KAPILACHARYA J K SIVAN

கதை கேளு  கதை கேளு – 3   நங்கநல்லூர்  J K  SIVAN

”தாத்தா  கதை சொல்லு”
எங்கிருந்து  இத்தனை வாண்டுகள் ஒன்று சேர்ந்து வந்திருக்கிறது. நம்ம காலனியில் இத்தனை இல்லையே  என்ற ஆச்சர்யத்தோடு அந்த புதுமுகங்களையும்  புன்னகையோடு வரவேற்று ஈஸி சேரில் அமர்ந்ததும்  வேப்ப மரத்தடி மாநாடு துவங்கியது.
‘ஹிரண்யாக்ஷன் கதை முடிந்தது இல்லையா?.  அவன் தம்பி ஹிரண்ய கசிபுவுக்கு பயங்கர கோபம். ஆத்திரம். அன்னன்னைக் கொன்ற  நாரயணன் ஜென்ம விரோதி. அவனைக் கொல்லவேண்டும்  என்ற எண்ணம் வலுப் பெற்றது.நான் ஜாக்கிரதையாக   இருக்கவேண்டும். தவம் செய்து  பலம் பெறவேண்டும். அண்ணன் செய்த தப்பை பண்ணக்கூடாது.எவராலும் என்னை வெல்லவோ, கொல்லவோ முடியாதபடி வரம் பெறவேண்டும்”  பலவருஷன்கள் கடுந்தவம் இருந்தான். அவன்  தவம் செய்யட்டும். நாம் மற்ற விஷயங்களை கவனிப்போம்.
இந்த இடைவேளையில் உலகம் விரிந்து விட்டது.  எங்கும்  தாவரங்கள்  உயிர்கள்  நிறைந்து விட்டன. காடுகள் மலைகள், நதிகள் நாடு  நகரம் என பல தோற்றங்கள். ஸ்வயம்பு மனு தான் ராஜா. சதரூபா அவன் ராணி.
கர்தமர் என்று ஒரு ரிஷி. கட்டுமஸ்தான தேக  இளமை கொண்ட ரிஷி. ஸ்வயம்பு மனுவுக்கும்  சத ரூபாவுக்கும் கர்தமரை பிடித்து விட்டது. தனது மகள் தேவஹுதியை கர்தமருக்கு கல்யாணம் பண்ணி வைத்தார்கள்.  இருவரும் ஆஸ்ரமத்தில் வாழ்ந்தனர்.
தேவஹுதிக்கு  ஒரு குழந்தை பிறக்கவேண்டும் என்று ஆசை.  அவளை  நல்லஉடல் ஆரோக்யம் பெற கர்தமர் சரஸ்வதி நதி அருகே இருந்த  பிந்துசார ஏரியில் ஸ்னானம் செய்யச் சொன்னார்.   ஏரியில் தேவஹுதி  காலை வைத்ததும்  நூற்றுக்கணக்கான அழகிய  அப்ஸரஸ்கள் அவளை வரவேற்று உபசரித்து, ஸ்னானம் செய்வித்து, நிறைய  ஆபரணங்கள் அணிவித்து ஆடைகள் அளித்து  மலர்  மாலைகள் சூட்டினார்கள். கர்தமர்  ஆஸ்ரமம் தங்கநிற  மாளிகையாகியது. எண்ணற்ற பணியாளர்கள்.  அந்த மாளிகை ஒரு பறக்கும் மாளிகையாகிவிட்டது தான் ஆச்சர்யம்.  அவர்கள்  நினைத்த  இடங்களுக்கு கொண்டு சென்றது.  வானில் தேவலோகம் சென்றது. கந்தர்வர்கள் உபதேவதைகள்  கைலாச மலை எல்லாம் பார்த்தார்கள். மேகங்கள் மேல் அமர்ந்தார்கள். மலைகளிலிருந்து சறுக்கி கீழே வந்தார்கள். பறவைகளோடு கலந்து பறந்தார்கள்.இது எல்லாம் உண்மையிலேயே நடந்ததா  என்றால்  அது தான் இல்லை? அத்தனையும்  கர்தம ரிஷி கண்ட கனவு.
கர்தமர் தேவஹுதிக்கு கபிலன் என்ற அழகிய மகன் பிறந்தான்.   அவன் பிறந்ததும்  பிரம்மாதி தேவர்கள் மலர்களோடு வந்து வாழ்த்தி வணங்கினார்கள்.  கபிலன்   நாராயணனின் அவதாரம்.  சாங்கிய  தர்மம் மூலம்  மோக்ஷம் பெறும் வழி வகுத்தவர் கபில மகரிஷி.
கர்தமர் தேவஹுதிக்கு  நிறைய  பெண் குழந்தைகளும்  பிறந்தார்கள்.  அவர்களுக்கு கல்யாண வயது வந்தது.  அத்ரி மகரிஷிக்கு அனஸூயா,  அருந்ததியை  வசிஷ்டருக்கு, என்று பல ரிஷிகள் மாப்பிள்ளைகள் ஆனார்கள்.  இல்லறத்தை துறந்து கர்தமர் ஹிமாச்சலத்துக்கு தவம் செய்ய சென்றுவிட்டார்கள். பெண்கள் கணவன்கள் வீட்டுக்கு சென்றனர். கபிலனும் தேவஹுதியும் மட்டும் ஆஸ்ரமத்தில் இருந்தனர்.
தேவஹுதி கபிலரிடம் உபதேசம் பெற்றாள் .
”தாயே, மனது தான் சகலத்துக்கும் காரணம். நல்லது கெட்டது எல்லாம் அங்கே தான் பிறக்கிறது.  தீமையோடு உறவாடி மனம் தீய குணம் பெறுகிறது.  நலம் தருவதோடு சேர்ந்தால்  நற்குணம் பெறுகிறது.  ஞானிகள், முனிவர்கள், ரிஷிகள் நல்லதையே  எண்ணத்திலும் செயலிலும்   பின்பற்றுகிறார்கள்.  எல்லாம்  ஆத்ம ஸ்வரூபம், ஆத்மா பகவானின் வெளிப்பாடு என்று உணர்ந்து என்னையே  போற்றுகிறார்கள்.  வணங்குகிறார்கள்.  நான் அவர்கள் செவிவழியாக நுழயைந்து அவர்கள் இதயத்தில்  இடம் பெற்று  அவர்கள் இதயம் உருகச் செய்கிறேன்.  சர்வம் ப்ரம்மமயமாக அவர்கள் அறிகிறார்கள். எங்கும் எதிலும் என்னையே காண்கிறார்கள்.   என்னை அடைய  பக்தி மார்கத்தை விட சிறந்த  எளிய  மார்க்கம் இல்லை.  அம்மா,   நீ உலக சிந்தனைகளை மறந்து என்னை வழிபடு , என்னையே அடைவாய்”
கபிலர் அம்மாவிடம் விடைபெற்று பத்ரிகாஸ்ரமம் சென்று தவம் செய்தார்.  பகவானே  கபிலராக அவதரித்தாலும், மற்ற  யோகிகளுக்கு உதாரணமாக   தவமிருந்து  சாங்கிய  யோக உபதேசம் செய்தார்.
 தேவஹுதி அம்மையார்  சரஸ்வதி   நதிக்கரையில் ஆஸ்ரமத்தில் வாழ்ந்து தனது  வாழ்க்கையை  வாசுதேவன்  தியானத்தில் கழித்து  ஒருநாள் அவனோடு கலந்தாள். அந்த  இடத்தில்  இன்றும்  சிவோஹம் சிவோஹம் என்று  சப்தம் காற்றில் கலந்து மென்மையாக நம் காதில் ஒலிக்கும். 

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1398

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *