KUNTHI DEVI – J K SIVAN

குந்தியின் பிரியா விடை – நங்கநல்லூர் J K SIVAN
ஸ்ரீமத் பாகவதம் 1.8.33 – 38.

33. अपरे वसुदेवस्य देवक्यां याचितोऽभ्यगात् ।अजस्त्वमस्य. क्षेमाय वधाय च सुरद्विषाम् ॥ ३३ ॥
apare vasudevasya devakyāṁ yācito ’bhyagāt ajas tvam asya kṣemāya vadhāya ca sura-dviṣām

கிருஷ்ணா எல்லோரையும் போல நீ பிறந்தவன் இல்லையே அப்பா. எத்தனையோ காலம் தவமிருந்து உன்னை மகனாகப் பெறவேண்டும் என்று வேண்டியதன் பலனாக அல்லவோ தேவகிக்கும் என் தமையன் வசுதேவருக்கும் நீ புத்திரனாக ஜனித்தவன்.பிறப்பிறப்பற்ற நீ பிறந்ததே ஒரு பெரும் பாக்யம். அவர்களையும் திருப்தி படுத்தி அதே நேரம் உன் அவதாரத்தால் தேவர்கள் மாந்தர்கள் மற்றும் பிரபஞ்சத்தில் அனைவருக்கும் தீங்கு செய்த துஷ்டர்களை ஸம்ஹாரம் செய்தவன் அல்லவா நீ. .

34. भारावतारणायान्ये भुवो नाव इवोदधौ । सीदन्त्या भूरिभारेण जातो ह्यात्मभुवार्थित: ॥ ३४ ॥
bhārāvatāraṇāyānye bhuvo nāva ivodadhau sīdantyā bhūri-bhāreṇa jāto hy ātma-bhuvārthitaḥ

பூமாதேவி கதறினாளாமே. பாரம் தாங்க முடியவில்லை. கப்பல் புயலில் கனமான பொருள்களோடு கடலில் தடுமாறுவது போல அல்லவா அவள் நிலை. ப்ரம்மா மற்றும் தேவர்களோடு பூமாதேவி உன்னை வேண்டி யதால் அல்லவோ துஷ்டர்களை ஸம்ஹாரம் செய்து பூமாதேவியின் கஷ்டங்களை நிவர்த்தி செய்தவன்.

35. भवेऽस्मिन् क्लिश्यमानानामविद्याकामकर्मभि: । श्रवणस्मरणार्हाणि करिष्यन्निति केचन ॥ ३५ ॥
bhave ’smin kliśyamānānām avidyā-kāma-karmabhiḥ śravaṇa-smaraṇārhāṇi kariṣyann iti kecana

தர்மத்தை நிலைநாட்ட ஒவ்வொரு யுகமும் அவதரிப்பவன் அல்லவோ ஸ்ரீமன் நாராயணன். பக்த பரிபாலனம் செய்ய அவன் சந்தோஷத்தோடு அடிக்கடி அவதரிப்பவன். உலக மாயை ஈர்ப்புகளில் மூழ்கி நாம் தான் பகவானை நினைக்க மறக்கிறோம் .

36. श‍ृण्वन्ति गायन्ति गृणन्त्यभीक्ष्णश: स्मरन्ति नन्दन्ति तवेहितं जना: । त एव पश्यन्त्यचिरेण तावकं भवप्रवाहोपरमं पदाम्बुजम् ॥ ३६ ॥
śṛṇvanti gāyanti gṛṇanty abhīkṣṇaśaḥ smaranti nandanti tavehitaṁ janāḥ ta eva paśyanty acireṇa tāvakaṁ bhava-pravāhoparamaṁ padāmbujam

கிருஷ்ணா, எனக்கு நனறாகவே தெரியுமடா ,உன் நாமத்தை நா மணக்க யாரெல்லாம் ஜெபிக்கிறார்களோ, உன்னைப் போற்றி பாடுகிறார்களோ ஆடுகிறார்களாலோ அல்லது பிறர் இவ்வாறு செய்வதை கண்டு கேட்டு மகிழ்கிறார்களோ அவர்களுக்கு உன் தாமரைப் பாதங்களின் தரிசனம் கிட்டும். மோக்ஷம் சம்பவிக்கும். உன் பாதங்களை தரிசித்து வழிபட்டவள் நான்.

37, अप्यद्य नस्त्वं स्वकृतेहित प्रभो जिहाससि स्वित्सुहृदोऽनुजीविन: । येषां न चान्यद्भवत: पदाम्बुजात् परायणं राजसु योजितांहसाम् ॥ ३७ ॥
apy adya nas tvaṁ sva-kṛtehita prabho jihāsasi svit suhṛdo ’nujīvinaḥ yeṣāṁ na cānyad bhavataḥ padāmbujāt parāyaṇaṁ rājasu yojitāṁhasām

குந்தியின் மனஸாக்ஷி அவளுக்குள் பேசுவது மெல்லியதாக அவளுக்கே கேட்கிறது. இது தான் கடைசியாக அவள் கிருஷ்ணனைப் பார்ப்பது.. இனி அவன் தரிசனம் இந்த ஜென்மத்தில் அவளுக்கு கிடைக்கப் போவதில்லை. அவள் வாயிலிருந்து உதிரும் வார்த்தைகள் இவை. எப்படி துடிப்பாள் குந்தி என்று உங்களுக்குப் புரிந்தால் நான் எழுதும் அடுத்த வாக்கியம் படிக்கமுடியாமல் கண்களில் ஜலம் தாரையாக பெருகுமே .
”கிருஷ்ணா, என் தெய்வமே, உன் கடமை எல்லாம் முடிந்துவிட்டதா?. அவ்வளவு தானா? இனி எங்களை பிரியப் போகிறாயா? நம் உறவு ஒரு முடிவுக்கு வந்துவிட்டதா?, அந்த எண்ணத்தையே என்னால் ஜீரணிக்க முடியவில்லையே. எங்களை, பாண்டவர்களை, விட்டு நீ செல்லப்போகிறாயா? நாங்கள் உன்னையே அல்லவோ நம்பி வாழ்கிறோம். எங்கள் மூச்சே உன்னால் தான் எங்களுக்குள் செயல்படுகிறது. உன் கருணை ஒன்றே அல்லவோ எங்களை காக்கிறது. கிருஷ்ணா. நீ யன்றி வேறு யார் உண்டு சொல்? கிருஷ்ணா. காக்கும் தெய்வம் நீ ஒருவன் தானே. எங்களை சுற்றி இருந்த அத்தனை பேரும் விரோதிகளாகவே தானே இருந்தார்கள். நீ ஒருவன் அல்லவோ எங்களை அரவணைத்தவன். உன்னை எப்படி ”போய் வா மகனே போய்வா ” என்று சொல்வேன். அவ்வளவு சீக்கிரம் மறந்துவிடும்படியாகவா நீ எங்களுக்கு உதவியவன்.
எனக்கு துன்பம் தொடரட்டும், துயரம் நீடிக்கட்டும், உன்னை அவ்வப்போது நினைப்பேன் உன் அருள் பார்வை என்மீது படுமே என்ற நம்பிக்கை. அதுவே எனக்கு ஸ்வர்க்கம், மோக்ஷம், அழியாத செல்வம்.
இந்த உலகத்தில் ஏன் கஷ்டம் எங்களுக்கு என்றால் உலகமே கஷ்டமயமானது. என்னதான் கஷ்டம் சூழ்ந்திருந்தாலும் ”கிருஷ்ணா” என்ற உன் பெயருக்கு தான் எவ்வளவு சக்தி அப்பா!! அத்தனை துன்பங்களும் சூரியன் முன் பனித்துளி தான். ஹரே கிருஷ்ணா என்ற வார்த்தையே பெரிய தபோபல சக்தி அல்லவா?
கிருஷ்ணனுக்கு பிரியாவிடை தருகிறாள் குந்தி தேவி. கிருஷ்ணன் என்ற விஷ்ணுவின் அவதாரம் முடிவுக்கு வந்துவிட்ட நேரம் அது… ஆனால் கிருஷ்ணன் அவதாரம் முடிந்துவிட்டதே தவிர நம்முள் என்றும் கிருஷ்ணன் தொடர்கிறான்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *