HARISCHANDRA STORY – J K SIVAN

ஒரு பொய்  சொல்  –   நங்கநல்லூர்  J K  SIVAN
”உலகத்தில்  ராமனைத் தவிர  சொன்ன வாக்கு  நிறைவேற்றியவர்கள் வேறு எவருமில்லை ” என்கிறார்  விஸ்வாமித்ரர்.
” இல்லை  மகரிஷி, இன்னொருவரும்  உண்டு”  என்கிறார்  வசிஷ்டர்.
”ஓஹோ, யார் அது?”
”அயோத்தி ராஜா   ஹரிச்சந்திரன். அவனைப் போல் சத்யசந்தன், சொன்னவாக்கை மீராதவன் எவனும் இல்லை”
”அப்படி இருக்க முடியாதே, இதோ நான் ஹரிச்சந்திரனை போய் பார்த்து சோதிக்கிறேன். அவன் உண்மை பேசுகிறவனா, வாக்கு மீறாதவனா என்று கண்டுபிடிக்கிறேன்”
அயோத்திக்கு  விஸ்வாமித்ரர்  போனபோது  மழை இருந்ததா இல்லையா என்று தெரியாது.ஆனால் இதோ வாசலில் மழை கொட்டோ கொட்டு என்று   சென்னையில் நாள் கணக்கில் பெய்து தீர்க்கிறது.  கரெண்ட் போய் பல மணிநேரம் ஆகிவிட்டது.  என்ன செய்வது?  மழைக்கு சூடாக ஒரு கதையாவது சொல்வோம் என்று தோன்றியது.

நமக்கு அரிச்சந்திரனைத் தெரியாது.   அவன் பேர் தெரியும் அவன்  சரித்ரம் தெரியாது.  எங்கள் காலத்தில் அவன் பள்ளிக்கூட பாடங்களில் வந்தவன்.  இப்போது  உண்மை பேசுவது, சொன்ன வார்த்தை காப்பாற்றுவது  அரசியலிலும் இல்லை,உண்மை பேசுகிறேன் என்று சொன்னால்  சிரிப்பார்கள். பிழைக்கத்தெரியவாத   அசடு என்ற  பட்டம் சுலபமாகவே, சும்மாவே  கிடைக்கும்.
நான்  சின்னவயதில்   ஹரிச்சந்திரன் நாடகம், தெருக்கூத்து  பிரவசனம் கேட்டு அழுதவன்.
 பாட திட்ட  அங்கீகாரமாக ஆக்கப்பட்ட  பள்ளிக்கூட புத்தகத்தில் இப்போது அரிச்சசந்திரனைக்  காணோம்.  ”என் அம்மா கதை சொல்லி அரிச்சந்திரன் பற்றி நான் அறிந்து கொண்டேன். அவனை எனக்கு ரொம்ப பிடிக்கும்”  என்பார் மஹாத்மா
காந்தி.
நமது அன்றாட வாழ்க்கையில் அரிச்சந்திரன் பேர்   அடிக்கடி  சொல்கிறோம்.
”அந்த  ராமசாமி பேச்சை நம்பாதே, பொய்  புளுகுணி மூட்டை. அவன் என்ன பெரிய அரிச்சந்திரனா ?   ”குப்புசாமி வாயில் வருவதெல்லாம் அப்பட்டமான பொய் . அவனைப்   போய்  ஒரு  அரிச்சந்திரன் என்கிறாயே?” என்கிறோம்.
சுருக்கமாக அரிச்சந்திரன் கதை சொல்கிறேன். கல் மனதையும்  பஞ்சாக எரித்து கண்ணீர் கொட்ட வைக்கும் கதை. அந்த கண்ணீரை விடாமல் பெய்யும் மழைத் தண்ணீரோடு இப்போது கலந்து விடுங்கள். வெள்ளம் அதிகரிக்கட்டும். 

அரிச்சந்திரன் சூரிய குலத்தின் 28வது ராஜா. தனது வாழ்வில், சொன்ன சொல் தவறாமை, வாய்மை என்னும் இரண்டு ஒழுக்கங்களையும்  கெட்டியாக  கடைப்பிடித்தவன்.  பழமொழி பேசும் பாரதத்தில் அரிச்சந்திரன் நிறைய ஹிந்து  குடும்பங்களுக்கு தெரிந்தவன்.

விசுவாமித்திரர் என்னும் முனிவர் நேராக அரிச்சந்திரனிடம் வந்தார்.
”ஹரிச்சந்திரா,  நேற்று நீ என் கனவில் வந்தாய்.  உனது   ராஜ்யத்தை எனக்கு  தானமாக தருவதாக வாக்களித்தாய் அதனால் உடனே உனைத்  தேடி வந்திருக்கிறேன் . கொடு”  என்கிறார்

”மகரிஷி,  கனவில் சொன்னாலும் நேரே  சொன்னாலும் என் வாக்கு தப்பாது. இதோ உடனே என் ராஜ்யத்தை உங்களுக்கு அளிக்கிறேன். தானமாகப் பெற்று   ஆசீர்வதியுங்கள்”

மனைவி சந்திரமதி  சிறுவன் லோஹிதாசனுடன்  அரிச்சந்திரன் நாட்டை விட்டு வெளியேறி காசி செல்கிறான்
அங்கே காசியில் விஸ்வாமித்ரரை மீண்டும் சந்திக்கிறான்.

”ஹரிச்சந்திரா,  உன் ராஜ்யத்தை என்னிடம் ஒப்படைத்து விட்டு விடுவிடுவென்று நடந்து விட்டாயே, சம்ப்ரதாயம் மறந்து போச்சா  உனக்கு.  தானம் கொடுத்தாலும்  தக்ஷிணையோடு தான் தரவேண்டும்.எனக்கு தக்ஷிணை கொடு”

தன்னிடம் ஒன்றுமே இல்லாத  ஹரிச்சந்திரன்,  தனது மனைவி சந்திரமதியையும்  பிள்ளை  லோஹிதாசனையும்
மகனையும் எதிரே தென்பட்ட ஒரு பிராமணனுக்கு அடிமையாக விற்றுவிட்டு அந்தப்பணத்தை கொடுக்கிறான்”

”ஹரிச்சந்திரா,  இதென்னாப்பா  தக்ஷிணை  இவ்வளவு  கனவிலாயினும், தான் வாக்குக் கொடுத்ததாக முனிவர் கூறுவதால் தன் நாட்டை அவருக்கே அரிச்சந்திரன் கொடுத்துவிட்டுத் தனது மனைவியையும் சிறுவனான மகனையும் அழைத்துக்கொண்டு அந்நாட்டின் எல்லைக்கு அப்பாலிருந்த வாரணாசிக்குச் செல்வதற்காக நாட்டை விட்டு வெளியேறினான். அவனைப் பின் தொடர்ந்து விஸ்வாமித்ரர்  வந்து விட்டார்.

”அரிச்சந்திரா, உனக்கு சம்ப்ரதாயம்  சாஸ்திரம்  ஒன்றும்  தெரியாதா?  அல்லது மறந்து போய்விட்டாயா?  தானம் கொடுத்தால்  தக்ஷிணையோடு சேர்த்து கொடுக்கவேண்டும். எங்கே  எனக்கு தக்ஷிணை?”

மகரிஷிக்கு தக்ஷிணை கொடுக்க  அரிச்சந்திரனிடம் எதுவும் இல்லை. அவன்  எல்லாவற்றையும் தானமாக கொடுத்துவிட்டான். அப்போது அவன் எதிரே ஒரு  பிராமணன் வந்தான். அவனிடம் தனது மனைவியையும்  மகனையும்  அடிமையாக விற்றுவிட்டு அந்த பணத்தை  தக்ஷிணையாகி  விஸ்வாமித்ரரிடம் கொடுத்தான்  அரிச்சந்திரன்.

”இதென்னப்பா இவ்வளவு கொஞ்சமாக  தக்ஷிணை கொடுக்கிறாய்? இன்னும் கொடு, இது போதாது”
அரிச்சந்திரன்  கண்ணில்  காசியில் பிணம் எரிக்கும்  ஒரு புலையன் தென்பட்டான். அவனிடம் கெஞ்சி தன்னை விற்றுக்கொண்டு அந்த பணத்தை முனிவரிடம் கொடுத்தான். அவரும் போய்விட்டார்.
அரிச்சந்திரனை  அந்த  பிணம் இருப்பவன்  தனக்கு உதவியாக  பிணங்களை எரிக்க  வேலை கொடுத்தான்.
அரிச்சந்திரனும் அதை தவறாது எஜமானனுக்கு த்ரிப்தியாக செய்து வந்தான் .

இதற்கிடையில்  சந்திரமதியையும்  லோஹிதாசனையும் வாங்கிய  பிராமணன் வீட்டில் அவர்  பணிபுரிந்துவந்தார்கள். ஒருநாள்  பிராமணன் பூஜை செய்ய புஷ்பம் பறிக்க சென்ற  லோஹிதாசனை ஒரு நாகம் தீண்டி அவன் இறந்து விட்டான்.

இறந்து போன மகன் உடலைத்  தூக்கிக்கொண்டு  சந்திரமதி  மயானம் வருகிறாள்.   பிள்ளையின் பிணத்தை எரிக்க  காசு  கட்டவேண்டும் என்று  கேட்கிறான்  ஹரிச்சந்திரன்.
”என்னிடம் காசு இல்லையே ஐயா”
”உன்  கழுத்தில் தாலி இருக்கிறதே அதையாவது விற்று காசு கொண்டு வந்து கொடு. என் எஜமானனுக்கு நான் கணக்கு கொடுக்க வேண்டும். காசில்லாமல் பிணம்எரிக்க வழி இல்லை”  என்கிறான் ஹரிச்சந்திரன். அவனுக்கு மனைவி பிள்ளையை அடையாளம் தெரியவில்லை. அவளுக்கும் கணவனைத் தெரியவில்லை.
ஆனால் ஒரு முக்கியமான விஷயம் இங்கே  சொல்ல வேண்டும்.  அது தான் திருப்பு முனை இந்த கதைக்கு.
சசந்திரமதியின் கழுத்தில் உள்ள  தாலி அவளைக் கட்டிய கணவன் ஒருவன்  கண்ணுக்குத்தான் தெரியும். ஆகவே  உன் தாலியை விற்றுக் கொடு என்று  அரிச்சந்திரன் சொன்னபோது அவளுக்கு அவன் தன் கணவன் அரிச்சந்திரன் என்று தெரிந்து விடுகிறது.  குமுறி அழுது தீர்க்கிறாள். விஷயம் சொல்கிறாள். அரிச்சந்திரனும் அழுகிறான். மகன் பிணமானாலும் எரிக்க காசுவேண்டுமே  என்று அலறுகிறான்.
இந்த நேரத்தில் விஸ்வாமித்ரர் தோன்றுகிறார்.
அப்பா ஹரிச்சந்திரா உன்னை சோதித்தேன். இப்போதாவது ஒரு  பொய் சொல். அல்லது உன் வாக்கை தவறி பிணத்தை காசில்லாமல் எஜமானனுக்கு தெரியாமல் எரிக்கலாம் என்று சொல். நீ இழந்த அத்தனையும் உனக்கு மீண்டும் வந்து சேரும். உன் பிள்ளைக்கும் உயிர்ப்பிச்சை அளிக்கிறேன்.  நீங்கள்  சுகமாக வாழலாம்.  

ஐயா  மஹரிஷி. உங்களுக்கு நமஸ்காரம், எனது உயிரே போனாலும் நான் பின்வாங்க மாட்டேன். சொன்ன சொல் தவறமாட்டேன். பொய்ச்சொல்லி  உயிர்வாழ வேண்டியதில்லை” என்று வணங்குகிறான். அவன் மனைவியும்  வணங்குகிறாள்.   விஷமாத்திரர்  நான்  தோற்றுவிட்டேன் என்று ஒப்புக்கொண்டு  அரிச்சந்திரன், சந்திரமதி, லோஹிதாசன் மூவரும் ஸ்வர்கம் செல்ல  வழிகாட்டுகிறார்
அவர்கள் வேண்டுமானால் செல்லட்டும் நான் காசியிலே இருந்து விடுகிறேன் என்று அரிச்சந்திரன் ஸ்வர்கம் செல்ல விருப்பமில்லை என்று சொல்லிவிடுகிறான் .

அரிச்சந்திர புராணம்  என்ற ஒரு  அருமையான நூலை நல்லூர்  வீர ஆசு கவி ஒருவர்  இயற்றிஇருக்கிறார் அதில் ஒரு அற்புதமான வெண்பாவை இன்று படிக்க நேர்ந்தது. அதை கீழே கொடுக்கிறேன்.
”பதி  இழந்தனம் பாலனை இழந்தனம் படைத்த
நிதி  இழந்தனம் இனிநமக் குளதென நினைக்கும்
கதி  இழக்கினும் கட்டுரை இழக்கிலேம் என்றார்
மதி  இழந்து   தன் வாயிழந்(து) அருந்தவன் மறைந்தான்”.

“எம் ஊரை இழந்தோம், ராஜ்யத்தை இழந்தோம். எங்கள் பிள்ளையை இழந்தோம்…எங்கள் சொத்து சுகம் எல்லாம்   சொர்க்கம். அதையும் இழந்தாலும் பரவாயில்லை.  சொன்ன சொல்லை  எக்காலமும் இழக்க மாட்டோம் ” என்று கூறினார்கள் அரிச்சந்திரன் தம்பதியர்.  அதை கேட்ட முனிவர்  விஸ்வாமித்ரர்  மதி இழந்து,  பேச வார்த்தையில்லாமல்  இல்லாமல் மறைந்தார
வாரணாசி எனும் காசியில் ஹரிச்சந்திர  காட்  எனும் மயானத்தில் பிணங்களை இன்றும் எரிக்கிறார்கள். அங்கே பிணமாக எரிக்கப்பட்டவர்கள்  நேராக ஸ்வர்கம் செல்வதாக இதிகாசம். காசி விஸ்வநாதர் அருள் புரிகிறார்.   பாரத தேசத்தில் பல மையங்களில் ஹரிச்சந்திரனுக்குச்சின்ன கோவில் உண்டு.  பிணங்களை அந்த கோயிலெதிரே  இறக்கி  பூஜை செய்த்துவிட்டு பிறகு எரிக்கும் வழக்கம் இன்றும் கடைபிடிக்கிறார்கள்.
இப்போது வாழும்   வாழ்க்கை, நாட்டு நடப்பில், இருக்கும் நிலையில்  என்னைப் பொறுத்தவரையில்  நான்  எக்காலத்திலும் அரிச்சந்திரனாக  முடியாது  என்று தோன்றுகிறது. உங்களுக்கு சௌகரியம் எப்படி?

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *