SURDAS – J K SIVAN

ஸூர்தாஸ்  –  நங்கநல்லூர்  J K  SIVAN
உன்னை முதல் முதலாக பார்த்த போது …….

”ஸூர்தாஸ்   பற்றி  ஒரு  மூன்று நாள்  எழுதாமல் இருந்தால்  என்னவோ போல் இருக்கிறது.  அவரை மறப்பது என்பது   எனக்கு  முடியாத காரியம்.  கிருஷ்ணனை மறந்தால் தான்  ஸூர்தாஸை   மறக்க  முடியும். கிருஷ்ணன் என்றாலே   ஸூர்தாஸ்  தான்  முதலில்  கண்  முன்னால்  நிற்பவர். கிருஷ்ணனை எப்படி மறக்க முடியும்? மூச்சு விடாமல் யாராவது  வாழ முடியுமா?’
கிருஷ்ணன்   எதில் இல்லை, எவரில் இல்லை.  ஆகவே  மறைமுகமாக, எதிலும் எவற்றிலும் மறைந்திருக்கும், மறைகள் போற்றும்  அவனை  ஏதோ விதத்தில்  தெரிந்தவரை  முடிந்தவரை  நான்  எழுதிக் கொண்டு தானே வருகிறேன்.  ஒரு ஸூர் தாசின்   ஹிந்தி  பாட்டு கிடைக்கவில்லை. யாரோ இங்கிலீஷில் எழுதியதை  படித்து விட்டு  அர்த்தம் மனதில் புரிந்துகொண்டு   என் வழியில் சொல்கிறேன்:
”சூரியன் வெகு மும்முரமாக கண்ணில் பட்டதை எல்லாம் தங்க நிறமாக்கிக் கொண்டிருந்தான். ஆகவே அது பொன்  மாலை வேளை.   சூரியனின் தங்க  ரஸவாத  வித்தை  எதிலும்  காணப்பட்டது.    காற்று சுகமாக வீசியது. பிருந்தாவன சிறுவர்கள் குதூகலமாக தெருக்களில் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்கள் ஆடை எல்லாம் வியர்வை. தெருப் புழுதி.   அவர்கள் நடுவிலே  அதோ பாருங்கள் கருப்பாக  மினுமினுவென்று ஒரு பயலை. கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலருன்னு   கண்ணைக் கவர்கிறானே யார் தெரிகிறதா?அவன் தான் கண்ணன். செல்லப்பெயர். அவன் பெயர் கருப்பன், அதாவது கிருஷ்ணன்.  அவன் இடுப்பில் மஞ்சள் வஸ்திரம். பொன் வெயிலில் அவனது மஞ்சள் ஆடை பளபளக்கிறது.  புத்தி விளையாட்டில் இருப்பதால்  அவனது  புல்லாங்குழலுக்கு  ஒய்வு. இடுப்பில் தலையை நீட்டிக்கொண்டு  இடையில்  இறுக்க  கட்டியிருந்த  வஸ்த்ரத்தில் செருகப்பட்டு இருக்கிறது. ஒரு கூட்டம் அவனைச் சுற்றி  எப்போதும் உண்டே.

ஓஹோ, கையில் சாட்டை எனும் கயிற்றால் பம்பரத்தை சுற்றி வேகமாக அதை  வீசி சுழல வைக்கிறார்கள். பம்பர விளையாட்டா?

அவன் தலையில் அழகிய ஒரு மயில் பீலி இறகு , பல வண்ணங்களோடு கண்ணைப்  பறிக்கிறது. அவன் குனிந்து நிமிர்ந்து ஓடி ஆடும்போது அவன் காதுகளில் அணிந்துள்ள குண்டலங்கள் ஆடுகின்றன. சூரிய ஒளியில் பல சூரியன்களாக மின்னுகிறது.

ஏதேதோ சிரிப்பாக பேசுகிறான் போல் இருக்கிறது.    கூட இருக்கும் அத்தனை பையன்களின்  முகங்களும் பிரகாசித்து ஆனந்த மயமாக காட்சி அளிக்கிறதே. கிருஷ்ணன் வாய் கொள்ளாமல் சிரிக்கும்போது அவன் முத்துப் பல் வரிசையின் அழகை எந்த வார்த்தையை உபயோகித்து என்னால் எழுத முடியும்?  உங்கள் மனத்தில் நீங்களே கற்பனை பண்ணி பார்த்துக் கொள்ளுங்கள். நிறைய சந்திரன்களை பூரண ஒளியோடு வாயில் வைத்துக்  கொண்டிருக்கிறானோ? உடம்பு பூரா கம கமக்கும் சந்தன பூச்சு.

விளையாடிக்  கொண்டிருந்த கிருஷ்ணனின் பார்வை யதேச்சையாக சற்று தூரத்தில் இருந்த யமுனா நதிக்கரை மேல் சென்றது. யார் யாரோ அங்கே நடமாடிக் கொண்டிருந்தார்கள்.
அது யார் ?
நெற்றியில் மஞ்சள் திலகம்… தொள தோளவென அவளை சுற்றிக்கொண்டு இருந்த ஆடை. விரிந்த பல கொசுவங்கள் கொண்ட நீண்ட பாவாடை இடையில் பாந்தமாக அணிந்திருக்கிறாள். அதற்கு ஏற்றாற்போல் நீல நிறத்தில், அவனுக்கு பிடித்த வண்ணத்தில், மேலே உடலை மறைத்த சட்டை. நீண்ட அலை அலையாக கூந்தல் பின்னல் கருநாகம் போல் அவள் நடைக்கேற்ப நெளிகின்றதே . அடேயப்பா, இவ்வளவு அழகா? அழகிய மற்ற பால்காரி களுக்கிடையே அவள் தனித்து தென் படுகிறாளே. வெண்மேக கூட்டத்திடையே தங்க நிலா போல அல்லவோ இருக்கிறாள்.

கிருஷ்ணனின் ஊடுருவிய பார்வை அந்த பெண்ணின் பார்வையை சந்தித்தது. கடல் போன்ற அன்பும் ப்ரேமையும் கொண்டு அவள் பார்வையை கிரஹித்தது. அவள் பார்வையிலிருந்து அது உள்ளே இறங்கி அவள் மனதை நிரப்பியது. அதே வேகத்தில் திரும்பி அவள் மனத்தை தூக்கிக் கொண்டு வந்து அவன் மனதோடு இணைத்தது. என்ன அதிசயம் இவ்வளவு சீக்கிரம் நடந்திருக்கிறது! கண்ணன் அவளைப் பார்த்துக்க்க்க்க்க்க்க்க் கொண்டே இருந்தான்.

சூர்தாஸ் கிருஷ்ணன் ராதையை முதல் முதலாக பார்த்ததை வர்ணிக்கிறார்.

Krishna went playing in the lanes of Braj,
a yellow silk garment round his waist,
holding a top and a string to spin it with,
a crown of peacock-feathers adorning his head
his ears with charming ear-rings decked,
his teeth flashing brighter than the sun’s rays,
his limbs anointed with sandalwood-
On the Yamuna bank he chanced to see Radha;
a tika mark of turmeric on her brow,
dressed in a flowing skirt and blue blouse,
her lovely long wreathed hair dangling behind,
a stripling, fair, of beauty unsurpassed
with he a bevy of fair milkmaids:
Krishna’s eyes met her’s;
love woke in his heart,
says Suradasa, bewitched by her,
he gazed and gazed.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *