கொஞ்சமாக  குறைத்துக் கொள்ள முடியும்.
”சனத் குமார மஹரிஷி , நீங்கள்  விஷ்ணு பக்தர்களை பற்றி எனக்கு சொல்லுங்கள் ” என்கிறார் நாரதர்.”ஆஹா அப்படியே.  பிரளய காலத்தில் எல்லாம் ஜலமயமாக இருந்தபோது மஹா விஷ்ணு ஒரு ஆலிலையில் வடபத்ரசாயியாக நீரில் மிதந்து வருவதை பார்த்து  அதிசயித்தவர்  மார்க்கண்டேயர்.  அவர் ஒரு  விஷ்ணு பக்தர்” இதை சுதர்  நைமிசாரண்யத்தில் சொல்லிக்கொண்டு வரும்போது ரிஷிகளுக்கு நம்மைப்போல் ஒரு சந்தேகம். ”உலகத்தில் எல்லாமே  அழிந்து  ஜல ப்ரளயமாக இருக்கும்போது  மார்க்கண்டேயர் எப்படி தப்பித்தார்?”
”ரிஷி மிருகண்டு சாளிக்ராம க்ஷேத்ரத்தில் தவம் செய்தவர்.  அவர் கடும்தவத்தை கண்டு இந்திரன் பயந்தான். தன்னை மீறிய சக்தி அடைந்துவிடுவாரோ என்று அவனுக்கு பயம்.  பாற்கடலில் ஆதிசேஷன்மேல் பள்ளிகொண்ட  பரமாத்மா விஷ்ணுவிடம் இந்திரன் சென்றான்.
”மிருகண்டுவின் தவ சக்தியை நினைத்து கவலையே வேண்டாம், நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் போய்வாருங்கள்”  என்று இந்திராதிதேவர்களை அனுப்பிவிட்டு  விஷ்ணு சதுர்புஜங்களில் ஆயுதங்களோடு மஹா விஷ்ணுவாக  மிருகண்டுவுக்கு தரிசனம் தந்தார்.
”மிருகண்டு மஹரிஷி  உங்களுக்கு என்ன வரம் வேண்டும் கேளுங்கள்””மஹா விஷ்ணு, உங்கள் திவ்ய தரிசனம் ஒன்றே எனக்கு முக்தி அளித்துவிட்ட பிறகு  வேறென்ன வேண்டும் எனக்கு?  ”மஹரிஷி , உங்களுக்கு ஒரு புத்ரனை அளிக்கிறேன் நீண்டகாலம் அவன் சிரஞ்சீவியாக வாழ்வான்” என்று வரமளித்து விஷ்ணு மறைந்தார்.
”ஸனத்குமார மஹரிஷி , எதற்கு  மிருகண்டுவிற்கு  ஒரு மகன்? அதன் தாத்பர்யம் என்ன? அவர் எப்படி பிரளயத்தின் போது  ஆலிலை கிருஷ்ணனை  பார்த்தார்?”
”நாரதா, சொல்கிறேன் கேள்.   தவம் செய்து விஷ்ணு தரிசனம், வரம் பெற்ற  மிருகண்டு கல்யாணம் பண்ணிக் கொள்கிறார்.  மார்க்கண்டேயன் பிறந்தான்,  ஐந்து வயதில் உபநயனம் ஆனது, கல்வி கேள்விகளில் வேத  சாஸ்திரங்கள் அறிந்தான்.  மார்கண்டேயனும்  விஷ்ணுவை வேண்டி தவம் இருந்தான்.   மஹா விஷ்ணு அவன் முன் தோன்றி அவனுக்கு  புராண சம்ஹிதை இயற்றும் சக்தி தருகிறார். தனது மாயா சக்தியை மார்க்கண்டேயன் அறியும் சக்தி அளிக்கிறார். ,மார்க்கண்டேயனை நாராயண அம்சம் என்பார்கள். அதனால் தான்  மார்க்கண்டேய ரிஷிக்கு ப்ரளயத்தின்போது  மஹாவிஷ்ணுவோடு  ஜலப்ரவாஹத்தில்  ஆலிலை மேல்  அமர்ந்து மிதக்க முடிந்தது. மஹா விஷ்ணுவுக்கு ஒரு பகல் ஒரு ராத்திரி இப்படி கழிந்தது.மீண்டும் பிரபஞ்சம் தோன்றியது  உயிர்கள் உருவாகின.  மார்க்கண்டேயன் விஷ்ணுவை நமஸ்கரித்து தனக்கு  உபதேசம் செய்ய வேண்டுகிறான்.
”மார்கண்டேயா,  என் மேல் உண்மையான பக்தி கொண்டவனுக்கு என்றும் அழிவில்லை. மனம் வாக்கு காயத்தில் அவன் புனிதன். பசு பிராமணர்களுக்கு  தானம் வழங்குபவன்,  மற்றவர்களை அன்பாக நேசிப்பவர்கள், துளசியை வணங்குபவர்கள், யாகங்கள் மூலம் தேவர்களை மகிழ்விப்பவர்கள், நெற்றியில் விபூதி அணிந்து சிவனை தொழுபவன் எல்லாருமே  எனக்கு  திருப்தி அளிப்பவர்கள்”.
 மஹாவிஷ்ணு  காட்சி தந்து மறைந்தபின் மார்க்கண்டேயர்  விஷ்ணு பக்தியோடு பிற உயிர்களுக்கும் சேவை புரிந்து வாழ்பவர்”.
”ரிஷிகள்,  நான் சொன்னது கொஞ்சம் தான்.  நாரதர் ரொம்ப ஆனந்தத்துடன் மஹா விஷ்ணு பக்தியை பற்றி  ஸனத் குமாரர் சொன்னதை கேட்டு மகிழ்ந்தார். அது அத்தனையும் என்னால்  சொல்ல இயலாத காரியம்.
”ஸனத் குமாரரே,  க்ஷேத்ரங்களிலேயே  புனிதமான  க்ஷேத்ரம் ஏதாவது இருக்கிறதா?” எனக்கு சொல்லுங்கள் என்று கேட்டார் நாரதர்.  ”நாரதா, கங்கையும் யமுனையும் சங்கமமாகும்  பிரயாகை  க்ஷேத்ரம்  விசேஷமானது.  கங்கை  மஹா விஷ்ணுவின் பாதங்களிலிருந்து  தோன்றுபவள்.  யமுனை  சூர்யனின்மகள்.  கங்கையை மனதால் நினைத்து வேண்டினாலே பாபங்கள்  விலகும். மனதில் சாந்தி நிலவும். பிரயாகையில் தான் ப்ரம்மா விஷ்ணுவுக்கு யாகம் பண்ணினார். அதன் பிறகு எண்ணற்ற ரிஷிகள் விஷ்ணுவை வேண்டி யாகங்கள் புரிந்த க்ஷேத்ரம். ப்ரயாகைக்கு நூறு  மைல்  தள்ளி  கங்காதேவி என்று மனதால் நினைத்தவனுக்கு கூட  மோக்ஷம் உண்டு. பிரயாகையில் கங்கைநதிக்கரையில் மண்ணை எடுத்து நெற்றியில் அணிபவன் பாக்கியசாலி. அதே பலனை தருவது வாரணாசி க்ஷேத்ரம். கங்கா  லோக மாதா.  கங்கா ஜலத்தை  தொட்டாலே போதும். அறுபதினாயிரம் சக்கரர்களுக்கு பகிரதன் தவத்தால்  மோக்ஷம் தந்தவள். கங்கை மஹாத்மியம்  சொல்லி மாளாது அப்பனே”பதிவு  தொடரும் 

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *