JAGRADHA JAGRADHA J K SIVAN

வைராக்ய பஞ்சகம் J K SIVAN
ஆதி சங்கரர்

அடேய்…. ஜாக்கிரதை….. ஜாக்கிரதை

ரெண்டுபேர் எழுதிய வைராக்ய பஞ்சகம் எனக்கு ரொம்பபிடிக்கும். ஒருவர் ஆதி சங்கரர், மற்றொருவர் சுவாமி தேசிகன். அவர் எழுதிய பஞ்சகம் அடுத்த பதிவில் வெளியிடுகிறேன்.

”உருண்டோடிடும் பணம் காசெனும் உருவமான பொருளே” — ஒரு பழைய சினிமா பாட்டு ஞாபகமிருக்
கிறதா? உருண்டு என்றாலே ஒரு இடத்தில் நிற்காமல் ஓடிக்கொண்டிருப்பது, நிலையில்லாதது என்று காட்டவே உலகம் உருண்டையாக சுழன்றுகொண்டே இருக்கிறதோ? எதுவுமே சாஸ்வதம் இல்லை என்பதற்காக தான் அத்தனை க்ரஹங்களும் சூரியன் உட்பட, சதா சுழன்று கொண்டே இருக்கிறதோ?
ஆசை பாசம், நேசம், சொந்தம், பந்தம் எல்லாமே மாயை. நிலையில்லாதது. கதிரவன் முன் இலை மேல் ஜொலிக்கும் பனித்துளி. சிறிது நேரத்தில் மறைவது. ஆகவே தான் மனிதா, ரொம்ப ஜாக்கிரதையாக இரு. நினைவில் கொள் என்று வார்னிங் கொடுக்கிறார் ஆதி சங்கரர் இந்த ஐந்து ஸ்லோகங்களில்.

”தம்பி தனியாத்தானே வந்தே, தனியாத்தான் போவணும், நினைப்பு வச்சுக்கோ. நிறைய சேர்த்து வச்சியே சொத்து அது தான் இப்போ ப்ராப்ளம் கொடுக்குது. குடோனிலே, பிணவறைல கூட தேடி எடுக்கிறாங்கோ” இது மீதி பேருக்கு படிப்பினை. அதிக சுகம் சௌகரியம் தேடினவன்/ள் தான் இப்போ திண்டாட்டத்திலே இருக்கறதை, களி திங்கறதை புரிஞ்சுக்கோ.

பழங்காலத்து ராஜா ஒருத்தன். அப்போ தந்தி, ஹிந்து பத்திரிகையோ, டிவி , ரேடியோவோ இல்லை. நாட்டை ஆளரவன் அதை ஜாக்கிரதையாக காவல் காக்க வேண்டாமா?

ஊர் காவல் வைச்சு ராவெல்லாம் ரோந்து சுத்தறதுக்கு ஆள் வச்சிருப்பான் ராஜா. அவனே கூட மாறு வேஷத்தில் ஊரெல்லாம் சுற்றுவான். யார் என்ன பேசுகிறார்கள், நாட்டு நடப்பு எப்படி, என்று கேட்டு பார்த்து மறுநாள் தப்பாவனவர்களுக்கு தண்டனை கொடுப்பான்.

ஜனங்கள் அதனாலே தான் ”பகலில் பக்கம் பார்த்து பேசு. இரவில் அதுவும் பேசாதே” அப்படிம்பாங்க. ராஜா எந்த ரூபத்தில் எப்படி அதை கேட்பானோ? யாருக்கு தெரியும்?

இரவில் ரோந்து சுற்றுபவன் பறை அறைந்து கொண்டு ”ஜாக்ரதை ஜாக்ரதை ” என்று சொல்லிக்கொண்டு மக்களை விழிப்புணர்ச்சியோடு களவு தவறுகள் நடக்காமல் காப்பாற்றுவான். இப்போது கூர்க்கா விசில் அடிக்கிறான். கொம்பால் தட்டுகிறானே அந்தமாதிரி.

அப்போதெல்லாம் நங்கநல்லூரில் அங்கே ஓண்ணு இங்கே ஒண்ணு சின்ன சின்ன வீடுங்க. முணுக் முணுக் னு 25 வாட் பல்பு தான் எரியும். எல்லோருக்கும் எல்லோரையும் தெரியும். ஒவ்வொரு வீட்டிலேயும் எது நடந்தாலும் எல்லோரும் போவோம் வருவோம். ராத்திரி தலப்பா கட்டிண்டு கையில் குச்சியோடு டார்ச், விசிலடிச்சுண்டு காவல் வருவோம். அப்புறம் கொஞ்சம் வீடுகள் அதிகரிதது . நேபாள கூர்க்கா இரவு சிறிது நேரம் விசில் ஊதி விட்டு மாதாந்திர காசு வாங்காமல் போவதில்லை. அப்போதும் கூட எங்கள் ஊர் தெருக்களில் முன்பெல்லாம் ராத்திரி சில தூக்கம் வராத முதியோர் கையில் குச்சிகளோடு விசில் டார்ச் எல்லாம் எடுத்துக் கொண்டு மெதுவாக நடந்து வருவோம். இது பேர் நைட் பட்ரோல் (NIGHT PATROL)

நடுராத்திரியோ விடியற் காலையோ அவர்களுக்கு பால் டீ சப்ளை செய்வோம். நானும் அந்த கும்பலில் ஒருவனாக வந்து என் வீட்டிலேயே டீ கை நீட்டி வாங்கி குடித்திருக்கிறேன். போலிஸ் காரர்கள் எங்கள் வீட்டில் டயரியில் கையெழுத்து போட வேண்டும் என்று ஒரு ஏற்பாடு இருந்தது.

ஆதிசங்கரருக்கு இந்த ரோந்து விஷயம் எப்படியோ ஆயிரம் வருஷங்களுக்கு முன்பு கூட தெரிந்து இருக்கிறது. அவருக்கு தெரியாதது தான் ஒன்றுமே இல்லையே. இந்த மாதிரி ராத்திரி ஊர் காவல் ரோந்து ஞாபகம் வந்திருக்கிறது. உடனே கற்பனைக் குதிரையைத் தட்டி எழுப்பினார். வைராக்கியம் உண்டாக்கும் அருமையான ஐந்து ஸ்லோகங்கள் உருவாயிற்று. அன்றாட த்யானத்துக்கு மிகவும் உகந்த அர்த்தமுள்ள வாக்யங்கள்.

ஒரு காவல்காரன். வழக்கம்போல் தப்பட்டை அடித்துக்கொண்டு நடுநிசியில் ”ஜாக்ரதை” என்று கத்திக் கொண்டே போவான். ஒருநாள் அவசரமாக வேறு ஒரு ஊருக்கு போகவேண்டி இருந்ததால் பிள்ளையைக் கூப்பிட்டு ”டேய் பையா இன்ன்னிலேருந்து ரெண்டு நாளைக்கி நீ ராவிலே ரோந்து சுத்தணும். தப்பட்டை அடிச்சுக்கிட்டு ”ஜாக்கிரதை ஜாக்கிரதை” ன்னு கத்துன்னு சொல்லிட்டு போய்ட்டான். அந்த பிள்ளை பிள்ளை முன் ஜன்மத்தில் ஒரு வேதமறிந்த பண்டிதன். எனவே பூர்வ ஜன்ம வாசனை ஞானம் இருந்தது. இரவில் அவன் தப்பட்டை அடித்துக்கொண்டு ”ஜாக்ரதை” ன்னு கத்திகிட்டே, அப்பன் வேலையை ரெண்டு நாள் செய்தான். மூன்றாம் நாள் ராஜாவே அந்த காவல்காரன் வீட்டு வாசலில் நின்றான். அந்த பையனைப் பார்க்கத்தான் வந்தான். அப்பன் என்னவோ ஏதோன்னு கதி கலங்கி போனான்.

”அடாடா, ஒருரெண்டு நாள் வெளியூருக்கு போகவேண்டி இருந்ததாலே, இந்த பயலை ”எனக்கு பதில் நீ போடா ” ன்னு சொன்னேன்..அவனும் தப்பட்டையை அடித்துக்கொண்டு ராவெல்லாம் ”ஜாக்கிரதை” என்று சொல்லிக்கொண்டே தானே போனான். வேறே என்ன தப்பு செய்திருப்பான்? எதுக்கு ராஜா அவனை தேதடி வந்திருக்கிறாரே, ஒரு வேளை என் பிள்ளை பெரிய தவறு ஏதாவது செய்து விட்டானோ, இங்கேயே அவன் தலையை சீவப் போறானோ? ” காவல் காரன் நடுங்கினான்.

ஆனால் ராஜா வந்ததோ அந்த பையனுக்கு நல்ல பரிசு கொடுத்து கௌரவிக்க. எதற்காக? முதல் நாள் இரவு பையன் ” ஜாக்ரதை. ஜாக்ரதை” என்று அப்பாவை போல் சும்மா கத்திக்கொண்டு போகவில்லை. ஸ்லோகமாக சில வார்த்தைகள் சொன்னதுதான் ராஜாவை மயக்கியது. அந்த நீதி வாக்யங்களை பார்ப்போமா? நாமும் ”ஜாக்ரதை” யாக இருக்க வேண்டாமா? ஆதி சங்கரர் பையன் மூலமா என்ன சொல்கிறார்?

1. माता नास्ति पिता नास्ति नास्ति बन्धुः सहोदरः। अर्थँ नास्ति गृहँ नाति तस्मात् जाग्रत जाग्रत॥
Mata naasti pita naasti, naasti bandhuh saho darah, artho naasti graham naasti, tasmat jagrata, jagrata.
“மாதா நாஸ்தி பிதா நாஸ்தி பந்து ஸஹோதரா, அர்தம் நாஸ்தி க்ருஹம் நாஸ்தி தஸ்மாத்
ஜாக்ரதா ஜாக்ரதா”

”அடே, தூங்குமூஞ்சி, விழித்துக் கொள்ளடா. அப்பன் என்னடா , தாயுமென்னடா, அண்ணனென்னடா தம்பியென்னடா,காசும் பொய், வீடும் பொய். சொந்தமும் இல்லை பந்தமும் இல்லை, நமது காயமும் பொய் வெறும் காற்றடைத்த பை, இதையெல்லாம் நம்பி ஏமாறாதே, விழித்துக் கொள். ‘ஜாக்ரதை ஜாக்ரதை” – இது தான் அந்த பையன் இரவில் ரோந்து சுற்றும் போது உரக்க சொன்னது. இந்த உண்மை எல்லோருக்கும் தெரிந்தது தானே. எதற்கு தனி விளக்கம்.

2. जन्म दुःखँ जरा दुःखँ जाया दुःखँ पुनः पुनः। सँसारसागरँ दुःखँ तस्मात् जाग्रत जाग्रत॥
Janma dukham, jara dukham, jayadukham punah punah, Samsara sagaram dukham, tasmath Jagrata, Jagrata.

“ஜன்மா துக்கம், ஜராதுக்கம், ஜாயாதுக்கம் புந;புந: சம்ஸார ஸாகரம் துக்கம் தஸ்மாத் ஜாக்ரதா: ஜாக்ரதா,”

”பிறவித் துயர்” என்பார்கள் ஞானிகள், இந்த பிறப்பே ஒரு பெரும் துன்பம், வயோதிகம் பரம துக்கம், கட்டின மனையாளோ கூடவே இருக்கும் துயரம், இந்த சம்சார பந்தமே வாழ்வே சோகம்,மாயம், புரிந்து கொண்டு தக்க சமயத்தில் விழித்துக்கொள் ‘ஜாக்ரதை. ஜாக்கிரதை”

3.कामक्ष्च क्रोधक्ष्च लोभक्ष्च देहे तिष्ठन्ति तस्कराः। ज्ञनरत्नापहाराय तस्मात् जाग्रत जाग्रत॥
Kama krodhascha lobhascha, dehe tishtanthi taskarah, Jnana ratnapa haaraya, tasmat jagrata, jagrata.
“காம; குரோதஸ்ச லோபஸ்ச தேஹே நிஷ்டந்தி தஸ்கரா; ஞான ரத்நாப ஹாராய தஸ்மாத் ஜாக்ரதா ஜாக்ரதா!”

ஆசையும் பாசமும், கோபமும், வெறியும் பொறாமையும், பேராசையும் பலே திருடர்களப்பா .உன் உள்ளே இருக்கும் ஞானமெனும் விலை மதிப்பில்லா மாணிக்கத்தை திருடுபவர்கள். விளக்கு எடுத்துக்கொண்டு வெளியே திருடர்களை தேடாதே, உள்ளே, உனக்கு உள்ளே ஒளிந்திருக்கும் அவர்களைத் தேடி துரத்து. விழித்துக் கொள், ஜாக்ரதை ஜாக்ரதை” தப்பட்டை அடித்துக்கொண்டு அந்த பையன் உரக்க சொல்லிக் கொண்டு போனான் .

4. आशाया बध्यते जन्तुः कर्मणा बहुचिन्तया। आयु क्षीणँ न जानाति तस्मात् जाग्रत जाग्रत॥
Aashaya baddhate ஜந்து, karmane bahu chintaya, Aayuh ksheenam najanati, tasmat jagrata, jagrata.
“ஆசாயா பத்யதே ஜந்து : கர்மணா பஹு சிந்தயா: ஆயுக்ஷீணம் ந ஜாநாதி தஸ்மாத் ஜாக்ரதா ஜாக்ரதா”

யாரை வேண்டுமானாலும் எடுத்துக் கொள். உன்னிப்பாக பார். ஆசையோ பாசமோ இல்லாதவன் எவனும் இல்லை. நாம் மனித உருவில் மிருகங்கள். எதிர்பார்ப்புகள், கனவுகள்,நமக்கு ஜாஸ்தி. நிழலைத் தேடி ஓடுபவர்கள். எத்தனை பிளான்கள் , திட்டங்கள் போடுகிறோம். மற்றவன் சொத்தை முடிந்தால் மனச்சாட்சி இல்லாமல் கொள்ளை அடிப்பவர்கள். துளியும் நமது இந்த வாழ்வு என்கிற பலூன் காற்று வெளியேறி சுருங்கும், இல்லை வெடிக்கும் என்ற எண்ணமே இல்லாமல் நடமாடுகிறோம், நாடகமாடுகிறோம். புரிந்து கொண்டு இப்போது ஜாக்கிரதையாக இதிலிருந்து தப்புவதற்கு வழி பார். ஜாக்கிரதை. ஆசையெல்லாம் தோசை தான். மனித மிருகமே, எதிர்பார்த்து ஏமாறுவதே வழக்கமா உனக்கு ? எல்லோருமே மனக்கோட்டை மன்னார்சாமிகள், அழிவதை சாஸ்வதம் என்று எண்ணி மனப்பால் குடிப்பவர்கள், விழித்துக் கொள்ள வேண்டாமா, ஜாக்ரதை ஜாக்ரதை.”

5. सम्पदः स्वप्नसँकाशाः यौवनँ कुसुमोपम्। विधुच्चन्चचँल आयुषँ तस्मात् जाग्रत जाग्रत॥
Sampadah swapna sankaasa , youvanam kusumopamam,Vidyut chanchalam aayushyam, tasmat jagrata jagrata.
சம்பத, ஸ்வப்னா ஸங்காசா, யௌவனம் குசுமோபம். வித்யுத் சஞ்சலம் ஆயுஷ்யம் தஸ்மாத் ஜாக்ரதா ஜாக்ரதா

“நம்முடைய சொத்து எல்லாமே கனவில் கட்டிய மாளிகைகள், நீர் மேல் எழுப்பிய குமிழிக் கோட்டைகள் இளமை வாலிபம் நிரந்தரமல்ல தம்பி, நேற்று மொட்டு, இன்று காலை மலர், மாலையில் வாடிப் போய் எறிந்தாகி விட்டது. மின்னல் போலாகும் இந்த வாழ்க்கை, இதில் நீ என்ன, நான் என்ன, விழித்துக் கொள், ஜாக்ரதை ஜாக்ரதை,” — பையன் உரக்க கத்திக்கொண்டே தப்பட்டை அடித்துச் சொல்லி இருக்கிறான்.”.

6. क्षणँ वित्तँ क्षणँ चित्तँ क्षणँ जीवितमावयोः। यमस्य करूणा नास्ति तस्मात् जाग्रत जाग्रत॥\
kshana viththam kshanam chiththam கே=kshanam jeevithamavayo ; yamasya karunaa naasthi thasmath jaagratha jagratha
க்ஷணம் வித்தம், க்ஷணம் சித்தம். க்ஷணம் ஜீவிதமாவயோ : யமஸ்ய, கருணா நாஸ்தி தஸ்மாத் ஜாக்ரதா ஜாக்ரதா”

சூரியன் வருமுன் ஜொலிக்கும் இலையின் மேல் சொற்ப காலம் ஜொலிக்கும் பனித்துளி போல அல்ப காலம் தான் நம் வாழ்வு. சாஸ்வதம் என்று மயங்காதே. சொத்து சுதந்திரம், டாம்பீகம், பேர் புகழ், கவுரவம், அந்தஸ்து எல்லாமே, கண்மூடி கண் திறக்கும் வரை தான். கொஞ்சம் கூட நெஞ்சில் ஈரமில்லாதவன் அந்த யமன். தூங்காதே தம்பி தூங்காதே விழித்துக்கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார். ஜாக்ரதை ஜாக்ரதை”

यावत् कालँ भवेत् कर्म तावत् तिष्ठन्ति जन्तवः।तस्मिन् क्षीणे विन्श्यन्ति तत्र का परिदेवना॥
yaavath kaalam bavethu karma thaavathu thishtanthi janthava thasmin ksheene nisyanthi thathra kaa jaagratha jaagratha
யாவது காலம் பவேது கர்மா தாவத் திஷ்டந்தி ஜந்தவ: தஸ்மின் க்ஷீணே நிஸ்யந்தி தத்ர கா ஜாக்ரதா ஜாக்ரதா

சாவி கொடுத்தால் அது வேலை செய்யும் வரை தான் இந்த குரங்கு பொம்மை டமாரம் தட்டும். தலை ஆட்டும் நடக்கும். கர்மா அளிக்கும் நேரம் வரை தான் வேலையே நமக்கு இங்கு. அப்புறம்? வேறென்ன, தொடரும் கதை தான். இதில் என்ன யோசிக்க இருக்கிறது?. மேடையில் ஏறியாச்சு, வேஷம் கலையும் வரை, வேளை வரும் வரை ஆடு பாடு. இதை உணர விழித்துக் கொள், ஜாக்ரதை ஜாக்ரதை.”

பிரமாதம் டா பையா.ராஜா ஏன் பரிசு கொடுக்க மாட்டான்? நாமும் அடிக்கடி நினைவில் வைத்துக் கொண்டால் பகவானே பரிசு கொடுப்பார்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *