PREDICTION OF KALIYUG LIFE – J K SIVAN

சரியாக சொன்ன சுக ப்ரம்மம் . — நங்கநல்லூர் J K SIVAN
கலியுகம் 1

காலம் கெட்டுவிட்டது. எல்லாம் தலைகீழ். இப்போது இருப்பது அக்ரமத்தின் உச்ச கட்டம். இதன் பெயர் கலிகாலம். இது 5000 வருஷங்களுக்கு முன் துவங்கியது. கிருஷ்ணன் மறைவுக்குப் பிறகு வளர்ந்து தலைவிரித்தாடுகிறது. இன்னும் பல லக்ஷங்கள் வருஷம் தொடரப்போகிறது. இப்போது காளிகாலத்தில் என்ன நடக்கும் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று அப்போதே அதே 5000 வருஷங்கள் முன்பு சுகப்பிரம்ம ரிஷி நன்றாக கணித்து சொல்லிவிட்டார். உண்மையை சொன்னால் கேட்பதற்கோ படிப்பதற்கோ கஷ்டமாகத்தான் இருக்கும்.
”ஸார், நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் ?
”நங்கநல்லூரில் ” இப்படி சொன்னால் புரியும், அதில் ஆச்சர்யம் இல்லை. ”நான் கலியுகத்தில் இருக்கிறேன் ” என்றால் பதில் சொன்னவரை ஒரு தடவை உச்சி முதல் உள்ளங்கால் வரை கொஞ்சம் கோணலாக அவரைப் பார்த்து விட்டு ”ஐயோ பாவம்,சின்ன வயசிலேயே புத்தி ஸ்வாதீனம் இல்லை….” என்று நகர்வோம். ஸ்ரீ மத் பாகவதத்தில் சுகப்பிரம்ம ரிஷி சொன்ன விஷ யங்களை வரிசைப்படுத்தி ‘ஆஹா” என்று பிரமித்துப் போக உங்களை அழைக்கிறேன்..
துவாபர யுகத்தில், கிருஷ்ணன் காலத்தில் பரிக்ஷித்துக்கு சுக ப்ரம்மம் சொன்னது…..
யார் இந்த பரீக்ஷித்?
அர்ஜுனன் பேரன், அபிமன்யு பிள்ளை. ”தக்ஷன் என்ற பாம்பு கடித்து இன்னும் ஏழு நாளில் நீ சாகப் போகிறாய் என்று மரண நோட்டீஸ் கொடுக்கப்பட்டவன். நம்மைப் போல வீடு வாசல், பணம், பெண்டாட்டி, குழந்தைகளைக் கட்டிக் கொண்டு ”ஐயோ, நான் உங்களை விட்டு போகப்போகிறேனே” என்று அழாமல் சுகப்பிரம்ம மகரிஷியை அழைத்து துளைத்து எடுத்து என்னென்னவோ நிறைய நல்ல விஷயங்கள் இரவும் பகலுமாக கேட்டுத் தெரிந்து கொண்டவன்.

பரீக்ஷித் நல்ல ராஜா. அவனால் நாம் எத்தனையோ ஞானம் பெறுகிறோம். இனி பரீக்ஷித் சுகர் சம்பாஷணையை கேட்போம்.
”மகரிஷி, அடுத்ததாக ஏதோ ஒரு யுகம் வருமாமே. அது என்ன?”
” கலியுகம்.”
”பேரே நன்றாக இல்லையே. சரி, அதில் என்ன நடக்கப்போகிறது மகரிஷி ? சொல்ல முடியுமா?”
ஆஹா சாஸ்திரங்கள் அதைப் புட்டு புட்டு வைத்திருக்கிறதே. கேள். அரசனே ”

ततश्चानुदिनं धर्म: सत्यं शौचं क्षमा दया । कालेन बलिना राजन् नङ्‌क्ष्यत्यायुर्बलं स्मृति: ॥ १ ॥
tatas canu-dinam dharmah satyam saucam ksama daya kalena balina rajan nanksyaty ayur balam smrtih .12.2.1.

”ஒவ்வொருநாளும் கொஞ்சம் கொஞ்சமாக மதம், சத்யம், உண்மை, நாணயம் ( காசு இல்லை நேர்மை) சுத்தம், மன்னிக்கும் குணம், தயை, கருணை, ஆயுள், உடல் வலிமை ஞாபகம் எல்லாமே குறைந்து கொண்டே வரும். காலம் இதை தீர்மானிக்கும். (நாமே இப்போதுள்ள நிலையில் இதெல்லாம் அனுபவிக்கிறோம். இன்னும் வேறு நிறைய பாக்கி இருக்கிறதோ?)

ஆரம்பத்தில் சத்ய யுகம் 18,00,000 வருஷ காலம். மனிதனின் வயது அப்போது பத்து லக்ஷம் வருஷம். யமனுக்கு சுத்தமாக வேலையே இல்லை. எத்தனை பிள்ளை, குட்டி, பேரன் பேத்தி, கணக்கு கம்ப்யூட்டரில் கூட போடமுடியாது.

அப்புறம் த்ரேதா யுகம் – ராமர் காலம் – 12,00,000 வருஷ காலம். அப்போது சராசரி ஒவ்வொரு மனிதனுக்கும் பத்தாயிரம் வருஷம் வயசு. LIC கிடையாது. அட சத்ய யுகத்தைவிட பத்து மடங்கு வயது குறைந்து விட்டதே.

அடுத்தது துவாபர யுகம் – 800,000 வருஷ காலம். மனிதன் வயது அப்போது சராசரி ஆயிரம் வருஷங்கள். ஐயோ இதென்ன அக்கிரமம். வயஸு இன்னும் பத்து மடங்கு குறைந்து விட்டதே.

இப்போது கலியுகம் நடக்கிறது. இதில் நமக்கு அதிக பக்ஷ வயஸு 100. இன்னும் பத்து மடங்கு குறைந்து விட்டது. நூறு வயதே ஜாஸ்தி. சராசரி 70 தாண்டினாலே அப்புறம் ஒவ்வொரு நாளும் போனஸ்.

இன்னும் போகப்போக 20 வயது 30 வயது ஆகிவிட்டாலேயே அவன் தொண்டு கிழவன். தாத்தா பட்டம் கட்டி விடப்போகிறார்கள்.

எப்படி இருக்கு? இப்போதே அங்கும் இங்குமாக ஒரு சில 30-35 வயது ஹார்ட் அட்டாக் மரணங்கள் . படிக்கவோ கேட்கவோ ஷாக் அடிக்கிறது. ஞாபக சக்தி குறைந்து போய்விட்டது. கேட்க கேட்க , படிக்க படிக்க எதுவுமே மறந்து கொண்டே போகிறது. நமது தாத்தா கொள்ளு தாத்தா, காவேரியில் வெள்ளத்தில் எதிர் நீச்சல் போட்டார், பனை மரம் ஏறி நுங்கு பறித்தார், தேங்காயை பல்லால் கடித்து உறித்தார். தோட்டத்தில் கரும்பு கண்ணில் பட்டால் ரெண்டு மூன்று கரும்பை கடித்தே நின்றார்.. இதெல்லாம் ஆச்சர்யமான விஷயங்கலாக வாயைப் பிளந்து கேட்கிறோம். ஆஞ்சநேயர் கோவில் மிளகு வடையை கூட நம்மால் கடிக்க முடியவில்லை. பல் அவ்வளவு வீக். WEAK.
கலியுகத்தில் மதம், பக்தி, மரியாதை, பதவிசு, எல்லாம் குறைந்து விடும்.
இப்போதே மதம் என்று எவனாவது பேசி எசகு பிசகு பண்ணினால், சொன்னால், உடனே பிடித்து உள்ளே போட்டு விடுவார்கள்……மதச் சார்பற்ற…. இதற்கு என்ன அர்த்தம் என்றே எனக்கு இன்னும் புரியவில்லை. கோவில்கள் சிலரது வாழ்க்கைக்கு சௌகரியங்களை தேடித்தரும் சுலப வழியாகி விட்டதே. கிராமங்களில் கோவில்களில் ஆளே இல்லை. சில கோவில்களில் சாமியே காணோம். அமெரிக்காவுக்கோ எங்கோ சென்று விடுகிறது. கோவில் நிலங்கள் பிளாட் ஆகி விட்டன. அன்னதானம் நிச்சயம் என்று தெரிந்த சில கோவில்களில் பிச்சைக்காரர்கள், உழைக்காமல் பிழைப்பவர்கள் தான் சாப்பாட்டு நேரத்தில் கண்ணில் படுகி றார்கள். பக்தர்களுக்கு இலவச உணவு சுத்தமாக கிடைக்குமோ?.

கருணையாவது, காருண்யமாவது, தயையாவது. ஒரு ரூபாய்க்கு குழந்தையை விற்கிறார்கள். அசந்தால் அறுபதுக்கு மேலே கிழவிகள் தங்கச் சங்கிலி தங்கள் உயிர் இரண்டையும் கோட்டை விடுகிறார்கள். மூன்று வயது பெண் குழந்தையை பாலின வன்மையில் கொல்கிறார்கள். பத்திரிகை டிவி எல்லாமே நிமிஷத்துக்கு நூறு கொலை கொள்ளை பற்றி தான் செய்தியும் படமும் போடுகிறது. நல்ல விஷயம் எதையும் சொல்ல பிடிக்கவில்லையா? சொல்வதற்கு எதுவும் இல்லையா? நடப்பது இப்படி இருந்தால் அதைத் தானே காட்ட, சொல்ல முடியும்.

ஆமாம் நமது காலம் கலிகாலம் என்பதை மேற்படி ஸ்லோகத்திலிருந்து உணர்கிறோம். எப்படி இவ்வளவு துல்லியமாக சுகர் சொல்ல முடிந்தது அதுவும் 5000 வருஷங்களுக்கு முன்னால் …..!

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *