THIRUVEMBAVAI 20 J K SIVAN

திருவெம்பாவை – நங்கநல்லூர் J.K. SIVAN
மணிவாசகர்
மார்கழி 20ம் நாள்.

20. ”நீ சொல்லிண்டேவா, நான் எழுதிண்டே வரேன் ”

இந்த பாடலுடன் மாணிக்கவாசகர் திருவெம்பாவையை நிறைவு செயகிறார். நாளை முதல் திருப்பள்ளி எழுச்சி துவங்கும். ஏன் மணிவாசகர் திருவெம்பாவையை இருபது பாடல்களுடன் நிறுத்திவிட்டார் என்ற கேள்விக்கு பதில் அவருக்கு மட்டுமே தெரியும் என்பதால் நாம் மண்டையை போட்டு உடைத்துக் கொள்ளவேண்டாம். அவர் அளித்த இருப்பதை முதலில் படிப்போம், முடிந்தால் மனதில் இருத்திக்கொள்வோம். நாலு பேருக்கு எடுத்துச் சொல்வோம். அது போதும்.

20. போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுகநின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றிஎல் லாஉயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றிஎல் லாஉயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றிஎல் லாஉயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றிமால் நான்முகனும் காணாத புண்டரிகம்
போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழிநீ ராடேலோ ரெம்பாவாய்.

இதற்கு அர்த்தமே தேவையல்ல. இறைவனைப் போற்றி அவன் திருவடிகளின் அருள் பெற வேண்டி, மணிவாசகர் பாடும் வார்த்தைகள். படிக்கும் ஒவ்வொரு உள்ளத்திலும் ஊறுகின்றதே. அதை இன்னொருவர் எதற்கு சொல்லவேண்டும் .

பொன்னார் மேனியனே, மின்னார் செஞ்சடை மேல் மிளிர் கொன்றை அணிந்தவா, மன்னே , மாமணியே, உள்ளங்கவர் கள்வா. என்றும் எம்முள்ளே இருப்பாய் ஈஸா. நின் திருவடிமலர்களை தஞ்சமென அடைந்தேன் என்று பெண்களே எழுந்து வாருங்கள் மார்கழி தனுர் மாத ஸ்னானம் செய்வோம் என்று துயிலும் பெண்களை எழுப்புவது போல் அமைந்துள்ள அருமையான எளிய தமிழ் பாடல்.

இனி திருவாசகத்தை மணிவாசகர் எழுதிய விதம் எப்படி என்று அறிவோம். அதிசயங்கள் அற்புதங்கள் நிறைந்த வாழ்க்கை மாணிக்க வாசகருடையது. இறைவன் அருள் பெற்றவர்.

பாண்டிய ராஜா, அரிமர்த்தன பாண்டியன், மணிவாசகர் அரசாங்க பணத்தை குதிரை வாங்குவதற்கு பதிலாக கோவில் கட்டி விரயம் செய்ததற்கு சிறையிலடைத்து, பரமேஸ்வரன் அருளால் நரிகள் பரிகளாகி அவனிடம் வந்து மீண்டும் நரியாகி, அதனால் கோபம் கொண்ட பாண்டியன் மணிவாசகரை வைகை ஆற்று சூடு மணலில் நிற்க வைக்க வைகையில் என்று மறியாத அளவு வெள்ளம் வந்து, மணல் ஐஸ் கட்டியாக குளிர, எல்லோரும் வைகைக் கரையை உயர்த்த வீட்டுக்கு வீடு ஆள் அனுப்ப, ஒரு கிழவி வந்தி என்பவளுக்காக மதுரை சொக்கநாதன், அவள் கொடுத்த பிட்டுக்கு விலையாக மண் சுமந்து, மெதுவாக வேலையைச் செய்ய அவனை வேகமாக வேலை செய் என்று பாண்டிய ராஜா முதுகில் பிரம்பால் அடிக்க, அந்த பிரம்படி பாண்டியன் முதலாக அனைவருடைய முதுகிலும் வலிக்க, தழும்பு வந்த அதிசயம் எல்லாம் நிகழ்ந்தது. பாண்டியன் திகைத்தான். சுந்தரேஸ்வரரின் திருவிளையாடலை புரிந்து கொண்டான். சிறையிலிருந்து மணிவாசகரை மீட்டான். வணங்கினான் :

”வாதவூரரே, நீங்கள் என் வார்த்தையை தட்டாமல் தயவு செயது, தாங்கள் மீண்டும் மந்திரியாக அமர்ந்து எனக்கு அறிவுரை தந்து இந்த நாட்டை உங்கள் வழியில் ஆள்வதற்கு அருள் புரியவேண்டும் குருதேவா ” என்றான் பாண்டியன். மணிவாசகர் பல க்ஷேத்ரங்களுக்கு செல்ல தீர்மானித்தார் ஆகவே

”இல்லை மன்னா. என் வழியை பெருந்துறை ஈசன் தீர்மானித்து விட்ட பின் அவன் அடிமையான எனக்கு பல சிவ ஸ்தலங்களை சென்று தரிசித்து அவனைப் போற்றி வாயார மனமார பாடுவதைத் தவிர வேறு ஒன்றும் வேலை இல்லை’.

மணிவாசகர் ஸ்தல யாத்திரையில் சிதம்பரம் செல்கிறார். திருச்சிற்றம்பலம் என்று சிதம்பரத்துக்கு ஒரு அருமையான பேர். நடராஜருக்கு மணிவாசகரின் பக்திச்சுவை கலந்த தேனான தமிழ் பிடிக்குமே. மணிவாசகனை அழைத்து தன் முன் அவன் வாயால் பாட வைத்து ரசித்து கேட்டு அவனுக்கு முக்தி அளிக்கவேண்டும்” என்று நடராஜனுக்கு விருப்பம்.

ஒரு நாள் என்ன நடந்தது தெரியுமா?
”டொக் டொக்” என்று ஒரு இரவு வாசல் கதவை யார் தட்டுகிறார்கள் என்று பார்த்த மணிவாசகர் முன் ஒரு வயதான பிராமணர். சிவ பக்தர் என்பது அவர் அணிந்த விபூதி பூச்சு, ருத்திராக்ஷம், உணர்த்தியது. மணிவாசகர் அவரை வணங்கி அழைக்கிறார்.
”வாருங்கள் உள்ளே”.
கை கால் அலம்பிக்கொண்டு அமர்ந்து மணிவாசகர் அளித்த தீர்த்தம் அருந்தி சுற்றுமுற்றும் பார்த் தார் பிராமணர்.
”ஐயா, தாங்கள் யார், எங்கிருந்து வருகிறீர்கள், நான் உங்களுக்கு எப்படி உதவட்டும்?’
”நீங்கள் தானே வாதவூரர் என்பவர். சிவபக்தர். பாண்டிய ராஜாவின் மந்திரி’
”ஆமாம். ஒருகாலத்தில். ”
”எனக்கு நீங்கள் பாடும் திருவாசகம் எனும் பாடல்கள் ரொம்ப பிடித்தது. யார் யாரோ அதைக் கேட்டவர்கள் மூலம் அறிந்ததும், நேரிலேயே உங்களை வந்து சந்தித்து உங்கள் வாயினால் அதைக் கேட்க வேண்டும் என்ற எண்ணம் இன்று தான் பூர்த்தியாயிற்று. நீங்கள் அதைப் பாடப்பாட, சொல்லச் சொல்ல, நான் அதை ஏட்டில் எழுதி வைத்துக் கொள்ள வேண்டும் என்ற முடிவோடு வந்திருக்கிறேன். இந்த சம்சார சாகரத்திலிருந்து விடுபட இதைவிட சிறந்த ஒரு பாராயண புத்தகம் இருக்க முடியாதே. அது எனக்கு வேண்டுமே நீங்கள் சொல்லச் சொல்ல நான் எழுதிக் கொள்கிறேன்?

”சுவாமி, இது வரை யாரும் இப்படி என்னிடம் கேட்டது கிடையாதே. இது என்ன அதிசயம்” என்று மணிவாசகர் ஆச்சரி யப்பட்டார்.
”சுவாமி. நான் திருவாசகம் பாடுகிறேன். சுவடி எதுவும் இல்லை, மனதில் தோன்றியதை பாடிக் கொண்டே இருப்பவன் நான். வேண்டுமானால் என் இறைவனை மீண்டும் உங்களுக்காக ஒரு முறை பாடுகிறேன். எனக்கும் சந்தோஷமாக இருக்கும். நீங்கள் நான் பாடப் பாட எழுதிக் கொள் ளுங்கள்”.

பாடல்கள் கடல் பிரவாஹம் போல் வெளிவந்தது. ஓலைச்சுவடிகள் நிரம்பின. பிராமணர் அதி வேகமாக அவற்றை சுவடிகளில் பொறித்தார்.

”வாதவூரரே , திருச்சிற்றம்பலத்தான் மீது திருவெம்பாவை பாடிய நீங்கள் அவன் மீது ஒரு கோவை யார் பாடுங்கள் அதுவும் வேண்டும். சிவபக்தர்கள் எல்லோருக்கும் பிடிக்கும்.”

”ஆஹா தங்கள் கட்டளை”. இறைவன் என்னப்பன் சிவனருளால் அதையும் நிறைவேற்றுகிறேன்.”

மணிவாசகரின் செய்யுள்கள் ஓலை ஏறின. ஓலைகள் சுருளாக சுற்றப்பட்டு சிதம்பரேசன் ஆலயத் தில் சிற்சபையின் பஞ்சாக்ஷர படிகளில் வைக்கப்பட்டன.

”பரமேஸ்வரா, என் மனம் கனிந்து, திறந்து, உன் மீது பாடியவைகளை நீ ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்று கண்மூடி வேண்டிய மணிவாசகர் கண் திறந்து பிராமணர் எங்கே என்று தேடினால் அங்கே யாருமில்லையே.!

அவர் எங்கே போனார் என்று தேடினார் மணிவாசகர். எங்கும் தென்படவில்லை. யாரைக் கேட்டாலும் அப்படி ஒருவரைப் பார்க்கவே இல்லையே என்கிறார்கள்.

தில்லை அம்பல நடராஜனின் பூஜை செய்யும் தீட்சிதர்கள் மறுநாள் சந்நிதி கதவைத் திறந்ததும் ”யார் இங்கே ஏதோ ஓலைச்சுவடிகள் ‘ வைத்தது என்று பிரித்து பார்க்கிறார்கள்.

படித்தால் அற்புத திருவாசகம், திருக்கோவையார் பதிகங்கள். முடிவில் ” ‘மாணிக்கவாசகன் சொற்படி அம்பலவாணன்” என்று கையெழுத்திட்டு பெயர் பொறித்திருந்தது.

ஆலயத்தில் கூட்டம் சேர்ந்தது. அனைவரும் அதிசயித்தார்கள். என்ன நடந்தது இங்கே. அதன் பொருள் என்ன நீங்கள் தான் உரைக்க வேண்டும் என்று அவர்கள் மணிவாசகரை வேண்ட அவர் அமைதியாக எல்லோரையும் பார்த்தவாறு

”என் ஈசன் நடராசன் திட்டம். எல்லாம் அவன் செயல் அவன் அருள். அதன் அர்த்தமே இது தான் வாருங்கள் என்று அவர்களை திருச்சிற்றம்பல நடராஜன் சந்நிதி அழைத்துச் சென்ற வாதவூரார் ”பொருள் இதுவே” என அவனைக் காட்டி தானும் அவன் திருவடிகளை அடைந்து மறைந்தார்.

முடிந்த போதெல்லாம், மெதுவாக மணிவாசகரின் திருவாசகத்தையும் திருக்கோவையாரையும் சிவபெருமானே எழுந்தருளி வந்து எழுதும் பேறு பெற்ற தெய்வீக நூல்கள் என உணர்ந்து படியுங்கள். அர்த்தம் உணர்ந்து ஆனந்தியுங்கள். அடுத்தவர்களுக்கும் சொல்லுங்கள்.

“திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்”

LISTEN TO CHIDAMBARAM TEMPLE BELL SOUND AND PRAY CLOSING YOUR EYES. HE WILL FULFIL ALL YOUR WISHES. HE KNOWS WHAT YOU NEED

https://youtu.be/BKo_GN_DRxU?si=bADtqvM-WQbWXR12

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *