THE GREAT SIVA DHANUS BROKEN J K SIVAN

அழகிய மிதிலை நகரினிலே…… நங்கநல்லூர்  J K  SIVAN
அயோத்யா  நகரத்து ராமன் என்ற சிறுவன் சகோதரன்  லக்ஷ்மணனோடு காட்டில்  பல  ராக்ஷஸர்களை அடித்து விரட்டி கொன்று  விஸ்வாமித்ரர் யாகத்தை சிறப்பாக நடத்திக் கொடுத்தது,  வரும் வழியில் ராமனின் பாதம் பட்டதும் ஒரு பெரிய கற்பாறை ஒரு ரிஷி பத்தினியாக மாறியது பற்றிய விஷயங்கள் எல்லா இடத்திலும், ஊரிலும் பரவி விட்டது. யார்  அந்த ராமன்?  அவனைப் பார்க்கவேண்டும் என்ற ஆவல் எல்லோருக்கும்.  அப்படிப்பட்ட  ராமன் இங்கே  மிதிலைக்கு வருகிறானாமே?  என்று விஷயம் கேட்டு அனைவரும் ஆனந்தித்து மிதிலையில் கூட்டம் சேர்ந்து விட்டது.
கோசல மன்னன்  ஜனகன்  விஸ்வாமித்ரர், ராமன் லக்ஷ்மணன்  வரவைக் கேள்விப்பட்டு சகல பூஜோபசாரங்களுடன் எதிர் கொண்டுவந்து  நெடுஞ்சாண்கிடையாக முனிவர்  பாதத்தில்  விழுந்து  வரவேற்றான். ”

‘குருவே,  சூரிய  சந்த்ரர்களைப்போல  ஒளிவீசிக்கொண்டு,  நர  நாராயணர்களாக  தோன்றும்  இந்த  தெய்வீக  குழந்தைகள்  யார்?”

”ஜனகா,   இவர்கள்  இருவரும்  அயோத்தியா மன்னன்  தசரதனின்  புத்ரர்கள், ராமன்.   லக்ஷ்மணன்.   இவர்கள்   சிறுவர் களல்ல.  அதி பராக்ரமசாலிகள்.   என்  யாகத்தைக்  காக்க  அனுப்பப்பட்டவர்கள்.  கொடிய  பாதகி ராக்ஷசி  தாடகையை வதம் செய்து, யாகத்தை கெடுக்க வந்த  பலமிக்க  ராக்ஷசர்கள்  மாரீசனை  விரட்டி,    சுபாகுவைக்  கொன்றவர்கள்.
கங்கைக்கரையில்  கௌதமர் ஆஸ்ரமத்தில்  சாபத்தால்  கல்லான  அகலிகையை மீட்டு  சாப  விமோசனம்  செய்தவன்  இந்த  ராமன்.  உனது  மாளிகையில்  உள்ள  மகேஸ்வரன் அளித்த  சிவ தனுசைக்  காண்பதற்கு அழைத்து வந்திருக்கிறேன்.”

”மகரிஷி,  தங்கள்  சித்தம்  என்  பாக்கியம்”

”ஜனகா,  உன் நிபந்தனைப்   படி,  உன் பெண்  சீதையை மணக்க  விரும்பிய பல மன்னர்கள், அந்த  மகா  தனுசை அசைக்க முடியாமல், அப்பறம் தானே  தூக்க முயலவேண்டும்,  முடியாமல் அநேகர் , தோற்றனர்  என்று  கேள்விப்பட்டேன்.  ராமனுக்கு  அந்த  சிவ  தனுசைக்  காட்டு.    அதைப் பார்த்து விட்டு  இவர்கள்  அயோத்தி திரும்பட்டும்” என்றார் விஸ்வாமித்ரர்.
அரண்மனையில்  ஜனகன் உத்தரவுப்படி அமைச்சர்  சிவ தனுசைக் கொண்டு  வர ஆட்கள்  சென்றார்கள் ..
”குருதேவா,  அந்த  சிவதனுசை  தூக்கி நிறுத்தி  அதன்  இரு முனைகளிலும்  நாண்  ஏற்றினால் தான் அந்த வீரனுக்கு   என் மகள்  சீதையை  விவாகம் செய்து கொடுப்பேன்  என்று தான் அறிவித்திருந்தேன்.”
விஸ்வாமித்ரர் புன் முறுவலுடன்  ராமனைப் பார்த்தார்.  பிறகு
”ஜனகா  உன்  நிபந்தனைப்படியே  ஆகட்டும்” என்றார்.

சற்று நேரத்தில்   ஏறக்குறைய  ஐந்தாயிரம்  வீரர்கள் தூக்க முடியாமல்  ஒரு  பெட்டியை  தூக்கிக் கொண்டு வந்தார்கள்.

அதில்  நூற்றுக்கணக்காக மணிகள், முத்து, வைரங்கள் அலங்கரிக்க  ஒரு  அழகிய  பிரம்மாண்டமான  வில்  இருந்தது.

ராமன்   அந்த   வில்லைப் பார்த்தான்.  முகம்  மலர்ந்தான்.  இடுப்பில்  வஸ்த்ரத்தை  இழுத்து  வரிந்து கட்டிக்கொண்டான்.
அதை  ஒரு  விளையாட்டு  பொம்மையைப்  போல்  பார்த்தான் .  குனிந்து  இடக்கையால் வில்லைத்  தூக்கி நிறுத்தினான்.
அனைத்து  மன்னர்களும்  அசந்து  நின்றனர். நாண்  கயிற்றைப்   பூட்டினான்.  வலது கரத்தால்  சற்றே நாணை  இழுத்தான்.
அண்ட பகிரண்டமும்  குலுங்க  பேரிடி ஓசையோடு  அந்த  சிவதனுசு  முறிந்து  கீழே விழுந்தது.  தேவர்கள்  பூமாரி பொழிந்தனர். ஸ்தோத்ரங்கள்  துதி பாட துந்துபி  ஒலிக்க சகல திக்குகளிலும்   சப்தம்  எதிரொலித்தது.

ஜனகன்  அதிசயித்து  ஆனந்தத்துடன்  ஓடிவந்து   ராமனை  மார்புறத்  தழுவிக்கொண்டான்.  அந்தப்புர  பெண்கள்  ஆர்ப்பரித்து மகிழ்ந்தனர்.  பொன்வண்ண மேனியுடன் சீதை, வலது கையில்  சுவர்ண மாலை  ஏந்தி, முத்து மாலை, காதோலை  அணிந்து, காலில் நூபுரம்  ஒலிக்க, பட்டாடை உடுத்தி, புன்சிரிப்புடன் வந்து  ராமனின்  கழுத்தில்  மாலையிட்டாள்.  

ஜனகர்  மகிழ்ச்சியோடு ”மகரிஷி, உடனே  தகவல்  சொல்லுங்கள்,  தசரத  மகாராஜா, அனைவரோடும்   விரைவில் மிதிலை வரட்டும்  ஸ்ரீ  ராமனின்  திருமணத்தைக்  காண”

விரைவாக  செல்லும்  தூதர்கள்  உடனே குதிரை மீது ஏறி  அயோத்யாவுக்கு  பறந்தார்கள்.  தசரதன்  செய்தி கேட்டு  மகிழ்ந்தான்.  நாடே  பேரானந்தத்தில் திளைத்தது.
ரத,  கஜ, துரக  பாதாதிகளுடன் தசரதன் முதலான அனைவரும் மிதிலை செல்லத்  தயாராயினர். வசிஷ்டர் பத்னியோடும் ,  நித்யாக்னி குண்டங்களோடும்  புறப்பட்டார். எல்லோரும்  மிதிலை  அடைந்தார்கள்.  ராமனும்  லக்ஷ்மணனும் தந்தை பாதத்தில் விழுந்து வணங்கினார்கள்.

”ராமா, நான்  செய்த  பாக்கியம்  நீ.  உன்  தர்சனம்  எனக்கு  கிட்டியது.  விஸ்வாமித்ரர் அருள் இது ”  தசரதர்  ராமனைக் கட்டி  அணைத்தார்.  ஜனகன் அனைவருக்கும்  உபசாரங்கள் செய்து  சௌகர்யமாக  மாளிகையில் அவர்கள்  தங்கினார்கள்.  

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *