SRI APPANNAACHARYAR – J K SIVAN

அப்பண்ணாச்சார்யார். – நங்கநல்லூர் J K SIVAN

தெய்வ ஸ்வரூபமான மஹான்களை நினைக்கும்போது அவர்களது சிஷ்யர்களும் நம் கண் முன் தோன்றுகிறார்கள். ஆதி சங்கரர் படம் பார்க்கும் போதெல்லாம் அவர் எதிரே அமர்ந்திருக்கும் சிஷ்யர்கள் உருவம் நமக்கு பழக்கமானது. தக்ஷிணா மூர்த்தி சிலை, விக்ரஹம், படம் தரிசிக்கும் போதெல்லாம் சனகாதி முனிவர்கlளையும் பார்த்து வணங்குகிறோம். ராமகிருஷ்ணர் என்றால் விவேகானந்தர் தோன்றுகிறார். ஞானாநந்தர் என்றால் ஹரிதாஸ் கிரி ஸ்வாமிகள், அப்படித் தான் ஸ்ரீ ராகவேந்திரர் என்றால் நமக்கு உடனே ஞாபகம் வருவது அப்பண்ணாச்சாரியார்.

ரஜினி காந்த் என்ற நடிகனை பல படங்களில் மிடுக்காக, கெட்டவனாக, நல்லவனாக, விதவிதமாக பார்த்தாலும் ஸ்ரீ ராகவேந்திரராக பார்த்தது மட்டுமே என் மனதில் நிலையாக நிற்கிறது. அதிலும் டெல்லி கணேஷ் அப்பண்ணாவாக தோன்றிய சில காட்சிகள், கடைசி நேரங்கள் மனதில் திரும்ப திரும்ப அலைமோதுகிறது. அது பாத்திர விசேஷம்; அதன் மஹிமை. குரு ராகவேந்திரரின் ப்ரபாவத்தை பரப்பிய பெருமை அப்பண்ணாவுக்கு நிறைய உண்டு. பிச்சாலி (பிக்ஷாலயா தான் இப்படி உருமாறி விட்டது) ஆஸ்ரமத்தில், குருகுலத்தில், எண்ணற்ற சிஷ்யர்களுக்கு குருவின் மஹிமையை உணர்த்தியவர் அப்பண்ணா. பிச்சாலியில் ஜெபடே கெட்டே என்ற கல்மேடை இன்னும் உள்ளது. இந்த மேடையின் மேல் குரு ராகவேந்திரர் அமர்ந்திருக்க அப்பண்ணா அவருக்கு சேவை செய்வார். பன்னிரண்டு வருஷம் இங்கே குருநாதர் இருந்து உபதேசம் செய்திருக்கிறார்.

மந்த்ராலயத்த்தில் குரு ராகவேந்திரர் இன்னும் சில கணங்களில் பிருந்தாவனத்தில் ஜீவன்முக்தராக ஜீவ சமாதி அடையப்போகிறார் என்ற சேதி காதில் விழுந்ததும் எங்கோ துங்கபத்திரை நதியின் அக்கரையில் இருந்த அப்பண்ணா துங்கபத்ரையில் இறங்கி நீந்தி நடந்து ஓடி வருகிறார். அப்போது அவர் சொல்லிக்கொண்டே வரும் ஸ்தோத்ரம் தான் ”பூர்ணபோத ஸ்தோத்ரம்” . என் கையில் இருக்கும் ஜபமாலை எப்போது நகராமல் நிற்கிறதோ அப்போது இந்த பிருந்தா வனத்தை மேலே கடைசி கல்லை வைத்து மூடிவிடுங்கள் என்று குரு ராகவேந்திரர் சொல்லி ஒவ்வொரு கல்லாக அடுக்கிக் கொண்டே வந்தார்கள் சிஷ்யர்கள். அப்பண்ணா பூர்ண போத ஸ்தோத்ரம் சொல்லிக்கொண்டே ஓடி வருகிறார். 32 ஸ்லோகங்கள் கொண்ட ஸ்தோத்ரம். ஸ்லோகத்தின் கடைசி அடியை சொல்லும்போது ஜபமாலை அசையாமல் நிற்க கடைசி கல்லை வைத்து மற்ற பக்தர்களால் குரு ராகவேந்திரரின் ஜீவன் முக்த பிருந்தாவனம் மூடப்படுகிறது. இந்த காட்சி ராகவேந்திரர் சினிமாவில் பலர் மனங்களை நெகிழ வைத்து தொட்டு விட்டு, இன்னமும் என் மனதில் நிற்கிறது.

”எனக்கு அப்புறம் நீ தான் மடாதிபதி என்று குரு ராகவேந்திரர் கூறியபோதும் அதற்கு நான் அறுகதையற்றவன் என்று மரியாதையாக மறுத்தவர் அப்பண்ணா. புகையிலை போடும் வழக்கம் கொண்டவர் அப்பண்ணா. இதையே காரணம் காட்டி மடாதிபதியாக தகுதியில்லை என்றவர். குருவை விட ரெண்டு வயது பெரியவர் அப்பண்ணா என்றாலும் பரம சிஷ்யர். குருவுக்கு அன்றாடம் மடியாக பிக்ஷை சமைத்தவர். சிறந்த கல்விமான். பிச்சாலி ஆஸ்ரமத்தில் இன்னும் அப்பண்ணா வம்சத்தவர்கள் பூஜை செய்து கொண்டு வருகிறார்கள்.

பல வருஷங்களுக்கு முன்பு எனக்கு மந்த்ராலய தரிசனம் செய்யும் பாக்யம் கிட்டியது. ராகவேந்திரரை தரிசனம் செய்து விட்டு, பின்னர் மந்திராலயத்தில் நடைபெறும் அன்னதானத்தில் மதியம் பிரசாதம் சுவீகரித்தது நினைவுக்கு வருகிறது.
அங்கிருந்து பிச்சாலிக்கும் பஞ்சமுகிக்கும் சென்றேன். இரண்டுமே துங்கபத்ரையின் மறு கரையில் கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ளன. பிச்சாலி மந்திராலயம் ரோட்டிலிருந்து 15 கி.மீ தூரத்தில் துங்கபத்ரை நதிக்கரையில் அமைந்துள்ளது. மந்திராலயத்திலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில் உள்ளது. மந்திராலயத்திலிருந்து துங்கபத்ரா பாலம் வழியாக செல்வதென்றால், முதல் மாதவரம் சென்று அங்கிருந்து வலப்பக்கம் திரும்பி, ரெய்ச்சூர் செல்லும் வழியில் துங்கபத்ரா பாலத்தை கடந்து கில்லேசுகர் முகாம் வந்து அங்கிருந்து இடப்பக்கம் திரும்பினால் பிச்சாலியை வந்தடையலாம். நதியில் பரிசல் வழியாக பிச்சாலி செல்லவும் வசதி உண்டு.

ஸ்ரீ பூர்ண போத ஸ்தோத்ரத்தில் 33வது ஸ்லோகம் தான் இது:
பூஜ்யாய ராகவேந்திராய ஸத்யதர்மரதாய ச பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் காமதேனவே || (33) முழு பூர்ண போத ஸ்தோத்ரம் அர்த்தமும் அப்புறம் எழுதுகிறேன்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

One comment

  1. Namaskaram mama,
    Today learnt about guru Ragavendra’s sishya and poona botha stotram
    Thanks a lot

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *