ARUPATHTHU MOOVAR J K SIVAN

அறுபத்து மூவர் – நங்கநல்லூர் J K SIVAN
கணம்புல்ல நாயனார்
“கறைகண்டன் கழலடியே காப்புக் கொண்டிருந்த கணம்புல்ல நம்பிக்கும் (காரிக்கும்) அடியேன்” – சுந்தரமூர்த்தி நாயனார்
இதை எழுதும் இன்று மாசி மகம். நாடெங்கும் புண்ய நதிகளில் ஸ்னானம் செய்து பாபம் போக்கிக் கொள் வது ஒரு பேரதிர்ஷ்டம். நதிகள் நம்மை வாழ்விக் கும் தாயின் உருவங்கள். நமது புண்ய பலன் அநேக நதிகள் இந்த தேசத்தை அலங்கரிக் கின்றன. தமிழகத்தின் முக்கிய நதிகள் காவிரி, தாமிரபரணி, வைகை, பெண்ணாறு போன்றன. .அதில் ஒன்றுதான் வட வெள்ளாறு, அந்த வட வெள்ளாற்றின் அருகே ஒரு சின்ன கிராமம். இருக்குவேளூர் என்று பெயர். இப்போது அதன் பெயர் பேளூர். எங்கிருக்கிறது என்றால் சேலம்- ஆத்தூர் சாலையில் வாழப்பாடிக்கு வடக்கே 8 கி.மீ. தொலைவில் உள்ளது. அதில் ஒரு சிவபக்தர் வாழ்ந்து வந்தார். ராஜாவின் படையின் முன்னணி வீரர்கள் எனப் பெயர் பெற்றசெங்குந்தர் மரபில் உதித்தவர். சிகப்பான ரத்தம் படிந்த ஈட்டி கத்திகளை பிடிக்கும் கூட்டம் என்பதால் அந்த வீரர் மரபு செங்குந்தர் என பெயர் பெற்றது. அதன் ஒரு பிரிவு களத்திலும் , சபையிலும் முதலில் அமரும் சமூகம் எனும் முதலியார் சமூகமாயிற்று.
மேலே சொன்ன சிவனடியாருக்கு என்ன பெயர் என்று இன்னும் தெரியவில்லை. இருக்குவேளூரின் தலைவ ராக பெருமை பெற்றவர். அதிகமாக சிவனுக்கு தொண்டு செய்ய முடியவில்லையே என்று ராஜாவின் படையிலிருந்து விடுபட்டு தன்னுடைய நிலங்களில் விவசாயத்தில் கவனம் வைத்து அதில் கிட்டும் வருமானத்தில் சிவனுக்கும், சிவனடியார் களுக்கும் தொண்டு ஆற்றினார்.
சிவாலயத்தில் விளக்கேற்றுவது என்பது சாதாரண விஷயம் இல்லை. அநேக விதமான விளக்குகள், பல சந்நிதிகளில் , மண்டபங்களில் இருக்கும். சிவனுக்கு விருப்பமான இலுப்பை எண்ணெயில் தான் தீபம் ஏற்ற வேண்டும். விளக்குகளை சுத்தம் செயது, நல்ல பஞ்சு திரிகளை அவற்றில் இட்டு, பகவான் நாமங்களை சொல்லி தீபம் ஏற்றவேண்டும். எக்கார ணத்தைக் கொண்டும் தீபமேற்றும்போது புலன்களின் ஆக்ரமிப்பு மனதில் இருக்க கூடாது. விளக்கு எரியும்பொழுது சுற்றுப்புறக் காற்றை நன்றாக‌ தூய்மையாக்கும். அதில் சுவாசம் சீராகும். சீரான சுவாசம் நல்ல பலனை கொடுக்கும். நன்றாக திரையிட்ட விளக்குகளில் தீபம் நின்று ஒளிவீசும்.
.
நெய் என்பது இக்காலத்தில் மட்டும் அல்ல எக்காலத் திலும் அதிக விலை மதிப்புள்ள பொருள். கலப்படங் கள் இல்லாமல் சுத்தமான பசு நெய்யில் ஆலயங்க ளுக்கு விளக்கெரித்த உன்னத காலம் அவை என்பதால் நெய்யில் விளக்கெரித்தல் என்பது அதிக பணம் செலவு பிடிக்கும் விஷயம்.
இந்த அறுபத்து மூவர் சரித்திரம் எழுதும்போது கவனித்தேன். பல நாயனார்கள் வாழ்வில் தீபம் சம்பந் தப் பட்டிருக்கிறது. தீபம் ஏற்றுவது என்பது ஒரு இன்றி யமையாத பக்தி கார்யம். பகவான் ஒளி மய மானவர். அவரை அக்னி ஸ்வரூபமாக காண்கி றோம்.
பஞ்சபூதத்தில் அக்னி முக்கியமானது. அதுவும் அக்னி சிவனுடன் சம்பந்தமானது. பரிசுத்தத்தின் அடையாளம், ஆலயத்துக்கே ஒளிகொடுக்கும் விஷயம் என்பதாலும் ஆத்மாவை ஒளி வீச செய்வதாலும் தீபம் ரொம்ப முக்கியமானது.
அநேக சிவாலயங்களில் ஆறுகால பூஜைகள் நேரம்: காலை (6 மணி), காலை(8 மணி), உச்சி (12 மணி), மாலை(6 மணி), இரவு(8 மணி), அர்த்தஜாமம் (10 மணி) அப்போதெல்லாம் தீபமேற்றுதல் கட்டாயம்.
இருக்கு வேளூரில் இந்த தீபமேற்றும் காரியத்தை மேலே சொன்ன செங்குந்த சிவனடியார் முழு மனதாக ஏற்றுக் கொண்டார் ஆறு கால பூஜைக்கான செலவினை குறிப்பாக விளக்கு தீபம் ஏற்றும் முழு பொறுப்பினையும் அதற்கான நெய் செலவினையும் ஏற்றுக்கொண்டு அதை மிக்க மகிழ்ச்சியுடன் தனது விவசாய வருமானத்தை வைத்துக்கொண்டு சமாளித் தார். அனுதினமும் ஆறு கால பூஜைக்கான நெய்யினை அவர் வழங்குவதும் காலையும், மாலையும் ஓடிவந்து அவர் விளக்கேற்றி வணங்குவதும் சிவனுக்கு மிகவும் பிடித்தது.
நாம் தான் ஒருவரின் அந்தஸ்து, பணபலம், சமூக கௌரவம் பொருள், புகழ் எல்லாவற்றையும் எடை போட்டு மதிக்கிறோம். பகவானுக்கு மனதில் உள்ள பக்தி தான் எடை. அதுவும் சிவன் அக்னி ஸ்வரூபன். தீப ஜோதி மங்களன்.
இந்த செங்குந்த சிவனடியாரின் பெருமை உலகுக்கு தெரியவேண்டும் என்று ஒரு சோதனை, அது தானே, திருவிளையாடல், நடத்தினான் பரமேஸ்வரன். என்ன தான் வறுமை இருந்தாலும் உண்மையான பக்தன் தனது கைங்கர்யத்தில் துவளமாட்டான். சிவனடியாரின் விளைநிலத்தில் வெள்ளாமை இன்றி பயிர்கள் வாடின. வீட்டில் அதனால் வறுமை, ஏழ்மை கூடியது. இதுவரை தனது விவசாய வருமானத்தில் நான்கில் ஒரு பங்கை செலவழித்த பக்தருக்கு இப்போது மூன்றில் ஒருபங்கே அளிக்க முடிந்தது. அது விளக்கேற்றும் எண்ணெய் வாங்க போதவில்லை.
கொஞ்ச கொஞ்சமாக அடியார் வீட்டில் வறுமை படிந்தது, வழக்கமாக தன் வருமானத்தில் நான்கில் ஒருபங்கை சிவனுக்கு கொடுத்த அடியார் ரொம்ப கஷ்டப்பட்டு 3ல் ஒரு பங்கை கொடுத்தார். பின்னர் அது இரண்டில் ஒரு பங்காக குறைந்தது. பாதி கூட கொடுக்க முடியாமல் கிடைத்த தை அப்படியே தீபம் ஏற்றும் செலவுக்கு உபயோகித்தார். அதுவும் நின்றது. நிலத்தை மிடறு அந்த பணத்தை தீப கைங்கர்யத்துக்கு செலவு செய்தார்.இருக்கும் வீடு மாடு எல்லாவற்றையும் விற்று கைங்கர்யம் தொடர்ந்தது. சகலமும் இழந்த நிலையில் அடியார் நின்றார். முடிந்த அளவு தீபம் ஜொலித்ததே தவிர அவர் வாழ்வு இருட்டானது.
ஒரு ஊரில் பெரியமனிதனாக எல்லோராலும் மதிக் கப்பட்டவன் சகலமும் இழந்து பிச்சைக்காரனாக இருப்பது தாங்கமுடியாத சோக நிலைமை. ஊரே அந்த சிவனடியாரை பரிதாபத்தோடு பார்த்தது. ஆயிரம் ஈட்டிகள் குத்தி சித்ரவதை செய்வதை விட இந்த அவமானம் பொறுக்க முடியாதது.வலி அதிகம். தவறான வழியிலோ இல்லை பேராசை தொழிலிலோ சொத்து இழந்தால் கூட ஏற்கும் உலகம் கடவுள் பணியில் இப்படி சகலமும் வீடு மாடு எல்லாம்
இழந்தவனை பார்த்து பைத்தியகார பட்டம் கட்டி சிரிக்கும்.
ஒரு கட்டத்தில் கையில் சல்லிகாசு இல்லாத பராரியாக ஆலய தீபமேற்றும் பணியை மற்றவர்கள் யாரோ செய்யும் நிலை வந்தது. இனி இந்த ஆலயத்தில் தன் கடமை முடிந்தது. சிவனும் இன்னொருவனை தேர்ந்தெடுத்துக் கொண்டான் என மகிழ்ந்த அடியார் சிதம்பரத்துக்கு நடந்தார். அங்கே சில காலம் தங்கி யிருந்து அங்கு ஆலயத்தில் தீபம் ஜொலிக்கும் காட்சி யையும் அதன் அழகையும் கைகூப்பி வணங்கி ஆனந் தமடைந்தார். ஒரு காலத்தில் தானும் ஏற்றியதை நினைத்து மகிழ்ந்தார், இப்போது முடியவில்லையே என ஏங்கி கண்ணீர் விட்டார். மறுபடியும் ஒரு வாய்ப்பு கிடைக்குமா? கிடைத்தால் இன்னும் நிறைய பெரிய தீபங்கள் ஏற்றலாமே என்று ஒரு ஆசை. கண்ணீர் விடும் கண்களைத் துடைத்துக் கொண்டார்.
வாழ்ந்து கெட்ட வர்கள் வாழ்க்கையில் பழம் செழுமை நினைவுகள் வந்து வந்து தொல்லை கொடுக்கும். வறுமையில் வாடும்போது எதிர்கால கனவுகள் நம்பிக் கை யளிப்பவை. எந்த நிலையிலும் அந்த சிவன டியார் மனம் சிவனையே சிந்தித்தது. ஆலயம் ஆலயமாக சென்று சிவனை தரிசித்தார்
சிதம்பரம் நடராஜர் கோவில் மேலவீதியில் யௌவ னேஸ்வரர் ஆலயம் உள்ளது. அம்பாள் “ஸ்ரீ யௌவ னாம்பாள்’ .அந்த ஆலயத்தில் சரியான தீபப் பராமரிப்பு இல்லாமல் இருண்டிருந்தது. வியாக்ரபாதர் பூஜித்த ஸ்தலம் என்பதால் அந்த க்ஷேத்ரம் திருபுலிச்
சுரம் என பெயர் பெற்றது.
திருநீலகண்டருக்கும் அவர் மனைவிக்கும் இறைவன் இளமையினைக் கொடுத்த இடம் என்பதால் சிவனுக்கு ”யௌவனேஸ்வரர்” அம்பாள் ”யௌவனாம்பாள்”. இன்றும் இளமையாக்கினார் கோவில் இருக்கிறது. படம் இணைத்திருக்கிறேன். ஆகவே அக்காலத்தில் திருப்புலீச்சுரம் தான் இப்போது சிதம்பரம். சித் : நினைவு . அம்பரம்: ஆகாயம். சித்+அம்பரம் =சிதம் பரம். நமது செங்குந்த சிவனடியார் அந்த யௌவனேஸ் வரர் யௌவனேஸ்வரர் ஆலயத்துக்கு தீபம் ஏற்ற எண்ணம் கொண்டார். கையில் காசில்லையே. நாலுபேரிடம் பிச்சை எடுத்து தீபமேற்ற மனம் ஒப்பவில்லை. ஏதாவது உடல் நோக கூலி வேலை செயது அந்த வருமானத்தில் தீபம் ஏற்ற அலைந்தார்.
சிதம்பர த்தில் எங்கு பார்த்தாலும் ஒரு வித நீளமான
புல் நிறைய காட்டில் கிடந்தது. ”கணம்புல்” என்று அதற்கு பெயர். காய்ந்த அந்த புல்லை வெட்டி கொண்டு வந்து வீடுகளுக்கு கூரை வேய்வார்கள். பேருக்கும் விளக்குமாறு , கோரைப்பாய் , முடைவார்கள். அதை அறுத்து , கட்டு கட்டாக கட்டி தெரிவில் கூவி விற்றார். குடிசை, மாட்டு கொட்டகை கூரை போட அதை விற்று கூலி பெற்றார். அந்த பணத்தை எடுத்துக்கொண்டு திருப்புலீச்சுரம் ஓடினார்.
ஆலயத்தில் இரவு பூஜை நேரம் நெய் வாங்கி விளக் கேற்றிவந்தார் அந்த அடியார். ”கணம்புல்” சுமந்து வந்த கூலியில் நெய் கொடுத்ததால் அவர் கணம்புல்லர், கணம்புல்ல நாயனார் என்ற பெயர் பெற்றார்.
காலையில் எழுந்து விளக்கு ஏற்றுவது, அப்புறம் புல் அறுக்க செல்வது, சாயந்திரம் புல்லை அறுத்து கட்டாக கட்டி தலையில் சுமந்து விற்று காசு கிடைத்ததும் நெய் வாங்கி இரவு அல்லது அர்த்தஜாம நேரத்தில் நெய் விளக்கு தீபம் ஏற்றினார். சொத்து அழிந்து, வீடு அழிந்து, வருமானம் அழிந்து அடிமட்ட கூலிக்கும் வந்தபின்னும் சிவனுக்கு விளக்கேற்றி அழகுபார்க்கும் தொண்டனின் அன்பில் மனம் உவந்த பரமேஸ்வரன் தன்னுடைய கடைசி கட்ட சோதனைக்கு நாயனாரை உபயோகித்தார்.
ஆம், சோதனையாக அன்று நாயனார் விற்ற புல்லை எவரும் வாங்கவில்லை. சாயந்திரத்திலிருந்து முன்னி ரவு வரை தெருத்தெருவாக நடந்து திரிந்தும் கூவி விற் றும் புல் விலைபோகவில்லை, பூஜை செய்யும் நேரம் நெருங்கி விட்டதே. பகவானே, பரமேஸ்வரா இது என்ன சோதனை?என்ன செய்வேன்?. தேடிப்பார்த்து கையில் மிச்ச மீதம் இருந்த சில்லறைகளை முடிந்தவரை கொஞ்சம் நெய் வாங்கிகொண்டு ஆலயம் நோக்கி புல்லோடு ஓடினார்.
மாலை நேரம் விளக்கினை ஏற்றிவிட்டார், விளக்கு அர்த்த ஜாமம் வரை எரிய வேண்டும் என்பது ஆகம விதி, எப்பாடுபட்டாவது இத்தனைகாலம் அதைத்தான் செய்துவந்தார் கணம்புல்ல நாயனார். அக்காலத்தில் சூரியன் நிழலை வைத்து காலத்தை கணக்கிட்டார்கள். எத்தனை நாழிகை என்று ஒரு உத்தேச கணக்கு. .சூரியனின் நிழலில் கணித்தல், பானையில் இருக்கும் நீரினை கணக்கிட்டு நேரத்தை கணித்தல் என பல வழிகள் அவர்களுக்கு தெரியும். பகல் முப்பது நாழிகை, இரவு முப்பது நாழிகை. ஆக ஒரு நாளில் (பகல், இரவு சேர்ந்து) அறுபது நாழிகைகள். ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்கள் எனும் காலவரையரை கொண்டது, 2.5 நாழிகைகள் ஒரு ஹோரை. இப்படி மூணே முக்கால் நாழிகைகள் கொண்டது ஒரு முகூர்த்தம். ரெண்டு முஹூர்த்தம் ஒரு சாமம் , 4 சாமம் கொண்டது ஒரு பகல், 4 சாமம் கொண்டது ஒரு இரவு, இரு பொழுதுகள் சேர்ந்தால் ஒரு நாள் அதாவது 60 நாழிகைகள். சூரியன் ராத்திரி வேளைகளில் நக்ஷத்ரத்தைக் கொண்டு நாழிகை கணக்கு போடுவார்கள். ஒரு பாட்டு இருக்கிறது. அது நேரக்கணக்கு போட உதவியது. எல்லோருக்கும் அது மனப்பாடம்.
வானில் எந்த நக்ஷத்ரத்துக்கு என்ன பெயர் என்பதும் எல்லோருக்கும் தெரிந்திருந்தது, அதுதான் அவர்களின் கல்வி.
“சித்திரைக்குப்பூசமுதல் சீராவணிக்கனுஷமாம்
அத்தனுசுக்குத்திரட்டாதியாம்; நித்த நித்தம்
ஏதுச்சமானாலும் இரண்டேகாலிற் பெருக்கி
மாதமைந்து தள்ளி மதி…”
அர்த்தம் புரியவில்லை அல்லவா? இது தான் விளக்கம்:
சித்திரையிலிருந்து நான்கு மாதங்களுக்கு (இது முதல் சுற்று) பூச நக்ஷத்ரத்திலிருந்து எண்ண வேண்டும், ஆவணியிலிருந்து நான்கு மாதத்திற்கு (இது இரண்டா வது சுற்று) அனுஷ நக்ஷத்ரத்திலிருந்து எண்ண வேண் டும், மார்கழி மாதத்திலிருந்து நான்கு மாதத்திற்கு (இது மூன்றாவது சுற்று) உத்திரட்டாதியிலிருந்து எண்ண வேண்டும். அப்படி பன்னிரண்டு மாதங்களையும் நாலு நாலு மாதமாக மூன்று பிரிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு பிரிவிலும் ஒன்பது நக்ஷத்திரமாக 27 நக்ஷத்திரமும் கணக்கில் வரும். 12 மாதமும் ஆயிற்று. 27 நட்சத்திரமுமாயிற்று.
அடுத்தது ஒவ்வொரு நேரமும் எந்த நக்ஷத்ரம் உச்சத்தில் இருக்கிறதோ எண்ணிக்கையை இரண்டேகாலால் பெருக்கி, வரும் தொகையிலிருந்து, 5 மாதத்தைக் கழிக்க வேண்டும். அது எந்தச் சுற்றில் வருகிறதோ அந்தச் சுற்றில் அது எத்தனையாவது மாதம் என்ற எண்ணிக்கை. இப்படி கணிக்கப்படும் எண் தான் சூரியன் அஸ்தமித்ததிலிருந்து எத்தனை நாழிகைகள் ஆகியிருக்கின்றன என்பதைத் தெரிவிக்கும் எண். கொஞ்சம் உள்ளே போய் ஒரு உதாரணம் சொல்கிறேன்:
உதாரணமாக வைகாசி 2ம் தேதியன்று இரவில் நாம் சுவாதி (Arcturus: Alpha-Bootis) நக்ஷத்திரத்தை உச்சத்தில் பார்ப்பதாகக் கொள்வோம். வைகாசி மாதம் முதல் சுற்றில் இரண்டாவது மாதம். அதனால் 5m = 10. பூச நட்சத்திரத்திலிருந்து எண்ணினால் சுவாதி எட்டாவது நட்சத்திரம். 8 x 2 1/4 = 18. ஆக நமக்குக் கிடைக்கும் எண்ணிக்கை 18-10 = 8. 8 நாழிகைகள் = 3 மணி 12 நிமிடம். இதனால் அப்போதைய நேரம் ஏறக்குறைய 9-12 p.m.
மாசி மாதம் 30ம் தேதியன்று இரவில் சித்திரை (Spica)யை உச்சத்தில் பார்ப்பதாகக் கொள்வோம். மாசி மாதம் மூன்றாவது சுற்றில் மூன்றாவது மாதம். அதனால் 5m = 5×3 = 15. இப்பொழுது உத்திரட்டாதியிலிருந்து எண்ண வேண்டும். உத்திரட்டாதியிலிருந்து சித்திரை 16வது நட்சத்திரம். இதை இரண்டேகாலால் பெருக்க, கிடைப்பது 36. 36 – 15 =21. சூரிய அஸ்தமனத்திலிருந்து 21 நாழிகை கணக்கிட்டால், இரவு 2-24 A.M. என்பது அப்போதைய நேரத்தின் தோராயமான கணிப்பு.
மரக்கலங்களில் கடலில் செல்வோர்களும் இப்படி தான் நக்ஷத்திர கணக்கில் நேரம் அறிந்தார்கள். இதற்கு மேல் சொன்னால் என்னை அடிக்க வருவீர்கள் என்பதால் பேசாமல் உங்கள் மொபைலில் இப்போது மணி பார்த்துக் கொள்ளுங்கள். மேலே சொன்னதை மறந்து என்னை மன்னித்து விடுங்கள்.
கணம்புல்ல நாயனார் இப்படி நேரம் கணித்து விளக்கு ஏற்றினார். ஓரளவு இருந்த நெய் முடிந்தது ஆனால் பொழுது முடியவில்லை. விளக்கு நெய்யில்லாமல் எப்படி எரியும்? அர்த்த ஜாமம் ஆரம்பித்திருப்பதை நட்சத்திரம் மூலம் கண்டார். ஆனால் எரிக்க நெய் இல்லை. அர்த்த ஜாமத்தில் விளக்கு எரியாவிட்டால் அது இதுகாலம் அவர் காத்த தொண்டுக்கு அர்த்தமில்லாமல் போய்விடும் அல்லவா?
விளக்கு எரிய என்ன செய்யலாம்? இன்னும் அர்த்த ஜாமம் தொடர்ந்தது, அடுத்த நட்சத்திரம் இன்னும் வரவில்லை.
உடனே நாயனார் தன்னுடைய கணம்புல்லை எடுத்து திரியாக்கி அதை எரித்தார், அது கொஞ்சநேரம் வந்தது விரைவாக எரியும் தன்மை கொண்டது என்பதாலும் எண்ணெயோ நெய்யோ இல்லை என்பதாலும் சட்டென எரிந்து முடித்தது.
கண நாதர் புல் கட்டிவரும் கயிறை எரித்தார், அதுவும் முடிந்தது. அதுவும் தீர்ந்தபின்?? தன்னுடைய வேஷ்டி யை திரியாக்கி எரித்தார், அதுவும் எரிந்து முடிந்தது. புல் அறுக்கும் அரிவாளின் கைபிடி மரத்தால் ஆனது கைவசம் இருக்கிறதே! அதையும் எரித்தார். அடடா நக்ஷத்ரம் இன்னும் மாறவில்லை. என்ன செய்வது??
பூஜைநேரம் முடியும் வரை தீபமும் பூஜையின் கடைசி நொடிவரை எரிந்து கொண்டு இருக்க வேண்டும். இப்படி எரியும் தீபங்கள் தூங்கா மணி விளக்குகள்.
தலையில் கைவைத்து யோசித்தார். ஆஹா இது இத்தனை நாழி எப்படி எனக்கு தோன்றாமல் போய் விட்டது?தலையில் கைவைத்தபொழுதுதான் அவரின் குடுமி கையில் பட்டது. சிகை,கூந்தல், முடி நீளமாக இருந்தது வசதியாக போய்விட்டது. நீண்ட முடி இருந்தால் பிரபஞ்ச சக்தி ஈர்க்கபட்டு உள்ளுணர்வும் ஆற்றலும் பெருகும் என்பது நம்பிக்கை, அதில் உண்மையும் இருந்தது.சிவனுக்கே ஜடா முடி உண்டே.
.
இன்னும் சில நிமிடம் தாண்டிவிட்டால் ஜாமம் முடிந்துவிடும் ஆனால் அதுவரை தீபம் எரிய ஏதாவது ஒரு வஸ்து வேண்டுமே. கடைசி நேர நொடிகள் அவை. கணம்புல்ல நாயனார் சட்டென சிவலிங்கம் முன் அமர்ந்து தன் நீண்ட முடியினை கொளுத்தி அமர்ந்தார். தலையில் நீர் சூடிய சிவனுக்காக தனது தலையில் நெருப்பு சூடி நின்ற அந்த கணம்புல்ல அடியாரை அதற்கு மேல் பரம சிவன் சோதிக்க விரும்பவில்லை, நெருப்பினை அணைக்கும் நீராக‌ அவரே ஓடிவந் தார்.
தன்னை முழுக்க ஒப்புகொடுத்த அந்த பக்தன் மானிட முயற்சியின் எல்லைக்கு சென்றுவிட்டு இனி தன்னால் ஆவது ஒன்றுமில்லை என ஆணவம் நீங்கி சரணடைந்த ஒருவனுக்கு ரிஷப வாகனத்தில் தோன்றிய சிவன்
“என்மேல் கொண்ட அன்பால் உன்னையே எரிக்க வந்த அடியானே, பக்தி தீயில் உன்னையே எரிக்க துணிந்த உன்னை மெச்சினோம்” என சொல்லி அவரை வாழ்த்தி அவரை காத்து நின்றார்,
சிவ தர்சனம் பெற்ற கணம்புல்ல நாயனார் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தனர். அவர் இழந்தெல்லாம் அவருக்கு பன்மடங்காய் கிடைத்தது, வாழ்வாங்கு வாழ்ந்த அந்த அடியார் வாழ்நாளெல்லாம் சிவனுக்கு ஜோதியிட்டு கைலாயமும் அடைந்தார் என்ற அற்புத சரித்திரம் கணம்புல்ல நாயனார் வாழ்க்கை. நன்றாக இருக்கிற தல் லவா?
கோயிலுக்கு போகும்போதெல்லாம் நெய் வாங்கி வேண்டிக்கொண்டு விளக்கேற்றுங்கள்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *