THIRUPPAAVAI 17 J K SIVAN

அழகிய  ஆழ்வாரே, ஆண்டாளே!    –   நங்கநல்லூர்   J  K   SIVAN திருப்பாவை.
மார்கழி 17ம் நாள். 17. கொழுந்தே குலவிளக்கே

ஆண்டாளுக்கு   நம்மைப்போல்  இந்த  ”ஹாப்பி நியூ இயர்”  விஷயம்  எல்லாம் தெரியாது.நல்லவேளை, வெள்ளைக்காரன் இல்லாததால் இங்கிலீஷோ, அவன் அறிமுகப்படுத்திய  தேவையில்லாத, அர்த்தமில்லாத,  புதுப் பழக்கங்களோ யாருக்கும் அப்போது தெரியாது.  ஜனவரி 1, ஆங்கில புத்தாண்டு நாள் அன்று ஒருவரை ஒருவர் போனில் கூப்பிட்டோ, வாட்சப்பில் பட்டாசு வெடித்தோ,எல்லா நலனும் பெற்று பரம சந்தோஷத்தோடு வாழுங்கள் என்று  முதல் நாள்  ராத்திரி பன்னிரண்டு மணிக்கு  தூக்கத்தில் எழுப்பி சொல்லத் தெரியாது  . ஏனென்றால் ஆண்டாள் காலத்தில்  இங்கிலீஷும்  ஜனவரியும்  இல்லை.  அவள் காலத்தில்  வெள்ளைக்காரனுக்கு  இந்தியாவே தெரியாதே.
வெள்ளைக்கார   பசுக்களும் வாய் திறந்து  ”அம்மா”  என்று தமிழில் தான் கூப்பிட்டன. அநேகமாக  ஜனவரி 1  அன்று, எல்லா  தமிழ்  காலண்டர்களும்  மார்கழி 16 அல்லது 17 தான் காட்டும்.
பார்த்தீர்களா,  காலண்டர்  பற்றி  பேசிக்கொண்டே ஆயர்பாடிக்கு வந்து விட்டோமே. மிகத் துணிச்சலானவள்  இந்த பெண் ஆண்டாள். நினைத்ததை சாதிப்பவள். ஆண்டாள் மற்ற பெண்களை அழைத்துக்கொண்டு நந்தகோபன் அரண்மனைக்குள் சென்றாளல்லவா? எல்லோரும் குதூகலத்தோடு நந்தகோபனை சந்தித்தனர். இந்த துயிலெழுப்பும் பாசுரம் நமது தினசரி  திருப் பாவைக் குட்டிக் கதையில் மார்கழி 17வது நாளன்று இடம் பெறுகிறது. உள்ளே சென்ற ஆண்டாளும் மற்ற சிறுமிகளும் நேராக நந்தகோபன் அறைக்கே சென்றார்கள்.
தனது சப்ரமஞ்ச கட்டிலில் சாய்ந்திருந்த நந்தகோபன் திடீரென்று சில பெண்கள் தன்னெதிரே வந்து நிற்பது எதற்கு என்று யோசித்தவாறு முதலில் நின்ற அழகிய பெண் ஆண்டாளை பார்க்க ஆண்டாள் அவரை வணங்கி நின்றாள் :

”என்ன விஷயமாக நீங்கள் இந்த அதிகாலையில் வந்திருக்கிறீர்கள்?”

”ஐயா,  மகானுபாவரே, நந்தகோப பிரபுவே, நீங்களல்லவோ எங்கள்அனைவருக்கும் எல்லா நன்மை களும் செய்பவர், உம்மாலல்லவோ நாங்கள் குடி நீர் பெறுகிறோம், உங்கள் தயவால் அல்லவோ எங்களுக்கு உடுக்க உடை கிடைக்கிறது. உலகில் வாழத் தேவையான அனைத்தும் எங்களுக்கு வாரி அளிக்கும் பெருந்தகையே! உங்களை துயிலெழுப்ப முகமன் பாட நாங்கள் பாக்கியம் செய்தவர்கள்.” என்றாள் ஆண்டாள்.

நந்தகோபன் அருகில் இருந்து கொண்டு அவர்களை அன்பாக வரவேற்ற யசோதையைக் கண்டதும் ஆண்டாள் சும்மாஇருப்பவளா?
”எங்களின் தாயே, அம்மா யசோதை! நீ அல்லவோ எங்கள் இல்லங்களின் ஒளி விளக்கு. எங்கள் பசுக்கூட்டம்,  அவற்றை கண்காணிக்கும் இந்த ஆயர் பாடி கோப கோபியர்கள் எல்லோருமே உங்கள் அன்பாலும் பாசத்தாலும் அன்றோ கட்டுண்டு இருக்கிறோம்.  உங்களைத் துயில்  எழுப்பும் பாக்கியம் பெற்றோம்.  எழுந்திருங்கள்  தாயே. எங்களை ஆசிர்வதியுங்கள் ”

நந்தகோபன் யசோதைக்கு நடுவில்  கிருஷ்ணனும் பலராமனும்  ஒரு அழகிய கட்டிலில் படுத்து இருப்பதை கண்டு ஆனந்தம் கொண்டாள் ஆண்டாள். கிருஷ்ணன் அரைத்  தூக்கத்தில் இருப்பது போல் இருந்தான். ‘ யார் அவனை தூங்க விட்டார் தாலேலோ” என்ற அழகான வரிகள் மனதில் ஓடுகிறது.

”எங்கள் உயிராய் விளங்கும் ”ஹே, கிருஷ்ணா, கடவுளுக்  கெல்லாம் கடவுளே, தெய்வமே துயிலெழு. நீ உறங்கினால் உலகமே உறங்கிவிடுமே.! எங்கள் தலைவனின் சகோதரா, அழகிய வீரா,  பலதேவா, நீயும் உன் சகோதரனும் எழுந்தி ருங்கள்.எங்களை வாழ்த்துங்கள் ஆசிர்வதியுங்கள். எங்கள் நோன்பு சிறக்க உங்கள் அருள் வேண்டும் ”

இவ்வாறு வேண்டி ஆண்டாளும் சிறுமிகளும் பல துதிப்பாடல்களைப் பாடினர். (அந்த பாடல்களின் பெயர்கள் எனக்கு மறந்து போய் விட்டது!!) இந்த நந்தகோபன் குமரன் கதையில் அந்த ஆயர்பாடிப் பெண்கள் போற்றிப்  பாடும் அந்த நாராயணனின் கலியுக தோற்றமாகிய திருப்பதி வெங்கடேசனுக்கு இந்த நன்னாளில் ஸஹஸ்ர கலசாபிஷேகம் விமரிசையாக நடைபெறும். ”கலியுக தெய்வமே, கண்கண்ட வரதா” என நாமும் அவனை  இருந்த இடத்திலிருந்தேபணிவோம்.
ஆண்டாள் கண்ணனைக்   கண்ட ஆனந்தத்தில் கடல் மடை யென பாசுரம் ஒன்று பாடுகிறாள். இல்லை, இல்லை ,ஆண்டாள் உருவில் வில்லிப்புத்தூரில் இருந்த மற்றொரு இளம்பெண் கோதை ஆண்டாளாகி இதைப் புனைகிறாள். ஏட்டில் எழுத்தாணி விரைகிறது. வார்த்தைகள் மனசிலிருந்து பொங்கி மதியை  நிரப்பி கண் வழியே கைக்குத் தாவி ஏட்டில் படைக்கப்பட்டது. பனை ஓலை ஏடு  கிறுகிறுவென  நிறைகிறது.

காலம் காலமாக அந்தக் காவியம் திருப்பாவையாக நமக்கு மகிழ்ச்சியூட்டி என்றும் நம் மனத்திலும் நிற்கச் செய்த ஆண்டாளே, கோதையே, சிறிய உருவில் வந்த பெரிய  தாயே,  உன்னை சாஷ்டாங்கமாக வணங்குகிறோம்.

வில்லிப் புத்தூர் வட பத்ரசாயீ கோவிலில் பட்டாச்சார்யர் தான் அந்த விடிகாலையில் மற்ற பக்தர்களுக்கு விஷ்ணுசித்தர் வீட்டிலிருந்து எழுதிக்கொண்டு வந்த கோதையின் அன்றைய பாசுரத்தை படித்துக்  காட்டிக் கொண்டிருந்தார்:  அவரால்  ஆண்டாள்  போல்  பாடமுடியாதே.  அவரைச்சுற்றி உள்ளூர் வைஷ்ணவர்கள் ஆர்வமாக கேட்டுக்கொண்டிருந்தார்கள். இது தான் கோதை எழுதிய அந்த பாசுரம்.

”அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல குலவிளக்கே
எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய்
அம்பரம் ஊட அறுத்து ஓங்கி உளகு அளந்த
உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்
செம் பொற் கழலடிச் செல்வா பலதே உம்பியும் நீயுன்
உறங்கேலோர் எம்பாவாய்”

அன்று நந்தவன ஆஸ்ரமத்தில் திண்ணையில் தூணில் சாய்ந்தவாறு விஷ்ணுசித்தர் இதுவரை இருபது தடவையாவது மேற்கண்ட பாசுரத்தை வாயாரச் சொல்லி மகிழ்ந்திருப்பார்.

இன்னும் அவருக்கு அந்த ஓலைச்சுவடியில் படித்த பாசுரத்தை மனதிலிருந்து நகர்த்த அவர் மனம் இடம் கொடுக்க வில்லை. எதிரே மலர்களைத் தொடுத்துக் கொண்டே அவரைப்பார்த்து பாசத்தோடு கோதை அமர்ந்திருக்கிறாள்.

‘கோதையின் பாமாலையில் மகிழ்ந்த அரங்கா, உனக்கு இரட்டிப்பு  சந்தோஷம் இன்று, கோதை படைத்த பாமாலையோடு கோதை தொடுத்த பூமாலையும் இந்தா சூடிக்கொள்.”

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *