THIRUPPAAVI 18 J K SIVAN

அழகிய ஆழ்வாரே, ஆண்டாளே –  நங்கநல்லூர்    J K   SIVAN
திருப்பாவை
மார்கழி 18ம் நாள்
18.  உந்து மத களிற்றன்

ரொம்பவே அதிர்ஷ்டக்காரி அந்த ஆண்டாள் குட்டி.. நினைத்ததை அப்படியே  மொத்தமாக  சாதிப்பவள். அடடா! எவ்வளவு புண்யசாலி!    சாதாரண, படிக்காத எளிய இடைச்சாதி பெண்.யாதவகுலத்தவள்..   யார் சொன்னது இப்படி  ?   இல்லவே இல்லை. பள்ளி படிப்பு எல்லாம் ஒரு படிப்பா?   நிறைய  பணம் கொட்டி  மூன்று வயதிலேயே   ஒன்றுக்கும்   ப்ரயோஜன மில்லாத உதவாக்கரை   ‘பாபா  ப்ளாக் ஷீப்.   ஜாக் அண்ட் ஜில்”  லண்டன் பிரிட்ஜ் ஐஸ்  பால்லிங் டோவ்ன்” …கற்றுக்கொள்வது தான் உயர்ந்த படிப்பா?.
”அறஞ்செய விரும்பு,  ஆறுவது சினம்”    குப்பையில் போடப்பட வேண்டியதா?  பெற்றோர்கள் கொஞ்சம் யோசிக்கலாமே.

ஆண்டாள்  பிறக்கும்போதே ஞானத்தில்  தேர்ந்த யாதவ குல, இடைச்சாதி  பெண்.   அவளே  கோதையாக வில்லித்தூரில்  என்றும் என்றும்  வாழ்பவள்.  கோதைக்கு  வில்லிப்புத்தூரில் அவள் தந்தை அவளுக்கு கற்றுக் கொடுத்தது  நமக்கும்  சேர்த்தல்லவோ பயன்படுகிறது. அவள் திருப்பாவை அழியாத கருவூலம்.   சாதி என்பது  உடம்பு சம்பந்தப்பட்டது  தானே. உள்ளத்திற்கேது?   சாக்ஷாத் பரமாத்மன் நாராயணனே, தான் வளர, ஆயர் குலத்தைத் தானே தனக்கு வேண்டும் என்று தேர்ந்தெடுத்தான்,

உலகில் உத்தமமான, பூஜிக்கத் தக்க பிராணியான பசுவை பராமரிக்கும் ஆயர்பாடி மக்கள் அனைவரும் தான் ஆயர்  குலம் (higher குலம், ஐயர் குலம் அல்ல )  என்ற உயர்குலம் கொண்டவர்கள். அதனால் தான் ஆண்டாளால் கிருஷ்ணனை அவன் வீட்டிலேயே காண முடிந்தது. ஆண்டாள் நினைத்ததை சாதிப்பவள் என்று தான்  நான் அடிக்கடி சொல்வேனே.

நந்தகோபன், யசோதை, கிருஷ்ணன் பலராமன் ஆகியோரை எல்லாம் துயிலெழுப்பும் வேலையில் ஈடுபட்ட ஆண்டாள் தன் தோழியருடன் சுற்றும் முற்றும் பார்க்கிறாள், இன்னும் யாரை விட்டு விட்டேன் துயிலெழுப்பாமல்?   என்று. அப்போது தான் நப்பின்னை தெரிகிறாள். அடடா, இவளை விடலாமா?   என்று ஆண்டாளும் தோழிகளும் அவளையும் ஸ்தோத்ரம் செய்கி றார்கள்.

”அழகிய நப்பின்னையே, (நீளா தேவி) கமகமக்கும் தைல வாசனையோடு மணப்பவளே நந்தகோபன் மறுமகளே, உன் மாமனார் எப்படிபட்டவர் தெரியுமா உனக்கு?.

வெளியே சேவல்கள் குரல் கொடுத்து பொழுது விடிந்ததை பறை சாற்றுகிறதே.   நந்தகோபருடைய  செல்வங்கள் கணக்கி லடங்காது.  ஏராளமான  பசுக்கள், எருமைகள், கன்றுகள் மட்டுமல்ல. யானைகளையும் உடையவர். எதிரிகள் தான் அவரைக் கண்டு அஞ்சி ஓடுவார்களே தவிர அவர் அஞ்சியதாக சரித்திரமே இல்லை.

அதோ பார் மல்லிப்  பந்தல் முழுதும் குயில் கூட்டம்,  என்னமாக சூழ்ந்து கொண்டுள்ளன. அவைகளின் க்கீ கீ  குரலில் இனிய பாட்டு  தினமும்  அதிகாலையில்  துயிலெழுப்பும் வேலையைச் செய்கிறதே . பந்து வைத்துக் கொண்டு விளையாடும் பருவப் பெண்ணே, உன் கைகளின் வளையோசை கலகலவென ஒலிக்க உடனே வந்து கதவைத் திற.    உள்ளே வந்து ஆசி பெறுகிறோம். எங்கள் நோன்புக்கு உன் நல்லாசியும் தேவையம்மா.”

நப்பின்னை யார்? இது பரம ரகசியமல்ல. ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் இடையே ஒரு பாலம்.   அது புரிந்தால் போதுமானது. அவளது அனுகூலத்துடன் தான் நாம் வீடு பேறு அடைய முடியும்.

சூர்ப்பனகை  சீதையை ஒதுக்கிவிட்டு ராமனைத் தேடினாள், ராவணன் சீதையைத் தேடினவன் ராமனை மறந்தான். முடிவில் இருவருமே அழிவைத்தான் தேடிக்கொண்டனர். நப்பின்னைப் பிராட்டி தான் ஆண்டாள் குரல் கேட்டு, கதவைத் திறந்து அந்த ஆயர்பாடி சிறுமிகளைக் கண்ணனிடம் உள்ளே அழைத்துச் சென்றாள். அதற்கப்புறம் தான் ஆண்டாள் கிருஷ்ணனை நேரே காண்கிறாள்.

ஆண்டாளின் இந்த  பாசுரம் ஸ்ரீ ராமானுஜரை மிகவும் கவர்ந்த ஒரு பாசுரம். அவர் பிக்ஷைக்கு போகும்போது இதையே பாடிக் கொண்டு தான் தனது ஆசார்யன் வீட்டு வாசலில் நின்றார் என ஒரு சரித்திரம் உண்டு. அதைச்  சுருக்கமாக சொல்கிறேன்.

ஸ்ரீ ராமானுஜருக்கு  திருப்பாவை ஜீயர் என்று ஒரு பெயர்.  அந்தப்  பெயரை வைத்ததே அவரது ஆசார்யன் பெரிய நம்பிகள்.  எதனால்?  என்ன காரணம் ?

ஸ்ரீ ராமானுஜருக்கு திருப்பாவையின் உள்ளர்த்தங்களில் பொதிந்த வேத சாஸ்திர சாரமும் அதன் பொருட் செறிவும், தெள்ளிய நடையும் அதைப்  பாடும்போது கிடைக்கும் நாவின் சுவையும் அனுபவமாயிற்றே. அடிக்கடி ஆண்டாள் பாசுரங் களைப்   பாடிக்கொண்டே செல்வார். அதுவும் முக்யமாக பிக்ஷைக்கு அவர் வெறுங்  காலோடு பாதரக்ஷை அணியாமல் செல்வது வழக்கம்.
அவரை மிகவும் ஈர்த்த பாசுரம் இந்த 18வது திருப்பாவை ”உந்து மதக் களிற்றன்”

ஒரு முறை திருக்கோஷ்டியூரில் இவ்வாறு வெறுங்காலுடன் ”உந்து மதக்களிற்றின்” பாசுரம் பாடிக்கொண்டே தனது ஆசார்யன் பெரியநம்பி  வீட்டு வாசலில் பிக்ஷைக்கு நின்றார். அவர் நின்ற சமயம்  வாசலில் அவர் குரல் கேட்டு  உள்ளே இருந்த  பெரிய  நம்பியின்  பெண் அத்துழாய்  என்பவள்  வாசல் கதவைத்  திறக்கிறாள்.

அந்த சமயம் தான் ராமானுஜர்  இந்த  பாசுரத்தின் மற்றொரு அடியான ”செந்தாமரைக் கையாள் சீரார் வளையொலிப்ப வந்து திறவாய்” என்ற வரியை பாடிக்  கொண்டிருந்தார். ” வளை ஒலிப்ப” என்று   அவர்  பாடுவதற்கும்   தற்செயலாக அந்தப் பெண் அத்துழாய்  கையில் வளைகள் கலகல வென  ஒலிக்க  வாசல் கதவை  திறப்பதற்கும்  ஏற்ற ஒரே சமயமாக  இது நிகழ்ந்தது. 

”ஆஹா , கை வளைகள்  ஒலிக்க ஆண்டாளே பிரத்யக்ஷமாக தோன்றுகிறாளே”  என்று    ராமானுஜருக்கு மனதில் பட்டது. அந்த ஆனந்த அநுபவத்தில் ராமானுஜர்  அந்த க்ஷணமே கீழே விழுந்து  மூர்ச்சை யானார்.   இதைக் கண்ட அத்துழாய் அதிர்ச்சி அடைந்து  உள்ளே  ஓடுகிறாள்

”என்னம்மா  ஆயிற்று வாசலில் என்ன சத்தம், என்ன நடந்தது?’  ஏன்  இப்படி  பதட்டத்தோடு  ஓடி வருகிறாய் ?”என கேட்கிறார் பெரிய நம்பி  ‘

”வாசலில் பிக்ஷைக்கு யாரோ வந்திருக்கிறாரே என்று கதவைத் திறந்தேன். உங்கள் சீடர் ராமானுஜர் தான் நின்றார்.    திருப்பாவை  பாடிக்  கொண்டிருந்தவர்   என்னைக் கண்ட அடுத்த வினாடி  திடீரென்று  மூர்ச்சையடைந்து கீழே விழுந்து விட்டார் அப்பா. ஏன் எதற்கு விழுந்தார் என்று தெரியவிலையே ”

ஓஹோ அப்படியா.   என்ன  பாடிக்கொண்டிருந்தார் நீ கதவைத்  திறந்து பார்த்தபோது ?

‘ஏதோ ”சீரார் வளை ஒலிப்ப ” என்று தான்  உச்சரித்துக்கொண்டிருந்தார்.”
மஹான் பெரிய நம்பிகளுக்கு  என்ன நடந்தது என்று புரிந்து விட்டது… சிறந்த ஞானி அல்லவா?

”ஓஹோ,   ராமானுஜன்  ”உந்து மதக்களிற்றன்”  பாசுரத்தை பாடிக்கொண்டு வந்திருக்கிறான் போலும். வளைக் கரங்க ளோடு நீ கதவை திறந்தது அவன் பாடிய பாசுரத்தில் வரும் காட்சியை நினைவூட்டி இருக்கும். ஆண்டாளே நேரில் வந்து கதவைத் திறந்ததாக ராமானுஜனுக்கு தோன்றியிருக்கலாம்’. அந்த ஆனந்தானுபவத்தில் தன்னை இழந்திருக்கிறான்’ என்று ஊகித்தார். அதனால் தான் அவருக்கு ”திருப்பாவை ஜீயர்” என்ற பெயரும் இட்டார்.

அது சரி,  ஏன் ராமானுஜர் திருப்பாவை பாடல்கள் பாடும்போது பாத ரக்ஷை அணிவதில்லை? .

இதற்குக்   காரணம், ஆண்டாள் பூமி தேவியின்  சாக்ஷாத் அவதாரம். அவளைப் பாடும்போது செருப்பு அணிவது தாயாருக்கு செய்யும் அபசாரம், அவமரியாதை அல்லவா என்று எண்ணினவர். என்னே அவர் பக்தி!! இதோ அந்த பாசுரம்:

”உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன்
நந்தகோபன் மருமகளே நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலி கடை திறவாய்
வந்து எங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல் கால் குயிலினங்கள் கூவின காண்
பந்து ஆர் விரலி உன் மைத்துனன் பேர் பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.  

வில்லிப்புத்தூரில் ………

மேலே சொன்ன ஆண்டாள் குரல் ஒலித்தது கோதை மூலம்  அந்த  சிறிய  ஓலை வேய்ந்த ஆஸ்ரமத்தில்.   வில்லிபுத்தூர்  கிராமத்தில்   எங்கோ ஒரு அமைதியான நந்தவனத்தில் பறந்து செழித்து கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சைப் பசேலென்று பூத்துக்குலுங்கும் பல ஜாதிப் பூக்கூட்டங்களுக்கிடையே அந்த பர்ண சாலையை நந்தவனப்பூக்கள் எல்லாம் நறுமணத்தால் குளிப்பாட்ட உள்ளே விஷ்ணு சித்தர் பூஜைக்காக ஏற்றிய தூப தீபங்களின் இனிய மணமும்  கலந்து மேலும் இன்ப போதையை மூட்டியது.
கண்ணுக்கு தெரியாமல் எங்கிருந்தெல்லாமோ வித வித பட்சி ஜாலங்களின் சப்தக்கலவை ஏழு ஸ்வரங்களின் ஓசையைக் கலந்து கட்டியாக பரிசளித்தது. இவற்றை எல்லாம் உள்ளடக்கியவாறு  காற்றில் கோதையின் தெய்வீகக் குரலில் மேற்கண்ட பாசுரம் ஒலி பரப்பானது.   இத்தகைய  சூழ்நிலையில் விஷ்ணு சித்தர்  தன்னை மறந்து  அதில் லயித்ததில் என்ன ஆச்சர்யம்?

”அம்மா கோதை,   நீ பாடுவது ஒவ்வொன்றும் அபூர்வம். அசாத்தியம். அதன் அர்த்தம் அலாதி. நான் இப்போதெல்லாம் வில்லிப்புத்தூரில் இல்லை அம்மா. நீ தான் என்னைக் குண்டு கட்டாக கட்டித் தூக்கிக்  கொண்டு போய்  ஆயர்பாடியிலே போட்டுவிட்டாயே.  நான் கேட்பதெல்லாம்   ”என்னை ஆயர்பாடியிலேயே விட்டுவிடு”  என்பது தான்.  அந்த ஆண்டாளோடு சேர்ந்து நானும் அவள் எங்கெல்லாம் போகி றாளோ அவள் கூடவே போகிறேன். அவளை எனக்கு ரொம்ப பிடிக்கிறதற்கு  காரணம் என்ன என்பது உனக்கு தெரியவேண்டுமா? சொல்கிறேன் கேள் :

”நீ தான் எனக்கு அந்த ஆண்டாள். என்னை மட்டுமல்ல எவரையுமே நீ தான் ”ஆண்டவள்”  அதற்கு சாட்சியம் வருஷா வருஷம் வரும்  இந்த  மார்கழி மாதம்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *