ONAM AND VAMANA MURTHY – J K SIVAN

ஒரு குள்ளமூர்த்தி விஷயம் – நங்கநல்லூர் J K SIVAN

ஹிந்துக்கள் கொடுத்து வைத்த பிறவிகள். அதுவும் பாரத தேசத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு பண்டிகை, எங்கும் கோலாகலம், மகிழ்ச்சி, ஆனந்தம். எவ்வளவு தான் தக்காளி விலை ஏறினாலும், அன்றாடம் ஏதாவது ஒரு புது வரிச்சுமை முதுகை மேலும் வளைத்தாலும் நாம் பாக்கியசாலிகள், சந்திரனில் கூட காலை வைக்கக்கூடியவர்கள். கால் வைப்பது என்று எழுதும்போது மூன்று அடி வைத்த பரமன் நினைவுக்கு வருகிறான். இன்று ஒரு அற்புத நாள், ஓணம் அல்லது ஆவணி மாசம் திருவோண நக்ஷத்ரம். முக்கியமாக கேரள மாநிலத்தில், மலையாளிகள் இருக்கும் இடங்களில் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்கத் திருவிழா . விஷ்ணு வாமனனாக பிறந்த விஷயம் எல்லோருக்கும் தெரியும். அப்போது ஒரு மஹா சக்தி வாய்ந்த ராக்ஷஸ அரசன் மஹாபலி சக்கரவர்த்தி பூமியை ஆண்டு மூன்று உலகங்களையும் தனது ஆளுகைக்கு உட்படுத்தியவன். அவனது அதீத சக்தியில் பயந்த தேவர்களும் விண்ணோர்களும் நாராயணனிடம் முறையிட்ட ஒரு சிறு வாமனனாக – குள்ள பிராமண பிரம்மச்சாரியாக வடிவெடுத்து மஹாபலியி நடத்திய யாகம் முடிந்து எல்லோருக்கும் தானம் கொடுக்கும் சமயம் தானும் யாசகம் பெற செல்கிறான். இந்த வேடிக்கை உருவ குள்ளபிராமணனை மஹாபலி கேட்கிறான்:

”யாரப்பா நீ விசித்திரமாக இருக்கிறாய்?”
”ஆமாம் அரசே நான் விசித்ரமானவன் என்று எனக்கே அடிக்கடி தோன்றுவதுண்டு’ என்று சிரித்தான் வாமனன்.
”இங்கே எதற்கு வந்தாய், மற்ற பிராமணர்கள் போல் நீயும் ஏதாவது யாசகம் கேட்க உத்தேசமா?”
”நீங்கள் தான் என்னை விசித்ரமானவன் என்கிறீர்களே, நான் விசித்திரமாக அல்லவோ உங்களிடம் யாசகம் கேட்க வேண்டும். கேட்கட்டுமா?”
”ஆஹா , நான் இல்லையென்று சொல்லி, இன்று யாருமே எதுவுமே பெறாமல் இங்கிருந்து போக முடியாது வாமனா. தாராளமாக நீ விரும்பியதை கேளப்பா”.
”நான் கேட்பதெல்லாம் வேறொன்றுமில்லை. என் சிறிய காலடி நீள அகலத்துக்கு உண்டான மண் மட்டுமே. மூன்றே மூன்று காலடி மண் மட்டும் தந்தால் அது ஒன்றே போதும். ”
” பைத்தியமாக இருக்கிறாயே, வெறும் மூன்றடி மண் கேட்கிறாயே, வேறு நல்லதாக பிரயோஜனமாக ஏதாவது கேள் தாராளமாக தருகிறேன்.”
”இல்லை மஹாராஜா, உங்கள் தாராள மனதைப் போற்றுகிறேன் எனக்கு மூன்றடி மண் தந்தாலே போதும்.”
எங்கே ஜல பாத்திரம்?. கொண்டுவாருங்கள், இவருக்கு மூன்றடி மண் தாரை வார்த்து கொடுக்கிறேன்.

அசுர குரு சுக்ராச்சாரியார் அந்த நேரத்தில் தடுக்கிறார்.
”மஹாபலி, அவசரமாக வாக்கு கொடுக்காதே. வந்திருப்பவன் வாமனன் அல்ல, மஹா விஷ்ணு, வேண்டாம் இந்த விஷ பரிக்ஷை . தானம் தராதே. அவன் உன்னை அழித்திடுவான்”
”குருநாதா, இந்த மஹாபலி ஒரு தரம் வாக்களித்தால் மீறமாட்டான்”

ஜலபாத்ரத்தில் இருந்து நீர் தாரை வார்க்கமுடியாமல் சுக்ராச்சாரியார் ஒரு சிறு வண்டாக மாறி தடை செய்ததை வாமன விஷ்ணு அறிந்து ஒரு தர்ப்பை நுனியால் அந்த பாத்திரத்தில் ஜலம் சொட்டும் இடத்தில் செருக அது வண்டாக இருந்து உள்ளே அடைத்து கொண்டிருந்த சுக்ராச்சாரியாரின் ஒரு கண்ணுக்குள் பட்டு அவர் ஒரு கண் பார்வை இழந்தார் என்று ஒரு கதை உண்டு.
மூன்றடி மண் வரம் பெற்ற வாமனன் அடுத்த கணமே திருவிக்ரமனாய் உருவெடுத்து முதலடியால் மண்ணுலகம் ,ரெண்டாம் அடியால் விண்ணுலகம் என மூவுலகும் அளந்து மூன்றாம் அடிக்கு இடமெங்கே என, மகாபலியின் சிரமே அதுவாக, மகாபலியை கீழே அழுத்தியதால் மஹாபலி பாதாளத்தில் மறைந்தான்.

கிருஷ்ணன் காக்கும் கடவுள். மனிதர்கள், தேவர்களை ,மட்டுமா காப்பாற்றினான்?. விஷ்ணுவாக கருடன் மேல் பறந்து வந்து கஜேந்திரனை முதலையிடமிருந்து காப்பாற்றியது நினைவிருக்க வேண்டாமா? ”ஆதிமூலமே”என்ற ஒரு குரல் போதுமே அவனுக்கு ஓடி வந்து உதவ. வேதங்களும் புராணங்களும் கடலளவு சொல்கிறதே அவன் மஹிமையை.

திடீர்னு ஒரு ஸ்லோகம் நினைவுக்கு வந்தது. வாரா வாரம் சனிக்கிழமை எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டும்போது அம்மா எங்கள் தொடைகளில் ஏழு ஏழு ,மிளகாய்ப்பழம் போட்டு காய்ச்சிய எண்ணெய் சொட்டு புள்ளிகள் வைத்து சொல்லும் ஸ்லோகம் காதில் ஒலிக்கிறது.
”அஸ்வத்தாமா, பலி , வ்யாஸா, ஹநுமாஞ்சா, விபீஷணா, க்ருபா, பரசுராமா, ஸப்ததே சிரஞ்சீவின: ”
இந்த ஏழு பேரைப் போல என்றும் மரணமில்லாமல் நானும் சிரஞ்சீவியாக இருக்கவேண்டுமாம். நான் மட்டுமல்ல என் சகோதரர்கள் இருவரையும் அப்படி இருக்க வேண்டி தான் எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டுவாள். அம்மா வாக்கு கொஞ்சம் பலித்து நான் 84+ல் இருக்கிறேன். என் மூத்த அண்ணா 90+ . நிச்சயம் நாங்கள் சிரஞ்சீவிகள் இல்லை. சஞ்சீவி மூலீகை அம்மா கை சாப்பாடுதான். மஹாபலி ஒரு சிரஞ்சீவி. மரணமற்றவன்.
ஸமஸ்கிருதத்தில் चिर. chira , சிர என்றால் ரொம்ப நாள், பல்லாண்டு, எனப் பொருள்..ஆகவே சிரஞ்சீவி என்பது நிலையாக நீண்ட காலம் வாழ்வது. சாகாவரம் பெறுவது. அப்படி எல்லோரும் சாகாவரம் பெற்றதில்லை.

ஓணம் திருவிழா அறுவடைத் திருவிழாவாகவும் கேரளாவில் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதிலும் உள்ள மலையாள மொழி பேசும் மக்களால் உற்சாகமாகக் கொண்டாடப்படும் திருவிழா ஓணம் பண்டிகை.

வருஷா வருஷம் இந்த தினத்தில் மஹாபலி சக்கரவர்த்தி கேரள விஜயம் செய்கிறார். எத்தனையோ யுகம் ஆனாலும் அந்த நல்ல ராஜாவை இன்னும் நினைவில் கொண்டு ஒவ்வொரு கேரள வீட்டிலும் வாசலில் வண்ண வண்ண கோலங்களும், பூக்கள் அலங்காரமும் விளக்கும் ஏற்றி அற்புதமாக வாழையிலையில் பல கேரள உணவு பண்டங்கள், பாயசத்தோடு வரவேற்கிறார்கள். கம்பர் ராமாயணத்தில் வாமன மூர்த்தயை எவ்வளவு அழகாக பாடுகிறார் பாருங்கள்.

”உலகு எலாம் உள்ளடி அடக்கி, ஓர் அடிக்கு
அலகு இலாது, அவ்வடிக்கு, அன்பன் மெய்யதாம்,
இலை குலாம் துழாய் முடி ஏக நாயகன் –
சிலை குலாம் தோளினாய்! – சிறியன் சாலவே!”

பூமிக்கும் ஆகாசத்துக்குமாக வளர்ந்த வாமனன் ஒரே அடியில் இந்த மண்ணுலகு எல்லாம் அளந்து, மண் வேறு இல்லாமல் அடுத்த அடியில் விண்ணையெல்லாம் அளந்து, மூன்றாவது அடிக்கு, மண்ணோ, வேறு இடமோ இல்லாமல் என்ன செய்வது சொல்? எங்கே மூன்றாவது அடிக்கு இடம்?” என்று கேட்டபோது மஹாபலி தனது சிரத்தை குனித்து காட்டுகிறான்.

”வந்தவன் வாமனன் இல்ல, மஹா விஷ்ணு என்று அசுரர் குல ஆசார்யன் சுக்ரன் எடுத்துச் சொல்லியும், ”மஹா விஷ்ணுவே என்னிடம் யாசகம் பெற வந்தது எனக்கு பெருமை தான், ஆச்சர்யம், சந்தோஷம் ” என்று சொன்ன வாக்கை நிறைவேற் றியவன் மஹாபலி. அவனை வாழ்த்தி பாதாளலோக சக்ரவர்த்தி யாக்கினார் மஹா விஷ்ணு. அவன் வருஷா வருஷம் பூலோகம் வரலாம் என்கிறார். ஆகவே தான் மஹாபலியின் கேரள விஜயம் ஆவணி திருவோணம் அன்று வருஷா வருஷம் நடக்கிறது. மலையாள மாதம் சிங்கம் தான் நமது ஆவணி.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *