KUMBAKARNA J K SIVAN

ராமன் கதை… நங்கநல்லூர் J K SIVAN
துயில் கொண்ட கண்கள்.
மஹா பாரதத்தில் கர்ணனும் ராமாயணத்தில் கும்பகர்ணனும் மிகவும் விரும்பப்படும் மதிப்பும் மரியாதையும் பெற்ற நன்றி உணர்வு கொண்ட சுத்த வீரர்கள். மன சாக்ஷியை மீறாதவர்கள். கும்பகர்ணனை எவரும் எதிர்க்க முடியாது. அவன் தவறாக உச்சரித்த வேண்டுகோள் அவனை தூங்கு மூஞ்சியாக மாற்றிவிட்டது.  அவன்  நாக்கே  அவனுக்கு எதிரியாக மாறிவிட்டது. கடும் தவம் இருந்து கடவுளே எதிரே வந்து  ”கும்பகர்ணா,  உன் தவத்தை மெச்சினேன்.    உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் தருகிறேன் என்ற போது கும்ப கர்ணன் உணர்ச்சி மேலிட்டு ”நிர்தேவஸ்ய” இனி தேவர்களே இருக்கக் கூடாது என்று கேட்பதற்கு பதிலாக ”நித்ரேவஸ்ய ”  (நித்திரை, எனும் உறக்கம் என்னை நீங்காமல் இருக்கட்டும்) என்று கேட்டு விட்டான்.  ததாஸ்து . அப்படியே நடந்துவிட்டது.  கும்பகர்ணன் வாழ்க்கையில் பெரும்பகுதி உறக்கத்திலேயே போய்விட்டது.வெள்ளைக்கார கதைகளில் ரிப் வான் விங்கிள் என்று ஒருவன் இப்படி தான்  தூக்கமே வாழ்க்கையாக வாழ்ந்த ஒரு பாத்திரம் படித்திருக்கிறீர்களா?.  எட்டாம் க்ளாஸ்  ஆங்கில பாட  வகுப்பு  வாத்யார்  துரைவேலு முதலியார்  சொன்ன  கதை மறக்கவே இல்லை.
.
கம்பன் கும்பகர்ணன் தூங்குவதைப் பற்றி ஒரு அருமையான பாடல் இயற்றியது நினைவுக்கு வந்தது.
“உறங்குகின்ற கும்பகன்ன! உங்கள் மாய வாழ்வெலாம் இறங்குகின்றது இன்று காண்; எழுந்திராய்! எழுந்திராய்! கறங்கு போல வில்பிடித்த கால தூதர் கையிலே உறங்குவாய், உறங்குவாய்! இனிக்கிடந்து உறங்குவாய்”.
என்றும் ஈறு இலா அரக்கர் இன்பமாய வாழ்வு எலாம் சென்று தீய, நும் முனோன் தெரிந்து தீமை தேடினான் இன்று இறத்தல் திண்ணமாக இன்னும் உன் உறக்கமே அன்று அலைத்த செங்கையால் அலைத்து அலைத்து உணர்த்தினார்”.
உறக்கத்திலிருந்து கஷ்டப்பட்டு அவனை எழுப்பி ”எழுந்திரடா, போ யுத்த களத்துக்கு, எதிரி ராமனையும் அவன் வானரப்படைகளையும் நிர்மூலமாக்கு ” என்று எழுப்பினார்கள் .
கும்பகர்ணன் உறக்கத்தில் மட்டுமல்ல, எண்ணத்தாலும் சிறப்பு மிக்கவன். உயர்ந்தவன். இராவணனின் தம்பியாகிய இவன், கிருஷ்ணனின் விஸ்வரூபம் போல நெடிய உருவம் கொண்டவன். அவன் தலையில் இருந்த கிரீடம் ஆகாசத்தை தொட்டது. உடல் போட்டோ பிடிக்க முடியாத அளவு ரொம்ப பெரிசு. அண்ட வெளியை மறைத்தது, கண்கள் இரண்டும் ரெண்டு சமுத்திரங்கள். ரொம்ப காலம் தூங்கி எழுந்தவனுக்கு நல்ல பசி.
அவனுக்கு மலை மலையாக அறுநூறு வண்டிகளில் யானைகளின் மேல் உணவு வந்து இறங்கியது.
சாப்பிட்டு நிறைய கள் குடித்தான். ஒரு glaas இல்லை நூறு நூறு குடங்கள். கண்கள் சூரியன் போல் சிவந்தன. ஒரு பாடல் வரி இதைச் சொல்கிறது:
“ஆறு நூறு சகடத்து அடிசிலும் நூறு நூறு குடம் கள்ளும் நுங்கினான்! ஏறுகின்ற பசியை எழுப்பினான் சீறுகின்ற முகத்து இரு செங்கணான்”.
பசி தீராமல், மேலும் 1200 எருமைக் கடாக்களை  வெங்காய பக்கோடா போல் கடித்து தின்றான்.   அவன் எதிரிகளுக்கு ப்ரத்யக்ஷ யமன். கருநிறம். காதுகள் குடம்போல் தொங்கும்.   கும்பம் என்றால் குடம். கர்ணன் என்றால் காதன். காதுகளை உடையவன். ராவணன் முன் போய் நின்றான். ராவணன் தம்பியை ஆரத்தழுவினான்.
‘ராவண அண்ணா,   எதற்கு என்னை எழுப்ப செய்தாய், நான் என்ன செய்யவேண்டும்?”
‘ரெண்டு மனிதர்கள் நிறைய குரங்குகளோடு இலங்கை எல்லைக்குள் வந்து நமது படைகளை த்வம்சம் செய்து இலங்கை ராஜ்யத்தை அழிக்கிறார்கள். தோல்வியைத் தழுவும் நிலையில் நாம் உள்ளோம். நீ உடனே சென்று அவர்களைக் கொன்று லங்கையைக்  காப்பாற்று”
“ஆனதோ வெஞ்சமம்? அலகில் கற்புடைச் சானகி துயர் இனம் தவிர்த்தது இல்லையோ? வானமும் வையமும் வளர்ந்த வான்புகழ்போனதோ? புகுந்ததோ, பொன்றும் காலமே?”
கிட்டியதோ, செரு? கிளர் பொன் சீதையைச் சுட்டியதோ? முனம், சொன்ன சொற்களால் திட்டியின் விடம் அன்ன கற்பின் செல்வியை விட்டிலையோ? இது விதியின் வண்ணமே”.
”ஓஹோ நமது ராஜ்யத்தில் மேல் போர் புரிகிறார்களா? வேண்டாம். உடனே சீதையை ராமனிடம் கொண்டு விடு என்று சொன்னேனே நீ கேட்கவில்லையே. கற்புக்கரசி சீதையின் துயர் இன்னமும் தீர வில்லையோ?தேவலோகத்திலும், மண்ணுலகத்திலும் போற்றப்பட்ட நமது பெருமை புகழ் எல்லாம் காணாமல் போய்விட்டதா? நாம் அனைவருமே அழியப் போகும் காலம் வந்து விட்டதோ? விதியை எவரால் மாற்றமுடியும்?
“கல்லலாம் உலகினை; வரம்பு கட்டவும் சொல்லலாம்; பெருவலி இராமன் தோள்களை வெல்லலாம் என்பது, சீதை மேனியைப் புல்லலாம் என்பது போலுமால்”
“அண்ணா, பூமியைக்கூட எவ்வளவு வேண்டுமானாலும் ஆழமாக தோண்டலாம் . இந்த பரந்த பூமிக்கு சுற்றி ஒரு வேலி அமைக்கலாம். இதெல்லாம் சுலபம். எனக்குத் தெரிந்து மஹா விஷ்ணு அம்சமான ராமனை வெல்வது,  கொல்வது என்ற உன் எண்ணம் இருக்கிறதே, அது எதற்கு சமம் தெரியுமா? . நீ சீதையைத் தழுவலாம் என்று நினைப்பதைப் போன்ற சுத்தமாக முடியவே முடியாத காரியம். புலஸ்தியன் வம்ச குலப்பெருமை உன்னால் அழிந்தது.உனது தகாத செயலால் தேவர்கள் மீண்டும் பலம் அடைவார்கள். இனி நீ உயிர் தப்ப முடியாது.என்னைப் பொறுத்தவரை உனக்காக நான் போரிடுவேன். போரில் வெற்றி எனக்கல்ல என்று  எனக்கே நன்றாக தெரியும். ஆனாலும் உனக்காக நான் உயிர்விடுவேன்”என்றான் கும்பகர்ணன். ”எப்படி கும்பகர்ணன்?

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *