THIRUMOOLAR J K SIVAN

திருமந்திரம்  –   நங்கநல்லூர்   J K  SIVAN
திருமூலர்

”அண்டங்கள் ஏழும், அகண்டமும் ஆவியும்
கொண்ட சராசர முற்றும் குணங்களும்
பண்டை மறையும் படைத்து அளிப்பு ஆதியும்
கண்ட சிவனும் என்கண் அன்றி இல்லையே ”

கீழே ஏழு உலகம், மேலே ஏழுலகம், மொத்தம் ஈரேழு பதினான்கு உலகங்கள் என்கிறோம்.  ஆகாசம் எனும் எல்லையற்ற பெருவெளியும், உயிர்கள் அனைத்தும்  ஆத்மாவின்  பரிணாமம் என்கிறோம்.   எல்லாம்  சேர்ந்தது தான்  பிரபஞ்சம்  எனும்  சராசரம். அதாவது அசைவது அசையாதது எல்லாமும் சேர்ந்த வஸ்துக்கள். தாவர ஜங்கமம், அசைவது  அசையாதது  சகலமும் முக்குணங்கள் நிரம்பியது. தமோ, ரஜோ சத்வ குணங்கள்  கொண்டது. வேதங்களின் பிரமாணம் நிறைந்தது இந்த பிரபஞ்சம். இதில் இறைவனின் முத்தொழில் ,அதாவது, ஆக்கல் , காத்தல், அழித்தல் தொடர்ந்து நடைபெறுகிறது. இதை பொறுப்பாக நடைபெற செய்வது பரமேஸ்வரன் எனும் ஆதி சிவன். அவன் என்னிடமும் உள்ளான் என்பதில் எத்தனை பெருமைப் பட வேண்டும், சிவன் என்னுள் இருக்கிறான் என்று ஆடுகிறார் திருமூலர்.  திருமந்திரம்  புரிகிறதா பிடிக்கிறதா?
 12 திருமுறைகளிலும் சேர்த்து மொத்தம் 18,280 பாடல்கள். யாராவது நிச்சயம் இத்தனை பாடல்களையும் படித்தோ பாடியோ இருப்பார்கள்.  நம்மால் முடியவில்லை என்றால் எவராலும் முடியாது என்ற எண்ணம் தப்பு. சில பேர் அத்தனையும் மனப்பாடம் பண்ணி பாடியும்  கூட   இருப்பார்கள். எத்தனை நூற்றாண்டுகள் ஓடிவிட்டன. அதிசய மனிதர்களுக்கு தமிழினத்தில் பஞ்சமே இல்லை.
திருமூலரின் 3000 திருமந்திரங்களும் 10ம் திருமுறையில் வருபவை.  அவற்றில் தான் சில வற்றை படிக்கிறோம்.12 திருமுறை களையும் தோத்திரம், சாத்திரம், பிரபந்தம், புராணம் என நான்கு வகையாக பிரித்து அனுபவிப்பது வழக்கம். 1- 9 திருமுறைகள்: ஸ்தோத்ர வகை. 10ம் திருமுறை : சாஸ்த்ர வகை திருமந்திர மாலை.11ம் திருமுறை : பிரபந்தம் வகை.12 ம் திருமுறை: புராணம் வகை: திருமூலரின் திருமந்திரம் 9 தந்திரங்களால், அதாவது 9 ஆகமங்களின் சாரமாகும்.

அகல் இடத்தார் மெய்யை அண்டத்து வித்தைப்
புகல் இடத்து *என்றனைப் போத விட்டானைப்
பகல் இடத்தும் இரவும் பணிந்து ஏத்தி
இகல் இடத்தே இருள் நீங்கி நின்றேனே. 

பகவானே, உன்னை வணங்கி என்னுடைய   அறியாமை நீங்கப் பெற்றேன். உன்னை நாடும் பக்தர்களுக்கு  நீயே  மெய்ப்பொருள் ஆனவனே , வானுலகுக்கு வித்துப் போன்றவனே.  உன்னுடைய  பாதுகாப்பான  இடத்திலே என்னைச் செல்ல விட்டவனே . இத்தகு இறைவனைப் பகலிலும் இரவிலும் வணங்கிப் பரவி மாறுபட்டுக்கொண்டே  இருக்கும் இவ்வுலகில் நான் அறியாமை நீங்கி நிற்கிறேன்  என்கிறார்  திருமூலர்.
சிவனொடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை
அவனொடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை
புவனம் கடந்த அன்று பொன் ஒளி மின்னும்
தவனச் சடை முடித் தாமரை யானே.

சிவபெருமானைப் போன்ற தெய்வம் வேறு எவராவது உண்டா என்று எங்கெல்லாமோ தேடினேன். ஹுஹும் எங்கும் காணேன். உள்ளும் இல்லை, புறத்திலும் இல்லை . பகவான் பிரம்மாண்டத்தை கடந்து நின்ற போது தகதகவென்று பொன் போல பிரகாசிப்பான். சிவன் செந்நிறம் பொருந்திய ஊர்த்துவ  ஸஹஸ்ர தள,  ஆயிரம் இதழ்த் தாமரையில் விளங்குபவன்.

அவனை ஒழிய அமரரும் இல்லை
அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை
அவனன்றி ஊர்புகு மாறு அறியேனே. 6

அப்பா பரமேஸ்வரா, உன்னை விட்டால் வேறு எவர் மூலமாகவும் எமக்கு முத்தி பெற வழியில்லை! சிவனைக் காட்டிலும் மேம்பட்ட தேவர்கள் எவருமே , ஏன் ஒருவருமே இல்லை. சிவனல்லாது செய்கின்ற அருமையான தவமும் எதுவும் இல்லை. அவனை அல்லாது பிரமன், விஷ்ணு, ருத்திரன் ஆகிய மூவராலும் பெறுவது ஒன்றும் இல்லை. அவனையல்லாது வீடு பேறு அடைவதற்குரிய வழியை அறியேன்.
பின்னை நின்றென்னே பிறவி பெறுவது
முன்னை நன்றாக முயல்தவஞ் செய்திலர்
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ்ச் செய்யுமாறே. -தி.10 பா.20

சிவ பெருமானுக்கு தமிழ் பிடிக்கும். முதல் சங்ககாலத்தில்  பாண்டியன் மன்னன்  அரண்மனையில் மதுரையில் நக்கீரனோடு வாதம் செய்தவனல்லவா? தமிழை நீ நன்றாக சுவையாக பாடல்களாக எழுது.  எம் தமிழ் மக்கள்  உன் அருந்தமிழில் அற்புத தத்துவங்கள்  மூலம்  என்னை, அனுபவிக்கட்டும் என்று ”பலே, பலே என்று திருமூலர் முதுகில் ஷொட்டு கொடுத்தது போல்  இருக்கிறது  இந்த  திருமந்திரம்.  ” என்னை நன்றாக படைத்தனன் தன்னை நன்றாக தமிழ் செய்யும் பொருட்டு” என்று  எவ்வளவு  புளகாங்கிதத்தோடு  சொல்கிறார்  திருமூலர். 

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *