U. VE SA.

தமிழ்த் தாத்தாவின்  நினைவு மஞ்சரி – நங்கநல்லூர்  J K  SIVAN உ.வே. சா.
மணிமேகலையும் மும்மணியும்

சீவக சிந்தாமணி என்னும் பழைய காவியத்தை நான் ஆரய்ந்து வந்த காலத்திலேயே ஐம் பெருங் காப்பியங்கள் என்று தமிழில் வழங்கும் ஐந்து நூல்களில் மற்ற நான்காகிய சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி என்பவற்றைப் பெயரளவில் மட்டும் தான்  தெரிந்து கொண்டிருந்தேன். சிந்தாமணியில் மணிமேகலையைப்பற்றி நச்சினார்க்கினியர் இரண்டிடங்களில் (செய்யுள், 1625, 2107) கூறுகின்றார். ஓரிடத்தில் மணிமேகலை யிலிருந்து சில அடிகளையே எடுத்துக் காட்டியிருக்கிறார்.  பல  குறிப்புக்களைத் தேடி பிடித்ததில்  மணிமேகலை  ஒரு பழைய நூல் , அது பழைய நூலாசிரியர்களாலும் உரையாசிரியர்களாலும்  பாராட்டப் படுவதென்று அறிந்தேன். சேலம் இராமசுவாமி முதலியார் என்பவர்  எனக்கு  மணி மேகலை நூல் மூலப் பிரதி யொன்று தந்தார். ஆசை உண்டாகி விட்டால் ஊக்கமும் முயற்சியும் தொடர்ந்து உண்டாகிறது . வேறு மணிமேகலைப் பிரதிகளைத் தேடித் தொகுத்தேன். சில சுவடிகள் கிடைத்தன. காகிதத்தில் ஒரு பிரதி செய்து வைத்துவிட்டேன்.

சிந்தாமணியை நான் சோதிக்கையில் இடையே மணிமேகலையையும் பார்ப்பேன். அதன் நடை சில இடங்களால் எளிதாக இருந்தது. ஆனாலும், சில சில வார்த்தைகள் நான் அதுகாறும் கேளாதனவாக இருந்தன. ‘இந்நூல் இன்ன கதையைக் கூறுவது, இன்ன மதத்தைச் சார்ந்தது’ என்பவற்றில் ஒன்றேனும் எனக்குத் தெளிவாகவில்லை.

சிந்தாமணி பதிப்பித்து நிறைவேறியவுடன் மணிமேகலை ஆராய்ச்சியில் நான் கருத்தைச் செலுத்தினேன். பத்துப்பாட்டு ஆராய்ச்சியும் அப்போது நடைபெற்று வந்தது. மணிமேகலை விஷயம் தெளிவுபடாததால்  பத்துப்பாட்டையே முதலில் வெளியிடலானேன்.

புதிய புதிய பரிபாஷைகளும், புதிய புதிய தத்துவங்களும் மணிமேகலையில் காணப்பட்டன. நான் பார்த்த அறிவாளிகளை யெல்லாம் சந்தேகம் கேட்கத் தொடங்கினேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகச் சொன்னார்கள். தெரியாததைத் தெரியாதென்று ஒப்புக் கொண்ட பெரியோர்கள்  சிலர் மட்டும் தான்.   தெரியாதென்று சொல்லிவிட்டால் தங்கள் நன்மதிப்புக்குக் கேடு வந்து விடுமோ என  கருதி ஏதோ தோன்றியபடி யெல்லாம் சொன்னார்கள். தங்களுக்கே தெளிவாகாத விஷயமாதலின் ஒரே விஷயத்தை ஒருவரையே வெவ்வேறு சமயத்தில் கேட்டால் வெவ்வேறு விதமாகச் சொல்லத் தொடங்கினர். ஒரே விஷயத்தைக் குறித்துப் பலர் பல சமாதானங்களைச் சொன்னார்கள். இவ்வாறு தத்தளித்துத் தவித்துக் கொண்டிருந்த எனக்கு அமைதியே இல்லை. ‘நாம் மணிமேகலையைத் துலக்க முடியாதோ!’ என்ற சந்தேகம் என் மனத்திற் குடிபுக ஆரம்பித்தது. ‘தமிழ் மகள் தன் மணி மேகலையை அணிந்து கொள்ளும் திருவுள்ளம் உடையவளாயின், எப்படியாவது நற்றுணை கிடைக்கும்’ என்ற நம்பிக்கை மாத்திரம் சிதையாமல் இருந்தது.

அந்தக் காலத்தில் நான் கும்பகோணம் காலேஜில் இருந்தேன். என் கையில் எப்பொழுதும் கையெழுத்துப் பிரதியும் குறிப்புப் புத்தகமும் இருக்கும். ஓய்ந்த நேரங்களிலெல்லாம் அந்தப் பிரதியைப் புரட்டிப் பார்ப்பதும், குறிப்பெடுப்பதும் எனது வழக்கம்.

ஒரு நாள் ஒரு மணிக்கு மேல் இடை வேளையில் உபாத்தியாயர்கள் தங்கும் அறையில் உட் கார்ந்து மணிமேகலைப் பிரதியை வழக்கம்போல் புரட்டிக் கொண்டிருந்தேன். அங்கே மற்ற உபாத்தியாயர்களும் இருந்தார்கள். அப்போது என்னோடு அதிகமாகப் பழகுபவரும் எனக்குச் சமமான பிராயம் உடையவருமாகிய ஸ்ரீ சக்கரவர்த்தி ஐயங்கா ரென்னும் கணித ஆசிரியர் கேட்டார்
“என்ன? அறுபது நாழிகையும் இந்தப் புஸ்தகத்தையே வைத்துக் கொண்டு கஷ்டப் படுகிறீர்களே?”
“என்ன செய்வது? விஷயம் விளங்கவில்லை. நிதானமாகப் பார்க்கிறேன். ஒன்றும் புரியவில்லை”
“புரியாதபடி ஒரு புஸ்தகம் இருக்குமோ?”
” தமிழில் அப்படித்தான் பெரும்பாலும் இருக்கின்றன. புரியும்படி பண்ணலாம். அதற்குக் காலம் வரவேண்டும்.”
” இதில் என்ன புரியவில்லை?”
“எவ்வளவோ வார்த்தைகள் தெரியாதவையாக  இருக்கிறது.மற்றப் புஸ்தகங்களிலே காணப் படாத வார்த்தைகள் . ஜைனம், சைவம், வைஷ்ணவம் ஆகிய மதநூல்களிலும் இருப்பதாகத் தெரியவில்லை. பாருங்கள்: ” அரூபப் பிடமராம் உரூபப் பிடமராம்”. இவையெல்லாம் புதிய பாஷை மாதிரி இருக்கின்றன. பிடமரென்ற வார்த்தையை இதுவரையில் நான் கேட்டதில்லை.”

இப்படி நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது ஓர் ஓரத்திலிருந்து ஒரு குரல் : “அதைப் பிரமரென்று சொல்லலாமோ?”  அந்தப் பக்கம் பார்த்தேன். காலேஜில் ஆசிரியராக இருந்த ராவ்பகதூர் மளூர் ரங்காசாரியார் தான்  கேட்டவர்.
“எனக்கு ஒன்றும் புரியவில்லை. அது பிடமரோ, பிரமரோ தெரியாது”
அவர் தம் கையில் ஒரு புத்தகத்தை வைத்துக் குனிந்தபடியே படித்துக் கொண்டிருந்தார். அவர் எப்பொழுதும் படித்த வண்ணமாகவே இருப்பார். ஒரு கணப்போதையும் வீணாக்க மாட்டார். அவர் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கும்போது கவனித்தால், அந்தப் புத்தகமும் அவரும் வேறாகத் தோற்றாதபடி அதிலே அமிழ்ந்து தம்மை மறந்து ஈடுபட்டிருப்பதைக் காணலாம். அதுதான் அவ ருக்கு ஆனந்தம்; அதுதான் அவருக்கு யோகம்!

என்னுடைய விடையைக் கேட்டு விட்டுச் சிறிது நேரம் தலை நிமிர்ந்தபடியே யோசித்தார்; பிறகு, “எங்கே, அந்தப் பாகத்தை படித்துக் காட்டுங்கள்” என்றார்.
நான் என்னுடைய பிரதியை எடுத்துக் கொண்டு அவர் பக்கத்திற்குப் போனேன். “இவரை விட்டு விடாதீர்கள். இவரிடம் அபூர்வமான சரக்குகள் இருக்கும்” என்றார் நண்பர் சக்கரவர்த்தி ஐயங்கார் எனக்கு ஊக்கமூட்டினார். நான் கையெழுத் துப் பிரதியைப் பிரித்து வாசிக்கலானேன்:

“நால்வகை மரபினரூபப் பிடமரும்
நானால் வகையினுரூபப் பிடமரும்
இருவகைச் சுடரு மிருமூ வகையிற்
பெருவனப் பெய்திய தெய்வத கணங்களும்…”

என்று வாசித்து நிறுத்தினேன். அவர் காது கொடுத்துக் கேட்டார்; சிறிது நேரம் யோசித்தார்.
அவர் முகத்தில் சிறிது ஒளி உண்டாயிற்று; என் னுடைய மனக் கலக்கமாகிய இருட்பிழம்பில் அந்த ஒளி ஒரு மின்னலைப் போலவே தோன்றி நம்பிக்கை உண்டாக்கிற்று.
“வந்து-, இந்தப் புஸ்தகம் பௌத்த மத சம்பந்தமுள்ள தாகத் தோணுகிறது” என்று அவர் மெல்லக் கூறினார்.
எனக்கு ஒரு துளி அமிர்தம் துளித்தது போல இருந்தது.
“எப்படி?” என்று கேட்டேன்.
“அதுவா? அவர்களிலேதான் இந்தப் பிரம்மாக்களில் இத்தனை வகை சொல்லுகிறார்கள். பிடமரென்பதற்குக் பிரமரென்றுதான் அர்த்தம் கொள்ள வேண்டும். அவர்கள் லோகக் கணக்கு, அது சம்பந்தமான ஏற்பாடுகளெல்லாம் தனி” என்று அவர் சொல்லச் சொல்ல எனக்கு உள்ளத்துக்குள்ளே குபீர் குபீரென்று சந்தோஷ ஊற்றுக்கள் எழுந்தன. ரகரத்துக்கு டகரம் வரலாமென்று எனக்குத் தோற்றியது; முகரியென்பது முகடியென்று வருவது என் ஞாபகத்துக்கு வந்தது.

அப்போது அவர், ” இன்னும் இப்படி இருப்பவைகளையும் படித்துக் காட்டினால், எனக்குத் தெரிந்ததைச் சொல்லுகிறேன். வெள்ளைக்காரர்கள் நிறையப் புஸ்தகம் எழுதியிருக்கிறார்கள். படித்துப் பார்த்தும் சொல்லுகிறேன்” என்றார்.
இந்த வார்த்தைகளைக் கேட்டவுடன் அசோக வனத்தில் இருந்த சீதை இராமபிரானின் கணையாழியைக் கண்டபோது எத்தகைய மகிழ்ச்சியை அடைந்தாளோ, அத்தகைய மகிழ்ச்சியை நான் அடைந்தேனென்றே சொல்லலாம்.
‘இனி இராமன் வந்து நம்மை மீட்பான்; அச்சமில்லை’ என்று சீதை நினைத்தாள்; நானும் இனி மணிமேகலையை உருவாக்கிவிடலாம்; அச்ச மில்லை’ என்று நினைத்தேன்.
வழி கண்டு கொண்டால் அப்புறம் விடுவேனா ? அன்று முதல் காலையிலும், மாலையிலும் ரங்காசாரியார் வீட்டிற்குப்போக ஆரம்பித்தேன். மணிமேகலை முழுவதையும் சிக்கறச் செய்துவிட வேண்டுமென்ற பேராசை என்னை ஆட்கொண்டது.
அவருடன் பழகப்பழக அவருடைய விரிந்த அறிவும் பல துறைப் பயிற்சியும் தெளிவான ஞான மும் பொறுமையும் பரோபகாரத்தன்மையும் எனக்கு நன்கு விளங்கின. அவருடைய உதவி எனக்குக் கிடைத்திராவிட்டால் மணிமேகலையை நான் வெளி யிடுவதோ அதற்கு உரை எழுதுவதோ ஒன்றும் நிறைவேறாமற் போயிருக்கும். பௌத்த சமய சம்பந்தமான விஷயங்களை யெல்லாம் அம்மகோபகாரி(மஹா உபகாரி) மிகவும் தெளிவாக எனக்கு எடுத்துரைத்தார். அந்த அறிவோடு மணிமேகலையை ஆராய்ந்தபோது எனக்குத் தமிழ்நாட்டுப் பௌத்தர் நிலையும், பௌத்த பரிபாஷைகளும் விளங்க லாயின. மணிமேகலையில் சில இடங்களில் உள்ள கருத்துக்களை நான் சொல்லும்போது ரங்காசாரியார் பிரமித்துப் போவார்; சில சொற்களின் மொழி பெயர்ப்பைக்கேட்டு ஆச்சரியப்படுவார்; “எவ்வளவு சிரமப்பட் டிருக்கிறீர்கள்! எவ்வளவு அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் ” என்று அடிக்கடி விம்மிதம் அடைவார்.

என்னிடம் இருந்த நீலகேசித்திரட்டின் உரை, வீரசோழிய உரை, சிவஞான சித்தியார்-பரபக்கம் ஞானப் பிரகாசர் உரை என்பவற்றில் வந்துள்ள பௌத்த சமய சம்பந்தமான செய்யுட்களையும் செய்தி களையும் தொகுத்து வைத்துக்கொண்டேன். மணி மேகலை ஆராய்ச்சியில் அவையும் உபயோகப்பட்டன.

ரங்காசாரியார் முன்னரே தாம் படித்த நூல்களில் இருந்த விஷயங்களை எனக்குச் சொன்னார். எனக்காகப் பல புதிய புத்தகங்களைப் படித்துச் சொன்னார். நானும் சில ஆங்கிலப் புத்தகங்களை அவர் விருப்பப்படி விலைக்கு வருவித்துக் கொடுத்தேன் மானியர் வில்லியம்ஸ், மாக்ஸ்முல்லர், ஓல்டன் பர்க், ரைஸ் டேவிட்ஸ் முதலிய அறிஞர்கள் எழுதி யுள்ள விஷயங்களை யெல்லாம் அவர் படித்துக்கூறக் கூற நான் உணர்ந்து கொண்டேன். மணிமேகலையில் நிலவுகின்ற பௌத்த உலகக் காட்சிகள் எனக்கு ஒவ்வொன்றாகத் தெளிவாயின.

ஒன்றரை வருஷ காலம் ரங்காச்சாரியார் கும்பகோணத்தில் இருந்தார். அந்தக் காலங்களில் ஓய்வு உள்ள போதெல்லாம் அவருக்குச் சிரமங் கொடுத்துக் கொண்டே வந்தேன். அப்பால் அவரைச் சென்னைப் பிரஸிடென்ஸி காலேஜூக்கு மாற்றிவிட்டார்கள். பிறகும் விடுமுறைக் காலங்களில் சென்னைக்கு வந்து இரண்டு மாதங்கள் தங்கியிருந்து அவரைக் கண்டு விஷயங்களைக் கேட்டுக் குறிப்பெடுக்கலானேன். இப்படி ஐந்தாறு வருஷங்கள் பௌத்த மதத்தைப் பற்றிய செய்திகளை நான் அறிந்துவந்தேன்; ரங்காசாரியாரவர்கள் எனக்கு உபாத்தியாயராக இருந்து கற்பித்தார்களென்று சொல்வது பின்னும் பொருத்தமாக இருக்கும்.

‘இனிமேல் மணிமேகலையை வெளியிடலாம்’ என்ற துணிவு எனக்கு உண்டாயிற்று. அதற்குப் பழைய உரை இருப்பதாகத் தெரியாமையால் நானே என் சிற்றறிவுக்கு எட்டிய வரையில் ஒரு குறிப்புரை எழுதினேன். அதனோடு பௌத்த சமயத்தைச் சார்ந்த மும்மணிகளாகிய புத்தன், பௌத்த தர்மம், பௌத்த சங்கம் என்னும் மூன்றையும்பற்றிய வரலாற்றையும் எழுதினால் படிப்பவர்களுக்கு உபயோகமாக இருக்கு மென்று ரங்காசாரியார் வற்புறுத்திக் கூறினார். அங்ஙனமே அதனையும் அவர் உதவியினால் எழுதிச் சேர்த்துப் பதிப்பிக்கலானேன்.

புத்த சரித்திரம் முதலியவற்றை எழுதியபோது இடையிடையே பல பழைய தமிழ்ச்செய்யுட்களைப் பொருத்தியிருப்பதைக் கேட்டு ரங்காசாரியார் அடைந்த சந்தோஷத்திற்கு அளவில்லை. “அந்தக் காலத்திலே இவ்வளவு பிரசித்தமாக இருந்த விஷயங்கள் இப்போது அழிந்து போயினவே!” என்று அவர் வருந்தினார்.

மணிமேகலை 1898-ஆம் வருஷம் பதிப்பித்து நிறைவேறியது. அதன் முகவுரையில் ரங்காசாரியார் செய்த மகோபகாரத்தை நான் குறித்திருக்கிறேன்.

தமிழ்மகள் தன மணிமேகலையை இழந்திருந்தாள். அதனைக் கண்டெடுக்கும் பேறு எனக்கு வாய்த்தது. ஆயினும், அதிற் பதித்திருக்கின்ற ரத்தினங்களின் தன்மை இன்னதென்று முதலில் எனக்குத் தெரியவில்லை. அதனை ரங்காசாரியார் அறிவித்தார். மணிமேகலை மீட்டும் துலக்கப் பெற்றுத் தமிழ்மகளின் இடையை அலங்கரித்து நிற்கின்றது.

இதனை எழுதும்போது என் மனத்திலுள்ள நன்றியறிவு முழுவதையும் உணர்த்த எனக்குச் சக்தி யில்லை. அதனை நேருக்கு நேர அறிந்துகொள்ள ரங்காசாரியாரும் இல்லை. ஆனாலும் என்ன? அவர் பெயரை இன்றும் நான் நினைந்து நன்றியறி வுடன் வாழ்த்துகின்றேன்; என் மனத்தில் அவர் என்றும் இருந்துகொண்டுதான் இருக்கிறார்.  

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *