ARUPATHTHU MOOVAR J K SIVAN

அறுபத்து   மூவர்  –      நங்கநல்லூர் J K  SIVAN
ருத்திர பசுபதி நாயனார்

திருச்சி புலிவலம் முசிறி சாலையில் தண்டலை என்னும் ஊரிலிருந்து  4 கி.மீ.தூரத்தில்  திருத்தலையூர்  க்ஷேத்ரம் உள்ளது. இங்கே  ஸ்வயம்பூ லிங்கத்தின் பெயர்  ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர்.  அம்பாள் ஸ்ரீ குங்கும சௌந்தர்யாம்பிகை.
பரமேஸ்வரனை ஆராதிக்க  பல வித யாக தவங்கள் உண்டு. ரிஷி தவம், முனி தவம், மோன தவம், யோக தவம், யாக தவம், புங்கவ தவம், அசுர தவம், ராட்சஸ தவம் என்பது போல் பங்க தவம் என்ற ஒரு   கடினமான தவத்தை தான் லங்கேஸ்வரன்  ராவணன் புரிந்தான்.   இங்கே வந்து  தன்  உடம்பில்   ஒவ்வொரு அங்கமாக  வெட்டி யாக குண்டத்தில்  அர்ப்பணித்தான்.  இது தான் பங்க தவ  யாகம்.  எந்த அளவு அவனுக்கு மனோ திடம்,  சிவ  பக்தி, வைராக்யம் என்று யோசியுங்கள்.  இப்படி ஒரு தவ  யாகத்தை  ராவணன் எதற்கு  புரிந்தான்?   மரணம் இல்லாத நித்திய ஜீவ வாழ்வைப் பெற. 

 ஆகாச   மார்க்கமாக புஷ்பக விமானத்தில்   மனைவி மண்டோதரியுடன் வந்த ராவணன் கண்களில்  வெண்மேக படலங்கள் சூழ்ந்த இந்த க்ஷேத்ரம் தென்பட்டது.  வெண்மேகம்  அல்ல அது யாக புகை என்று தெரிந்தது.    சப்த ரிஷிகளின்  யாக  குண்டங்களிலிருந்து எழுந்த அக்னி புகை.   கீழே இறங்கி  சப்த ரிஷிகளையும்   தம்பதி   சமேதனாக  ராவணன்  பக்தியுடன் தொழுது வணங்கினான்.  ரிஷிகள்  ராஜோபசாரம்  செய்தார்கள்.
”ரிஷி ஸ்ரேஷ்டர்களே, எனக்கு  எந்த  யாகம்  செய்தால்  மரணமில்லாத பெருவாழ்வு கிடைக்கும் என்று அறிவுரை சொல்லுங்கள் ?  என்றான் இராவணன்.
வசிஷ்டர்  ”ராவணா, இந்த இடத்தில் எவர் இறைவன் ஸ்ரீசப்த ரிஷியை வேண்டினாலும் அவர்கள் பிரார்த்தனையை நிறைவேற்றி வைப்பான். ஆனால், உனக்கு எது நல்லதோ அதை வேண்டிப் பெறுவாயாக,” என்றார்.
ராவணன் தம்பதியர் திருத்தலையூர் க்ஷேத்ரத்திலேயே தங்கினார்கள்.   ராவணன் ஒரு பெரிய யாக குண்டத்தை நிர்மாணித்து பங்க யாகத்தை ஆரம்பித்தான் ராவணன்.  ஒரு யுக காலம் யாகம் நிறைவேற்றியும் எந்த வித  தேவ தரிசனமும்  கிடைக்காததால் பங்க வேள்வியின் உச்சகட்டமாக ராவணன் தன்னுடைய உடல் உறுப்புகளை வாளால் வெட்டி யாக குண்டத்தில் ஆஹூதியாக போட ஆரம்பித்தான்.   முதலில் தன்னுடைய வலது கால், அப்புறம்  இடது காலை வெட்டி யாக குண்டத்தில் வீசினான். அப்போதும் எந்த பலனுமில்லை.
படிப்பதற்கு இது கதை போல் தோன்றினாலும் ராவணன் என்ன வேதனையை அடைந்திருப்பான் என்பதை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. ஆனால், அவன் அடைந்த வேதனையை விட சாகா வரம் பெற வேண்டும் என்ற அசுர எண்ணம் மேலோங்கி நின்ற காரணத்தால் உடல் வலியைப் பொருட்படுத்தாது உடல் அங்கங்களை வெட்டிப் போடத் துணிந்தான் ராவணன்.  காலில்லாமல் யாக குண்டத்தை விட்டு நகர முடியாத சூழ்நிலையில் தன்னுடைய வலது கையால் இடது கையை வெட்டி யாக குண்டத்தில் போட்டான் ராவணன்.  அப்போதும்  பலனில்லை. கடைசியில் இருக்கும் ஒரே  கையால் ராவணனிடம் எஞ்சி இருந்தது ஒரு கை மட்டுமே. அதையும் இழக்கத் தயாரானான் ராவணன். தன்னுடைய வலது கையையும்  அர்ப்பணித்தான். அதுவும்  அக்னியில்  சாம்பலானது.   கை , கால்கள் இல்லாமல் வெறும் சதைப் பிண்டமாகக் கிடந்த ராவணன் எவ்வளவோ வேதனையுடனும் மன ஏக்கத்துடனும் யாக குண்டத்தை உற்று நோக்கினான்.  தெய்வம்  ப்ரசன்னமாகவில்லை.  இருக்கும் தலையையும் ஆஹூதியாக அளிக்க  தயாரானான்  ராவணன்.
அப்போது தான்  முன்பு  கண்ட  கைலாசம்  மாதிரியான  அற்புத வெண் மேகக் கூட்டங்கள் சூழ்ந்தன. அந்த வெண் மேகக் கூட்டங்கள் இடையேஅதைவிட வெண்மையான ரிஷப வாக ஆரூடராக  பரமேஸ்வரன்  அக்னி பிழம்பாக  அம்பாள்  குங்கும சௌந்தரியோடு  திவ்ய தரிசனம் தந்தார்.  ”இறைவா, பரம்பொருளே, உன்னருளால் சாகா வரம் கொடு”  என்றான்.
 ”ராவணா, சாகா வரம் என்பது இயற்கைக்கு புறம்பானது. விதியை மீறியது. இயற்கையும் இறையும் வேறல்ல. விதியும் பரமும் வேறல்ல. எனவே வேறு வரம் கேள்  தருகிறேன்”  —  பரமேஸ்வரன்   ராவணேஸ்வரன் தன்   முடிவை தானே  தேடிக்கொண்டான். பரிவாதிணி என்ற அற்புத வீணையை ராவணனுக்கு  பரிசளித்தார்  சிவன். . ஆயிரம் நரம்புகளால் அலங்கரிக்கப்பட்ட அந்த சிவ பிரசாதமான அற்புத வீணை  ராவணனின்  மரணத்தைப் பற்றிய செய்திகளையும் எதிர்கால சம்பவங்களையும்  குறிப்பால் உணர்த்தும் சக்தி பெற்றது.   அம்பாள்  மண்டோதரிக்கு குங்கும  பிரசாதம் தந்தாள். , ”அகல்யா திரௌபதி சீதா தாரா மண்டோதரி ததா பஞ்ச கன்யா ஸ்மரேந்நித்யம் மகா பாதக நாசனம்,” என்ற பஞ்ச கன்யா சுமங்கலி தோத்திரத்தில் மண்டோதரி இடம் பெற்றவள் .
ராவணன்  தலையை  யாகத்தில் அர்ப்பணிக்க முன்வந்ததால்  இந்த  க்ஷேத்ரம்  திருத்தலையூர் என பெயர் பெற்றது. அவன் பிரதிஷ்டை செய்த  லிங்கம் தான் சப்த ரிஷீஸ்வரர்.  7000 வருஷத்திய  கோவிலின்  தற்போதைய  உருவம் தான்   திருத்தலையூர்  சிவாலயம்.  இங்கே  உள்ள நாகலிங்க மரத்தில்  ஒவ்வொரு இலைக்கும் ஒரு பெயர் உண்டாம். திருத்தலையூர் அகோராக்னி தீர்த்தம் பல விதமான உஷ்ண நோய்களை தீர்க்கக் கூடிய தன்மை உடையது. குளத்து  மண்ணிற்கு வசிஷ்ட ஔஷதம் என்று சித்தர்கள் பெயர் சூட்டி உள்ளார்கள்.
ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் என்னும் நாமத்துடன் இறைவன் எங்கெல்லாம்  காட்சி தருகிறானோ, அந்த க்ஷேத்ரங்களில் சப்தஸ்வர சக்திகள் இயற்கையாகவே பெருகி இருக்கும்.  பகவான் மேல் கீர்த்தனைகளைப் பாடுவதும், நாதஸ்வரம், தவில், வீணை, புல்லாங்குழல், தவில், மிருதங்கம், வயலின் போன்ற இசை வாத்தியங்களை வாசித்து இறைவனுக்கு சேவை ஆற்றுதலும் மிகவும் நலமாகும்.
இந்த ஊரில்  பிராமண குடும்பம் ஒன்றில்  பிறந்து  வாழ்ந்த ஒருவர் பசுபதி.  அவர் சதா காலமும் ருத்ர பாராயணத்திலேயே தன் வாழ்க்கை முழுமையையும் செலவிட்டதால்  எல்லோரும் அவரை  ருத்ரபசுபதி   என்பார்கள்.  சிறு வயது முதலே சிவன் மேல் பக்தி. வேதம் கற்றபின் பசுபதியின் மனதில் ருத்ர ஜபம் நீங்காது  இடம் பெற்றது.  ஈஸ்வரன்  ருத்ர ஜெபத்தில் மகிழ்பவர்..பசுபதி ஜலத்தில்  கழுத்தளவு நின்று  இரு கரம் உயர்த்தி கூப்பி  ருத்ரஜெபம் தினமும் செய்பவர். அதன்பின் சிவன் சந்நிதி சென்று அங்கு அமர்ந்து நாள் முழுவதும் ருத்திர ஜபமே செய்துகொண்டிருப்பார். அங்கு வழங்கப்படும் பிரசாதம் உண்டு, குளத்து நீரையே அருந்தி வேறு நினைவு இன்றி சிவ சிந்தையோடு ருத்திர பாராயணம் செய்துகொண்டிருப்பார். இவரது சிவ பக்தியையும் ருத்திர பாராயணம் செய்யும் சிரத்தையும்  அவரை  ‘ருத்திர பசுபதி  நாயனாராக்கி விட்டது.  தன் வாழ்நாள் முழுமையும் ருத்திர ஜபத்தைச் செய்து, ஒரு புரட்டாசி அசுபதி நட்சத்திரநாளில் இறைவனின் திருவடியை அடைந்தார் பசுபதி நாயனார்.  திருத்தலையூர்  சப்தரிஷீஸ்வரருக்கு இன்னொருபெயர்  பசுபதிநாதர்.  . பசுபதி நாயனார் குருபூசை புரட்டாசி மாதம் அசுவினி நட்சத்திரத்தில் நடந்து வருகிறது.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *