EVERYTHING BEAUTIFUL J K SIVAN

எல்லாம் இன்ப மயம் ! – நங்கநல்லூர் J.K. SIVAN

விடிகாலை மெதுவாக நடந்து கொண்டிருக்கும்போது, ஒரு வீட்டருகில் செல்லும்போது MLV குரல் காதில் கேட்டது. வீடு கேட் தாண்டி கல்யாணி ராகம் அற்புதமாக ஒலித்தது. ஆஹா என்ன அதிசயம். என் மனதில் தோன்றிய உணர்வை எப்படி அந்த கந்தர்வ குரல் கல்யாணியில் ”எல்லாம் இன்ப மயம் ” என்று அபூர்வ ஆலாபனையில் படம் பிடித்துக் காட்டுகிறது.

இந்த பிரபஞ்சமே இன்பமயமானது. இலவசமாக இறைவனால் நமக்கு பரிசளிக்கப்பட்டது. அதைத் துன்பமயமாக்கி அவஸ்தை படுவது நாம் மட்டுமே. கிருஷ்ணா நீ அற்புதமானவன். உன்னை நினைக்கும்போது ராதையின் முகமும் எப்படியோ தானாகவே மனக்கண் முன் தோன்றுகிறது. பிருந்தாவனத்தை இன்பமயமாக்கி இன்றும் மயக்குவது நீயும் ராதையும் அல்லவா?

இயற்கையே ராதை என்றால் கிருஷ்ணனின் அன்பும் நேசமும், பாசமும் பிரேமையும் பூராவுமே நமக்குத்தான் அல்லவா? சொல்லாமலேயே புரியும் ரகசியம் இது.

இயற்கையும் இறைவனும் கூடுவது தான் ராதா- கிருஷ்ண பிரேம பாவம். இயற்கை தான் இறைவன்,இறைவனின்றி இயற்கை ஏது? கண்ணால் காண முடியாத பரமனைக், காணும் யாவிலும் காண்பது தான் ராதா-கிருஷ்ண தத்வம். .

இறைவன் எளியோர்க்கும் எளியவன் என காட்டத்தான் பிருந்தாவனத்தில் சாதாரண, பாமர, ஆயர்பாடி கோபியர்களோடு சேர்ந்து கோலாகலமாக அந்த கண்ணன் குலாவினான். ஆடினான், பாடினான், விளையாடினான். தானும் மகிழ்ந்து அவர்களையும் மகிழ்வித்து,வையகத்தையும் ஆனந்த பரவசத்தில் ஆழ்த்தினான். உருவம் இல்லாவிட்டால் புரியாதே என்பதற்காக ராதையும் ஆனானோ? இரவும் பகலும் அந்த இறைவன் தன்னைப் பலராக்கிக்கொண்டு அந்த கோபியரோடு விளையாடியது தான் ராஸக்ரீடை. ராஸலீலா. வட்டமான அவர்கள் கூட்டத்தில் மைய நாயகன் அந்த மோகன கிருஷ்ணன். அவனது குழல் நாதம் அவர்களை ஆட வைத்தது. அந்த கோபியரில் ஒருவளாக பிறப்பதற்கு எத்தனை புண்யம் பண்ணி னாளோ ஒவ்வொரு பெண்ணும் அங்கே.
ராதா ராதா என்றால்? யார் அந்த ராதா?
நெருப்புக்கு சூடு எப்படியோ, பனிக்கு குளுமை எப்படியோ, தேனுக்கு இனிப்பு எப்படியோ, அப்படித்தான் கிருஷ்ணனுக்கு ராதை. அவளே அவன் குணம், தன்மை, பிரேமை,செயல் யாவும். கிருஷ்ணன் மீது ராதை கொண்ட பிரேமையே பிரேமை என்ற வார்த்தையின் மொத்த உணர்வு. உருவகம். உயர்ந்த நிலை அடைந்த ஆத்மாவின் பெயர் தான் ராதா. ராதை என்ற சக்தியே பிரபஞ்சத்தின் ஆதார ஜீவ சக்தி, உயிர்நாடி. .

சுகந்தமான தென்றல் வீச, மேலே பால் போல் நிலவு குளுமையால் பூமியைக் குளிப்பாட்ட, நிசப்தம் எங்கும் நிலவ, அந்த வசந்த கால முன் இரவில், நில வொளியில், கோபியர்கள், கிருஷ்ணனின் குழல் நாதத்தில், உலகை மறந்து, தம்மை இழந்து வீடு வாசல் எல்லாம் துறந்து ஓடி பிருந்தாவனத்தில் மதுவனத்தில் ஒன்று சேர்கிறார்கள். கண்ணிலே கிறக்கம், ஒருவித இன்ப மயக்கம்.
”எதற்கு எல்லோரும் இங்கு வந்து கூடுகிறீர்கள், வீட்டுக்கு போங்கள் ”– அவன் அவர்களைத் திரும்ப போக சொல்கிறானே , காது கேட்குமா அவர்களுக்கு? யமுனையும் ஆடி அசைந்து அந்த இன்பலோகத்தில் ஆணவமாக நகர்கிறாள். ராச லீலை தொடர்கிறது. அவனைச்சுற்றி அவர்கள். கண்ணும் கருத்தும் யாவும் அவர்களுக்கு அங்கே அந்த நேரத்தில் கிருஷ்ணன் ஒருவனே.
என்ன மாயம் இது? திடீரென்று கிருஷ்ணனைக் காணோமே! கண நேரத்திற்கு முன் இங்கிருந்தானே .சகல இன்பமும் துன்பமாக மாறிவிட்டதே. ”கிருஷ்ணா, கிருஷ்ணா” என்று ஆதங்கத்தோடு, மனதில் ஆசையோடு அவனை அங்கும் இங்கும் எங்குமே தேடுகிறார்கள், ஓடுகிறார்கள், செடி பின்னாலும், மரத்தின் பின்னாலும், மேலே கிளைகளிலும் சிலர் யமுனை நதியிலும் தேடி அலைகிறார்கள். களைத்துப் போய் சக்தியின்றி துவண்டு சரிந்துவிழும் நிலையில் இதோ அவர்கள் முன்னே அவன்.
எப்படி திடீரென்று ஒரு புத்துணர்ச்சி, ஒரு சக்தி, புதிதாக அவர்களுக்கு எங்கிருந்து வந்தது?
பிறகென்ன?
ஆடல் பாடல் தான். எல்லோரும் அவனை கெட்டியாக பிடித்துக் கொள்கிறார்கள், அவனோடு ஓடுகிறார்கள், விளையாடு கிறார்கள், நதியில் தாவி நீந்தி ஒரே கோலாகலம்.
இது போதாதா எல்லாம் இன்பமயம் என்பதை விளக்க…. ஒரு சின்ன நிகழ்வு போதுமே.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1398

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *