KAMBA RAMAYANAM J K SIVAN

கம்ப ராமாயணம் – நங்கநல்லூர்  J K  SIVAN

51. எறிதரும்‌ அரியின்‌ சும்மைஎடுத்து வான்‌ இட்ட போர்கள்‌
குறிகளும்‌ போற்றிக்‌ கொள்வார்‌;கொன்ற நெல்‌ குவைகள்‌ செய்வார்‌;
வறியவர்க்கு உதவி. மிக்க.விருந்து உண மனையின்‌ உய்ப்பார்‌.
நெறிகளும்‌ புதைய. பண்டி நிறைத்து.மண்‌ நெளிய ஊர்வார்‌.

கோசலை நகரத்தில்  எங்கு பார்த்தாலும்  வயல்வெளிகள் இருப்பது போல்  அறுவடை செய்த நெற்கதிர்கள்   களத்து  மேடுகளில் போர் போராக சின்ன மலைகள் போல் அங்கங்கே  குவிக்கப்பட்டு  இருக்கும்.  அதன் மேல் யாருடைய  நெற்போர் என்று அடையாளம் காண  சாணி,மண் போன்றவற்றை கலந்து பூசி  குறிகள் இட்டு வைத்திருப்பார்கள்.  அது பார்ப்பதற்கு சித்திரங்கள் போல் கண்ணுக்கு இனியதாக இருக்கும். நெல்லை  ஏழை எளியவர்களுக்கு  போதும் போதும் என்னும் அளவிற்கு  வாரி வழங்குவார்கள்.  வண்டிகளில் நெல் பொதிகள்  சுமையாக நிறைந்து  இருக்கும்.  கம்மென்று நெல் மணம்  நல்மணமாக வீசும். வயல்களில் பருப்பு வகைகள் வேறு பயிரிட்டு அவையும் பல வித வர்ணங்களில் குவிக்கப்பட்டு இருக்கும்.  வண்டுகள் ரீங்காரமிட்டு  கூட்டமாக சுற்றிக்கொண்டே
கனிவகைகளில் ஊறி வழியும் சாறுகளை உண்ணும்.

53. முந்து முக் கனியின்‌. நானா முதிரையின்‌.முழுத்த நெய்யின்‌.
செந்‌ தயிர்க்‌ கண்டம்‌. கண்டம்‌.இடை இடை செறிந்த சோற்றின்‌.
தம்‌ தம்‌ இல்‌ இருந்து. தாமும்‌.விருந்தொடும்‌. தமரினோடும்‌.
அந்தணர்‌ அமுத உண்டி அயிலுறும்‌ அமலைந்து எங்கும்‌.

சுவையான பசும்பாலை காய்ச்சி மஞ்சள் நிறம் வரும் வரை  அதை கொதிக்கவைத்து பிறகு  பிரையிட்டு தயிராக்கி சட்டிகளில் நிறைந்திருக்கும்.  பிராமணர்களுக்கும் விருந்தினருக்கு  பால் தயிர் நெய் தாராளமாக  வழங்கப்படும். முன்னோர்களுக்கும்  நன்றியோடு படைக்கப்படும்.

57. முட்டு இல்‌ அட்டில்‌ முழங்குறெ வாக்கிய
நெட்டுலைக கழுநீர்‌ நெடு நீத்தம்தான்‌.
பட்ட மென்‌ கமுகு ஓங்கு படப்பை போம்‌.
நட்ட செந்‌ நெலின்‌ நாறு வளர்க்கு மே.

அரிசி களைந்த  நீரை செடிகளுக்கு விடும் பழக்கம்  எனக்கு தெரியும். கோசலை நகரில் ஒவ்வொரு வீட்டிலும் சமையல் அறையில்  தேவையான சகல  பொருள்களும்  நிறைந்திருக்கும்.   வருவோர்க்கெல்லாம் அன்னம் இடுவதற்காக  அவர்கள் அரிசி பருப்புகள் கழுவி ஊற்றும்  நீர்  ஆறாக ஓடி  கொல்லைப்  பக்கத்தில்  பாக்கு, வாழைமரத் தோட்டத்தில் எருவாக  தாவரங்க ளுக்கு உணவாக  நிறைந்திருக்கும்  என்கிறார் கம்பர். அதாவது   ஒவ்வொரு வீட்டிலும்  விருந்தினர் வந்து உணவருந்திக் கொண்டே இருப்பார்கள் என்று கோசல நாட்டின் வளமையை வர்ணிக்கிறார்.

58. சூட்டுடைத்‌ துணை தூ நிற வாரணம்‌
தாட் -துணைக்‌ குடைய. தலை சால்‌ மணி
மேட்டு இமைப்பன; “மின்மினி ஆம்‌” எனக்‌
கூட்டின்‌ உய்க்கும. குரீஇயின்‌ குழாம்‌அரோ.

கொக்கரைக்கோ என்று விடிகாலையில் எல்லோரையும் துயில் எழுப்பும்  சேவல் கூட்டம்  குப்பை மேட்டில் தனது கால்களால் கிளறியபடி இருக்கும்.  குப்பையில் செந்நிற  மாணிக்கக் கற்கள்  கலந்திருக்கும்.  அவை குப்பையடி யிலிருந்து மேலே கண்ணுக்கு சிவப்பாக கண்ணில் படும்.  அதைப் பார்த்து விட்டு குருவிக் கூட்டம்  அந்த  ஒளிவீசும் செந்நிற  மாணிக்கங்களை மின் மினிப்  பூச்சி என்று தப்பாக  எண்ணி  அவற்றை எடுத்துக் கொண்டு போய் தமது கூடுகளில் மரங்களின் மீது வைக்கும் என்கிறார் கம்பர். அடேயப்பா என்ன கற்பனை வளம், எழுத்தாற்றல்,  வர்ணனை.  கோச லத்தின் வளமை.

59, தோயும்‌ வெண்‌ தயிர்‌ மத்து ஒலி துள்ளவும்‌.
ஆய வெள்‌ வளை வாய்விட்டு அரற்றவும்‌.
தேயும்‌ நுண்‌ இடை சென்று வணங்கவும்‌.
ஆயர்‌ மங்கையர்‌ அங்கை வருந்துவார்‌.

ஒவ்வொரு வீட்டிலும் விடிகாலைகளில் பெண்கள் தயிர் கடைவார்கள். அந்த அழகிய பெண்கள் சட்டிகளில் மத்தை விட்டு கைகளால் கடையும்போது, அவர்கள் கைகளில் அணிந்துள்ள பல சங்கு வளையல்கள் சுநாதமாக  சங்கீத ஒலி  எழுப்பும். வெள்ளை சங்குகளி
லான வளையல்களின் சப்தம், வெள்ளையாக தயிர்  சட்டிகளில் கடையும்போது ஆடுவது சங்கீதத்துக்கு நாட்டிய பெண்கள் ஆடுவது போல் இருக்குமாம்.  கடைந்து கடைந்து உள்ளங்கைகள் சிவக்குமாம். ஆஹா.பலே  கம்பரே .

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *