ARUPATHTHU MOOVAR J K SIVAN

அறுபத்து மூவர்     –      நங்கநல்லூர்    J K SIVAN
புகழ்ச்சோழ நாயனார்  

புகழ்ச்சோழ நாயனார்  என்ற  பெயர் கொண்ட   ஒரு  சிறந்த சிவனடியாரைப் பற்றி  ஒருநாளாவது ஒரு விநாடியாவது  நாம்   யோசித்ததுண்டா? புகழ்ச்சோழன் என்ற பெயராவது  தெரியுமா?  சரி.  இத்தனை வருஷம்  சிவன் கோவில்களுக்கு போயிருக்கிறோமே,   ஒரு நிமிஷமாவது எந்த கோவிலிலாவது  ப்ரஹாரத்தில் வரிசையாக  ரெண்டு அடி  உயரத்துக்குநிற்கும்  63 நாயன்மார்கள் பேரையாவது பொறுமையாக  படித்ததுண்டா?  எந்த கேள்வி கேட்டாலும் ஒரே பதில்  ‘இல்லை” என்பதே வழக்கமாகி விட்டது. .

ஆகவே  இன்று கட்டாயமாக  இந்த சிவனடியாரை உங்களுக்கு  அறிமுகப்படுத்திவிட்டு தான் வேறு வேலை என்று முடிவெடுத்ததால்  இந்த சின்ன பதிவு..

உறையூர்  சில காலம் சோழர்கள் தலைநகராக இருந்தது.  அதில் ஒரு நல்ல ராஜா. உண்மையான சிவ பக்தன்  என்று சொல்வது ரொம்ப பொருத்தம். சிவனுக்கும் அடியார்க்கும் தொண்டு புரிந்து மகிழ்பவர். ராஜ்ய பரிபாலன  சௌகர்யங்கள் காரணமாக  தலைநகரை  கரூர்க்கு மாற்றியவர்.

 கரூர் என்ற பெயர்  இப்போதெல்லாம்  ரொம்ப  அரசியல்  செய்திகளில்  அடிபடுகிறதே  அதே கரூர் தான்.  அங்கே  ஒரு  புராதன  சிவன் கோவில். சிவனுக்கு  கல்யாணபசுபதீசுவரர்  என்று  பெயர்.  தேவாரப்பாடல் பெற்ற கொங்கு நாட்டு  சிவஸ்தலம்.  பதினெட்டு சித்தர்களில்  ஒருவரான  கரூவூராருக்கு  தனி சந்நிதி. இங்கே  இன்னொரு சிவனடியார், எறிபத்த நாயனார்   சிவத்தொண்டு  புரிந்திருக்கிறார்.
கல்யாண பசுபதீஸ்வரர்  லிங்கத்தின் ஆவுடையார், சதுர  வடிவம்.  மாசி மாதத்தின் ஐந்து நாட்கள், மூலவரின் மீது சூரிய ஒளி  தரிசனம். மூலவரின் இடதுபக்கத்தில் அலங்காரவல்லி அம்பாள்  சந்நிதி.  இன்னொரு  சந்நிதியில் சௌந்தரநாயகி   அம்பாள்.   கல்யாண பசுபதீஸ்வரர்  எதிரே  உட்கார்ந்திருக்கும்  நந்திக்கு    புகழ்ச்  சோழ  நாயனார் சிலை  இருக்கிறது. புகழ்ச்சோழர் மண்டபம், நூறுகால் மண்டபம்  எல்லாம் கட்டி இருக்கிறார்கள்.
 கரூர்  அமராவதி ஆற்றங்கரையில்  அமைந்த அருமையான  ஊர்.  கோவில்  கொடிமரம் அருகே   தலையைத் தட்டில் வைத்து கையில் ஏந்தியவாறமைந்த புகழ்ச்சோழ நாயனாரின் சிற்பமும், மறுபுறம் சிவலிங்கமும், சிவலிங்கத்தை நாவால் நக்குகின்ற பசுவும் அருமையாக உள்ளது.  கர்பகிரஹம் சதுர வடிவம். அதன் விமானம் வட்டம். அதன் மேல் கலசம்.  புராதனமான இக்கோவில் பலமுறை சிதிலமாகி புனருத்தாரணம் பண்ணப்பட்டது.  நாட்டுக்கோட்டை செட்டியார்களுக்கு நன்றி.
காமதேனு வழிபட்டதால் இக்கோவிலில், சிவன், ‘பசுபதீஸ்வரர்’ என்றும், ‘ஆநிலையப்பர்’ என்றும்  பெயர் கொண்டவர்.
எல்லோராலும் கப்பம் கட்ட முடியவில்லை  என்பதால் கரூருக்கு  தலைநகரை மாற்றி  பல சிற்றரசர்கள், குறுநில மன்னர்கள்   புகழ்ச்  சோழனுக்கு  கப்பம் கட்டினார்கள்.   கப்பம் கட்டும் அரசர்கள் குதிரைகள், யானைகள்,  பொற்குவியல்கள், விலை மதிக்கத்தக்க கற்கள் போன்றவற்றைச் செலுத்தி வந்தார்கள். ஒருமுறை அதிகன் என்னும்  சிற்றரசன்  மட்டும்  புகழ் சோழனுக்கு  கப்பம் கட்டாமல் இருந்தான்.
”மந்திரி,  அந்த அதிகனிடம் சென்று ஏன் கப்பம் கட்ட வில்லை என்று கேளுங்கள். தக்க காரணம் கூறாவிட்டால் அவனை வென்று சிறைப்படுத்துங்கள்”  என  புகழ்ச்சோழன் கட்டளை இட்டான்.  கப்பம் வராத  நிலையில்  அதிகனோடு  போர் தொடர்ந்தது.  சோழன்  படைகள்  அதிகனை வென்று அங்கிருந்த பொருள் செல்வங்கள், படைகள் கொண்டு வந்து  சோழன் எதிரே  சமர்பித்தார்கள்.
போரில் மாண்ட  யானை, குதிரை, பெண்கள், வீரர்கள் தலைகளை எல்லாம் பார்வையிட்ட  சோழன்  ஒரு தட்டில் இருந்த  தலையைப் பார்த்து  அதிர்ச்சியடைந்தான்.  அதில்  சடைமுடி தரித்த சிவனடியார்  தலை.   சோழன் சிவ பக்தன்.  கல்யாண பசுபதீஸ்வரர்  அடிமை.  ஆகவே  அந்த சிவனடியார் தலையைக் கண்டதும்  ‘ஐயோ என்று அலறினான் சோழன்.  உள்ளம் பதைத்தது. கண்களில் தாரை தாரையாக  நீர்சொரிந்தது. தது.  ”அடடா, எவ்வளவு பெரிய தப்பு , மஹா பதக்கம் பண்ணி விட்டேன்”   சிவனடியார்க்கு பாதுகாப்பு அளிக்காத நான் இனி ராஜாவாக இருக்க தகுதியற்ற கொடுங்கோலன் ” என்று   அலறிய  சோழன்  தனது ராஜ்ய  பாரத்தை என்று  ராஜ்யத்தை  மந்திரிகளிடம் ஒப்படைத்தான்.
ஜடாமுடி தரித்த  தலையை  ஒரு தங்கத்தட்டில் வைத்து  ஓம் நமசிவாய  என்று ஐந்தெழுத்து மந்திரத்தை மனதில் தியானித்தவாறே  தீமூட்டி,  அந்த நெருப்புக்  குண்டலத்தை வலம் வந்தான். பிறகு பொற்றாமரைக் குளத்தில் இறங்குவது போல் அந்த  ஜடாமுடி தலை யை தட்டில் ஏந்தியவாறு  எரியும்  நெருப்புக் குண்டலத்தில் இறங்கினான் சோழன்.   சுற்றியிருந்தவர்கள் மன்னனின் பக்தியைக் கண்டு உருகினார்கள். மன்னர் மன்னராக மட்டுமல்ல மகானாக வாழ்ந்திருக்கிறார் என்றார்கள். சோழன் புகழ்ச் சோழ நாயனார் என்ற  பெயர்  பெற்றான். கல்யாண பசுபதீஸ்வரர்  அவன் பெருமையை  உலகிற்கறிவிக்க  இந்த  நாடகமாடி  புகழ்ச்சோழனை தனது   திருவடி நிழலில் அணைத்துக்கொண்டார்

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *