OUR GANESH J K SIVAN

எங்கள் குடும்ப பிள்ளையாருக்கு  வயசு  200+
நங்கநல்லூர்  J.K. SIVAN

அந்த  குட்டையான  குண்டு  கருங்கல் பிள்ளையாரை நான் என் கடைசி மூச்சு உள்ளவரை மறக்க முடியாது. அந்த அளவு என் மனதில் ஆழப் பதிந்தவர். இமய மலைக் கல்லில் செதுக்கப்பட்டவர் என்பார்கள். நான்கு தலைமுறையாக எங்கள் குடும்பத்தோடு சம்பந்தப்பட்டவர். 200 வயசுக்கு மேலே இருக்கும் அவருக்கு.

நான் எப்போதிலிருந்து அவரை அறிந்தேன்?    எனக்கு நினைவு தெரிந்தது முதல் எங்கள் வீட்டில் தான் இருந்தார்.
1942-44 களில் நாங்கள் திருவல்லிக்கேணியில்- குடியிருந்தபோது எனக்கு  எதையும் தெரிந்து கொள்ளும் வயதில்லை. முதல் உலக மகா யுத்த காலத்தில் எம்டன் எனும் நீர் மூழ்கி ஜெர்மனி கப்பல் சென்னையை தாக்க முற்பட்டது. அதன் குறி தப்பி ஹை கோர்ட் அருகே சுவற்றில் குண்டு வெடித்து விழுந்தது. அந்த இடத்தை இன்னும் மெரினா கடற்கரை சாலையில் உயர்நீதி மன்ற வளாக பாதுகாப்பு சுவற்றில் ஞாபகார்த்த சின்னமாக ஒரு கல்வெட்டுடன் பார்க்கலாம்.
இரண்டாம் உலக மஹா யுத்த காலத்தில் ஜப்பானிய விமானங்கள் தாக்கும் என்ற பயம் சென்னையில் இருந்தது. சிங்கப்பூர் விழுந்து விட்டது. அந்தமான் தாக்கப்பட்டது.. எந்த நேரமும் ஜப்பானியன் நம்மை எல்லாம் அழிக்க வருகிறான் என்ற  பீதி அப்போதைய ,சென்னை, அது தான்  மதராஸ், பூரா  பரவலாக இருந்தது. திருவல்லிக்கேணி அடையார் மைலாப்பூர் எல்லாம் ஜப்பான்காரன் குண்டினால் அழியும் என்று ஒரு புரளி, பீதி, மக்கள் மனதில் விழுந்து பல குடும்பங்கள் இந்த பகுதியை விட்டு வெளியேறின. வெள்ளைக்காரன் ஆட்சியில் மிக கடுமையான சோதனை காலம். ARP (AIR RAID PRECAUTION) என்று முன்னெச்சரிக்கை விளம்பரங்கள் ஒலி  பெருக்கி வழியாக தெருத்  தெருவாக மக்கள்  எப்படி  உயிரைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும்  என்று சொல்லிக்கொண்டே போகும். கும்பலுக்கு ஆள் சேர்க்க எம். கே. தியாகராஜரின் சினிமா பாடல்கள் பாடிக்  கொண்டே போகும்.

வெளியேறிய  குடும்பங்களில்  நாங்களும் ஒரு  குடும்பம்.   என் தாய் படிக்காதவள். என் சிறுவயதில் அவள் சொல்லும்  ”நாங்கள் ஏவாகேஷன்” (evacuation தான் அவளால் சொல்லப்பட்ட ஆங்கில வார்த்தை) போது கட்டின துணியோடு வடபழனி முருகனிடம் வந்து விட்டோம்” என்பாள்.

வடபழனி கோவில் அருகே ஒரு அக்ரஹாரம் போல ஒரு பிள்ளைமார் தெரு. தெரு  வடபழனி முருகன் கோவில் குளத்தை ஒட்டி இருந்தது. மண் தெரு. எல்லா வீட்டிலேயும் ஓடு வேய்ந்து இருக்கும். திண்ணைகள் உண்டு. அதில் சாயந்திரங்களில் சாய்ந்து உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பார்கள். தெருவில் குழந்தைகள் எல்லோரும்  விளையாடுவார்கள்.  பெரிய பெரிய நில சுவான்தார்கள், கர்ணம் , முன்சீப், போன்ற உத்யோகங்கள் வகித்த பணக்கார சைவ பிள்ளைமார்கள் சொந்தக்காரர் களோடு வாழ்ந்த இடம் அந்த பிள்ளைமார்  தெரு. இப்போதும் அந்த வம்சாவளி இருக்கிறதா அங்கே என்று தெரிந்து கொள்ள முயன்று தோற்றுப்போனேன்.
 ரெங்கநாதம் பிள்ளை வீட்டில் எங்களுக்கு இடம் கிடைத்தது. வாசலில் பெரிய மகிழ மரம் விளையாட வரப்பிரசாதமாக இருத்தது. அதன் நிழலில் பகலில் நிறைய பாண்டி  ஏரோபிளேன்  தாவி குதித்து  விளையாடியிருக்கிறேன். எதிர்த்த வீட்டில் பத்மநாப பிள்ளை, முன்சீப். அவர்களுக்கு புத்ர பாக்யம் இல்லை என்பதால் எனக்கு கொஞ்சம் அவர்கள் வீட்டில் சலுகை. நிறைய தின்பண்டங்கள் கொடுப்பார்கள் . எனக்கு சற்றே மூத்தவன்  என் அண்ணா ஜம்புநாதன். என் தாத்தா பெயர் கொண்டவன். பள்ளிக்கூடத்தில் ஜம்புலிங்கமானவன். அவனுடன் தான் எனக்கு எப்போதும் சண்டை விளையாட்டு ரெண்டுமே. ரெண்டிலும்  ஜெயிப்பது எப்போதும் அவன் தான். விளையாடும் இடம் வடபழனி கோவில். கூரை வேய்ந்த கோவில். கோவணாண்டி வடபழனி முருகனும் நாங்களும் தான் வேறு யாரும் இல்லாத காலம். சுந்தர குருக்கள் வீடு அருகிலேயே இருந்தது.  அவரும் அவர் அப்பாவும் தான் பூஜை செய்யும் அர்ச்சர்கர்கள். சுந்தர குருக்கள் குரல் அற்புதமாக கணீரென்று இருக்கும். இன்னும் காதில் ஒலிக்கிறது. சமீபத்தில் சுந்தர குருக்கள் மகன் வடபழனி கோவிலில் அர்ச்சகராக இருப்பதை அறிந்து அவரை சந்தித்தேன். அப்பாவைப் பற்றி சொன்னபோது அவர் கண்களில் கண்ணீர் மல்கியது. பிள்ளைக்கே அறுபது வயது இருக்கலாம்.
வடபழனி முருகன் கோவில் நந்தவனம் மரங்கள் சூழ்ந்து இருக்கும். கோவிலுக்கு கதவு கிடையாது. அது நாங்கள் ஓடியாடி விளையாடும் ஒரு அழகான இடம்.

என் தாத்தா ஜம்புநாத சாஸ்திரி, பாட்டி சீதாலட்சுமி இருவரையும் நான் பார்த்ததில்லை. படத்தில் எப்போதோ சிறுவயதில் பார்த்தது. மீசை தாடியோடு பாரதியாரை பார்க்கும்போது தாத்தா ஜம்புநாத சாஸ்திரி ஞாபகம் வரும். பாரதி நெற்றியில் குங்குமத்தில் பெரிய நாமம் தரித்திருப்பார். தாத்தா விபூதி பட்டை. இன்னும் பெரிய தாடி, முறுக்கி விட்ட மீசை, கன்னங் களில் முனைகளில் புஸ் என்று பந்தாக சுருண்டு கம்பீரமாக இருப்பார். தலையில் முண்டாசு.

முகத்தில் தெரிவது பரந்த நெற்றி, அதில் கீர் சந்தனம் விபூதி கீற்று, குங்குமம். தீர்க்கமான மூக்கு மீசைக்கு மேலே தனித்து நிற்கும். அடர்ந்த கம்பளி பூச்சி புருவங்களின் நிழலில் ஆழமான பார்வை .. கூர்மையான கண்கள். காதை மறைந்த முண்டாசு. கழுத்தை மறைத்த கருப்புகோட்டு அதில் வரிசையாக நிறைய பெரிய பெரிய இரும்பு பொத்தான்கள். இப்படி ஒரு பழுப்பேறிய கருப்பு வெள்ளைப்படம் ஒன்று தான் என் தாத்தாவை எனக்கு காட்டியது. அதுவும் எப்போதோ எப்படியோ காணாமல் போனது. வீட்டில் ஒரு பாணா தடி ஆறு அடி நீளத்துக்கு சுவற்றில் சாற்றி வைத்திருந்தது நினைவிருக் கிறது. ஒருபாத ரோட்டு கட்டை.   பாதுகை மாதிரி. மரத்தில் குமிழ் வைத்து அதை கால் கட்டை விரல் ரெண்டாவது விரல் இடையில் செருகி மரச்செருப்பின்   நடுவே ஒரு தோல்  குறுக்காக பட்டையாக  தைத்திருப்பார்கள். அது தான் பாதம் அந்த மரக்கட்டை காலணியிலிருந்து   நழுவாமல் உறுதியாக பிடித்துக் கொள்ளும்.

எங்கள் வீட்டு பிள்ளையார் தாத்தாவின் அப்பா, என் கொள்ளுத்தாத்தா வின் அப்பா மிருத்யுஞ்சய அய்யர் காலத்தில் இருந்து இருக்கிறார். எங்கள் தாத்தாவிற்கு பிறகு என் தந்தையிடம் வந்தது, தற்போது என் தமையன்  உள்ளகரம் ரத்னம் ஐயர் வீட்டில் தினமும் பூஜை அர்ச்சனை செய்யப்படுகிறது. அவரது வணங்கி பரிக்ஷைகள் எழுதி இருக்கிறேன். எனக்கு வேண்டியதை எல்லாம் கேட்டிருக்கிறேன். தந்திருக்கிறார்.
பிள்ளையாரை  என் தந்தையார் ஒரு தாம்பாளத்தில் வைத்து அபிஷேகம் செய்து வஸ்திரம் உடுத்தி (ஒரு சின்ன பிள்ளை யார் துண்டு, சிவப்பு பார்டர் கரை யுடன்) பூணல், சந்தனம், குங்குமம், விபூதி  அணிவித்த  காட்சிகள் இன்னும் மனதை விட்டு நீங்கவில்லை.  வருஷம்  80க்கு மேல்  ஆகியும்  மறக்கவில்லை.  இந்த  அற்புத விநாயகர். எங்கள் குடும்ப கஷ்டம் நஷ்டம், நல்லது  கெட்டது  அனைத்தும் தெரிந்தவர். கெட்டதை  நீக்கி  கேட்காமலேயே எங்களை  ரக்ஷித்து எங்களை இன்னும் வாழ்விக்கும் வள்ளல்.

சொல்லச்  சொல்ல ஊற்று போல் பழைய விஷயங்கள் நிறைய தோன்றுகின்றதே.   தோன்றியபோது, முடிந்தபோதெல்லாம்  சிரமத்தை பார்க்காமல் கம்ப்யூட்டர் முன்னால்  உட்கார்ந்து எண்ணத்தை எழுத்தாக்குகிறேன்.  படிக்க பிடிக்குமா என்று தெரியாது!

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *