SRIMAD BHAGAVATHAM 10TH CANTO. J K SIVAN

ஸ்ரீமத் பாகவதம் -10வது காண்டம்.-   நங்கநல்லூர்  J K  SIVAN
ஸ்ரீ கிருஷ்ண அவதார ஜனனம் 

சுகர்  சொல்கிறார்:
பரிக்ஷீத் மன்னா,  யார்  மனது உலக  ஆசா பாசங்களில் சிக்கி  தவிக்கிறதோ,உலக சுகங்களில் ஈர்ப்பு ஏற்படுகிறதோ, அவர்கள் அதை பூர்த்தி செய்துகொள்ள  அதற்கான உபதேவதைகளை நாடுகிறார்கள், வழிபடுகிறார்கள்.   யோக மாயா  துர்காவின் அம்சம்.  கிருஷ்ணன் யோகமாயாவுக்கு கட்டளையிட்டு அவளால்  தேவகியின் வயிற்றிலிருந்த ஏழாவது குழந்தை  கோகுலத்தில்  ரோஹிணியின்  கர்ப்பத்துக்கு மாற்றப்பட்டது.  அங்கே  பலராமன் இவ்வாறு தோன்றி வளர்ந்தான்.   கம்சனைப் பொறுத்தவரை  ஏழாவது குழந்தை கருவிலேயே கரைந்து விட்டது, குறைப்பிரசவம் என  கம்சன் முதலானோர் கருதினார்கள்.  யோகமாயா தக்க தருணத்தில்  யசோதையின் வயிற்றிலிருந்து தேவகியின்  கர்ப்பத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள  தயாரானாள். நாராயணன் கட்டளைக்காக காத்திருந்தாள்.
 ”என் அன்பு சகோதரி  யோகமாயா, உன்னை  பல பக்தர்கள் பல வித நாமங்களோடு வழிபடுவார் கள்.வெவ்வேறு ஸ்தலங்களில் நீ வெவ்வேறு நாமங்களுடன் அருள் புரிவாய். துர்கா,பத்ரகாளி, விஜயா, வைஷ்ணவி, குமுதா, சண்டிகா, கிருஷ்ணா, மாதவி, கன்யகா, மாயா , நாராயணி, ஈசானி, சாரதா, அம்பிகா என்று இன்னும் எத்தனையோ நாமங்கள்.   கிருஷ்ணனான   நாரயணனை வலம்  வந்து நமஸ்கரித்து  யோகமாயா  நந்த கோகுலம் புறப்பட்டாள்.  யோகமாயாவுக்கு இட்ட கட்டளையினால்  தேவகி கருவில் இருந்த  ஏழாவது குழந்தை  கோகுலத்தில் ரோஹிணியின்  கருவிற்கு மாற்றப்பட்டு பலராமனாக வளர்ந்தான். யோகமாயா தானே  தேவகியின் கருவில் தோன்றி கம்சனை பின்னர்  எதிர்கொண்டாள்.  ஸ்ரீமந்   நாராயணன் தனது தெய்வாம்சத்தை வசுதேவர் ஹ்ருதயத்தில் பாய்ச்சினான். அந்த ஒளி வசுதேவரை பிரகாசிக்க வைத்தது. அவர் எண்ணம், சிந்தை ஹ்ருதயம் மூன்றும் அந்த ஒளிக்கற்றையை அப்படியே  தேவகியின் மனதுக்குச் செலுத்த  தன்னுள்  ஸ்ரீமந் நாராயணனை உணர்ந்தாள் தேவகி. கிருஷ்ணன்  தன்னை  வசுதேவர்  தேவகி உருவாக்குவதை தவிர்த்து தானே  தனக்கு பூலோகத்தில் தாய் தந்தையராக  அவர்களை அமைத்துக் கொண்டான் என்பது கருத்து. மனஸ்தா என்று சொல்லும் தீக்ஷை இது. தேவகி ஞான ஒளியோடு பிரகாசித்தாள். இது நம்மைப் போல் சாதாரண குழந்தை பிறப்பு அல்ல. அவதார நோக்கம் கொண்டு  தேவகி வசுதேவரின் எட்டாவது குழந்தையாக தோன்றி  கடமையை நிறைவேற்ற நாராயணனின் சித்தம். சங்கல்பம்.
குடத்துக்குள்  இட்ட அக்னியாக  தேவகி  திகழ்ந்தாள். வெளியே எவருக்கும் அதை உணரமுடியவில்லை.
”தேவகி கருவுற்றிருக்கிறாள். நான்  எதிர்பார்த்து காத்திருக்கும்  எட்டாவது குழந்தை,  ‘என் யமன் உருவாகட்டும். பிறந்தவுடன் அவனைத் தீர்த்துவிடுகிறேன்’  என்று கம்சன் கோபத்தோடும், பயத்தோடும் தூக்கமின்றி  காத்திருந்தான். ஏன் காத்திருக்கவேண்டும்.  எட்டாவது குழந்தை வயிற்றில் இருக்கும்போதே தேவகியை கொன்றுவிட்டால் என்ன, என் கவலையும் தீரும், அசரீரி வாக்கும் பொய்க்குமே” என்று கம்சன் ஒரு கணம் சிந்தித்தான். சேச்சே,   என்ன எண்ணம் இது,  தேவகி என் சகோதரி, ஒருபாவமும்  அறியாதவள், அவள் வயிற்றில் தோன்றுபவன் தான் என் எதிரி. அவளை, ஒரு கர்ப்பிணியைக்,  கொன்ற பாவம், அவப்பெயர் எனக்கு அவசியமில்லை, காத்திருப்போம் ”என்று பொறுத்திருந்தான்.  ஸாஸ்த்ர  ப்ரஹாரம்  பெண், பசு, பிராமணன் ஆகியோரை கொல்லவேகூடாது. அதுவும் இவள் கர்ப்பிணி. என் சகோதரி.  கம்சன் பலவித உணர்ச்சிகளோடு குமைந்தான்.

உடல்களின் தொடர்பால், உடலோடு பிறப்பவனுக்கு கர்மம் முந்தைய  பிறவிகளின் அனுபவமாக  தொடரும். அதை கர்மானுபந்தம் என்கிறோம். முற் பிறப்பே இல்லாத  நாராயணன் அவ்வப்போது  தோன்றுவது தர்மத்தை நிலை நாட்ட, துஷ்டர்களை ஒடுக்க, சிஷ்டர்களை காப்பாற்ற. அப்படித்தான் இப்போதும் தேவகியின் கருவில்  தன்னை இணைத்துக் கொண்டான்.
உலகில் எப்போதும் கிருஷ்ணனை நினைத்துக்  கொண்டிருந்தவன் கம்சன் ஒருவனே. சாப்பிடும்போது, உட்கார்ந்தபோது, படுத்தபோது, நடந்தபோது, தூக்கத்தில், கனவில்   என் எதிரி கிருஷ்ணன் எப்படி இருப்பான், என்னை எதனால் கொல்வான் , எப்படி?’  இதே சிந்தனை.

கிருஷ்ணன் பிறக்கும் நேரம்   நாரதர்,  ப்ரம்மா, சிவன், இந்திரன், சந்திரன், வருணன், வியாசர்  எல்லோருமே  கிருஷ்ணன் தரிசனத்துக்கு  அருவமாக வந்து  கம்சனின் சிறைச்சாலையில்  தேவகி வசுதேவர் இருந்த  சிறிய அறையில் காத்திருந்தனர்.  ”நாராயணன் சொன்ன வார்த்தையைக்  காப்பாற்றி செயலாக்கப் போகிறான்.   இனி உலகில் அசுரர்கள் முடிவு நிச்சயம் என்று பிரார்த்தித்தனர்.

”பரீக்ஷித், கிருஷ்ணன் ஜனனம் பற்றி சொல்கிறேன் கேள்”  என்கிறார் சுகப்ரம்மம்:
‘த்வாபர யுகத்தில் தக்க நேரம் வந்துவிட்டது. கிருஷ்ணனாக  நாராயணன் அவதரிக்கப்போகிறார். ரோஹிணி நக்ஷத்ரம் ரொம்ப சந்தோஷத்தோடு பிரகாசித்தது.  27பேர் நாங்கள். யாருக்குமில்லாத அதிர்ஷ்டம் எனக்கு மட்டுமே  கிடைக்கப்போகிறது என்ற பெருமிதம்..  வானில்  நல்ல காரியம் நடப்பதற்கான அறி குறிகள் தென்பட்டது. மேகமில்லாத  வானத்தில் நக்ஷத்திரங்கள் ஜொலித்தன. நதிகள்  தெளிந்த நீரோடு பொங்கி ஆர்பரித்துக்கொண்டு ஓடின. மரங்கள் செடிகள் பூத்து குலுங்கின.  பறவைகள்  குதூகலமாக  வித வித  ராகங்களில் காலையிலிருந்தே பாடித்  திரிந்து கூட்டுக்குள்  ஒடுங்கிவிட்டன.  இரவு. மூங்கில் காட்டில் மரங்களின் துளைகளில் காற்று நுழைந்து வெளியேறும்போது இனிமையான  சப்தங்களை எழுப்பியது. கிரகங்கள் தோதாக  தம்மை அமைத்துக் கொண்டன.  நாலு திசையிலும் அமைதி.  அன்று மதுரா கிராமத்தில் எல்லோர் மனத்திலும் இனம்புரியாத ஒரு நிம்மதி, சந்தோஷம் ஏன் என்று தெரியவில்லை? காடுகளில்  மயில்கள் ஆனந்த நடமாடின .குயில்கள் கூவின. செப்டம்பர் மாதம்  வசந்தகாலத்தில் கண்ணன் பிறந்தான் என்கிறது ஜாதக கணக்கு.  நள்ளிரவு நேரம்.  கந்தர்வர்களும் கின்னரர்களும் தேவகானம்  பொழிந்தனர். சித்தர்கள், சாரணர்கள் தெய்வீக ஸ்தோத்திரங்கள் சொன்னார்கள்.  விண்ணில்  வித்யாதரர்கள், அப்சரஸ்கள் ஆனந்தமாக  நடனமாடினார்கள்.  தேவர்களும் மற்றோரும் விண்ணிலிருந்து மலர்மாரி பெய்தனர். நள்ளிரவில் பௌர்ணமியாக தேவகியின் ஹ்ருதயத்திலிருந்து ஒரு பேரொளி வெளிப்பட்டது.  கடல் அலைகள் ஆர்ப்பரித்தது.  அன்று அஷ்டமி.  அவன் தேவகியின் எட்டாவது குழந்தை.
தங்க விக்ரஹம் போல  நாலு கரங்களுடன், கரங்களில்  சங்கு, சக்ர , கதை  பத்மம்  தரித்து, மலர்ந்த   தாமரை கண்களோடு, கழுத்தில் கௌஸ்துபம் அணிந்து,  மார்பில் ஸ்ரீவத்ஸத்தோடு.,மஞ்சள் பீதாம்பரம் உடுத்து, கருப்பு நிற உடலோடு, தலையில் கிரீடம்,  காதில் ஒளிவீசும் வைடூர்ய  மகரகுண்டலங்களுடன், அழகிய  கருத்த குழல் கொண்ட ஒரு சிறு குழந்தையாக எதிரே  நின்றவனைப் பார்த்து  வசுதேவரும் தேவகியும் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டனர்.   சர்வாலங்கார, சர்வாபரண பூஷணனாக  நாராயணன் காட்சி தந்தான்.
வசுதேவருக்கு கை கால்கள்  நடுங்கின.  பயமும் பக்தியும். அப்படியே கீழே விழுந்து வணங்கினார். ”ஐயோ கம்சன் வந்து இந்த இளம் தெய்வக்குழந்தையைக் கொன்றுவிடுவானே” என்ற   அஞ்ஞானத்தால்  தோன்றிய  பிள்ளைப்பாசம் ஒருபுறம். ஸாக்ஷாத்  ஸ்ரீமந் நாராயணனே புத்திரனாக வந்து பிறந்த பெருமை ஆனந்தம் ஒரு புறம். தேவகியும்  பகவானை ப்ரார்த்திக்கிறாள். அவள் மனதிலும்  அண்ணன் கம்சன் எந்த நேரமும் வந்து குழந்தையை கொன்று  விடுவான் என்ற பயம். ”பகவானே  எங்களை இந்த பயத்தில் இருந்து விடுவிப்பாய். உன் திவ்ய ஸ்வரூபத்தை மாற்றிக்கொண்டு  சாதாரண குழந்தையாக தோன்றவேண்டும்.”
தொடரும் 

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1398

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *