NOSTALGIC RECOLLECTIONS – J K SIVAN

யஜுர்  உபாகர்மா — நங்கநல்லூர் J K SIVAN
ஆவணி அவிட்டம்.
ஒரு பழைய ஞாபகம்.
 அசுர வேகத்தில் வளர்ந்து விட்ட  சென்னை பட்டணமும் ஒரு காலத்தில் கிராமம் தான்.
நங்கநல்லூரில் பெரிய  துறவு கிணறுகளில் இறங்கி குளிப்பவர்களும் உண்டு,   கிணறு கைப்பம்பு மூலம்   குளித்தவர்களும் இருந்தோம்.   மேலே இருந்து கிணற்றுக்குள் தொப் தொப் என்று குதிக்கும் தைரியம் கொண்ட சிறுவர்கள் நீரில் குதித்து  விளையாடுவார்கள். அவர்கள் தைர்யம் என்னை அசர வைத்த்து. (இது தோட்டக்காரர்  இல்லாத போது).

பொதுவாக நாங்கள் விரும்புவது மோட்டார்  பம்ப்செட்  மூலம்  ‘தப தப’  என்று மேலிருந்து கொட்டும்  நீரில்  குளிப்பது.   அந்த நீர்  கத்திரிக்காய், வெண்டை, கீரைகள்  பயிர்களுக்கு  பாத்திகள் மூலம் செல்லும். பெரிய தொட்டியில் நிரம்பும்.  தோட்டக்காரர் சோப்பு தேய்த்து குளிக்க அனுமதி தரமாட்டார்.   துண்டு கட்டிக்கொண்டு தான் குளிக்க வேண்டும். அரை ஆடை, கால் ஆடைக்காரர்களை கிட்டே சேர்க்க மாட்டார்.குளித்த  பிறகு   கையில் கொண்டு சென்ற  பின்னல் கூடைகளில், அல்லது பைகளில்  நிறைய  தோட்டத்து காய்கறிகள், கீரைகள் தோட்டக்காரரிடம்  வாங்கிக்  கொள்வோம்.  உத்தேச அளவில் கொடுப்பார். பிடித்திருந்தால்  நம்மைப் பிடித்திருந்தால்  அளவே  கிடையாது.   நிறையவே கொடுப்பார். கோபமான  மூடில் இருந்தால் கொஞ்சம் குறையும்.  எல்லாம் சேர்த்து  ஒரு ரூபாய்  அல்லது  ஒன்னரை ரூபாய்  காசு தான்.  அதற்கு மேல் கிடையாது.   கையில் இருக்கும் காய்கறிகள் நிச்சயம் மூன்று கிலோ வாவது இருக்கும். அல்லது கொண்டு செல்லும் பையின் கொள்ளளவை பொறுத்தது.

நங்கநல்லூரில் ஆறு கிடையாது.  தெற்கே  கிராமங்களில் ஆற்றில் குளிப்பது சுகம்.   குளத்தில் குளிப்பது ஒரு வித சுகம்.  ஆழமான குளத்தில்  படிக்கட்டுகளில்  கனமான பாசி படிந்து வழுக்கிவிடும்.  நீச்சல் தெரியாமல் ஆற்றிலோ குளத்திலோ இறங்குவது ஆபத்து. வழுக்கும் படியை பிடித்துக்கொண்டு மேலே ஏறவும் முடியாது.

ஆற்று  நீர்  படுகைகளுக்கு,  குளத்துக்கு செல்ல  கால்வாய்கள் உண்டு.   ஆற்றங்கரையில் குளத்தங்கரையில் அடர்ந்த மரங்கள் இருக்கும். அரசமரம், புளியமரம் வேப்ப மரம்  நிச்சயம் இருக்கும். அரசமரத்தடியில் பிள்ளையார் இருப்பார். குளத்தங்கரையிலும் பிள்ளையார் உண்டு.  பெண்கள் குளிக்க தனி இடம். அங்கே ஆண்கள் செல்ல மாட்டார்கள்.   குளித்து விட்டு பெண்கள் பலர்  அரசடி பிள்ளையாரை நமஸ்கரித்து மரத்தை  பிரதக்ஷணம் செய்வார்கள்.  108 முறை சுற்று வோர்களும் உண்டு. வாய் ஏதேனும் ஒரு ஸ்லோகத்தை சொல்லிக்கொண்டே இருக்கும்.  அரசமரத்தடி, வேப்ப மரத்தடியில்   சாணி தெளித்து  மெழுகி பெருக்கி கோலம் போட்டு வைத்திருப்பார்கள், பார்க்கவும் நடக்கவும் சுகம். வேப்ப மரம் பக்கம் கம் என்று ஒரு தனி வித  வாசனை மூக்கை துளைக்கும். 

அரசடியில்  சில இடங்களில் நாவிதர்கள்  சின்ன  பித்தளை  அலுமினிய  கிண்ணத்தில் தண்ணீர்,  ஒரு பலகை, தகர பெட்டியோடு முண்டாசு கட்டிக்கொண்டு பீடி பிடித்துக்கொண்டு காத்திருப்பார்கள்.  கிராம மக்களின்  சலூன் அது தான். open air ஹேர் ட்ரெஸ்ஸிங் சலூன்.   எல்லோர் தலைக்கும் ஒரே வித கட்டிங்  தான்.    எப்போதும்  ஆத்தங்கரை ஓரமாக  மயான பூமி, ருத்ர பூமி உண்டு. கத்திரிக்கோல்,  கத்தி தவிர  ஒரு  கட்டிங் பிளேயர்  மாதிரி ஒரு மெஷின்.  அது தலையில்  ரோவர் மாதிரி  மேயும்போது  வெட்டுவதை விடை பிடுங்குவது ஜாஸ்தி. வலிக்கும்.  தண்ணீரை  தலையில் தெளித்து மீண்டும் மேய விடுவார். 

அருகே ஒன்றிரண்டு குடிசைகளில்  பிணங்களை புதைக்கும் எரிக்கும் குடும்பங்கள் வாழ்ந்தது. , மற்றபடி கிராமத்துக்கே அடையாளமான  பச்சை பசேல் வயல்கள்,  ,தென்னந்தோப்பு, மாந்தோப்பு, பனைமர சோல்ஜர்கள்.  கிராமத்திலிருந்து  வெளியே ஊர்களுக்கு செல்ல   மண்  ஒத்தையடிப்பாதை,  கண்மாய்கள்,  கோவில்கள், அக்ராஹாரம்,  பசுக்கள், காளைமாடுகள்,   குட்டைகளில் எருமைகள்,  வண்டிகள்,  வைக்கோல் போர்கள்,   கலப்பைகள்  இத்யாதி இத்யாதி  இருக்கும்.  கிராமப்  பெயர்கள்  வேடிக்கையாக இருக்கும்.   பொட்டச்சி புரம் , காத்தாயி குளம்,  கம்புளி,  வழுக்கையான்  தோட்டம்.  வெள்ளை நாயக்கர் கடை.    உசேன் பீடி கடை.   துணி நெய்பவர்கள்  வெளியே  நூல் பாவுவார்கள்.

சர்க்காருக்கு   நிலச்சுவான்தாரர்கள் அவர்கள் சொத்துக்கு  தக்கபடி ஒரு குறிப்பிட அளவு நெல்லை   கொடுக்க வேண்டும்.  சர்க்கார் நிர்ணயித்த விலைப்படி அவர்களுக்கு பணம் கொடுப்பார்கள்.

வீடுகள் பல அடுக்குகள், கட்டுகள் கொண்டது. முக்கால் வாசி ஒட்டு வீடுகள், கூரை வேய்ந்தவை. ஒன்றோடொன்று இணைந்த வீடுகள்.  மங்களூர்  ஓடு கண்ணில் படாது. நாட்டு  ஓடு, செருகு ஓடுகள் தான் எல்லா வீடுகளுக்கும். தேள், பூரான், பள்ளி குடியிருப்பு அவை.  தொப் தொப் என்று தேள்  அடிக்கடி வீட்டுக்குள் விழும்.  தேள்கடி சர்வ சாதாரணம். 

அமாவாசைகளில் வாத்தியார்கள் ஊரிலே இருப்பவர்களோ அண்டை ஊர்க்காரர்களோ  ஆற்றங்கரைக்கு வந்து  தர்ப்பணம் பண்ணி வைப்பார்கள்.  ஆவணி அவிட்டம் அன்று  குளத்தங்கரை  அரசமரத்தடியில்  நிறைய பேரை உட்கார்த்தி வைத்து  பூணல் போட்டு விடுவார்கள்.  பிள்ளையார் கோவிலில் ஹோமம் பிரசாதம் எல்லாம் உண்டு. எல்லோருக்கும்  வாழை இல்லை தொன்னையில்  பிரசாதம் கொஞ்சம்  வெண்பொங்கல், தயிர் சாதம் தரும் வழக்கம் இருந்தது. 

வடக்கு தெரு  பெருமாள் கோவிலில் கும்பம் வைத்து ஆவாஹனம் பண்ணி  வ்யாஸ ஹோமம் வளர்த்து தலை ஆவணி அவிட்ட குழந்தைகளுக்கு ஆஹுதியும் காண்டரிஷி ஹோமமும்  நடக்கும்.  

பெருமாள் கோவில்  சிவன் கோவில், அல்லது பிள்ளையார் கோவில் நிச்சயம் இருக்கும்.  விசேஷ காலங்களில் சுவாமி புறப்பாடு ஊர்வலம் வரும்,  அப்போதெல்லாம்  எல்லா ஊர்களிலும்  நாவிதர் குடும்பத்திலேயே  நாதஸ்வர தவில் வித் வான்களும் இருந்தனர்.    ஒரே ஒரு   பெரிய  சாலை.  அதில் பஸ் வரும். போகும். ஊருக்கு  எந்தெந்த  பஸ்  எத்தனை மணிக்கு எங்கிருந்து வரும்  எவ்வளவு நிமிஷம் நிற்கும்  என்று எல்லோருக்கும் தெரியும். முன்பாகவே சென்று காத்திருப்பார்கள், அல்லது வருபவர்களுக்காக காத்திருந்து அழைத்து வருவார்கள்.
கல்யாணங்கள் பண்டிகைகள் வந்துவிட்டால், தெருவில்  பந்தல் போட்டு  ஜோராக எல்லாருக்கும்  சாப்பாடு கமகமவென்று  வாசனையாக கிடைக்கும்.    எங்கள் ஊரில் பாலு செட்டியார் ஒருவர்  பள்ளிக்கூடம் கட்டி இலவசமாக பாடம் கற்றுக்கொடுத்தது ஞாபகம் இருக்கிறது. அவர் பிள்ளை ஷண்முகம் தான் ஹெட்மாஸ்டர்.  ஆங்கிலத்தில் பேச ஆசை. ஆனால் அவனுக்கு  சுத்தமாக  இங்கிலிஷ் தெரியாது.
எள்ளு புண்ணாக்கு  செக்கு  எண்ணெய்  திக்கு கண்ணாடி  திவாகரன் கடையில் சுத்தமாக  கொடுப்பார்கள்.  திவாகரன்  பாதிநேரம்  வயலில் இருப்பான், மீதி நேரம் செக்கு. அவன் தம்பி  பாலு சாமி  ஒரு மாவு மெஷின் வைத்திருந்தான்,  ஒரே ஒரு மாவு, மிளகாய் அரைக்கும் மெஷின் மட்டுமே  இருக்கும். சீயக்காய் அரைக்கும் மெஷினை விற்று விட்டான்.  அதற்கு காரணம்,   ரங்கநாதன் பலசரக்கு கடை. அங்கே  சீயக்காய் தூள்  ஒரு பாக்கெட் வாங்கினால் ஒரு நீல கலர் பலூன் தருவான் என்பதால்  சீயக்காய் பொட்டலங்கள்  சீக்கிரம்  விற்கமுடிந்தது. அது தவிர  அவன் பிள்ளையை  ஆற்றங்கரையில்  ஒரு துணியை தரையில் விரித்து  அதில் சீயக்காய் துணி துவைக்கும் சவுக்காரம், காசி துண்டு  விற்பனை படுஜோராக நடந்தது. 

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *