PESUM DEIVAM – J K SIVAN

பேசும் தெய்வம் –  நங்கநல்லூர்   J K   SIVAN
”கோ” என்ற குமுறலும் கோதானமும்.
மார்க்க பந்து ஒரு வெகுளி.  அறுபத்தி ஐந்து வயதுக்கு மேல் இருக்கும்  ஒரு பழைய நண்பர்.  ரெட்டை நாடி. வலது கால் சற்று  விந்தி விந்தி நடப்பார். கொஞ்சம் முதுகு கூனல். நெற்றியில் பட்டையாக எப்போதும் விபூதி, கழுத்தில் ஒரு  ருத்ராக்ஷம் சிகப்பு பட்டுநூலில் கட்டி அணிந்திருப்பார். எப்படி   போஸ்டல்  டிபார்ட்மெண்டில் அவர் ஹெட் கிளார்க்காக  வேலை செய்தார் என்பது ஆச்சர்யம்!   எப்போதும் அட்டகாச சிரிப்பு. உரத்த குரலில் பேச்சு. கொஞ்சம்  காது  செவிடு.  ஆகவே மற்றவர்களும் அவ்வாறே என்று நினைப்போ என்னவோ எப்போதும் உரத்த குரலில் தான் பேசுவார். வாய் நிறைய  வெற்றிலை புகையிலை குதப்பி கன்னம் உப்பி இருக்கும்.  வாயை மேல் நோக்கி  அண்ணாந்தவாறு உயர்த்திக்  கொண்டு தான் பேசுவார். உள்ளே  கரை ததும்பும் வெற்றிலை பாக்கு சாறு. ஒரு சிறு துளிகள் பொங்கி வெளியே வந்து கடை வாய் வழியாக ரத்தம் போல் கீழே முகவாய் கட்டையில்  வெண் தாடிக்கிடையே படியும். அதை  அடிக்கடி  மேல் துண்டால் துடைத்துக் கொள்ளும் வழக்கம்.  மஹா பெரியவா பக்தர் இப்படியும் ஒருவர்  இருப்பதில் ஒரு  ஆக்ஷேபணையும்  இல்லையோ? பெரியவா  எதிரே  வாயில் வெற்றிலை புகையிலை நிச்சயம் இருக்காதே.   அடிக்கடி  என்னைப்  பார்த்து  பேச வருவார். அவர் தான் பேசுவார்  நான் கேட்பேன்.  

”  JKS சார், மஹா பெரியவாளுக்கு எந்த வித்தியாசமும் கிடையாது என்று சொன்னீர்களே. ஏழை பணக்காரர், படித்தவர் படிக்காதவர், ஜாதி வித்யாசம், மத வித்யாசம் எதுவுமே கிடையாது என்று சொன்னீர்களே.
”ஆமாம். வாஸ்தவம் மார்க்க பந்து.  நேற்று ராத்திரி  பழைய புஸ்தகங்களை எடுத்து புரட்டி பார்க்கும் போது ஒரு சம்பவம் மீண்டும் படிச்சேன். அடிக்கடி படிச்சாலும் ஒவ்வொரு தடவை படிக்கும்போதும்  அது ஏதோ புதிதாக படிப்பதைப் போலவே விறுவிறுப்பாக இருக்கிறது. அவ்வளவு ஆச்சர்யம், பரோபகார சிந்தனை, அன்பு.  உண்மையிலேயே நாம் அவர் வாழ்ந்த காலத்தில் இருந்ததற்கே புண்யம் பண்ணினவர்கள். அதிலும் அவரை தரிசித்தவர்கள் பாக்யசாலிகள். அவருடைய பேச்சு, உபன்யாசம், அறிவுரை, இதெல்லாம் கேட்டவர்கள் பிறவி அற்றவர்கள்.  கூடவே இருந்தவர்களைப்பற்றி ஒன்றுமே சொல்ல வேண்டாம்.மஹா புண்யவான்கள்.””நீங்க  படிச்ச  அந்த சம்பவம் என்ன என்று சொல்லுங்கள் கேட்கிறேன்?”

இது காஞ்சி மடத்திலே  50-60 வருஷங்களுக்கு முன்னாலே  நடந்ததாக  வைத்துக்கொள்ளலாம். அப்போதெல்லாம், எனக்கு தெரிந்து யாருக்கு என்ன கஷ்டம் வந்தாலும், நோய் நொடி என்றாலும் கோர்ட் கேஸ் என்று மன உளைச்சல் எதுவானாலும் முதலில் பெரியவா கிட்டே போய் தரிசனம் பண்ணிட்டு வந்தால் எல்லாம் தானே சரியாயிடும் என்ற நம்பிக்கை அநேக குடும்பங்களில் இருந்தது. எங்கள் குடும்பமும் அதில் ஒன்று.  அவர் எதிரே அமர்ந்து   மகா பெரியவா சந்நிதியில்  ஓவென்று  ஒரு பாட்டம் மனசை அவிழ்த்து கவலைகளை, பயங்களைக் கொட்டி   அழுது விட்டுப் போவது பலருக்கு  வழக்கமாக இருந்தது. அது என்னவோ… காஞ்சியில் இவரது சந்நிதிக்கு வந்து விட்டாலே, அந்த மனக் குறைகள் மாயமாகப் போய்விடும் என்பது பல பக்தர்களின் நம்பிக்கையாக இருந்தது. பலருடைய அனுபவத்தில் எத்தனையோ பணச் சிக்கல்கள், குடும்ப விவகாரங்கள், வியாதி நிவாரணங்கள், நீதிபதியிடமும் போய்த் தீர்க்க வேண்டிய பல  லீகல் பிரச்னைகள், காஞ்சி மகானின் சந்நிதிக்கு வந்து க்ஷண நேரத்தில்  இதெல்லாம்  தீர்க்கப்பட்டிருக்கின்றன. அதுதான் மகா பெரியவாளின் அருள். அவர் ஒன்றும் சொல்லவேண்டாம். அவரைப் பார்த்துக்கொண்டிருந்தாள், அவரெதிரே எல்லாவற்றையும் கொட்டிவிட்டாலே  போதும் . நிவாரணம் கிடைத்துவிடும்.   அத்யந்த பக்தர்களுக்குப் பெரியவா ஒரு கண்கண்ட  பேசும் தெய்வமாகவே காட்சி அளித்திருக்கிறார்.

ஒருநாள் காஞ்சி ஶ்ரீமடத்தில்  மஹா பெரியவா  கண்மூடி  ஜெபத்தில் ஆழ்ந்திருந்தார்.  திரள் திரளான பக்தர்கள் அவர முன்னால் கூடி இருந்தனர்.அந்த தெய்வ தரிசனத்தில் மெய்மறந்த நிலையில் காணப்பட்டனர்.

பெரியவா அன்றைய தினம் மெளன விரதம். எனவே, வந்து செல்லும் பக்தர்களுக்குப் பிரசாதம் மட்டும் வழங்கிக் கொண்டிருந்தார். அவ்வப்போது தியானத்தையும் அனுஷ்டித்தார். அதற்கேற்றவாறு வந்து செல்லும் பக்தர்கள் பிரசாதம் பெற்றுக் கொண்டு, நமஸ்கரித்து நகர்ந்துகொண்டே இருந்தனர்.

திடீரென பெரியவா சந்நிதிக்கு ஒரு பெண் வந்தாள் . காஞ்சிபுரத்தையோ அல்லது அக்கம்பக்கத்துக் கிராமத்தைச் சேர்ந்தவளாக இருக்க வேண்டும். கிராமவாசி.  சாதாரணமான நூல் புடவை. அதுவும் பழசு, . ஆங்காங்கே நைந்து கிழிந்து காணப்பட்டது. உழைக்கும் வர்க்கம் என்று அவள் முகம் சொல்லியது. படிய வாரிய தலைமுடியில் எண்ணெயும் இல்லை; ஓர் ஒழுங்கும் இல்லை. கூலி வேலை செய்பவளோ என்று பார்த்த மாத்திரத்தில் தோணும்.  அவள் கண்களில் ஏதோ ஒரு ஏக்கம், ஒரு சோகம்.

சரசரக்கும் காஸ்ட்லி  பட்டு புடவைகளுக்கு மத்தியில், பளபளக்கும் வைர நெக்லஸ்களுக்கு மத்தியில் இப்படி திடீரென வந்து நின்ற அந்தப் பெண் வித்தியாசமாக இருந்ததை அனைவரும் கவனித்தார்கள்.  பல கண்களில் அருவருப்பு.  கோபம் வேறு  தெரிந்தது.,

கிட்டத்தட்ட பெரியவா அருகில் வந்து நின்று கை கூப்பி பார்வையாலேயே பரப்பிரம்மத்தை ரசித்து ஆனந்தித்துக் கொண்டிருந்தாள். பக்திக்கும் ரசனைக்கும் ஏது அளவுகோல்? காஞ்சி மகானின் சந்நிதியில் பக்தர்களுக்கு ஏது அளவுகோல்? எல்லா தரப்பு மக்களுக்கும் உரித்தானதுதானே!   அவளுக்கு தன்னை மற்றவர்கள் அருவருப்போடு பார்ப்பது தெரிந்தது. லேசாக முகம் சுளித்து  நின்றிருந்த ஒரு சிலர் அவளுக்கு   கொஞ்சம் இடம் விட்டு  ஏதோ தீண்டத்தகாதவள் போல தள்ளி நின்று கொண்டனர்.

வந்தவள், என்ன பிரச்னையைக் கொண்டு வந்திருப்பாளோ? அவள் மனதில் என்ன வேதனையோ?  பெரியவா மெளனம் அனுஷ்டித்துக் கொண்டிருக்கிறார்… இந்தச் சூழ்நிலையில் இவள் இங்கே ஏதாவது களேபரத்தை உண்டுபண்ணி விடுவாளோ?’ – மடத்துச் சிப்பந்திகளுக்குள் கவலை,

பெரியவா மெளனத்தில் இருந்தாலும், அவளைக் கவனித்துவிட்டார். பெரியவா தன்னைக் கவனித்துவிட்டார் என்பதை அவளும் ஒருவாறு உணர்ந்துவிட்டாள். அவள் ஏதோ பேசத் துடிப்பது  போல் காணப்பட்டாள். அவளது உதடுகள் ஏதோ ஒரு செய்தியை பெரியவாளிடம் சொல்லத் துடித்துக் கொண்டிருந்தன. அங்கே குழுமி இருந்த பக்தர்களும், மடத்துச் சிப்பந்திகளும் இதை கவனித்தார்கள்.

வயதில் முதிர்ந்த மடத்துச் சிப்பந்தி ஒருவர் விறுவிறு என்று அவள் அருகே சென்று , ‘‘தோ பாரும்மா… சாமீ மெளனத்துல இருக்கார். இப்ப எதுவும் பேசக்கூடாது. பேசாம உக்கார். கொஞ்ச நேரம் கழிச்சு சாமியே பேசுவார்… ஆமா, சொல்லிட்டேன். சத்தம் கித்தம் எதுவும் போடக்கூடாது. ’’ என்று அவளுக்கு மட்டுமே கேட்கும்படியாகக் குசுகுசு வென்று , அதே சமயம் கறாராகச் சொன்னார்.     அறிவுரை சரி. . கேட்கக்கூடிய பக்குவம் பக்தர்களுக்கு வேண்டுமே!    அறிவுரை சொல்லிவிட்டுச் சென்ற சிப்பந்திக்கே  அதில்  சந்தேகம்தான். சற்றுத் தள்ளிச் சென்றும், ஓரிடத்தில் நின்றபடி இவளையே பார்த்துக் கொண்டிருந்தார்.
சில நிமிஷங்கள் ஓடியது.
அந்தப் பெண்ணால் அதற்கு மேல் பொறுத்துக்கொண்டு  நிற்க  முடியவில்லை. பெரியவாளின் சந்நிதானத்தில் அமைதி காக்க முடியவில்லை. உதடுகள் துடிதுடித்து, பெருங்குரலெடுத்து ஆரம்பித்தாள்.

‘‘சாமீஈஈஈ…..’’ அவள் கைகள் கூப்பிய நிலையிலேயே இருந்தன.

அமைதியான சூழ்நிலையில் ஒலித்த அவளுடைய  இந்த  அவலக் குரல், திடீரென மடத்தின் நிசப்தத்தைக் குலைத்தது. எல்லோருடைய  பார்வையும், குரல் வந்த இடத்தில் நிலைகுத்தி நின்றன.  பக்தர்களும் சிப்பந்திகளும் அதிர்ந்தனர்.

பெரியவா தியானத்திலேயே இருந்தார். திரு   விழிகள் திறக்கவில்லை. இவளது பிரச்னை அந்தப் பரமாத்மாவுக்குப் புரியாமலா இருக்கும் ?     அந்தப் பெண்ணின் கண்களிலிருந்து தாரை தாரையாக நீர் வழிந்தோடியது.  தான் செய்தது தவறானதாகவோ,  அந்த இடத்தில் செய்யக்கூடாத ஒன்றாகவரோ, எல்லை மீறியதாகவோ அவளுக்கு ஒன்றும் தோன்ற வில்லை. ஏதோ ஒரு நியாயத்தை, தீர்ப்பை எதிர்பார்த்து அவள் இந்த சந்நிதிக்கு நம்பிக்கையுடன் வந்தவளாகவே இருந்தாள். அவள் விசும்பல்  விம்மல் தொடர்ந்தது.

அங்கே கூடியிருந்த பக்தர்கள் அனைவரும் வித்தியாசமாக அவளை ஏறிட்டுப் பார்த்தார்கள்.   அவள் அருகே நின்றிருந்த சிலர் அவளைச் சற்றே மிரட்டலாகப் பார்த்து, வாய் மீது விரல்  வைத்து  ‘உஸ்ஸ்ஸ்ஸ்…’ என்று சைகை காண்பித்தனர்.

பெரியவாளின் தியானத்துக்கு ஏதேனும் இடைஞ்சல் ஏற்பட்டிருக்குமோ என்று கவலைப்பட்ட சில பக்தர்கள்,  மஹா பெரிய வாளையும் அந்தப் பெண்ணையும் மாறி மாறிப் பார்த்தார்கள். அவரது தியானத்துக்கு ஒரு பாதிப்பும் இல்லை.

இன்னும் அவள் கைகள் நடுங்கியபடி கூப்பிய நிலையில் இருந்தன. ஏதோ ஒரு விஷயத்தைச் சொல்ல நினைக்கிறாளே தவிர, எதுவும் அவள் பேசவில்லை. அவள் வாயிலிருந்து வார்த்தைகளும் எழவில்லை. ஒரு பதற்றம் தெரிந்தது. .

பக்தர்களும் மடத்து ஊழியர்களும் அதிர்ந்து போனார்களே தவிர, பரப்பிரம்மம் எந்த விதமான ரியாக் ஷனும் காட்ட வில்லை. கண்களை மூடியபடி ஈஸ்வர தியானம் தொடர்ந்து கொண்டே இருந்தது.

பெரியவாளின் கைங்கர்ய சிப்பந்தி ஒருவர் வேகமாக அவளிடம் வந்தார். முகத்தில் எள்ளும் கொள்ளுமாக வெடித்து, அவரது படபடப்பை வெளிக்காட்டியது.

‘‘என்னம்மா இது… இப்படிச் சத்தம் போடறே? இது கோயில். இங்கெல்லாம் இப்படிக் கூப்பாடு போடக்கூடாது. ஸ்வாமிகள் உக்காந்து தியானம் பண்ணிட்டு இருக்காருல்ல… அவருக்கு எந்த ஒரு தொந்தரவும் கொடுக்கக் கூடாது. அவரு கண் திறக்கற வரைக்கும் சத்தம் போடாம இருக்கணும். இருந்தா இரு. இல்லேன்னா ஒடனே கெளம்பிடு.’’

கிட்டத்தட்ட சிப்பந்தியின் கால்களில் விழப் போனாள் அந்தப் பெண்
‘‘ஐயா… என்னை மன்னிச்சிடுங்கய்யா… சாமீயப் பாத்து எங் குறையைச் சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன். வந்த இடத்துல அவரப் பார்த்து உணர்ச்சிவசப்பட்டுட்டேன்’’ என்றாள் மெதுவான குரலில்.

அடுத்து அவளது குரல் எங்கே உச்சஸ்தாயியை அடைந்துவிடப் போகிறதோ என்கிற கவலையில், அந்த சிப்பந்தி

” சரி சரி நிறுத்து….உஸ்ஸ்ஸ்… இனிமே எதுவும் பேசப்படாது. ஸ்வாமியோட தியானம் முடியட்டும். வெய்ட்  பானு.  அவர்கிட்ட பிரசாதம் வாங்கிட்டுப் போயிட்டே இரு’’ என்று கறாராகச் சொல்லிவிட்டு நகர்ந்தார். சில நிமிடங்களுக்கு அமைதி நிலவியது. திடீரென்று சங்கர ஸ்வரூபம்  கண்களைத் திறந்தது.  கூடி நின்றிருந்த பக்தர்கள் அந்தப் பரப்பிரம்மத்தை தெய்வீகத்துடன் பார்த்துக் கன்னத்தில் மாறி மாறி அறைந்து கொண்டனர்.
 ‘ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர’ கோஷம் ஒரு மூலையில் மென்மையாகக் கிளம்பி வலுப் பெற்றது. பெரும் திரளாகத் தன் முன்னால் அமர்ந்திருந்த பக்தர்கள் கூட்டத்தைத் தன் பார்வையால் அளைந்தார் பெரியவா. மஹா பெரியவா  கண்கள் கூட்டத்தில் எதையோ தேடியது!     கும்பலுக்கிடையே தனித்துத் தெரிந்த இந்தக் கிராமத்துப் பெண்ணைப் பார்த்து, ‘அருகில் வா’ என்று வாஞ்சையுடன் சைகை செய்தார். குறிப்பிட்ட அந்த இடத்தில் நின்றிருந்த அனைவரும் ‘பெரியவா யாரை அழைக்கிறார்’ என்பது புரியாமல் ஒருவரையொருவர் பார்த்துக் குழம்பிக்  கொண்டிருந்தனர். தன் அருகில் இருந்த ஒரு சீடனை அழைத்து, சைகை மூலம் அவனுக்கு விளக்கி, அந்தக் கிராமத்துப் பெண்ணை அழைத்து வரச் சொன்னார் பெரியவா.புரிந்து கொண்டவன் அவளை அழைத்து வந்தான்.

பய பக்தியோடு அவள் பெரியவா அருகே நெருங்கினாள். மீண்டும் ஒரு சிப்பந்தி, ‘‘தோ பாரம்மா… சாமீ இன்னிக்கு மெளன விரதம். உம் பிரச்னை  என்னவோ அதைச் சொல்லிட்டு போயிடு. அவர் பதிலு சொல்வாருன்னு நிக்கக் கூடாது. என்ன புரியுதா?’’ என்று முன்ஜாக்கிரதையாகச் சொன்னார்..

அவள் பெரியவாளுக்கு முன் விழுந்து நமஸ்கரித்தாள். பெரியவா குங்குமப் பிரசாதம் வழங்கினார். கண்கள் பனிக்க அதை வாங்கிக் கொண்டவள்,

‘‘சாமீ… எம் புருஷனுக்கும் எனக்கும் ஓயாத சண்டை. அவர் போற போக்கே எனக்குப் புடிக்கலை. ரொம்ப கஷ்டப்பட்டுத்தான் மனசு ஒப்பாம வாழ்ந்திட்டு வர்றேன். எம் புருஷனை எங் கூடச் சேர்த்து வெச்சு, சந்தோஷமா நாங்க ரெண்டு பேரும் குடும்பம் நடத்த நீங்கதான் வழி பண்ணணும்’’ என்றாள் ஒரே மூச்சில்  திக்கி திக்கி பொங்கி வரும் அழுகைக்கு இடையே வேண்டுகோளைச் சொல்லி கண்களிலிருந்து கரகரவென்று தாரையாக நீர் பெருக்கினாள் . ரொம்ப காலமாக மனதில் இருந்த ஒரு பெரிய பாரத்தை, குறையை,  பகவான் சந்நிதியில் இறக்கி வைத்துவிட்டோம் என்ற பூரிப்பு..

மகா பெரியவா கண்களை மூடி ஒரு க்ஷணம் தியானித்து விட்டு, தன் முன்னால் இருந்த மூங்கில் தட்டுகள் மீது பார்வையை ஓட்டினார். ஒரு தட்டில் இருந்து ரஸ்தாளி வாழைப்பழம் இரண்டை எடுத்தார். அந்தப் பெண்மணியிடம் கொடுத்தார். தன் இரண்டு கைகளையும் பயபக்தியுடன் நீட்டி,   ரெண்டு பெரும்  ஒண்ணொண்ணு  சாப்பிடுங்கோ என்று ஜாடை காட்டினார். அதைப் பெற்றுக்கொண்டு கண்களில் ஒற்றிக்கொண்டாள் அவள். பிறகு, அந்தப் பெண்மணியைப் பார்த்து, வலது கையை மேலே உயர்த்தி ஆசிர்வதித்து விடைகொடுப்பது  போல் தலையை அசைத்தார். 

பெரியவா ஆசிர்வாதத்தில் நெகிழ்ந்தபடி புடவைத் தலைப்பில் அந்த இரு வாழைப்பழங்களையும் முடிந்து கொண்டாள். தனக்கு ஒன்று, தன் கணவனுக்கும் ஒன்று என தீர்மானித்து வீட்டுக்குப் போனதும் கணவனுக்கு ஒன்றைக் கொடுத்தாள். ஆயிரம் கேள்வி கேட்டு விட்டு அதை வாங்கிச் சாப்பிட்டான் அவன்.
சரியாக இரண்டு மாதங்கள் ஓடி இருக்கும்…
காஞ்சி மடத்தில் வழக்கம் போல் சந்திரமெளளீஸ்வரர் பூஜை முடிந்து  மஹா பெரியவா  பக்தர்களுக்கு தரிசனம் தந்து கொண்டிருந்தார். பெரியவாளின் ஆசி வேண்டி  எண்ணற்றவர்கள் அங்கே கூடி இருந்தனர். திடீரென பக்தர்கள் கூட்டத்தில் ஒரு பரபரப்பு. கணவனும் மனைவியுமாக இருவர் அங்கே வந்திருந்தனர். கணவன் வேட்டி சட்டை அணிந்திருந்தான். இடுப்பில் இறுக்கிக் கட்டிய மேல்துண்டு. மனைவி, சாதாரண வாயில் புடவை அணிந்திருந்தாள்.  கணவன் கையில் ஒரு பசுமாடு. அந்தப் பசுவின் மடியையே நக்கியபடி ஒரு கன்றுக்குட்டி. தாயையும் சேயையும் பெரியவாளின் பார்வை படும்  படியான ஒரு இடத்தில் கட்டிப் போட்டான். கூட்டத்தைக் கண்டு மிரண்ட பசு  ‘பொதுக்’ கென்று சுடச் சுடச் சாணியைப் போட்டு விட்டது.    பிறகு, அவனும் அவன் மனைவியும் பெரியவாளின் முன்னால் வந்தனர். இருவரும் கைகளைக் கூப்பியபடி, காஞ்சி மகானின் முன்னால் நெக்குருக நின்றுகொண்டிருந்தனர்.

அவளைப் பார்த்துப் பெரியவா புன்னகைத்து ‘‘வாம்மா… ஊரையே கூட்டற மாதிரி அன்னிக்கு மடத்துல சத்தம் போட்டியே… இன்னிக்கு உம் புருஷனோட இங்கே சேர்ந்து வந்துட்டியே. சந்தோஷம் தானே. நீ வேண்டியது கிடைச்சுது இல்லியா ’’ கேட்டுவிட்டு புன்னைகைத்தார். 

இரண்டு மாதங்களுக்கு முன் ஶ்ரீமடத்துக்கு வந்து அவள் குறையைச் சொன்ன போது கூட இருந்த சில பக்தர்கள் யதேச்சையாக இன்றைய தினமும் வந்திருந்தார்கள். ஒரு சிலர் அன்றைக்கு அவளுக்கு ஆறுதல் சொன்னவர்கள். இன்றைக்குக் கணவருடன் அவள் சேர்ந்து வந்திருப்பதைப் பார்த்ததும், ஆனந்த அதிர்ச்சி.

‘சுமார் இரண்டு மாதங்களுக்கு முன் இங்கு வந்தபோது சோகத்தைக் கொட்டிவிட்டுப் போனவளா முகம் கொள்ளாச் சிரிப்புடன் வந்திருக்கிறாளே .. கூடவே, கணவனும் வந்துவிட்டானே… மகா பெரியவாளின் சந்நிதிக்கு வந்து பிரார்த்தித் துவிட்டுப் போனதன் பலனை இன்று கண் கூடாக அனுபவிக்கிறாளே’ என்று நெகிழ்ந்தனர்.கணவன்_மனைவி இருவரும் பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்தனர்.

‘‘சாமீ… நீங்க என்ன மாயம் பண்ணீங்களோ… மந்திரம் போட்டீங்களோ… சேருவோமானு இருந்த நானும் எம் புருஷனும் ஒண்ணா  சேர்ந்து இன்னிக்கு உங்களை தரிசிக்க வந்திருக்கோம். நீங்க கொடுத்த வாழைப் பழம் சாப்டதிலேர்ந்தே  ரொம்ப  மாறிட்டாருங்க.. ரொம்ப சந்தோசமாக இருக்கோமுங்க. வரும்போது வெறும் கையோட வரக்கூடாதுன்னு நாங்க ஆசையா வளர்த்த பசுவையும் கன்னுக்குட்டியையும் மடத்துக்கு தானம் பண்ணலாம்னு கூட்டிட்டு வந்திருக்கோம்’’
ஒட்டுமொத்தக் கூட்டமும் ஸ்தம்பித்து நின்றது. எல்லோரும் அந்தத் தம்பதியையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.
தானங்களிலேயே கோதானம் எந்த அளவுக்கு உயர்ந்தது… அதன் பெருமையைப் பற்றி மஹா பெரியவா எத்தனை சத் சங்கங்களில் பேசியிருக்கிறார்! அத்தகைய உயரிய தானத்தை எவ்வளவு சாதாரணமாக இந்தக் கிராமத்துப் பெண் செய்ய முன் வந்திருக்கிறாள்! இவளுடைய மனம் எத்தனை உயர்ந்ததாக இருக்கும்?! ஒருவேளை இதையெல்லாம் புரிந்து கொண்ட தால்தான் அந்தப் பரப்பிரம்மம் இவளுக்கு அன்றே  அவளைமட்டும்  தனியாக கூப்பிட்டு அழைத்து ஆசி வழங்கி இந்த இருவரையும் இணைத்து வைத்துள்ளதா?

‘‘உங்க பார்வையால ஆசிர்வாதம் பண்ணி அந்தப் பசுமாட்டையும் கன்னுக்குட்டியையும் மடத்துக்கு சாமீ ஏத்துக்கணும். அந்தப் பாலை நெதமும் நீங்க குடிக்கணும்’’ என்று கெஞ்சியவாறு நின்றிருந்தாள் அந்தப் பெண்.
ரெண்டு  சாமந்தி புஷ்ப  மாலையை எடுத்துத் தன் சீடன் ஒருவனிடம் கொடுத்து பசுமாட்டின் கழுத்திலும்  கன்றுக்குட்டியின் கழுத்திலும்  போடு”  என்று  பணித்து   பசுவையும் கன்றையும் அங்கீகரித்து  ஏற்றுக் கொண்டு  கோசாலைக்கு அனுப்பிவைத்தார் மஹா பெரியவா.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *