PESUM DEIVAM J K SIVAN

பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN
ஒரு ஓட்(டை) டு வீடு
நிறைய படித்து விட்டால் சிலருக்கு கர்வம், அகம் பாவம், வந்து விடுவதைப் பார்க்கிறோம். பக்தி குன்றி தற்பெருமை மேலிடுகிறது. பகவான் அனுக்ரஹத் தால் தான் நாம் மூச்சு விடுகிறோம். படிக்கிறோம், மூளை படித்ததை க்ரஹிக்கிறது.அந்த அறிவு விழலுக் கிறைத்த நீராக ஆகி விடக்கூடாது. இந்த தேகத்தை பகவான் நமக்கு அளித்ததே அதனால் பிறருக்கு, பிற உயிர்களுக்கு உதவி செய்யவேண்டும் என்பதற்காக. இதம் சரீரம், பரோபகாரம் என்பது இதைத்தான்.
மஹா பெரியவா 13 வயதிலேயே தன்னை இந்த உலகத்துக்கு அர்பணித்துக் கொண்டவர். ஜகத் குரு. சிறந்த சந்நியாசி. தபோபலம் மிக்கவர். அவரால் எத்தனையோ பேர் வாழ்க்கையில் எத்தனையோ நன்மைகள் அனுபவி த்தவர்கள். இன்றும் அவர் உருவச்சிலையை, படத்தை வணங்குபவர்கள், மானஸீக மாக வேண்டுபவர்கள், மஹா பாக்யசா லிகள். அவருடைய அருள் தொடர்ந்து பெறுபவர்கள்.
மஹா பெரியவாளை நேரில் பார்த்தவர்கள் பாக்கியசா லிகள். புண்யவான்கள். எனக்கு அவரை அடிக்கடி பார்க்கவும், பேசவும், அவர் ஆசி பெறவும் அதிர்ஷ்டம் வாய்த்தது என் முன்னோர் ஆசியும் புண்யமும் தான்.
மஹா பெரியவாளை நேரில் பார்க்காதவர்களுக்குத் தான் இந்த மாதிரி அவர் அனுபவ விஷயங்களை எல்லாம் அனுப்புகிற காரணம் அவர்களும் அவரைப் புரிந்து கொண்டு வணங்கி அருள் பெறவேண்டும் என்பதற்காக.
எங்கெங்கோ கிடைத்த சில விஷயங்களைச் சுருக்கி புரியும்படியாக ஆனால் மூலத்திலிருந்து மாறாமல் சுவை குறையாமல் கொடுக்க பிரயத்தனப் பட்டு செய்கிற காரியம் இது. இதற்கு எனக்கு சக்தியும் திறமையும் கொடுப்பதும் மஹா பெரியவா அனுக்ர ஹம் தான். அதனால் இதற்கு ” நடந்த ஒரு தெய்வம்” என்று பெயர் கொடுத்து அவரால் பலர் வாழ்க்கையில் ”நடந்த” சமாச்சாரங்களைச் சொல்கிறேன்.
அநுஷம் முடிந்த மறுநாள். காஞ்சியில் ஏராளமாக பக்தர்கள் தர்சனம் பண்ண வந்தார்கள். அதில் ஒரு வயசான பாட்டி.
“சர்வேஸ்வரா………..மஹாப்ரபு….” என்று பாட்டி கன்னத்தில் போட்டுக் கொண்டாள் .
“எப்டி இருக்கான் ஒன் ஸ்வீகாரம்?………”– மகா பெரியவா.
“ஏதோ இருக்கான்………” விட்டேத்தியாக பதில் வந்தது பாட்டியிடமிருந்து.
“வயசான காலத்ல ஒனக்கு பிடிப்பே இல்லேன்னியே?…அதான் ஒதவியா இருக்கட்டுமே…ன்னுதான் குடுத்தேன்” முகத்தில் சிரிப்பு!
”பிடிப்பு இருக்கட்டும்னு தான் குடுத்தேன் ‘……………………சுற்றி இருந்தவர்கள் முகத்திலும் சிரிப்பு.
“சரி………ஒன் ஒடம்பு எப்டி இருக்கு?………”
“ஏதோ இருக்கேன்….பெரியவா அனுக்ரஹம்…மழை பெஞ்சா, ஆத்துல முழுக்க ஒரேயடியா ஒழுகறது….அதை கொஞ்சம் சரி பண்ணிக் குடுத்தா, தேவலை பெரியவா”
”என்ன சொல்றே நீ ?”
சுற்றி இருந்தவர்கள் அதிர்ந்தனர்! மோக்ஷத்தை தரவல்ல பராசக்தியிடம் இப்படி ஒரு விண்ணப்பமா!
“இந்த ஊர்ல மழையா ! காஞ்சிபுரந்தான் காஞ்சு போன புறமா இருக்கே.!…….” மஹாபெரிய வாளின் கிண்டல் கலந்த சிரிப்பு.
“இல்லையே பெரியவா, இப்போ கூட ரெண்டு நாள் முன்னால பெஞ்ச மழைலயும் தான் என் வீடு ஒழுகித்தே!…….”
“அப்டியா! சரி நான் ஏதாவது ஏற்பாடு பண்றேன்…..”
பாட்டி நகர்ந்தாள். இத்தனை உரிமையோடு பெரியவாளிடம் பேசும் அந்த பாட்டி, எட்டு வயசில் திருமணமாகி விதவை ஆனவள். கணவர் வழியில் ஏராளமான சொத்து! ஒரு பெண்ணிடம் இத்தனை சொத்து இருக்க சொந்தக்காரர்கள் விடுவார்களா? அதே சமயம் தன்னிடம் வரவேண்டிய ஜீவன் ஒரு நாயாக இருந்தால் கூட பகவான் விட்டு வைப்பானா?
பாட்டிக்கு விவரம் கொஞ்சம் நன்றாக தெரிந்திருந்ததால், சற்று சுதாரித்துக் கொண்டாள். காஞ்சிபுரத்துக்கு எதேச்சையாக வந்தவள், “தன் சொத்துக்கள் அத்தனையும் காமாக்ஷிக்கு!” என்று சொல்லிவிட்டாள். பெரியவா எவ்வளவோ மறுத்தும், கடைசியில் அந்த பெண்ணின் அன்பான பிடிவாதம் வென்றது. எனவே அவளுக்கு மடத்துக்கு சொந்தமான வீடு ஒன்றை தங்கிக் கொள்ள மஹா பெரியவா கொடுத்துவிட்டார். அல்லும் பகலும் பெரியவாளை தர்சனம் பண்ணும் பாக்யம் ஒன்றே போதும் என்று பரம த்ருப்தியுடன், பணத்துக்கு துளியும் முக்யத்வம் கொடுக்காத ஒரு ஆத்மாவை பெரியவா அல்லும் பகலும் ரக்ஷித்தார்.
பாட்டியோடு சிரித்துப் பேசிக் கொண்டிருந்த மகா பெரியவா எதிரில் காமாக்ஷி அம்மன் ஆலய நிர்வாகிகளில் சிலர் வந்து நமஸ்கரித்து விட்டு ஒரு தட்டில் மஞ்சள், ரோஸ் வர்ண பத்திரிகையை வைத்தார்கள். அதைப் பார்த்ததும் சந்தோஷமாக பாட்டியோடு சிரித்துக் கொண்டிருந்த மஹா பெரியவா முகம் சட்டென்று மாறியது…….
“என்னது இது?”
“காமாக்ஷி அம்மன் கோவில் ப்ரம்மோத்சவ பத்திரிகை…”
“கலெக்டருக்கு குடுத்தாச்சா?”
“குடுத்துட்டோம். பெரியவா”
“இவாளுக்கு?” என்று பக்கத்தில் அமர்ந்திருந்த மற்ற ரெண்டு பெரியவாளையும் காட்டி கேட்டார்.
“குடுத்தாச்சு. பெரியவா……”
“ஓஹோ…சரி. எல்லார்க்கும் குடுத்துட்டு, இவன் மடத்த விட்டு எங்கேயும் போக மாட்டான்….ன்னுட்டு கடேசில போனாப் போறதுன்னு எனக்கும் ஒரு பத்திரிகை கொண்டு வந்தேளாக்கும்?”
ருத்ர முகம்!
“இல்லை…..அது வந்து……பெரியவா” நிர்வாகிகள் எச்சில் கூட முழுங்க முடியாமல், கால்கள் நடுங்க நின்றனர்.
“கேட்டுக்கோங்கோ! மடத்து சம்ப்ரதாயம்..ன்னு ஒண்ணு இருக்குன்னாவது உங்களுக்கு தெரியுமோ? பத்திரிகை மொதல்ல எங்க தரதுன்னு தெரியுமோல்லியோ?”……………………………”எல்லா சம்பிரதாயத்தையும் மீறி நடந்துண்டா எப்டி?”…………………….”
நீ எத்தனை வர்ஷமா இங்க இருக்கே?””………………………………………”
மஹா பெரியவா கேள்விகள் அர்ஜுனனின் காண்டீபத்திலிருந்து சரமாக எழும் அஸ்த்ரங்களாக அவர்களை துளைத்தது. குண்டுகளாக துளைத்தன! என்ன பதில் சொல்வது? திகைத்தனர்.பெரியவா எதிரே வைக்கப்பட்ட பத்திரிகையைத் தொடவே இல்லை! மடத்து நிர்வாகிகள் நடுங்கிப் போய்விட்டனர்.
”ஆம். தவறுதான் பெரியவா. க்ஷமிக்கணும்”
“எப்டி வரணுமோ அப்டி வாங்கோ” திரும்பி நடந்தவர்களை, “ஒரு நிமிஷம் ……..” என்று நிறுத்தினார்.
“நீ எங்கே குடியிருக்கே?”
“வடக்கு சன்னதிப் பக்கம் ஒரு ஆத்துல…….”
“அங்க வேற ரெண்டு மூணு வீடு இருந்ததே…”
“அங்க சுப்புராமன் இருக்கார்……”
பெரியவாளுக்கோ எந்தெந்த வீடு, யார் யார் இருக்கிறார்கள் எல்லாம் அத்துப்படி!
“சுப்புராமன்தான் மேல போயிட்டாரே……அவரோட வாரிசுகள் நம்ம மடத்துல வேலை செய்யறாளா என்ன?”
“இல்லை……….”
“மடத்ல வேலை செய்யறவாளுக்குத்தான் நாம வீட்டை குடுத்திருக்கோம். இங்க வேலை செய்யாதவாளுக்கு எதுக்கு வீடு? நீ என்ன செய்வியோ, ஏது செய்வியோ எனக்கு தெரியாது! நாளைக்கு மறுநாள், இந்த பாட்டி அந்த வீட்டுக்கு குடி போகணும்!..டேய்! நாளன்னிக்கு நல்ல நாளா…ன்னு பஞ்சாங்கத்தைப் பாரு”
“ஆமா பெரியவா நல்ல நாள்தான்”
“அப்போ சரி. இந்த பாட்டி நாளன்னிக்கு அந்தாத்துக்கு போறதுக்கு ஏற்பாடு பண்ணிடுங்கோ”
பெரியவா சங்கல்பம் நிறைவேறியது!
இதற்கப்புறம் மூன்று மாசம் கழித்து ஒருநாள் காமாக்ஷி கோவிலில் தர்சனம் பண்ணிவிட்டு சன்னதி தெரு வழியாக நடந்து வந்து கொண்டிருந்த பெரியவா, சட்டென்று ஒரு வீட்டின் முன் நிற்கிறார்.
பின்னால் வந்து கொண்டிருந்த பக்தர் குழாம் ஒருகணம் அதிர்ச்சி அடைந்தது. எதற்காக நிற்கிறார் பெரியவா? என்று தெரியாமல் குழம்பியது. ஒரு பக்தரிடம் கேட்கிறார் : ”எங்கடா, ரெண்டு மூணு நாளா பாட்டியை காணும்…..உள்ள போய் பாரு. ஒடம்புக்கு கிடம்புக்கு முடியலையோ என்னவோ…..”
உள்ளே….ஏழ்மையான எளிமையான வாஸம். ஒரே ஒரு குமுட்டி அடுப்பு. ரெண்டே ரெண்டு பாத்ரம். வேறு எதையுமே காணோம். பாட்டி ஒரு ஓரத்தில் முடங்கிக் கிடக்கிறாள். பக்தர் மெதுவாக பாட்டியிடம் பெரியவா வாசலில் நிற்கும் விஷயத்தை சொன்னதுதான் தாமதம்! ஒரு புது தெம்போடு, சட்டென்று எழுந்து, தன் நார்மடியை சரி பண்ணிக் கொண்டு பாட்டி வாசலுக்கு ஓடோடி வருகிறாள்.
உணர்ச்சி பொங்க உரத்த குரலில் ”ஸர்வேஸ்வரா, மஹாப்ரபு…….நீயே என்னைத் தேடிண்டு வந்துட்டியா?” அலறிக் கொண்டே பெரியவா பாதத்தில் விழுந்தாள். மூன்று முறை வலம் வந்து நமஸ்கரித்தாள். இந்த உணர்வு உண்மையான பக்தனுக்கும் பகவானுக்கும் மட்டுமே தெரியும்..
தினம் தினம் ஆயிரக்கணக்கானோர் வந்து தர்சனம் பண்ணுகிறார்கள். ஆனால், தன்னிடம் ஆத்மார்த்தமாக ப்ரேமை பூண்டவர்கள் ஒரு நாள் பார்க்க வராவிட்டால், பகவானால் தாங்க முடியாமல், தானே அவர்களைப் பார்க்க வந்துவிடுவான். அந்த பாட்டிக்கு கிடைத்த பாக்யம் எல்லோருக்கும் கிடைக்குமா? என்று கேட்டால், முடியும், கிடைக்கும். தன்னையே பெரியவாளிடம் முழுவதுமாக அர்ப்பணித் தவர்களுக்கு மட்டுமே நிச்சயம் கிடைக்கும்

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *