KAARADAIYAN NONBU AN OLD MEMORY J K SIVAN

காரடையான் நோன்பு – நங்கநல்லூர் J K SIVAN
பழைய நினைவு.
இந்த வருஷம் 2024 , காரடையான் நோன்பு  நாளைக்கு. 14.3.24 அன்று. இந்த பண்டிகைக்கும் சரடுக்கும் சம்பந்தம் உண்டு. சரடு கட்டிக்கொள்ள , விடுவதற்கல்ல. சரடு விடுவது என்றால்  ஒரு ஆசாமி  சும்மா ஆதாரமில்லாத வதந்தியாக ஏதாவது ஒரு  விஷயத்தை நாலு பேர் மத்தியில் அவிழ்த்து விடுவது. சரடு கட்டிக் கொள்வது ஒரு புனிதமான விரதம். சுமங்கலிகள் மாங்கல்ய பலத்துக்காக, சௌபாக்யத்திற்காக அனுஷ்டிக்கும் விரதம் காரடையான் நோன்பு .

மாசி மாதம் முடிந்து, பங்குனி மாதம் கூடும் வேளையில் இந்த விரதம் அனுஷ்டிக்கப்படும்.விரதம் இருக்கும் நாளில் பெண்கள் அதிகாலையில் நீராடி, பூஜையறையை சுத்தம் செய்து தலை வாழையிலை பரப்பி அதன் மேல் அரிசி அக்ஷதை தூவி, அதில் ஒரு கலசத்தின் மேல் தேங்காய், மாவிலை வைத்து கலசத்திற்கு சந்தனம், குங்குமம், மஞ்சள் பூசி, அதன் மேல் மஞ்சள் சரடை , கயிறைக் கட்ட வேண்டும். சரடில் புஷ்பம் முடிந்து வைத்திருப்பார்கள். இஷ்டதேவதையாக அம்பாள் படம் வைத்து, அவளை காமாட்சியாக அல்லது சாவித்ரியாகக்   கருதி வழிபடுவது வழக்கம்.
என் இனிய நண்பர் வேதிக்  ரவி வருஷாவருஷம்  ஒவ்வொரு பண்டிகைக்கும் விரதத்துக்கு  முன்கூட்டியே  ரெண்டு நாள் முன்பு  சங்கல்ப  பூஜா  விரத அனுஷ்டான விதிகளை எல்லோருக்கும் அனுப்பிவிடுபவர்.  நாளை  காரடையான் நோன்புக்கு அவர்  அனுப்பிய ரொம்ப உபயோகமான விஷயம் இது:

தின ஸங்கல்பம்
12.03.2024 – சோபக்ருத் மாசி 29 செவ்வாய் கிழமை

சங்கல்பம்: மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் சுபாப்யாம் சுபே சோபனே முஹூர்த்தே அத்ய ப்ரஹ்மண: த்விதீயபரார்த்தே, ச்வேதவராஹ கல்பே, வைவஸ்வத மன்வந்தரே, அஷ்டாவிம்சதிதமே, கலி யுகே, ப்ரதமே பாதே, ஜம்பூ த்வீபே, பாரத வர்ஷே, பரத கண்டே, மேரோ: தக்ஷிணே பார்ச்வே, சகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யாவஹாரிகே, ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே, சோபக்ருத்  நாம ஸம்வத்ஸரே, உத்திராயனே ஸிசிர ருதௌ, கும்ப மாஸே, சுக்ல பக்ஷே,  த்விதியாயாம்   சுபதிதௌ, வாஸர:  பெளம வாஸரயுக்தாயாம், ரேவதீ நக்ஷத்ர யுக்தாயாம்,  சுப்ரன் நாம யோக கெளலவ கரண எவங்குன ஸகல விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் த்விதியாயாம் சுபதிதெள மம ஸக குடும்பானாம் சர்வாபிஷ்டா ஸித்யர்த்தம் கிருஹஸ்ய ஆரத்தியமான தேவதா ப்ரசாத ஸித்தியர்த்தம் நித்ய பூஜாம் அத்ய கரிஷ்யே.

அம்மனுக்கு கார் அரிசியும் காராமணியும் கலந்து செய்த அடையும், உருகாத வெண்ணெயும் நிவேதனம் செய்வார்கள்.
நோன்புச் சரட்டில் மலரைக் கட்டி பூஜையில் வைத்து கழுத்தில் கட்டிக் கொள்ளவேண்டும். ( சுமங்கலிகளுக்கு கணவரும் , குழந்தைகளுக்கு பெரியவர்களும் கட்டிவிடலாம்)
சரடு கட்டிகொள்ளும்போது சொல்கிற ஸ்லோகம்; ”தோரம் க்ருஹ்னாமி ஸுபகே ஸஹாரித்ரம் தராம்யஹம் ;
பர்த்து ஆயுஷ்ய ஸித்தியர்த்தம் ஸுப்ரீதா பவ ஸர்வதா :
காரடையான் விரதம் இருக்கும் பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக இருப்பர்.
பெண்கள் கடைப்பிடிக்கும் விரதங்களிலேயே மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது, தலையாயது என்று கூறப்படுவது காரடையான் நோன்புதான் காமாட்சி நோன்பு. சாவித்ரி விரதம் என்றும் கூறுவர்.
++
காரடையான் நோன்பு அன்று என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு சம்பவம் இது:
77- 78 வருஷங்களுக்கு ஒரு காரடையான் நோன்பு அன்று சூளைமேட்டில் நாங்கள் வசித்தபோது அம்மா காராமணி அடை தட்டி காரடையான் நோன்பு பண்ணிக் கொண்டிருந்தாள்.அவளுக்கு திடீர் என்று ஏதோ ஒரு அடக்கமுடியாத நடுக்கம், பயம் ஏற்பட்டது. உடல் வியர்த்தது.தலை சுற்றியது. என் அப்பாவுக்கு ஏதோ பேராபத்து நிகழ்வது போல் மனதில் பட்டதால் , கதறினாள். நாங்கள் சகோதரர்கள் மூவரும் சிறுவர்கள். ஜம்பாவதி அம்மா அம்பாளை எல்லாம் நல்லபடியாக இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டாள் .
அன்று இரவு தான் விஷயம் தெரிந்தது. என் அப்பா ஸ்ரீ J. கிருஷ்ணய்யர் நுங்கம்பாக்கம் கார்பொரேஷன் பள்ளிக்கூடத்தில் உதவி ஹெட்மாஸ்டர். அவருக்கு அன்று காலை திடீர் என்று மார்பு வலி வந்து துடித்து, வகுப்பிலேயே விழுந்து விட்டார். நுங்கம்பாக்கம் கார்ப் பரேஷன் பள்ளிக்கூடத் திலிருந்து கோடம்பாக்கம் ஸ்டேஷன் அருகே இருந்த டாக்டர் கோபாலமேனன் வீட்டுக்கு/அதுவே  ஆஸ்பத்திரி,   எப்படியோ ஒரு   குதிரை வண்டி  பிடித்து  அழைத்து போனார்கள். கார் டாக்ஸி டெலிபோன் எதுவுமில்லாத காலம். குதிரை வண்டியில் தான் பிரயாணம்.
டாக்டர் அவருக்கு முதல் உதவி செய்தார் ஏதோ மருந்து கொடுத்தார். அதற்கு பிறகு என் அப்பா 83 வயது வரை வாழ்ந்தார். எப்படி எங்கோ கோடம்பாக்கம், சூளைமேட்டில் இருந்த அம்மாவுக்கு நுங்கம்பாக்கத்தில் அப்பாவின் உடலுக்கு வந்த ஆபத்து தெரிந்தது?. நிச்சயம் அவள் மாங்கல்ய பலத்தால் தான் அப்பா பிழைத்ததாக நம்பினாள். இன்றுவரை நாங்களும் அவ்வாறே நம்புகிறோம். அசையாத நம்பிக்கை தான் பக்தி. இவ்வித பக்தி நிச்சயம் பலன் தரும். இது அனுபவ பூர்வமாக எனக்கு தெரியும். சமீபத்தில்  ஒரு கல்யாணத்துக்கு  கோடம்பாக்கம் போயிருந்த போது  நடந்தே   கோடம்பாக்கம் ரயில்நிலையம் வந்த வழியில் டாக்டர் கோபால மேனன் தெரு வழியாக வந்தபோது மனது பழசையெல்லாம் நினைத்தது. கோடம்பாக்கம் அடையாளம் மாறி விட்டது. நினைவுகள் மட்டும் தான் மாறவில்லை.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *