BAJAGOVINDAM SLOKAS 21 -22 J K SIVAN

ஹே , கோவிந்தா ! நங்கநல்லூர்_J_K_SIVAN
ஆதி சங்கரர்

பஜ கோவிந்தம் ஸ்லோகங்கள் 21-22

யுத்த களத்தில் தனது ஆருயிர் நண்பன், பக்தன் அர்ஜுனனின் மனக்குழப்பத்தை நீக்க பகவான் கிருஷ்ணன் உபதேசித்த கீதை நம் எல்லோரையும் அர்ஜுனனாக நினைத்து நம்முள் தோன்றும்
ஆயிரமாயிரம் சந்தேகங்களை, குழப்பங்களை நீக்குவதற்காக.

சாதாரண மனிதனை பண்பட்ட மனிதனாக மாற்றி, வாழ்வின் மிக முக்கிய பிரச்சனையான பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் எனும் சக்கரத்திலிருந்து அவனை விடுவிக்கும் உபாயத்தை அறிவிக்கும் பகவத் கீதையை குறளுடன் ஒப்பிட அவசியமில்லை. கீதையின் நிழல் குறள் .

வேத ஞானத்தின் சாரம் கீதை. இதை எல்லா ஆச்சாரியர்களும் ஏற்று போற்றுகிறார்கள். நான் யார்? கடவுள் யார்?, கடவுளுக்கும் எனக்கும் என்ன தொடர்பு? நான் ஏன் இந்த உலகில் துன்பப்படுகிறேன்? எனது துன்பத்திற்கு நிரந்தர தீர்வு உண்டா? மரணத்திற்குப் பின் என்ன நடக்கிறது ? இது போன்ற சகல கேள்வி களுக்கும் பதில் சுருக்கமாக கீதையில் உள்ளது.

பகவத் கீதை ஏதோ பொழுது போகாத கிழங்களுக்காக எழுதப்பட்டது என்று நினைப்பது தப்பு. கீதை எல்லோருக்கும் உபயோகமானது. வயதிற்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பஜகோவிந்தம் கீதா சார்யன் கண்ணனைப் புகழ்ந்து போற்ற நமக்கு நினைவு படுத்தும் ஒரு காலண்டர் நாட்காட்டி என்று எடுத்துக்கொண்டு அதற்கு நன்றி சொல்லி இதோ இன்றைக்கு 21வது பஜகோவிந்த ஸ்லோகத்தை அறிவோம்.

21.पुनरपि जननं पुनरपि मरणं पुनरपि जननी जठरे शयनम् । इह संसारे बहुदुस्तारे कृपयाऽपारे पाहि मुरारे ॥
punarapi jananaM punarapi maraNaM punarapi jananii jaThare shayanam. Iha saMsaare bahudustaare kRipayaa.apaare paahi muraare
புனரபி ஜனனம் புனரபி மரணம் புனரபி ஜனனீ ஜடரே சயனம் இஹ சம்சாரே பஹுது ஸ்தாரே க்ருபயா பாரே பாஹி முராரே

இந்த ஸ்லோகத்தின் கர்த்தா ஆதிசங்கரரின் மற்றொரு சிஷ்யர் நித்யானந்தர். இப்போது நாம் யூட்யூபில் பார்க்கும் நித்யானந்தர் வேறே ரகம் . இது அதே பெயர் கொண்ட நாம் அறியாத, நமக்குத் தெரியாத ஒரு ஆதிசங்கர சிஷ்யர். இந்த ஸ்லோகம் அநேகருக்கு தெரிந்த ஒன்று. பிரபலமானது. நித்யானந்தர் என்ன சொல்கிறார் தெரியுமா?:

” மனிதா, உன் சரித்திரத்தைப் புரட்டிப்பார். தொடர்ந்து மீண்டும் மீண்டும் பிறப்பு, பிறந்த பின் மரணம், மறுபடியும் பிறப்பு. தாயின் கருவறை எனும் சிறைக்கு மீண்டும் விடாது செல்லும் இந்த எல்லையில்லா சம்சாரக்கடலில் தத்தளிப்பு என்கிற தொடர்கதைக்கு முடிவே கிடையாதா? கண்டிப்பாக ஒரு வழி, ஒரே வழி இருக்கிறதே. நீ எங்கே தேடினாய் அதை? அவனை, அந்த முராரியை, கோவிந்தா என்று வாயினிக்க மனமார பஜித்துக் கொண்டிரு. அப்பறம் பார், உன்னை மீட்பது அவன் வேலையாகிவிடும்.

பிறப்பு இறப்பு ரெண்டுமே ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். இரவும் பகலும், இளமை முதுமை, ஏழ்மை வளமை போன்று ஒன்றோடொன்று இணைந்தவை. அத்தியாவசியமானவை. வரவும் செலவும் போன்றவை. வருவதெல்லாம் வரவு. செல்வதெல்லாம் செலவு.இதற்கு முன் எத்தனை பிறப்பு, இறப்பு, ஒன்றும் ஞாபகத்தில் இல்லை, என்னவாக பிறந்தோம், எங்கே வளர்ந்தோம், எப்போது இறந்தோம், எதற்காக? ஒன்றும் நினைவில் லாத நீண்ட மறதி. இந்த விளையாட்டு எப்போது நிற்கும் சாவி கொடுத்த கடிகாரம் ஓடிக்கொண்டே அதன் சக்தி முடியும் வரை ஓடும். நமது கர்ம பலன் அனைத்தும் அனுபவித்த பின் தான் நமக்கு ஒய்வு. பட முடியாது இனித் துயரம். பட்டதெல்லாம் போதும், என்று கடைசியில் இறைவனடி. அந்த கடைசி கட்டத்தில் அடைய வேண்டிய இறைவன், கோவிந்தன். அவனை இப்போது நினைத்து வணங்கி தொழுதால் என்ன? இந்த தொடர் விளையாட்டை நிறுத்துவானே .

22.यावत्पवनो निवसति देहे,तावत् पृच्छति कुशलं गेहे। गतवति वायौ देहापाये, भार्या बिभ्यति तस्मिन्काये ॥६॥
Yavatpavano nivasati dehe tavatprcchati kusalaM gehe, gatavati vayau dehapaye bharya bibhyati tasminkaye. – 6
இருக்கிறவரைக்கும் தான் கோபால், தாமு, கபாலி என்று பெயர்கள் எல்லாமே. எந்த நொடி இந்த சரீரம் மூச்சை விட மறந்து விட்டதோ அப்போது முதல் அதற்கு ஒரு பொதுவான பெயர் வந்து விடும் ”பிணம்”.
அது உலக பந்தங்களை சொந்தங்களை ஏன் சகலத்தையும் துறந்து விட்டு பிரியும் ஒரு ஜடம்.
மனைவி குழந்தைகள் கூட இறந்தவன் அருகே வர யோசிப்பார்கள். ஒன்றுக்குமே உதவாத, ப்ரயோஜனமில்லாதது மனித உடம்பு. உலகத்தோடு அதன் ஆசா பாசங்களை இணைப்பது தான் உடம்பு. இதுவரை சகல சௌகர்யங்களுடன் சுகமாக வாழ்ந்த இந்த உடம்பு இனி எரிப்பதற்கு தான் லாயக்கு.
இந்த உடம்பின் மேல் வைக்கும் ஆசையை அது நிரந்தமில்லாதது என்று உணர்ந்து நித்தியமான கோவிந்தன் மேல் மனதைச் செலுத்து என்கிறார் இந்த சுலோகத்தில் நித்யானந்தர்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1398

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *