YOGI RAMIAH J K SIVAN

யோகி ராமையா – நங்கநல்லூர் J K SIVAN
யோகி ராமையா என்று ஒருவர். ரெட்டியார் குலத்தவர். அன்னாரெட்டி பாளையத்தை சேர்ந்தவர். அது பூச்சி ரெட்டி பாளையம் ஊருக்கு அருகே நெல்லூர் ஜில்லாவில் உள்ளது. பள்ளிப்படிப்பு இல்லாதவர் பணக்கார வீட்டுப்பிள்ளையாக 18வயது வரை ஊர் சுற்றி திடீரென்று ஆன்மீக வழியில் மனம் பயணம் சென்று திசை மாறியது . ஒரு ப்ராமண குரு அவருக்கு ராம தாரக மந்திரத்தை உபதேசித்தார்.
”ஒவ்வொரு நாளும் ஐந்தாயிரம் தடவை சொல்லு” என்று உத்தரவிட்டார் குரு.
”அதுக்கு மேலே சொன்னா என்ன ஆகும்?”
”ஆஹா ரொம்ப நல்லது” என்றார் குரு .
”எப்போதுமே சொல்லிக்கொண்டிருந்தால்?”
அதற்கு குரு சொன்ன பதில் வார்த்தைகளால் அல்ல. அவரைக் கட்டி அணைத்துக்கொண்டு தலையை தடவிக்கொடுத்தது தான்.
ராமையா விடாமல் காலையிலிருந்து இரவு வரை ராம நாம தியானம், ஜபம் செய்தார். ஒரு வைராக்கியம் அவரிடம் தெரிந்தது. பேச்சு குறைந்தது. மூச்சை அடக்கினார். உலகம் மறந்ததா மறைந்ததா, ரெண்டுமா?
ஊரிலிருந்து நடந்து காசி போன்ற க்ஷேத்ரங்களுக்கு சென்று தியானம் பண்ண கிளம்பினார்.
வழியில் தனது குருவை சந்தித்து நமஸ்கரித்தார்.
”உன் அம்மா ஆசிர்வாதம் வாங்கிவிட்டாயா?”
”ஒருவரிடமும் சொல்லவில்லை, நானாகவே கிளம்பிவிட்டேன்..”
”அன்னரெட்டி பாளையம் திரும்பிப் போ. உன் வீட்டு கொல்லைப் புறத்திலேயே தோட்டத்தில் தபஸ் பண்ணு. நானே ஒருநாள் உன் வீட்டுக்கு வந்து உன் தவம் தபஸ் எந்த நிலையில் இருக்கிறது என்று அறிவேன்.’
‘என்கிறார் குரு .
யோகி ராமையா அப்படியே செய்தார். பிராணாயாமம் விடாமல் செய்தார். பல மணி நேரங்கள் சமாதி நிலை யில் தியானம் கை கூடியது. சாத்வீக ஆகாரம் அளவில் ஒடுங்கியது.தனக்கும் உலகத்துக்கும் பேதம் இருந்த தை ஆரம்பத்தில் உணர்ந்த யோகி சமாதி நிலை அடைந்த பிறகு உலகம் தான் எல்லாமே ஒன்றே என்ற அபேத நிலையில் ஆனந்தம் அடைந்தவர். 1925 ல் திருவண்ணாமலை வந்த யோகி ராமையா ரமணரை குருவாக கொண்டார்.யோகி ராமையாவுக்கு தமிழ் தெரியாது. மகரிஷி அவருக்கு தானே ”உள்ளது நாற்பது”’ தத்துவங்களை தெலுங்கில் உபதேசித்தார்.
அற்புதமான நூல் ”உள்ளது நாற்பது”.தினமும் ஒவ் வொன் றாக எழுதி வருகிறேன். ரமணாஸ்ரமத்தில் ஹால், கிணறு முதலியவைகளை செப்பனிட்டவர் யோகி ராமையா.யோகி ராமையா தனது கைப்பட என்ன எழுதி இருக்கிறார்?
”எனக்கு பால்ய பருவத்திலேயே ராம நாமத்தில் ஈடு பாடு. 18 வயது வரை கொஞ்சம் ராஜசமாக இருந்து விட்டேன். பிறகு பெரியோர் பிரசங்கங்களை கேட்டேன். கடவுள் தர்மம் என்பதில் மனம் ஈடுபட்டது. பெரியோர் கற்றோர் நட்பு தேடினேன். கபீர் தாசர் வாழ்க்கை பற்றி அறிந்தபோது என் வாழ்க்கை திசையும் மாறியது. கபீரைப் போல் அனன்ய பக்தி, கடவுள் கருணை ரெண்டும் தேடினேன். வால்மீகியைப் போல் வைராக் யம் தேடினேன். அடைந்தேன். பழைய நட்புகளை விட்டேன். ராம த்யானம் ஒன்றே என்னை இரவும் பகலும் கவர்ந்தது. தூக்கத்திலும் ராம நாம ஜபம். விடிகாலை மூன்று மணியிலி ருந்து ராமநாம ஜபம். ஒரு பிராமணரிடம் பாகவத சரித்திரம் கேட்டேன் .நடக்கும்போதே பாதி வழியில் மனம் தியானத்தில் ஈடுபடும். பாதையில் ஓரமாகவோ தனியாக ஒரு இடத்திலோ அமர்ந்து என்னை தியானத்தில் இழப்பேன். மஹா விஷ்ணு மனதில் தோன்றுவதைத் தவிர வேறொன்றும் மணிக்கணக்கில் அறியாத கல் சிலையாகி விடுவேன்.
நெல்லூரில் ஒரு முறை பிரம்மானந்த தீர்த்த ஸ்வாமிகள் என்று ஒருவர் விஜயம் செய்த போது அவரை தரிசித்து ராம தாரக மந்த்ர உபதேசம் பெற்றேன். மூக்கு நுனி
யில் கவனம் செலுத்தி கண்ணை மூடி தியானம் செய்வேன். மூடிய கண்ணுக்குள் பிரகாசமான சூர்ய ஒளி தோன்றியது. ஓஹோ சூர்யன் தரிசனம் தருகிறாரோ? சற்று நேரத்தில் சந்திர ஒளி. குளுமையை அனுபவிப்பேன்.எனக்குள் ஏதோ ஒரு நிறைவு. பூரணமான ஆத்ம ஆனந்தம். யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் தண்டகாரண்ய வனம் சென்றேன். அங்கே தானே வால்மீகி போன்ற ரிஷிகள் தவம் செய்தவர்கள். வழியில் குண்டூரில் இறங்கி பாபட்லா சென்று என் குருவைப் பார்த்தேன்.
”என்ன வீட்டில் எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு தானே தண்டகாரண்யம் புறப்பட்டாய்?”’
‘இல்லை குருநாதா, ஏதோ தோன்றியது கிளம்பி விட் டேன்.”
”நீ நினைக்கும்படி இல்லை தண்டகாரண்யம். திரும்பிப் போ. உன் வீட்டிலேயே, உன் கிராமத்திலேயே ஒரு ஆஸ்ரமம் அமைத்துக்கொண்டு தியானம் பண்ணு அது தான் உசிதம். நான் முடிந்தபோதெல்லாம் வந்து உன்னை காண்பேன்’
நரசிம்ம ஜெயந்தி சமயத்தில் தண்ணீர் பந்தல் அமைத்து குடிநீர் விநியோகம் செய்தேன்.என் வீட்டிலேயே ராம ஆஸ்ரமம் என்று ஒரு சிறிய தியான மண்டபம் அமைத்தேன். பிராணாயாமம் செய்து மூச்சை அடக்க பழகினேன். அன்ன ஆகாரம் உட்கொள்ளும் அளவு குறைந்தது. சில மாதங்களில் குண்டலினி சக்தியை மேலெழும்பும் பயிற்சியில் ஈடுபட்டேன். என் தேகம் மறந்து விட்டது. அஹம்காரம் தொலைந்தது. மனதிற்குள் எப்போதும் ராமநாம பாராயணம் ஓடிக்கொண்டே இருந்தது. தேடினேன். ஆனால் ப்ரம்ம நிஷ்டை உபாசனை ஈடுபடுபவர்கள் எவரும் கிடைக்கவில்லை. எல்லாம் ஆத்மானுபவம் இல்லாத புத்தக புழுக்களாக இருப்பதை கண்டு ஏமாந்தேன்.
அருணாசலத்தில் ராமணரைக் கண்டபிறகு தான், .மனத்தை உள் செலுத்தி அக, அகழ்வாராய்ச்சி செய்வது புரிந்தது.கார்த்திகை மாதம், தீபம் சமயம். நல்ல கூட்டம். பகவானை பார்க்க அரிது. ஒருநாள் திண்ணையிலே படுத்து தூங்கினேன். கொசு பிய்த்து விட்டது என்னை. விடிகாலை மூன்று மணிக்கு மகரிஷி என்னை தட்டி எழுப்பினார். வா உள்ளே என்று அழைத்துக் கொண்டு போய் தன்னருகில் படுத்துக்கொள்ள செய்தார். விடுவேனா அவரை. கேள்விகள் கேட்டேன்
”எது நிர்விகல்ப சமாதி?
எதில் நிர்விகல்பம் பெற சங்கல்பம் இல்லையோ அது”’
‘சமாதி நிலையில் ப்ரம்ம பாவம் கூட இருக்காதா? ‘
‘ஆமாம். பாவம் (bhavam )இருந்தால் அது எப்படி நிர்விகல்பமாகும்,?
”ராமா என்றால் என்ன அர்த்தம்?.
”எது எல்லாவற்றுக்கும் மூலாதாரமோ, எதில் சகலமும் ஜீவிக்கிறதோ,மறைகிறதோ, அது தான் ‘ராமா’ . யோசி அப்புதோ தான் புரியும்”.என்கிறார் ரமண மகரிஷி.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *