BAJAGOVINDAM SLOKAS 17&18

ஹே , கோவிந்தா ! நங்கநல்லூர்_J_K_SIVAN
ஆதி சங்கரர்


பஜ கோவிந்தம் ஸ்லோகங்கள் 17-18

17. कुरुते गङ्गासागरगमनं व्रतपरिपालनमथवा दानम् ।ज्ञानविहीनः सर्वमतेन मुक्तिं न भजति जन्मशतेन ॥ १७॥ var भजति न मुक्तिं

kurute gangasaagaragamanam vrataparipaalanamathavaa daanam gyaanaviheenah sarvamatena bhajati na muktim janmasatena..

குருதே கங்கா சாகர கமனம் வ் ரத பரிபாலன மதவா தானம் ஞான விஹீனா சர்வம தேனா முக்திம் ந பஜதி ஜன்ம சதேனா

இந்த ஸ்தோத்ரம் ஆதிசங்கரரின் சிஷ்யர் வார்த்திககாரர் எழுதியது. ஈஸ்வர ஞானம் த்யானம் இல்லை யென்றால் ஒன்றுமே இல்லை என்று உணர்த்துகிறார். எப்படி ?   பாபம் தீரவேண்டும், நல்லவனாக வேண்டும் என்று பல நூறு மைல் பிரயாணம் செய்து காசிக்குப் போய் கங்கையில் முழுகினால் மட்டும் போதாது தம்பி.  அதனால் காசும் நேரமும் தான் வேஸ்ட்.    ஞானம், பக்தி,  த்யானம் இல்லையென்றால் இதெல்லாம் எதுவுமே  பயன் தராது. தப்பு பண்ணிவிட்டு  ”வாத்தியாரை கூப்பிடு.  அவர்  கேக்கறதிலே பேரம் பேசி பாதி குடு.  குடுக்கற  காசுக்கு  அவரையே   மந்திரம் எல்லாம்  சொல்லச்  சொல்லு ” என்று பரிகாரம் தேடுபவன் முட்டாள்.

பக்தி, ஞானம், த்யானம்  இல்லாமல்  கங்கையும் கடலும் சேரும் திரிவேணி பிரயாகையில் போய்  ஸ்நானம் செய்வதால்  உடல் தான் ஈரமாகும். துணி தான் காய்வதற்கு நேரம் எடுத்துக் கொள்ளும்.  நீ மாறி விடுவாயா? தான தர்மம் எல்லாம் செய்து, விரதம் எல்லாம் இருந்தும் பயனில்லை. சரி! எப்போது பயன் கிடைக்கும்? ஆத்ம ஞானம் முதலில் தேடு, உள்ளே பகவானை நாடு. அவனை உள்ளேயே கண்டு சேவித்து, அனுபவித்து  மனதை  அங்கேயே எப்போதும் நிலையாக நிறுத்திக்கொள்.  அப்புறம்   நீ  வேறே  ஆள். ஞானி.

”கோவிந்தா,  தவறு செய்து விட்டே னடா. இனிமேல் செய்ய மாட்டேன் என்று பள்ளிக்கூடத்தில் வாத்யார் எதிரே தோப்புக் கரணம் போட்டது போல் கோவிந்தனின்  படம், சிலை, எதிரே  விழுந்து வணங்கு. மனதால் திருந்து. அவனை நினை. அவன் தான் உனக்கு அருகிலேயே இருந்து உன்னை காப்பாற்ற ரெடியாக இருக்கிறானே. நீ தானே அவனைத் தேடவில்லை. இந்த பக்தி தான் தான் உன்னைப்  பிறவிப்  பிணி யிலிருந்து காத்து, மோக்ஷம் அளிக்கும் என்பதை இப்போதாவது தெரிந்து கொள்ளேன்.  ‘கோவிந்தா கோவிந்தா கோவிந்தா’  என்று அவனை ஸ்மரி. பல பிறவிகளை எடுத்தும் இன்னும் அப்படியே பழம் புளியாக இருக்காதே.

கடையில் போய்  நல்ல  போம் FOAM  மெத்தை,  ஸ்பான்ஜ் SPONGE  தலைகாணி மெத்து மெத்து என்று வாங்கி உரை போட்டு தலையை சாய்க்கிறானே மனிதன், அவனுக்கு தலை ஒரேயடியாக சாய்ந்த  போது  எது படுக்கை, பெட், bed?  பச்சை மூங்கில் ஏணியை படுக்க போட்டு அதன் மேல் ஒரு கொம்பை உயரமாக கட்டி அது தானே தலையணை.  கண்ணாடிப்பெட்டியில் குளுகுளுஎன்று நாலு பேர் பார்க்க படுத்திருக்கும்போது தண்ணீர் பாட்டில் தானே தலையணை. வாழ்க்கை அநித்தியம் என்று உணர இதற்குமேலுமா  உதாரணங்கள் வேண்டும்?

18. सुर मंदिर तरु मूल निवासः शय्या भूतल मजिनं वासः । सर्व परिग्रह भोग त्यागः कस्य सुखं न करोति विरागः ॥ १८॥

sura mandira taru muula nivaasaH   sayyaa bhuutala majinaM vaasaH . sarva parigraha bhoga tyaagaH kasya sukhaM na karoti viraagaH

சுர மந்திர தரு மூல நிவாஸஹா  சையா பூதல மஜினம் வாஸஹ சர்வ பரிக்ரஹ போக த்யாகஹா கஸ்ய சுகம் ந கரோதி விராகஹ

ஆஹா  இந்த  வரிகளை  M S  அம்மா  பெஹாக்  ராகத்தில் இசைப்பது இன்றெல்லாம் கேட்கலாம்.  எப்படி  அம்மாவுக்கு  இந்த வரிகளை பெஹாகில் பாட தோன்றியது.  ஒருவேளை  ஆதி சங்கரர் காதில்  ரஹஸ்யமாக ஐடியா கொடுத்திருப்பாரோ?   MSS  பாடிய  பஜகோவிந்தம்  என் சிறுவயது முதல்  கர்நாடக இசையை கேட்க தூண்டிய ஒரு அருமையான அபூர்வ ராகமாலிகை  ஸ்லோகம்.

இந்த ஸ்லோகத்தை ஆதி சங்கரரின் சிஷ்யர் நித்யானந்தர் எழுதியிருக்கிறார்.

”ஹே மானுடா, வீடு என்பது வசிக்க.   வசிக்க என்றால் முக்கால்வாசி  பேருக்கு  உண்ண உறங்க மட்டுமே என்று தான் அர்த்தம். இதற்கு எதற்கு மாளிகை? எதற்கு வீட்டு வரி மூக்கால்  நுரை தள்ளி  வருஷா வருஷம் கட்டவேண்டும்?

உனது வாசஸ்தலம் மரத்தடி, ஆலய மண்டபமாகவே இருக்கட்டுமே. உடுக்க பரிசுத்த மான் தோல் இருந்தால் நீ ஒருத்தன் தான் தனவந்தன். கிடக்க மண் தரையைப்போல் ஒரு ஆனந்தமான படுக்கை உண்டா? ஒரு விஷயம் தெரியுமா? எவ்வளவு தான் விலை உயர்ந்த படுக்கையாக இருந்தாலும் இன்னும் பலர் இடதோ வலதோ கையை தலைக்கு வைத்து தான் அதன் மேல் சுகமாக படுக்கிறார்கள்! படுத்த உடனே  சுகமாக  ரம்பத்தால்  மரம் அறுப்பது போல் சத்தம்.  குறட்டை.  இரவெல்லாம் சுகம் சங்கீத்!

மிகப்பெரிய பணக்காரன் கூட டாக்டர் சொன்னபடி தலையணை இல்லாமல் வறட்டு பெஞ்சில், தரையில் பாயில் தான் படுக்கிறான். முதுகு எலும்புக்கு சுகமாக அது தான் அனுகூலமாம். சொந்த பந்தத்தை எல்லாம் விட்டு ஒழி. வசதிகள் என்று எதை நீ தேடினாயோ வரும் துன்பம் அத்தனையும் அதால் தான்.

உனக்கு திட சிந்தனை இப்படி இருந்தால்  நீ தான் ஐயா யோகி. நீ தான் பரமானந்தன். விடாதே.   இதை அடைய உனக்கு குறுக்கு வழி அந்த கோவிந்தனைப் பஜிப்பதே .  ஆசை தானே ஆசாமியை அலைக் கழிக்கிறது. அதனால் தானே திருமூலர் என்ற கெட்டிக்கார ரிஷி ”ஆசையை விட விட ஆனந்தமாமே” என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். கெட்டியாக கோவிந்தனை பிடித்துக் கொள்வோம். அவன் மற்றவை நம்மை நெருங்காமல் பிடித்துக் கொள்வான்.

கோவணாண்டியாக  அல்லது காவி கட்டி சுற்றுவதால்  சிலர் கேலி செய்யலாம். அவர்களைப்  பார்த்து விலாப்புடைக்க சிரிக்க வேண்டி இருக்கிறது.  நிழலைத் தேடி இரவு பகலாக  ஓடுபவர்களாயிற்றே.  மரத்தடியில் சுகமான  குளுகுளு  காற்றில்  தரையில் கால் நீட்டி கையை தலைக்கடியில் வைத்து தூங்குவதற்கு இணையான   7 நக்ஷத்ர ஹோட்டல் வசதி எங்குமே கிடையாதே. ஒவ்வொருவரும்  தூக்க முடியாத அளவுக்கு சுமைகளை தூக்கிக்கொண்டு மூச்சு திணறுகிறார்கள்.  எதுவுமே  கூட  வராது என்று தெரிந்தவன் சுகமாக ‘ஹாய்யாக’  என்பார்களே அது போல் கை  வீசி நடப்பதற்கு எதுவும்  ஈடாகாது. விவேக் என்று பேர் மட்டும் வைத்துக் கொண்டால் வைராக்கியம் விவேகம் வந்துவிடுமா?

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *