AANGARAI ANNADHAANAM SUBBAIYER J K SIVAN

ஆங்கரை அன்னதானம் சுப்பையர் …
நங்கநல்லூர் J K SIVAN
முகநூல் புகழ் வரகூரான் நாராயணன் நிறைய மஹா பெரியவா விஷயங்கள் வைத்திருப்பவர். எல்லாமே அற்புதமான செய்திகள். எங்கிருந்தெல்லாமோ தேனீ போல் தேனினும் இனிய பெரியவா விஷயங்களை சேகரித்து அளிப்பவர்.
நான் விரும்பி படிக்கும் ஒரு அற்புத எழுத்தாளர். இது அவரது எள்ளு தாத்தாவின் அப்பா கதை-
சுமார் நூற்று அறுபது வருஷம் முன்பு, ஆங்கரை எனும் கொள்ளிட வடகரையில் உள்ள ஒரு கிராமத்தில் (லால்குடிக்கு வடமேற்கே 4 கிமீ. தூரம்) அக்ரஹாரத்தில் 200 க்கு மேல் பிராமண குடும்பங்கள் வாழ்ந்தது. முக்கால்வாசி பேர் மழநாட்டுப் பிரஹசரண வகுப்பை சேர்ந்த சிவ பக்தர்கள். அந்த காலத்தில் சுப்பையர் என்ற பரம்பரை பணக்கார மிராசுதாரர் அங்கே வசித்தார். இரண்டாயிரம் ஏகரா நன்செய் நில சொந்தக்காரர். அந்த நிலம் ஏழு கிராமங்கள் பூரா அடங்கிய நிலம். தெய்வ பக்தி, தர்ம சிந்தனை கொண்டவர். நித்ய பூஜை பண்ணிவிட்டு அதிதி உபச்சாரம் பண்ணி போஜனம் செய்த பிறகு தான் சாப்பிடுவார்.
இதில் அந்த காலத்தில் எவ்வளவு தெய்வபக்தி, தர்ம சிந்தனை, இரக்கம், நேர்மை, நியாயம், எல்லோரிடமும் இருந்தது என்பது புரியும். ரோஜாமலரிடையே முள் இருப்பது போல் சில தீய குணங்கள் கொண்டவரும் இருந்ததும் தெரியவரும். வெளிச்சம் இருட்டு, பகல் இரவு, சேர்ந்தும் தான் நமது வாழ்க்கை அமைகிறது.
இதில் வரும் சம்பவத்தை ரெண்டு மஹான்கள் ஏற்கனவே சொல்லியிருப்பது ஆச்சர்யம். ஒன்று மஹா பெரியவா அந்த மனிதரின் எள்ளுப்பேரனுக்கு சொன்னது. இன்னொன்று உ.வே.சாமிநாதய்யரும் எழுதியிருக்கிறார். நான் கீழே தருவது தமிழ் தாத்தா நினைவில் இருந்து எழுதியதில் கொஞ்சம் :
திரிசிரபுரம், ஸ்ரீரங்கம், திருவானைக்கா க்ஷேத்ரம் போகும் வழிப்போக்க பாதசாரிகள் அவர் வீட்டுத் திண்ணையில் சௌகர்யமாக அமர்ந்து, படுத்து ஓய்வெடுப்பார்கள். அவர்களுக்கு ஓய்வும் பசியாற நல்ல உணவும் கிடைக்கும். சுப்பையர் மனம் அவ்வளவு தாராளமானது. அவர் வீடு பெரிய ஐந்து கட்டு விசாலமான கிராம வீடு. ஐம்பது பேர் அமர்ந்து சாப்பிடலாம். அவர் வீட்டுக்கு பசி யென்று எந்த நேரத்தில் யார் வந்தாலும் வயிறார உணவு கிடைக்கும். வள்ளலார் சொன்ன பசிப்பிணி மருத்துவர் தான் அன்னதானம் சுப்பையர். அவருடைய வீடு கூட்டுக்குடும்பம். அவர் சகோதரர்கள் குடும்பங்களும் அவரோடு வாழ்ந்தவர்கள். வீட்டில் 25-30 பேருக்கு குறைவில்லாமல் எப்போதும் இருப்பார்கள். அன்னதானத்துக்கு வீட்டில் உள்ள பெண்களே சமைப்பார்கள். உபசரிப்பார்கள்.குழந்தைகள் கூட இலை போடும். பரிமாறும். தண்ணீர் வழங்கும்.
அந்த காலத்தில் வடாம், வற்றல், ஊறுகாய்கள், பொடிகள், தோசை இட்லி மாவுகள், மிளகாய் பொடி ,எல்லாமே வீட்டிலே
யே கல்லுரல், அம்மி, இயந்திரம் போன்ற உபகரணங்களில் தயாரிப்பார்கள். அப்பளம் இடுவார்கள். வீட்டிலேயே சகலமும் கிடைக்கும் அன்ன சத்திரமாக விளங்கியது. வீட்டிலேயே கொள்ளையில் தேங்காய், மாங்காய், காய்கறிகள், கீரைகள் ,சகலமும் கிடைத்தது. சுப்பையர் குடும்பத்தில் எல்லோரும் தர்மத்திற்காக மனதில் அன்போடு உழைத்தவர்கள். பரோபகார புண்யம் ஒன்றே அவர்கள் சம்பாதித்த பணம். சிவ ஆராதனமாக இந்த அன்னதான சேவை நடந்து வந்தது.
ஒரு சமயம் மழை பெய்யாமல் ஆறுகளில் ஜலம் போதியளவு வரவில்லை, விளை நிலங்களில் விளைச்சல் குறைந்தது.அப்படி இருந்தும் சுப்பையர் அன்னதானத்தைக் குறைக்கவில்லை. இப்படி ஒருவர் அன்னதாதா,உணவிடுபவர், இருக்கும் செய்தி எங்கும் பரவும் இல்லையா? பல ஏழைகள் சுப்பையர் வீட்டிற்கு வந்து உண்டு அவரை வாழ்த்தினார்கள். விளைச்சல் இல்லாமல் அன்னதானம் செய்வது கஷ்டமாக இருந்தது. இருந்தாலும் தர்மம் தலை காக்கும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையில் சுப்பையர் வீட்டில் பெண்கள் நகைகளை விற்றார். அடகு வைத்து கடன் வாங்கினார். அவர் வீட்டு பெண்களும் கோபிக்கவோ வருத்தப்போடவோ இல்லை, ஒத்துழைத்து அன்னதானம் சிறப்பாக தொடர உதவினார்கள். அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டிய கிஸ்தி வரி, வட்டி, கட்டக் கூட கஷ்டமாக இருந்தது
“இந்தக் காலத்தில் அன்னம் போடாவிட்டால் இவ்வளவு நாள் நான் போட்டும் பயன் இல்லை; இப்போதுதான் அவசியம் இந்தத் தர்மத்தைச் செய்துவரவேண்டும். நஷ்டமென்பது எல்லோருக்கும் இருப்பதுதானே? பல ஏழைகள் பசியோடு வரும்போது நாம் சும்மா இருப்பதைவிட இறந்துவிடலாம். இப்பொழுது கடன்பட்டாவது இந்தத் தர்மத்தைச் செய்து வந்தால் நன்றாக விளையும் காலத்தில் உண்டாகும் லாபத்தினால் ஈடு செய்து கொள்ளலாம். இப்பொழுது செய்யாமல் நிறுத்திவிட்டால் அந்த நஷ்டத்திற்கு ஈடு செய்யவே முடியாது” என்றார் சுப்பையர்..
வெள்ளைக்கார அதிகாரிகள் பாக்கியை வசூலிக்க சுப்பையர் நிலங்களை ஏலத்துக்கு விட்டபோது அவரைப் பற்றி அவர் உதார குணம், அன்னதான கைங்கர்யம் தெரிந்தவர்கள் எவரும் ஏலத்தில் நிலத்தை வாங்க முன்வரவில்லை. அன்னதானம் தொடர்ந்து நடந்தது. மணியக்காரர், முதல் மேல் அதிகாரிகள் தாசில்தார் வரை விஷயம் போய் உயர் அதிகாரி வெள்ளைக்கார கலெக்ட ருக்கு சுப்பையர் வரி கிஸ்தி கட்டாமல் இருப்பது தெரிந்தது. அந்த காலத்தில் வெள்ளைக்காரர் அதிகளுக்கு தமிழ் நன்றாக தெரியும். சகல விஷயங்களும் சுப்பையர் பற்றி அறிந்து கொண்டான். ஆங்கரைக்கு வந்தான்.
ன்.அவன் தர்ம சிந்தனை உடையவன். கடவுள் பக்தி உள்ளவன். விஷயங்களை பூராக ஆராய்ந்தான். சுப்பையர் மீது பொறாமை கொண்டவர்கள் சொல்வதை புறக்கணித்தான். ஊரில் ரகசியமாக எல்லோரிடமும் சுப்பையர் பற்றி விசாரித்து உண்மையை அறிந்து கொண்டான். எல்லாம் பரமசிவத்தின் திருவுள்ளப்படி நடக்கும்’ என்ற மனச்சாந்தியோடு சுப்பையர் அன்னதானத்தைக் குறைவின்றி நடத்திவந்தார்.
வழக்கமாக சுப்பையர் எல்லோருக்கும் அன்னதானம் செய்தபின் சிலர் சாப்பிடும் அளவுக்கு உணவை தனியாக எடுத்து வைத்து நள்ளிரவு போன்ற அகாலத்தில் நெடுந் தூரத்திலிருந்து வெளியூர்களில் இருந்து பசியோடு வருபவர்களுக்கு வழங்க வைத்திருப்பார். அவர்களை அழைத்து உபசரிக்க இரவெல்லாம் திண்ணையிலே சுப்பையர் படுத்திருப்பார்.
ஒருநாள் நள்ளிரவுக்கு மேல் ”சாமீ” என்று யாரோ அழைக்கும் குரல் கேட்டது. சுப்பையர் தூக்கத்தைக் கலைத்தது. அவர் விழித்தெழுந்து சத்தம் வந்த பக்கம் சென்றார். அக்ரஹாரத்தின் கோடியிலிருந்து யாரோ ஒருவன்,சாமீ! சாமீ என்று கத்திக் கொண்டிருந்தான் அந்த காலத்தில் அக்ராஹாரத்தில் எல்லோரும் நுழையமாட்டார்கள். சுப்பையர் இருளில் முகம் தெரியாத அவனை நோக்கி கேட்டார்.
”யாருப்பா என்ன வேணும்?”
”சாமீ! நான் பக்கத்திலுள்ள ஊர் தீண்ட தகாத சாதிக்காரன். வேறு ஊருக்குப் போய்த் திரும்பி வாரேன். பசி காதை அடிக்குது. ஒரு அடி கூட மேலே எடுத்து வைக்க முடியலீங்க சாமி. எப்படியோ இவ்வளவு தூரம் நடந்து வந்தேன். இங்கே வந்தா சோறு கிடைக்கும்னு சொன்னாங்க”
”நீ கொஞ்ச நேரம் இங்கேயே இருப்பா. நான் போய் உனக்கு உணவு கொண்டுவரேன்”
வெளிக்கதவைத் திறந்து சமையல் கட்டுக்கு போனார். அங்கிருந்த கறி, குழம்பு, ரஸம், மோர் முதலியவற்றைத் தனித்தனியே தொன்னைகளிலும் கொட்டாங்கச்சிகளிலும் எடுத்து, அன்னத்தை ஒரு பெரிய மரக்காலில் போட்டு அதன்
மேல் கறி முதலியவற்றை வைத்து மேலே இலையொன்றால் மூடினார். அப்படியே அதை எடுத்துக்கொண்டு தெருவின் கோடிக்கு வந்து அவன் எதிரே வைத்தார்.
”இந்தாப்பா! இந்த மரக்காலில் நிறைய சாதம், குழம்பு, கறி, ரஸம், எல்லாம் வைத்திருக்கிறேன். அதோ இருக்கிறதே, அந்த
வாய்க்காலுக்குப் போய் கைகால் கழுவி சாப்பிட்டுவிட்டு உன் ஊருக்குப் போ. முடியுமானால் மரக்காலை நாளைக்குக் கொண்டுவந்து கொடு; இல்லாவிட்டால் நீயே வச்சுக்கோ’
சுப்பையர் வைத்த அந்த மரக்காலை அந்த ஏழை எடுத்துக்கொண்டு, “சாமீ! உங்களைத் தெய்வம் குறைவில்லாமல் காப்பாற்றும்; தர்மம் தலை காக்கும்” என்று வாழ்த்திவிட்டுச் சென்றான். அவனுடைய பேச்சில் ஒருவிதமான நாக்குழறல் இருந்தது; “பாவம்! பசியினால் பேசக்கூட முடிய வில்லை! நாக்குக் குழறுகிறது! என்று சுப்பையர் எண்ணி இரங்கினார். அவன் பசியைத் தீர்க்க நேர்ந்தது குறித்து மகிழ்ந்து வீடு வந்து சேர்ந்தார்.
ஏற்கனவே இது நடந்த மறுநாள் லாலுகுடியில் ‘முகாம்’ செய்திருந்த கலெக்டர் சுப்பையரை தம்மிடம் விசாரணைக்கு நேரில் ஆஜராக சில நாள் முன்பே உத்தரவிட்டிருந்தார்.
விசாரணை நாளன்று சுப்பையர் உரியகாலத்தில் செல்லாமல் நேரம் கழித்துச் சென்றார்.அவர் கலெக்டர் துரையின் முன் நிறுத்தப்பட்டார்.
நீர்க்காவி ஏறிப் பழுப்பு நிறமாயிருந்த அவர் வஸ்திரம் இடையிடையே தையலையுடையதாயும், சில இடங்களில் முடியப்பட்டும் இருந்தது; அவருடைய உடம்பில் விபூதி விளங்கியது; மார்பில் ருத்திராட்ச மாலை இருந்தது. அவர் நேரம் கழித்துவந்ததனாற் கோபம் கொண்டவரைப் போல் இருந்தார் கலெக்டர். முகத்திற் கோபக் குறி புலப்பட்டது;கலெக்டர்: “இவரா சுப்பையர்?”தாசில்தார்: “ஆமாம்!” என்றார்.
கலெக்டர்: ” இவ்வளவு ஏழையாக இருப்பவரையா நீர் பெரிய பணக்காரரென்றும், வரிப்பணம் அதிகமாகத் தரவேண்டு மென்றும் எழுதியிருக்கிறீர்?” என்று கேட்டார்.
தாசில்தார்: ”இதெல்லாம் வேஷம். இப்படி வந்தால் துரையவர்கள் மனமிரங்கி வரியை வஜா செய்யக் கூடுமென்ற வஞ்சக எண்ணத்தோடு வந்திருக்கிறார்”.
கலெக்டர் அவரைக் கையமர்த்திவிட்டுச் சுப்பையரைப் பார்த்தார் “நீரா ஆங்கரைச் சுப்பையர்?”
சுப்பையர்: ”ஆம்.கலெக்டர்”ஐயா.
” நீர் ஏன் சரியான காலத்தில் வரவில்லை? சர்க்கார் உத்தரவை அலக்ஷியம் செய்யலாமா?”
சுப்பையர்: துரையவர்கள் கோபித்துக்கொள்ளக் கூடாது: காலையில் எழுந்து ஸ்நானம் செய்து பூஜையை முடித்துக் கொண்டு நான் வருகிறவர்களுக்கு ஆகாரம் செய்விப்பது வழக்கம். இன்று அந்த வழக்கப்படியே யாவரும் போஜனம் செய்தபிறகு வந்தேன்.
கலெக்டர்: உம்முடைய வரிப்பணம் அதிகமாகப் பாக்கி இருக்கிறதே, தெரியுமா??
சுப்பையர்: தெரியும், என்மேல் வஞ்சகம் இல்லை; நிலம் சரியானபடி விளையாமையால் வரிப்பணத்தை என்னால் இப்பொழுது செலுத்த முடியவில்லை
கலெக்டர்: அன்னதானம் மட்டும் எப்படிச் செய்கிறீர்?
சுப்பையர்: கிடைக்கும் நெல்லையெல்லாம் வைத்துக்கொண்டு செய்கிறேன். முன்பு அன்னதானம் செய்தது போக மிஞ்சுவதில் வரியைச் செலுத்துவேன். இப்பொழுது அது முடியவில்லை.அன்னதானத்திற்கே போதாமையால் என் வீட்டு நகைகளை அடகு வைத்துக் கடன் வாங்கியிருக்கிறேன்; சிலவற்றை விற்கவும் செய்தேனகலெக்டர்: ”இவ்வளவு கஷ்டப்பட்டு நீர் அந்த அன்னதானத்தை ஏன் செய்யவேண்டும்?”
சுப்பையர்: அது பரம்பரையாக எங்கள் குடும்பத்தில் நடந்து வருகிறது.
கலெக்டர்: ”அன்னம் போடுவது பகலிலா ? இரவிலா?
சுப்பையர்: இரண்டு வேளையும் போடுவதுண்டு. பாதசாரிகளாக வருகிறவர்கள் பசியோடு எப்போது வந்தாலும் போடுவது வழக்கம்.
கலெக்டர்: எந்தச் சாதியாருக்குப் போடுவீர்?
சுப்பையர்: பிராம்மணருக்கும் மற்றச் சாதியாருக்கும் அவரவர்களுக்கு ஏற்ற முறையில் போடுவோம். பசித்து வந்தவர்கள் யாரானாலும் அன்னமிடுவேன்.
கலெக்டர்: தாழ்ந்த சாதியருக்கும் போடுவதுண்டா?
சுப்பையர்: ஆகா, போடுவதுண்டு, எல்லோரும் சாப்பிட்ட பிறகு போடுவோம்.
கலெக்டர்: இதுவரையில் அப்படி எத்தனை தரம் அந்த ஏழைகளுக்கு போட்டிருக்கிறீர்?
சுப்பையர்: எனக்கு நினைவில்லை; பலமுறை போட்டதுண்டு.
கலெக்டர்: சமீபத்தில் எப்போது போட்டீர்?
சுப்பையர்: நேற்றுக் கூட ஒரு ஏழை பாதி ராத்திரியில் பசிக்கிறதென்று வந்தான்; சாதம் கொடுத்தேன்.
கலெக்டர்: அப்படியா! என்ன என்ன கொடுத்தீர்? எல்லாரும் சாப்பிட்டு மிச்சமான சோற்றையா கொடுத்தீர்?
சுப்பையர்: அகாலத்தில் யாராவது வந்தால் உபயோகப்படுமென்று ரசம், குழம்பு முதலியவற்றிலும் ஓரளவு வைத்திருப்பது வழக்கம். ஆதலால் நேற்று வந்தவனுக்கு அன்னம், கறி, குழம்பு, ரஸம், மோர் எல்லாம் கொடுத்தேன்.
கலெக்டர்: ”இலை போட்டா சாப்பாடு போட்டீர்?
சுப்பையர்: இல்லை; அது வழக்கமில்லை. ஒரு மரக்காலில் அன்னத்தை வைத்து, அதன்மேல் தனித்தனியே தொன்னை யிலும் கொட்டாங்கச்சிகளிலும் குழம்பு முதலியவற்றை வைத்துக் கொடுத்தேன்.கலெக்டரோடு வந்திருந்த உத்தியோகஸ்தர்கள் யாவரும் இவ்வளவு விரிவாகக் கலெக்டர் விசாரணை செய்வதை நோக்கி வியப்புற்றார்கள்.
தாசில்தார், “கலெக்டர் ஐயா, இவர் சொல்வது எல்லாம் பொய்” என்று சொல்லி முணுமுணுத்துக் கொண்டேயிருந்தார்.
கலெக்டர்: ”உமக்கு அந்ததாழ்ந்த சாதி ஏழையைத் தெரியுமா?
சுப்பையர்: ”இருட்டில் இன்னாரென்று தெரியவில்லை.
கலெக்டர்: ”அவனிடம் கொடுத்த மரக்காலைக் கொண்டு வந்து காட்டுவீரா?
சுப்பையர்: ”அதை அவன் இன்னும் திருப்பிக் கொடுக்கவில்லை.
கலெக்டர்: ”அப்படியானால் நீர் அவனுக்கு அன்னம் கொடுத்ததற்குச் சாக்ஷி வேறு என்ன இருக்கிறது?
சுப்பையர்: சாக்ஷி எதற்கு? தெய்வத்துக்குத் தெரியும். அப்படி நான் செய்ததை வேறு யாரிடம் சொல்லிக் கொள்ள வேண்டும்?
கலெக்டர்: ”அந்த மரக்காலை அவன் திருப்பிக் கொடாவிட்டால் என்ன செய்வீர்?
சுப்பையர்: ‘முடியுமானால் கொடு, இல்லாவிட்டால் நீயே வைத்துக்கொள்’ என்று நானே சொல்லிக் கொடுத்தேன்; அவன் கொடுக்காவிட்டால் எனக்கு ஒன்றும் நஷ்டமில்லை.
கலெக்டர், “அப்படியா!” என்று சொல்லிக் கொண்டே மேஜை முழுவதையும் தரை வரையில் மறைத்து மூடப்பட்டிருந்த துணியை மெல்லத் தூக்கினார். என்ன ஆச்சரியம்! அதன் கீழே ஒரு மரக்கால் வைக்கப் பட்டிருந்தது.
“நீர் கொடுத்த மரக்கால் இதுதானா பாரும்!” என்று சொல்லித் துரை அதை எடுத்து மேஜையின்மேல் வைத்தார்.சுப்பையர் திடுக்கிட்டார்; தம் கண்களையே அவர் நம்பமுடியவில்லை. கண்ணைத் துடைத்துத் துடைத்துப் பார்த்தார். தாம் முதல்நாள் பாதிராத்திரியில் ஒரு தாழ்ந்த சாதி ஏழையிடம் ம் கொடுத்த மரக்கால் அங்கே வந்ததற்குக் காரணம் என்ன?
அங்கே இருந்த யாவரும் ஒரு நாடகத்தில் மிகச் சுவையான காட்சியொன்றில் ஈடுபட்டு மெய்ம்மறந்தவர்போல் ஆனார்கள்.
கலெக்டர்: “என்ன, பேசாமல் இருக்கிறீர்! ராத்திரி நீர் செய்த அன்னதானத்துக்குச் சாக்ஷியில்லை யென்று எண்ண வேண்டாம். பாதி ராத்திரியில் வந்த அந்த ஏழை நான்தான்! நீர் கொடுத்த மரக்கால் இதுதான்! இந்த இரண்டு சாக்ஷியும் போதாவிட்டால், என்னுடன் அங்கே வந்த குதிரைக்காரன் வேறு இருக்கிறான். நீர் சொன்னதெல்லாம் உண்மையே. உம்முடைய வீட்டு அன்னத்தையும் கறி முதலியவற்றையும் நான் ருசி பார்த்தேன். உம்முடைய ஜன்மமே ஜன்மம்” என்றார் கலெக்டர்;
கலெக்டர் கண்களில் நீர் ததும்பியது; உள்ளத்தில் உண்டான உருக்கம் அவர் தொண்டையை அடைத்தது. சிறிது நேரம் அவராற் பேசமுடியவில்லை. பிறகு, “உமக்கு எந்தக் காலத்திலும் குறைவே வராது. தெய்வம் உம்மைக் குறைவில்லாமல் காப்பாற்றும்; தர்மம் தலை காக்கும். உமக்காகத் தான் மழை பெய்கிறது” என்றார்.
அந்த வார்த்தைகளின் தொனியில் முதல்நாள் இரவு அந்த ஏழை , ‘தெய்வம் உங்களைக் குறையில் லாமல் காப்பாற்றும்; தர்மம் தலைகாக்கும்’ என்று சொன்ன வார்த்தைகளின் தொனி ஒலிப்பதை அப்போதுதான் சுப்பையர் உணர்ந்தார்;
தமிழைப் புதிதாகக் கற்றுக்கொண்ட வேற்று நாட்டாராகிய துரையின் பேச்சானது, பசியினால் நாக்குழறிப் பேசுபவனது பேச்சைப் போல ராத்திரியில் தமக்குத் தோன்றியதென்பதையும் அறிந்தார். அவருக்கு இன்னது சொல்வதென்று தோற்றவில்லை.
கலெக்டர்: “அப்படியே அந்த நாற்காலியில் உட்காரும்! நீர், வரிப்பணத்தை மோசம் செய்ய மாட்டீரென்பது எனக்கு நன்றாகத் தெரியும். நானும் உம்முடைய மரக்காலை மோசம் செய்யாமல் இதோ கொடுத்துவிட்டேன்; எடுத்துக்கொள்ளும். உம்முடைய தர்மம் குறைவின்றி நடைபெற இந்த வரிப்பணம் உதவுமானால், அதை விட இந்த ராஜாங்கத்துக்கு வேறு லாபம் இல்லை. உம்மால் எப்போது முடியுமோ, அப்போது வரியைக் கட்டலாம்! உம்மை ஒருவரும் நிர்ப்பந்தம் செய்யமாட்டார். நான் இந்த ஜில்லாவில் இருக்கும் வரையில் உமக்கு ஒருவிதமான துன்பமும் நேராது” என்றார் கலெக்டர்.
பிறகு தாசில்தாரை நோக்கி,”உம்முடைய வார்த்தையை நான் நம்பியிருந்தால் பெரிய பாவம் செய்தவனாவேன். இனிமேல் இந்த மாதிரி ஒருவரைப் பற்றியும் தீர விசாரியாமல் நீர் எழுதக்கூடாது” என்று கண்டித்துக் கூறினார்.
(உ.வே. சா சொல்கிறார்: கும்பகோணம் கலாசாலைத் தமிழ்ப் பண்டிதராக இருந்த வித்வான் ஸ்ரீ சி. தியாகராச செட்டியாரவர்கள், 1833-வருஷம் திருவானைக்காவில், திருமஞ்சனக் காவேரிக்கரையில், ஆங்கரைச் சுப்பையருடைய பரம்பரையினர் சிலரைக் கண்டு பேசிக் கொண்டிருந்தனர். நானும் உடனிருந்தேன். அப்பொழுது செட்டியார், அவர்களைப் பாராட்டிவிட்டு இவ்வரலாற்றைக் கூறினார். அவர்களும் சொன்னார்கள். மேற்படி சுப்பையருடைய பெண் வழியில் தோன்றிய மணக்கால் மகாஸ்ரீ கந்தசாமி ஐயரென்பவர்களாலும் சமீபத்தில் சில விஷயங்கள் அறிந்து கொண்டேன்.)இவருடைய பரம்பரையினருக்கும், இவருறவினர் பரம்பரையினருள்ளும் அன்னதானமென்ற பெயரையுடையவர்
கள் சிலர் உண்டு.
வரகூரான் நாராயணன் அப்பா அன்னதானம் ஐயர் .ஆகவே அவர் இந்த சிறந்த வம்சத்தினர். வரகூரான் நாராயணனுக்கு நாம் அனைவரும் நமஸ்காரம் சாஷ்டாங்கமாக இருந்த இடத்திலிருந்தே செய்து வணங்குவோம். அவர் குடும்பம் ஒரு காலத்தில் எதேஷ்டமாக அன்னதானம் செய்தது. இவர் அளவில்லாமல் மஹா பெரியவா விஷய தானம் செய்து வருகிறார். ஒன்றை ஒன்று மிஞ்சும் தானங்கள் அல்லவா?
ஆங்கரை அன்னதானமய்யர் என்று அழைக்கபடும் சுப்பையருக்குபிறந்த ஒரு மகனுக்கு பஞ்சநதீஸ்வரர் என்று பெயர். அவருக்கு பிறந்தபல மகன்களில் ஒருவர் பெயர் மகாதேவன்.அவருக்கு இரண்டுமகன்கள். 1]வெங்கிட சுப்ரமணியன் 2]அனந்த சுப்ரமணியன்.பெயர்தான் வைத்தார்கள்.ஆனால் பிறந்து முதல் கூப்பிடும் பெயர் பெரியவனுக்கு அன்னதானம் [அய்யர்] சிறியவனுக்கு சுப்பையன்[சுப்பைய்யர்)

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *