THIRUMOOLAR J K SIVAN

திருமந்திரம்  –   நங்கநல்லூர்   J K  SIVAN
திருமூலர்
சேர்ந்திருந் தேன்சிவ மங்கைதன் பங்கனைச்
சேர்ந்திருந் தேன்சிவ னாவடு தண்டுறை
சேர்ந்திருந் தேன்சிவ போதியின் நீழலிற்
சேர்ந்திருந் தேன்சிவன் நாமங்கள் ஓதியே. –
மேலே  சொன்ன  திரு மந்திரத்தில்  திருமூலர்  தான்  திருவாவடுதுறையை  சேர்ந்தவர்  என்று சொல்வதை கவனியுங்கள். தமிழ் நாட்டிலுள்ள  மாயவரம்   மாயூரம் என்று சொல்லப்படும் மயிலாடுதுறை  ஜில்லாவில் ஒரு கிராமம் திருவாவடுதுறை.  புராண பெருமை கொண்டது.   இங்கே உள்ள  பழம் பெரிய சிவாலயத்தில்  சிவன் பெயர் கோமுக்தீசுவரர். இன்னொரு பெயர் மாசிலாமணி ஈசுவரர். பத்து ஏக்கர் நிலப் பரப்பில் ஐந்து நிலை ராஜ கோபுரமும்,  வடக்கு பக்கம்  இன்னொரு  மூன்று நிலை கோபுரம்  மயிலாடுதுறையில் இருந்து 20 கி.மீ..  மயிலாடுதுறை – கும்பகோணம் இரயில் மார்க்கத்தில் உள்ள நரசிங்கன்பேட்டை இரயில் நிலையத்தில் இருந்து கிழக்கே 3 கிலோமீட்டர் தொலைவிலும்    உள்ள சிவஸ்தலம்.இங்கேயும்  ஒரு   திருவாலங்காடு என்ற  ஊர்  இருக்கிறது.
திருஞானசம்பந்தர் ”எங்க அப்பா  ஒரு  யாகம்  பண்ணுகிறார், அதற்கு செலவுக்கு பணம் கொடு’  என்று ஈஸ்வரனைக்  கேட்க  ஸ்வயம்புவான  கோமுக்தீஸ்வரர்  ஆயிரம் பொற்காசுகள்  கொடுத்த  ஸ்தலம்.ற திருத்தலம் . இன்னொரு விசேஷம் முப்பத்து முக்கோடி தேவர்களும் படர்ந்த  அரச மரமாக இருக்க அம்மரத்தின் கீழ் சிவபெருமான் திருநடனம் புரிந்த  க்ஷேத்ரம்.  தமிழகத்திலேயே உயரமான  ஒரே கல்லால் ஆன  விஸ்வரூப நந்தி  இங்கே தான் இருக்கிறார்   பதினாலே முக்கால்  அடி.  தஞ்சாவூர் நந்தியை விட  ரெண்டு அடி  உயரம்.  திருமூலர்  திருமந்திரங்கள் இயற்றிய  ஊர்.
”நான்  கோமுக்தீஸ்வரர் எனப்படும் அந்த உமாபதியை சேர்ந்து விட்டேன். திருவாவடுதுறையில் தான் சேர்ந்தேன். அந்த அரசமரத்தடியில் அவன் என்னை ஆட்கொண்டான், சிவன் நாமங்கள் சொல்லி சிவனோடு இணைந்து விட்டேன் என்கிறார் திருமூலர்.

விண்ணின்று இழிந்து வினைக்கீடாய் மெய்க்கொண்டு
தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து
உண்ணின்று உருக்கியோர் ஒப்பிலா ஆனந்தக்
கண்ணின்று காட்டிக் களிம்பறுத் தானே

இந்த பூமியில் பிறந்த நாம் எல்லோருமே  நமது  கர்மாக்களின்  பலனை அனுபவிக்க விண்ணிலிருந்து மழைத்துளிகளாக  பூமியில் விழுந்து அதை தாவரங்கள் தானியங்களாக உருவாக்கி  அதை  எவர் எங்கே  எப்போது  உண்கிறார்களோ  அவர்கள் மூலம்  பிறவி எடுத்து அங்கங்கே  வாழ்கிறோம்.  கர்மவினைகளின்  பலனை அனுபவிக்கிறோம்.  அதனால் இதற்கு  கர்ம பூமி என்று பெயர்.    இங்கே விழுந்தவர்கள் தான் மீண்டு, அதாவது கர்மவினைகளிலிருந்து மீண்டு தான், அங்கே மீண்டும் செல்ல வேண்டும்.நமது நல்வினைகள் ஒன்றே நம்மை அங்கே கொண்டு சேர்க்கும். இதற்கு தடையாக உள்ளது எதுவென்றால் நமது எண்ணங்கள், அவற்றால் விளையும் தீய கர்மங்கள். மேலும் மேலும் நமது சுமை பெரிதாக வைப்பது இதுதான். கர்ம வினைகளை அறுக்கும் ”களிம்பறுக்கும் ” காரணீஸ்வரனை சரணடைவோம். கர்ம மலம் ஒழிப்போம்  என் கிறார்   திருமூலர் அழகிய  சந்தத்  தமிழில்  நாலு வரிகளில் .

பெற்றார் உலகிற் பிரியாப் பெருநெறி
பெற்றார் உலகிற் பிறவாப் பெரும்பயன்
பெற்றார் அம்மன்றில் பிரியாப் பெரும்பேறு
பெற்றார் உலகுடன் பேசாப் பெருமையே.

சைக்கிளில் ஏறி அமர்ந்தேன். பின்னாலிருந்து ஒருவர் தள்ளிவிட்டதும் காலால் மிதித்துக்கொண்டே அப்படியும் இப்படியும் ஆடி ஏதோ ஒரு மரத்தின் மேலோ , மாட்டின் மீதோ, மனிதன் மேலோ இடித்து கீழே விழுந்து தான் பாலன்ஸ் balance எனும் சமநிலை கற்றுக்கொண்டேன். நாம்  யாருமே  கீழே  விழாமல், இதன் மேலாவது பிடிபடாமல்  முழங்கால்   முட்டியில் காயம்  படாமல் சைக்கிள்  ஒட்டக கற்றுக் கொண்டதாக சரித்திரமே  இல்லை.  ஒருதரம் அந்த பாலன்ஸ், சமநிலை வந்தால் அப்புறம் விழவே மாட்டோம் .இந்த பாலன்ஸ் தான் ஆன்மீகத்தில் சிவனைக்  கெட்டியாக  பிடித்துக் கொண்டு  பின்பற்றும் சிவநெறி எனும் பெரு நெறி.அடைந்துவிட்டால் இது நம்மை பிரிய விடாது. தவறி விழ விடாது. இந்த பாலன்ஸ் பல ஜென்மங்களிலும் தொடர்ந்து உதவும்.

உடம்பும் உடம்பும் உடம்பைத் தழுவி
உடம்பிடை நின்ற உயிரை அறியார்
உடம்பொடு உயிரிடை நட்பு அறியாதார்
மடம்புகு நாய்போல் மயங்குகின்றாரே.

உடலுக்கு உயிர் காவல். உயிருக்கு உடல் காவல் என்று ஒரு இனிமையான பாடல் கேட்டிருக்கிறீர்களா. நான் அடிக்கடி பாடுவேன்..  உடலும்  உயிரும்  ஒன்று சேர்ந்தது தான் மனித  வாழ்க்கை. ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை. நீயின்றி நானில்லை நானின்றி நீயில்லை என்கிறமாதிரி. கூண்டிலிருந்து பறவை பிறந்துவிட்டால் கூண்டை  எரிக்கவேண்டும். அல்லது புதைக்கவேண்டும். பறவைக்கும் மிருகங்களுக்கும்  ஏன்  எல்லா ஜீவன்களுக்கும்   ஒண்ட ஒரு  இடம்,  கூடு வேண்டுமே.  ஒன்றை  இழந்தால் அடுத்த கூட்டைத்  தேடி அடைக்கலம் புகும்.  அப்படி  நாம் அடையும் அடுத்த கூடு நமது கர்மா வினைக்கேற்ப அமையும். இதன் அருமை தெரியாதவர்களை பற்றி திருமூலர் ஒரு உதாரணம் தருகிறார். மடம் புகும் நாயாம் . மடத்தில் எங்கோ உள்ளே புகுந்த நாய்க்கு மடத்தின் புனிதம், பெருமை தெரியாது. அப்படி அஞ்ஞானிகளாக இல்லாமல் உடம்பின் அற்புதத்தை, அளித்த பரமனின் கருணையை, தேகத்தின் இன்றியமையாத அவசியத்தை புரிந்து கொள்ளவேண்டும் என்கிறார் திருமூலர்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *