GURU POORNIMA J K SIVAN

குரு பூர்ணிமா  –  நங்கநல்லூர்  J K  SIVAN
இன்று  விசேஷ  ஞாயிற்றுக்கிழை. குரு பூர்ணிமா, வியாஸ  பூர்ணிமா..  அது என்ன விசேஷம்? இன்று பூரண நிலவு என்று தெரியும். இது   ஒவ்வொரு வருடமும் ஆஷாட  (ஆடி) மாதத்தில் வரும் பவுர்ணமி குரு பூர்ணிமா அல்லது வியாச பூர்ணிமா என்று அழைக்கப்படுகிறது.
 இன்று உலகெங்கும் சன்னியாச ஆசிரமத்தில் இருக்கும் சன்னியாசிகள் வியாச பூஜை செய்து வேத வியாஸரை ஆராதிப்பார்கள்.   பல யுகங்களாக  பல பரம்பரைகள்  பார்த்து மகிழ்ந்த முழுநிலவு. இன்று இரவும்  நம்மை மகிழ்விக்கும்.  இன்றைய விசேஷம் என்னவென்றால் அது குரு பூர்ணிமா  என்று குருவை, ஆசானை, ஆச்சர்யனை, மேன்மக்களை, மகான்களை  நினைவில் கொண்டு வரும்.
 என்னுடைய  முதல் குரு என் அம்மா, அப்பா, அப்புறம் பள்ளிக்கூடத்தில் அ  ஆ சொல்லிக்கொடுத்த  காவேரி அம்மா டீச்சர். அவர்கள் தான் என் முதல் குரு. அவர்கள் யாரும் இப்போது இல்லை, அவர்களுக்கு மானசீகமான நமஸ்காரம். அடுத்தது என் குருமார்களின் முதன்மையானவர் கிருஷ்ண பரமாத்மா, அவர் மனிதரில்லை. தெய்வம். பரமகுரு. ஜகத் காரண குரு. ஆகவே மனித உருவில்  குரு எத்தனையோ பேரில் முதலில் வரிசையாக நிற்பவர் மஹா பெரியவா. கலியுக  ஜகத் குரு. அவருக்கு என் சாஷ்டாங்க நமஸ்காரம்.

குரு என்றால் என்ன அர்த்தம் தெரியுமா? ”கு” என்பது சமஸ்க்ரிதத்தில் இருட்டு, அஞ்ஞானம்,  ‘ரு ”  அதிலிருந்து மீட்பவர்.
ஒரு குரு பூர்ணிமா அன்று என்னை குருவாக அழைத்து  G K  ஷெட்டி உயர்நிலைப் பள்ளி, ஆதம் பாக்கத்தில் அழைத்து ”வியாஸ பாத பூஜை” செய்தார்கள்.

 நூற்றுக்கணக்கான ஆண்  பெண் குழந்தைகளோடு சம்பாஷித்தேன். எண்ணற்ற  டீச்சர்களை சந்தித்து வாழ்த்தினேன். உரையாடினேன்.அவர்களுக்கு என் புஸ்தகங்களை பரிசாக கொடுத்தேன்.
அது ஒரு புறம் இருக்கட்டும். குரு பூர்ணிமா  பௌத்தர்களுக்கும் ஒரு முக்கியமான  திருநாள்.  ஆகவே  ரொம்ப நாள் கழித்து  இன்று புத்தரைப் பற்றி சில வரிகள் சொல்லட்டுமா?

பாவம்  புத்தர்  புத்த கயாவிலிருந்து   போதிமரத்தின்  அடியில் பல நாட்கள் தவமிருந்து ஞானம் பெற்று ஐந்து வாரங்கள் கழித்து  அங்கிருந்து  புறப்பட்டு உத்தரபிரதேசத்தில் இருக்கும் சாரநாத் என்னும் இடத்தில் இந்த குரு பூர்ணிமா அன்று தான் முதல் முதலாக சிஷ்யர்களுக்கு மற்றவர்களுக்கும்   புத்தர் உபதேசம் செய்தார்.

பரமேஸ்வரன்  சப்த ரிஷிகளுக்கு  ஞானோபதேசம் செய்த  நாள். வியாசரை எல்லோரும் குருவாக ஏற்று வணங்கி ஆசி பெற்ற நாள்.   இன்று தான்  மஹரிஷி  வேத வ்யாஸர், பராசர முனிவருக்கும்  சத்யவதிக்கும் மகனாக பிறந்தார்.  ஆகவே  இந்த நாள் வியாஸ  பூர்ணிமா என்றும் கொண்டாடப்படுகிறது. குரு பூர்ணிமாகுரு பூர்ணிமா, ஆடி மாதத்தில் (சூன்-சூலை) வரும் ழுழுநிலவு (பௌர்ணமி) நாள் அன்று, சீடர்கள் (மாணவர்கள்) தங்களுக்கு கல்வி அறிவு புகட்டிய குருவை (ஆசிரியரை) போற்றும் முகமாக குரு வழிபாடு எனும் குரு பூஜை செய்வார்கள். இதனை துறவிகள், வியாசபூசை என்றும் வியாச பூர்ணிமா என்றும் அழைப்பர்

இவ்வழிபாட்டை வேத வேதாந்தக் கல்வி பயின்றவர்கள் தங்களது குருமார்களை நினைவு கூறும் வகையில் ஆடி மாதத்தில் வரும் முதல் பௌர்ணமி அன்று சிறப்பாக குரு பூஜை செய்வது மரபு.

மாணவர்கள் தங்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்த குருவினை வழிபடுவதுடன், தட்சிணாமூர்த்தி, பகவத் கீதை அருளிய கிருஷ்ணர், வேதங்களை தொகுத்த வியாசர், உபநிடதங்களுக்கு விளக்கம் எழுதிய ஆதி சங்கரர், மத்வர் மற்றும் இராமானுசர் போன்றவர்களையும் குரு பூர்ணிமா நாளில் வழிபட்டு குருவின் திருவருள் பெறுவர்.

பௌத்தர்களும், புத்தரை குரு பூர்ணிமா நாளில் சிறப்பாக வழிபடுவர். ஆடி பௌர்ணமி பூசை என்பது ஆடி மாதத்தில் வரும் பௌர்ணமி நாளில் இந்து சமய கோயில்களில் கடவுள்களுக்கு நடத்தப்படும் பூசையாகும். இந்த நாளில் பால்  திரட்டும், கருப்பு பட்டாடையும், கரு  ஊமத்தைப்பூவால் ஆன மலையையும் உபயோகின்றனர். மூங்கில் அரிசி பாயசமும் படைக்கும் பொருளாக உள்ளது.

இந்து சமயக் கோயில்களில் திரட்டுப்பால் அபிசேகமும், நாரத்தம் பழ சாதம் நிவேதிதமும் செய்யப்படுகின்றன. இந்தநாளில் யாகம் அமைக்க சோடச வடிவத்திலான யாகக்குண்டத்தினை அமைக்கின்றனர்.

இந்நாளில் உத்திராட நட்சத்திரம் கூடிவருமாம். இதனால் விநாயகருக்கு சிறப்பான நாளாக கூறப்படுகிறது.
இந்த பௌணர்மி பூசை திருச்சிராப்பள்ளி மாவட்டம் உச்சிப்பிள்ளையார் கோயிலில் சிறப்பாக செய்யப்படுகிறது.

சன்னியாச ஆசிரமத்தில், ஒவ்வொரு சன்னியாசியும் ஒவ்வொரு விதமான முறையில் துறவு வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருப்பார்கள். குடீசகர்கள் என்று அழைக்கப்படும் சன்னியாசிகள் ஒரு குடிசையிலேயே வாழ்ந்து கொண்டிருப்பார்கள்; பஹுதகர்கள் என்று அழைக்கப்படும் இன்னொரு விதமான துறவிகள், அதிக நீர் உள்ள நதிக்கரையிலேயே வாழ்ந்து கொண்டிருப்பார்கள்; பரிவ்ராஜகர்கள் என்று அழைக்கப்படும் மற்றும் ஒரு விதமானவர்கள், பயணம் செய்துகொண்டே இருப்பார்கள். ஒரு இடத்தில் (ஊரில்) மூன்று அல்லது சில குறிப்பிட்ட நாட்கள்தான் தங்குவார்கள்.

ஒரு சம்பவம் மனதில் உருவானது.  குருக்ஷேத்திர யுத்தம்  முடிந்து விட்டது.  இதே போல் ஒரு பௌர்ணமி. கிருஷ்ணனை  பாண்டவர்கள்  ஒவ்வொருவருவரும் தனித்தனியாக  வணங்கி  நீ தான் குரு  என்று நமஸ்கரித்தார்கள் . அர்ஜுனன் ரொம்பவே மகிழ்ந்தான். கிருஷ்ணா  நீ எனக்கு கீதை போதிக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்.  நான் யுத்தம் செய்யாமல் கொல்லப்பட்டிருப்பேன். பாரத யுத்தமும் நடந்திருக்காது, பாண்டவர்களும் அழிந்திருப்பார்கள். துரியோதனன் வம்சம் ஆண்டுகொண்டு இன்னும் அக்கிரமங்களை மேலும் செயது கொண்டிருக்கும்.
அர்ஜுனா,  நான் உனக்கு கீதோபதேசம் செய்தது உனக்கு மட்டுமே பயன்பட்டிருக்கும்,நீ வென்றிருப்பாய், அதோடு கதை முடிந்திருக்கும். ஆனால் நான் உனக்கு உபதேசித்த  கீதா தத்துவத்தை உலகமே என்றும் மறக்காமல் எத்தனையோ ஆயிரம் வருஷங்கள் நிலைத்து, எல்லோரும் அதனால் பயன்பட வைத்தது நானில்லை.  இதோ நிற்கிறாரே கிருஷ்ண த்வைபாயனர், வியாஸர் , அவரே இதற்கு காரணம்.  அவர்  மஹா பாரதம், பாகவதம், புராணங்கள், கீதை எல்லாவற்றையும் எழுதியதால் தானே உலகம் பயன்பெற்றது.  அவரே எல்லோருக்கும்  குரு , இந்த நாளை வியாஸ பூர்ணிமா என்று உலகம் கொண்டாடட்டும். அவருக்கு இன்று வியாஸ  பூஜை நடக்கட்டும் என்று குறிப்பாக  கிருஷ்ணன் சொல்லி இருப்பானோ? அவன்  கபட நாடக சூத்ரதாரி.  வியாஸாய விஷ்ணு ரூபாய, வியாஸ ரூபாய  விஷ்ணவே என்று அவனே வியாஸராகவும் அவதரித்தவன் .

  

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *