AGRAHARA VISIT J K SIVAN

மூன்று நாள்  பயண  நினைவுகள்  –  நங்கநல்லூர்  J K  SIVAN
அக்ரஹார விஜயம்.
பொதுவாக  தமிழக  அக்ராஹாரங்கள் தனி அமைதியும், பக்தி ஒழுக்கமும் நிறைந்த  பகுதிகளாக இருந்தது.  கடவுள் நம்பிக்கை, வேத சாஸ்த்ர  பின்பற்றுதல்,  ஆசாரம்   நிறைந்த   ப்ராமண குடும்பங்கள் வாழ்ந்த இடம்.  பல அக்ரஹாரங்கள்  அரசன் கொடுத்த  மான்ய நிலங்களில் அமைந்த குடியிருப்புகள்.  நான்கு வேதங்களும் பயின்று  முறைப்படி ஓதி வந்த  பிராமண குடும்பங்களுக்கு அளிக்கப்பட்டதால்  சதுர்வேதி மங்கலம்  என்று அழைக்கப்பட்டவை. கோயில்களில் நேம நியமங்கள்  நெறியோடு, ஆசாரத்தோடு  வழிபாடு செய்துவந்த பிராமண குடும்பங்கள் காணாமல் போய்விட்டதால் பழைய கோவில்கள் பல  அழியத்தொடங்கி  சிதிலமாகி விட்டன.  கோயில்களின் பராமரிப்புக்காக  அரசாங்கம் ஒரு அமைப்பை  மக்கள் வரிப்பணத்தில் நியமித்தாலும் கோயில்களின் நிலை கண்ணில் ரத்தத்தை தான் வரவழைக்கிறது.
காலப்போக்கில்  நூறு வருஷங்களாக அக்ரஹார வாசிகள் கொஞ்சம், கொஞ்சமாக வெளியேறி வெளி மாநிலங்கள் மற்றும் மேலை நாடுகளில் தஞ்சம் புகுந்து விட்டனர்.ஏன்?   காரணம்  த்வேஷம். அமைதியின்மை.  ‘அக்ரஹாரங்கள்’ சுய அந்தஸ்தை  இழந்து விட்டன. பிராமணர்களை எதிர்க்கும்,துன்புறுத்தும், பழிக்கும் அதிகார வர்கத்தை,  கூட்டத்தை  அவர்களால்  தடுக்க இயலாத நிலை  அவர்களை  பாதுகாப்பைத் தேடி வெளியேறச் செய்து விட்டது எனலாம். அக்ராஹார வாசிகள் தங்கள் முகவரியை, பாரம்பரியத்தை,  வாழ்க்கை முறையை பறிகொடுத்துவிட்டார்கள்.  திராவிடம் என்பதே  உண்மை அர்த்தத்தோடு புரியப்படாமல்  பிராமணர்கள் ஆரியர்கள் அவர்களை எதிர்க்கவேண்டும் என்ற கூட்டத்தை  எப்படி  எதிர்க்க முடியும்? பக்தியும்,அறமும் வெளியேற்றப்பட்டு அசிங்கமும்,அவலமும் நிலைகொண்டு இருக்கிறது! அக்ரஹார மக்கள்  தங்களைப்  பாதுகாத்துக்  கொள்ளும்  நடவடிக்கைகளில் மொத்தமாக ஒற்றுமையோடு  ஈடுபடவில்லை என்பது  அவர்கள் செய்த பெருந் தவறு!  இனி மேலாவது தங்களைப்  பாதுகாத்துக் கொள்ள அக்ரஹார மக்கள்  ரௌத்திரம் பழக வேண்டும்.   நீங்கள் எதிர்கொள்ள போவது அப்புறப்படுத்தப்பட வேண்டிய தீமைகளைத்தான். சக மனிதர்களை அல்ல.

நீங்கள் அசிங்கத்தை கலைவதற்குத்தான் *ரௌத்திரம்* கற்க போகிறீர்கள்   சிலர்  குரல் கொடுக்கிறார்கள். உதவ தயாராக உள்ளார்கள் என்பதை உணர வேண்டும்.
 பூர்வீக வாழிடங்களான அக்ரஹாரங்களை மீண்டும் புனரமைப்பு செய்ய வேண்டும். அதற்கு  ரௌத்ரம்  பழக வேண்டும்!  அக்ரஹாரங்கள்  மீண்டு   புதுமை அடைய வேண்டும்! தீமைகளை விலக்கி நன்மைகளை அடையும் காலத்தை உருவாக்க பாடுபட வேண்டும்! அக்ராஹார வாசிகளும்  தமிழகத்தின் அங்க அடையாளங்கள்தான்.
அக்ராஹாரத்தில் முழுக்க முழுக்க  பிராமணர்கள் மட்டுமே  வசிக்கவில்லை. ஏனையோரும்  ஒற்றுமையாக வசித்தார்கள். அக்ரஹாரம் எனப்படுவது  ‘வடக்கு , தெற்காக ‘வீடுகள் கட்டப்பட்டுள்ளது என்று  தான் அர்த்தம் .  அங்கு பெரும்பாலானோர் பிராமணர்கள் என்பது ஒரு உண்மையே.  தஞ்சையில்  அக்ரஹாரங்கள் கொஞ்சம் கூடவே  இருந்தன.
மலையாளத்தில்   அக்ராஹாரம் என்றால்  நீர் வழிகின்ற  சாலை என்று தான் கூறுகிறார்கள் .  கிழக்கு மேற்காக  நீர் ஓடும்.
அக்ராஹார  வீடுகள்  வடக்கு தெற்கு பார்த்த வரிசையாக தான் இருக்கும். கிழக்கு முனை, மேற்கு முனையில் பெருமாளோ சிவன் கோவிலோ  ரெண்டும் இருக்கும். சில  அக்ரஹாரங்களில் பிள்ளையார் அம்மன்  சந்நிதிகளும் இருந்தன. தஞ்சாவூர்  அக்ரஹாரங்களில் சில முக்கியமான தெரிந்த பெயர்கள் :
பள்ளி அக்ரஹாரம், கணபதி அக்ரஹாரம், கானூர் அக்ரஹாரம், அய்யம்பேட்டை அக்ரஹாரம், அண்ணல் அக்ரஹாரம்
இன்னும் பல. பள்ளி அக்ரஹாரத்தில்  வன்னியர்கள் வாழ்ந்தார்கள் . பழைய பெயர் பள்ளி.  வைஷ்ணவர்கள், பள்ளி கொண்ட பெருமாளை வணங்கிய மக்கள் , அதிகம் இருந்த இடம்  என்றும் சொல்வதுண்டு.
பாபநாசம் தாலுக்கா கணபதி அக்ரஹாரத்தில்  பொற்கொல்லர்களும் , முத்தரைய இன மக்களும் அதிகம் வாழ்ந்தார்கள்.
திருவாரூர் பகுதியில் உள்ள கானூர் அக்ரஹாரத்தில் கானூர் எனப்பட்ட  மனிதர்கள்  வாழ்ந்தார்கள். அநேகமாக எல்லோருமே  விவசாயிகள்.
ஐயம்பேட்டை அக்ரஹாரத்தில்  பிராமணர்களும் , ஜோஸ்யர்கள், பட்டுநூல் கைத்தறியில் ஈடுபட்ட  சௌராஷ்டிர இன மக்கள்  அதிகம் வாழ்ந்தார்கள்.   இஸ்லாமியர்கள்  இப்போது   சௌராஷ்ட்ரர்கள் குடும்பங்களோடு  அக்ரஹாரத்தில்  வசிக்கிறார்கள்.  அக்ரஹாரம்  என்ற பெயர்  மறைந்து வெறுமே  ஐயம்பேட்டை  ஆகிவிட்டது. கும்பகோணம் தாலுக்காவில் அண்ணல் அக்ரஹாரம் பெரும்பாலும் பிராமணர்களுக்காகவே  கட்டப்பட்டது .கர்நாடகாவில்   கழகங்கள் காணோம் என்பதால்  அக்ராஹாரங்கள்  இன்னும் சாகவில்லை.
 நான்  10, 11, 12.2.24 அன்று விஜயம் செய்தது  கம்பரசம் பேட்டை, அதற்கடுத்த கிராமம் அல்லூர் அக்ராஹாரங்கள் .  ரெண்டுமே  பரவாயில்லை. ஒரு சில ப்ராமண குடும்பங்கள் இன்னும் ஒட்டிக்கொண்டிருக்கிறது.  எத்தனையோ  அக்ரஹார வீடுகள் பராமரிப்பு இன்றி சிதிலமாகத்தான் காட்சியளிக்கிறது.  பாரம்பரியங்கள் மறைந்து மறந்து போய்விட்டன. கம்பரசம்பேட்டை  அக்ராஹார வீடு  ராதாகிருஷ்ண அண்ணாவின் அப்பா வாழ்ந்த வீடு.  அல்லூர் கிராம அக்ராஹார வீடு  அம்மாவைப் பெற்ற  பாட்டி வாழ்ந்த வீடு. ரெண்டுமே  நீள அகலமான மூன்று கட்டு  வீடுகள்.  அல்லூரில்  பாடசாலை தயாராகிறது.   பாடசாலை மாணவர்களுக்கு ஆகாரம் செய்து போட ஒரு சமையல் கார குடும்பம் மட்டும் முன்வந்தால் போதும் அருமையான  பாடசாலை குறைந்தது 40  வேதம் கற்கும் மாணவர்களுக்கு உதவுமே. யாராவது உதவ முன்வருவார்களா?  தங்க  வசதி உண்டு.
தஞ்சாவூர்  அக்ரஹாரத்தில் ஒலித்த இசைக்கருவிகள் நையாண்டிமேளம், சிறிய உடுக்கை, பெரிய உடுக்கை, சத்துக்குழல், செண்டை, பறை நாதஸ்வரம் என்பன. அவற்றில் ஒரு சிலவற்றின் சப்தம்   இன்னும்  ஆங்காங்கே இன்னும் கோவில்களில் பண்டிகைகளில், விழாக்களில் காதில் விழும்.
அக்ரஹாரம் (Agraharam) அக்ராரம், அக்ரஹாரம், அகரம் என பலவகையில் தென்னிந்தியாவில் அழைக்கப்படுவது பிராமணர் குடியிருப்பான பாரம்பரிய பகுதியாகும். அக்கிரகாரம் பழங்காலத்தில் சதுர்வேதிமங்கலம் என்று அழைக்கப்பட்டது. இவை கடோகா மற்றும் போயா என்றும் சிலபகுதிகளில் அழைக்கப்படுகின்றன.
ஹாரம் என்றால் மாலை:  அக்ர  என்றால் முதலாவது.   கோயிலைச் சுற்றி வட்டமாக  அமைந்த  பகுதிகள் அக்ராஹாரங்கள்  கிழக்கு மேற்காக  தெருக்கள் .  வடக்கு தெற்காக  பார்த்த இரு வரிசை வீடுகள்.  அக்ராஹாரத்தின் கோடியில் ஈசானிய பாகத்தில் வழக்கமாக   சிவன் கோயிழலும்  மற்ற கோடியில் மேற்கு பாகத்தில் விஷ்ணு கோவிலும்  உண்டு. நிம்மதி இழந்த அமைதி குன்றிய நிலையில்   ப்ராமணர்கள்  வாழ  வகை தேடி அக்ரஹாரங்களை விட்டு நகர்ப்புற பகுதிகளுக்கு தொழில்கள் வேலைகள்  குழந்தைகள் மேல் படிப்பு,  உத்யோகம்  நிமித்தமாக வெளிநாடுகளுக்கும் இடம்பெயர்ந்தனர்.
11.1. 2024 அன்று  அமாவாசை.  ராதாகிருஷ்ண அண்ணாவும் நானும்  அவர் கிராம கம்பரசம்பேட்டை அக்ராஹாரத்து வீட்டுக்குச் சென்றோம்.  பெரிய  மூன்று நாலு கட்டு வீடு.  சைக்கிள் அல்லது பாட்டரி கார், ஸ்கூட்டர் இருந்தால்  வாசலில் இருந்து கொல்லை பக்கம் வரை வீட்டுக்குள் போக வசதியாக இருக்கும்.  வாசலில்  தலைகுனிந்து போகவேண்டும். இல்லையேல்  தலை தப்பாது. பெரிய  பெரிய ஹால்கள் . மர கூரைகள்  மெட்ராஸ்type  roof   என்போமே அது. செருகு ஓடுகள் வேய்ந்த  தூண்கள் பெரிது பெரிதாக  உள்ள  தாழ்வாரங்கள். இருட்டு அறைகள்.  பெரிய  ஊஞ்சல். திறக்கமுடியாத  இரும்பு பீரோக்கள். சாவி போட்டு திறப்பதே  ஒரு கலை .  bank  வங்கிகள் இல்லாத காலம் என்பதால் பாதுகாப்பு பெட்டகங்கள். ஊஞ்சல்கள்.  மர  ஏணிப்படிகள்  வழியாக  பரணுக்கு, மச்சுக்கு போகலாம்.  சூரிய ஒளிச்சம் உள்ளே வர கண்ணாடிகள் பொருத்தப்பட்ட  உத்தரங்கள். காரைச் சுவர்கள்.  வீட்டின் பின் பகுதி  சமையல் கட்டு, அடுத்து  குளியல் அறைகள், கிணறு, அடுத்து  மாட்டுக் கொட்டில்கள். அதையும் தாண்டி பின் கதவு .அதைத்திறந்து  பார்த்தேன். கம்பரசம் பேட்டையிலிருந்து ஓடும் ரயில் தண்டவாளம். அப்புறமும்  வீடு நிலம்….  அர்ஜண்டாக  வயிறு வலித்து  சிறு நீர் கழிக்க பின்புறம் போக  பல  கட்டுகள் தாண்டி கதவுகள் திறந்து தான் போகவேண்டும்…..  அதனால் தான் அண்ணா  89+வயதில் புத்திசாலித்தனமாக  திருச்சியில் ரம்யா லாட்ஜில் அறைகள்  எடுத்து தங்குகிறார், நானும்  தங்கினேன்.
தர்ப்பணத்துக்கு  கம்பரசம்பேட்டை  அக்ராஹார  வாத்தியார் வீட்டுக்கு சென்றோம்.  மேலே சொன்னது போல் ஒரு  பெரிய வீடு. வாசலில் திண்ணை. அண்ணா தர்ப்பணம்பண்ணும்போது தான் ஒரு உண்மை எனக்கு இத்தனை வருஷங்களுக்கு பிறகு தெரிந்தது. அவரை அண்ணா என்று ஏன் கூப்பிடுகிறேன் என்பதன் ரகசியம் இது தான். அண்ணாவும்  ஹரித கோத்ரம், என்னுடையதும்  அதே. ஆகவே நாங்கள் ஒரே கோத்ரர்கள். ச கோத்ரம்  என்பது தான் சகோதரி சகோதரன் என்று ஆகி அண்ணா தம்பி முறைகள்.  அவர் ரிக் வேதம். வாத்திமா  வகுப்பு, நான்  அஷ்டஸஹஸ்ரம் வகுப்பு யஜுர்வேதம்.  ஆகவே  நான் திண்ணையில் வழக்கம்போல  என்னுடைய  பஞ்சபாத்ர, உத்ரணியோடு, தர்ப்பைகள், எள்ளுடன் உட்கார்ந்து பஞ்சாங்கத்தில் விபரங்களுடன்  என் முன்னோர்கள்,  மூன்று தலைமுறை  அப்பா அம்மா வர்க்கத்துக்கு செய்துவிட்டு,  ப்ரம்ம யகணம் பண்ணினேன். ஒரு சந்தோஷம்  இந்த அம்மாவாசை கிராமத்தில் அக்ராஹாரத்தில் ஒரு வாத்யார் வீட்டில் பண்ணி அவருக்கு தக்ஷிணையும் கொடுத்த சந்தோஷம் தான்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1398

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *